அலைபாயுதே – சிறுகதை | வி.சகிதாமுருகன்

 அலைபாயுதே – சிறுகதை | வி.சகிதாமுருகன்

“மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கறே?” வாட்ஸ் அப்பில் வந்த புதிய எண்ணை திறக்கையில் கண்களில் பட்ட வாக்கியம் தூக்கி வாரிப்போட்டது சிந்துவை!

“சிந்து நதியே” அவளை இப்படி விளிப்பவன்? கிருஷ். கிருஷ் என்று அவள் கொண்டாடிய அவளின் முன்னாள் காதலன் கிருஷ்ணசாமி. வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது மனம் என்னும் சிலேட்டிலிருந்து அவனை துடைத்துவிட்டு அற்புதராஜை அதில் எழுதியாகிவிட்டது.

அற்புதராஜுடன் அற்புதமாக வாழ்வை கழிப்பாள் என்று திருமண பந்தத்திற்குள் தள்ளிவிடப்பட்டவள் வாழ்க்கையில் ஒன்றும் பெரிய அற்புதம் நிகழ்ந்துவிடவில்லை. சந்தேகத்தின் தத்துப்புத்திரனாய் இருந்தார் அற்புதராஜ். தன் பணச் செழுமையை, பாரம்பரிய பெருமையை சிந்துவின் தாய்தந்தையரிடம் காட்டி தன்னைவிட பனிரெண்டு வயது குறைந்த சிந்து என்ற பூவை கொய்து வந்து தன் படுக்கை அறையை அலங்கரித்துக் கொண்டான் அற்புதராஜ்!

பழகப் பழப சிந்துவென்ற பால் புளிக்க ஆரம்பித்தது அற்புதராஜிற்கு. கூடவே சேர்ந்து கொண்டது சந்தேகம். சிந்துவின் வாழ்வில் புயலடிக்க ஆரம்பித்தது. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் பெரிய பெரிய சண்டைகளுக்கு “அடி”கோலின. அவை அடிகளாய் அவ்வப்பொழுது அவள் கன்னங்கள் மீது பதிந்தன. கூடவே குழந்தையின்மை. ஐந்து வருடமாய் குழந்தை வேறு இல்லாதது மேலும் வாழ்வை சூன்யமாக்கியது!

தாமரை இலைத் தண்ணீராய் ஒட்டாத உறவில் அல்லாடிக் கொண்டிருந்தவள் நெஞ்சில் “மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கிற” என்ற மெசேஜ் ஒரு சிலிர்ப்பை விதைத்தது. செல்போனின் திரையில் அந்த வாக்கியத்தை கைகள் வருடியது. பழைய நினைவுகளில் மூழ்கினாள் சிந்து!

கல்லூரியே கொண்டாடிய கிருஷ்ணசாமி என்ற கிருஷ் அவளைக் கொண்டாடினான். கவிஞன், ஸ்போர்ட்ஸ்மேன், பாடகன் என்று பன்முகத் திறமையில் கல்லூரியையே தன் வசப்படுத்தியவன் சிந்துவிடம் வசப்பட்டு கிடந்தான்.

எல்லா காதலுக்கும் வரும் எதிர்ப்பு அவர்களுக்கும் வந்தது. தாய் தந்தையின் தற்கொலை மிரட்டல், தாய்மாமனின் கௌரவக் கொலை மிரட்டல் என்று அவளின் காதல் அமரத்துவம் பெற்றது. அந்நேரம் தூரத்துச் சொந்தக்காரன் இண்டஸ்ட்ரியலிஸ்ட் அற்புதராஜின் கண்ணில் பட்டாள் சிந்து.

அடக்குமுறை வென்றது கிருஷ்ணசாமியின் காதலி சிந்து அற்புதராஜின் மனைவியாய் உருமாற்றம் பெற்றாள். வந்தது அந்த ஒற்றை மெசேஜ் மட்டுமே. நீண்டநேரம் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எப்படி என் எண் கிடைத்தது?” ஃபேஸ்புக் நினைவுக்கு வந்தது. “எங்கிருந்தான் இத்தனைக் காலம்? எதற்கு இப்பொழுது இந்தத் தொடர்பு?” எதுவானால் எனக்கென்ன? நான் தொடர்பு கொள்ளப் போவதில்லை.

முடிவெடுத்தவள் செல்லை சுவிட்ச் ஆஃப் செய்தாள். படுக்கையில் புரண்டவள் மனதில் புரண்டு கொண்டிருந்தது கிருஷ்ஷின் முகம். பிரசவ வைராக்கியமாய் ஆகிப் போயிருந்தது அவள் செயல். அனிச்சைச் செயலாய் கை டீபாயின் மேலிருந்த செல்லிற்கு சென்று அதை சுவிட்ச் ஆன் செய்தது! வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தாள் அந்த புதிய எண்ணை தொட்டாள் ஒளிர்ந்தது வாக்கியம்,

“மைடியர் சிந்து நதியே எப்படி இருக்கற?” விரல் கீபோர்டில் நடனமாடியது!

“நான் நல்லா இருக்கறேன். நீ எப்படி இருக்கற?” சிறிது நேரத்தில் பதில் வந்தது.

“உன்னை பிரிந்து நான் எப்படியடி நல்லா இருப்பேன். நான் நல்லா இல்லை. நீயும் நல்லா இல்லை என்பதையும் நான் அறிவேனடி” கவித்துவமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

“இவன். இவன் என்னை கண்காணித்திருக்கிறான், நான் மணவாழ்வில் நல்லா இல்லை என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறான். அவனுக்கு பதில் அனுப்பாதே என்று மூளை தடுத்தது. ஆனால் மனம் அவனை நோக்கியே திரும்பியது!

சற்றுநேரத்தில் தன்னிலை மறந்தாள் சிந்து. அற்புதராஜ், அவர்களின் திருமணம், அவர்களது ஐந்தாண்டு கால தாம்பத்யம் எல்லாம் மறந்து போனது. அன்றைய கல்லூரிக் காதலர்களாய் மாறிப் போயிருந்தனர் இருவரும். வாட்ஸ்அப் மெசேஜ் வாட்ஸ் அப் காலிங்காக மாறியிருந்தது. ஒருவரை ஒருவர் செல் திரையில் பார்த்து கண்ணீர் வடித்தனர். அற்புதராஜ் செய்த கொடுமைகளை பட்டியலிட்டாள் சிந்து. அவற்றிற்கு வார்த்தையால் ஒத்தடம் கொடுத்தான் கிருஷ்.

“ஐந்து வருடமாய் எங்கு சென்றாய்?” என்ற சிந்துவின் கேள்விக்கு,

“உனக்கு கல்யாணம் ஆனதும் ஊருல இருக்கப் பிடிக்காம வெளிநாடு போயிட்டேன். அங்க இருந்தாலும் எப்பவும் உன் நினைப்புத்தான். பிறன் மனை நோக்காதேன்னு, உன்னை தொடர்பு கொள்ளலை, ஊருக்கு வந்த பிறகுதான் உன்னைப் பற்றி விசாரிச்சேன், அரசல்புரசலா தெரிஞ்சுது நீ அவர்கூட சுகப்படலைனு. நெறைய பஞ்சாயத்துக்கள் உங்க வீடுவரை வந்ததை அறிஞ்சேன், அப்பதான் முடிவு பண்ணினேன் உன்னை இந்த அற்புதராஜ் கொடுமையில இருந்து விடுவிக்கிறதுன்னு.” சிந்து பதிலுரைத்தாள்.

“என்ன அற்புதராஜ் கொடுமையில இருந்து நான் விடுபட போறதா உன்கிட்டச் சொன்னேனா?”

“நீ சொல்ல வேண்டாம் உன் ஆன்மா என்கிட்டச் சொல்லுது இனி உன் மிச்ச வாழ்வு என் கூடத்தான்னு” திடுக்கிட்டாள் சிந்து,

“என்ன பேசுகிறான் இவன், ஒரு நொடிப் பொழுதில் அற்புதராஜிடமிருந்து பிரிந்து வர எதோ காஃபி சாப்பிடலாமா என்பது போல கேட்கிறானே?”

மூளைதான் கேள்வி கேட்டது மனம் அவன் கேட்ட கேள்விக்கு திருப்திப்படவே செய்தது! பேச்சு. பேச்சு. பேச்சு. மணிக்கணக்காய் நீண்ட பேச்சின் முடிவில் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப சிந்து என்ற கற்பூரத்தை எளிதாகக் கரைத்தான் கிருஷ்ணசாமி.

முடிவில் அடுத்த நாள் மாலை பீச்சில் சந்திப்பது என்று முடிவு செய்தனர். மறுநாள், மெரினா கடற்கரை. கடலலையை விட சிந்துவின் மன அலை பெரிதாக அடித்துக் கொண்டிருந்தது. தப்புச் செய்கிறேனோ? சிக்கலாய் சென்று கொண்டிருக்கும் வாழ்வை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறேனோ? சிந்தனை வசப்பட்டிருந்தவள் உடலில் ஏதோ குறுகுறுப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள். அருகில் அந்தி இருட்டில் அமர்ந்திருந்த கிருஷ்ஷின் கைகள் அவள் இடுப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. அவன் கையை தன் கைகளால் தடுத்தாள். அவள் கைகளின் மீது தன் கையை போட்டு அதை விலக்கினான் கிருஷ். கொஞ்சம் கொஞ்சமாய் தோற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள் சிந்து.

அக்கணம் அற்புதராஜ், தான் கல்யாணம் ஆனவள் அடுத்தவன் மனைவி என்பது எல்லாம் அவள் நியூரான்களிலிருந்து மறைந்து போயிருந்தது. கிருஷ்ணசாமி என்ற காந்தம் அவளை கவர்ந்து தன்பால் இழுத்துக் கொண்டது.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. தன்னிலை மறக்க ஆரம்பித்தனர் அந்த முன்னாள் காதலர்கள். அவர்கள் லீலையை சற்று தூரத்தில் அமர்ந்திருந்து ஒருவன் இரவிலும் துல்லியமாகத் தெரியும் நைட்விஷன் கேமராவில் பதிந்து கொண்டிருந்தான்.

சற்றுநேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்ட சிந்து கிருஷ்ஷின் கைகளின் சிறையிலிருந்து விடுபட்டாள். ஆடையை சரி செய்து கொண்டு எழுந்தாள். உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தனர் இருவரும். அவர்கள் புறப்பட்டதும் அவர்களைத் தொடர்ந்து அவர்களை படமெடுத்த அந்த முகம் தெரியாதவனும் புறப்பட்டான்.

மறுநாள். அற்புதராஜ் அலுவலகம் கிளம்பியிருந்தான். சோபாவில் சாய்ந்திருந்த சிந்துவை வாட்ஸ் அப்பின் கனைப்புச் சத்தம் ஈர்த்தது. “கிருஷ்ஷா இருக்கும்” எண்ணியவள் தன் விரல் ரேகையை செல்லின் பின் பதிக்க திரை ஒளிர்ந்தது. வாட்ஸ் அப்பை திறந்தாள். கண்ணில் புதிதாக ஒரு எண் பட்டது. அதை தொட்டாள், ஒரு வீடியோ டவுன்லோட் ஆகத் தொடங்கியது,

வினாடிகளின் இறப்பில் வீடியோ டவுன்லோட் முடிந்தது. மறுபடி தொட்டாள் வீடியோ ஓடியது. அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள் சிந்து. அதில் பீச்சில் அவளும் கிருஷும் நெருக்கமாக அமர்ந்து செய்த அத்துமீறல்கள் கிரிஸ்டர் க்ளீயர் பிரிண்டில் ஓடிக் கொண்டிருந்தது. பதை பதைத்து பார்த்து முடிக்கவும்.
அடுத்த மெசேஜ் வந்து விழுந்தது.

“இந்த வீடியோ உன் கணவர் செல்லுக்கு ஃபார்வர்ட் செய்யப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இருபது லட்சம் ரூபாய் பணத்தை நேற்று மெரீனாவில் நீங்கள் இருந்த இடத்தில் வைத்துவிட்டு கிளம்பவும். மீறினால் அடுத்த நிமிடம் இது உன் கணவன் செல்லுக்கு சென்று விடும்.”

செய்வதறியாது திகைத்த சிந்துவின் மனதில் தோன்றிய ஒரே தீர்வு கிருஷ். அடுத்த கணம் போன் செய்தாள் கிருஷ்ஷிற்கு. நடந்ததை கூறினாள், நடக்கப் போவதற்கு தீர்வு கேட்டாள்.

“சிந்தும்மா. போலீசுக்குப் போக முடியாது எனக்குத் தெரிஞ்ச ஒரு நண்பன் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சிருக்கறான் அவன்கிட்ட போவோம் கண்டிப்பா அவன் ஒரு தீர்வு சொல்லுவான்”

“வேண்டாம்டா. அது மேலும் சிக்கலை உருவாக்கும், நாம வேற முயற்சி எடுக்கறது பிளாக் மெயில் பண்ணுறவனுக்குத் தெரிஞ்சா அவன் வீடியோவை என் கணவருக்கு அனுப்பிடுவான், அப்புறம் என் கணவர் நம்ம ரெண்டு பேரையும் உலகத்தை விட்டே அனுப்பிடுவாரு.”

“அப்ப என்னதான் செய்யுறது?”

“பேசாம பணத்தைக் கொடுத்துடுவோம்”

“என்ன சொல்லுற அவ்வளவு பெரிய தொகைக்கு எங்க போறது?”

“எப்படியாவது நான் அரேஞ்ச் பண்ணுறேன், என் நகைகளை விற்று நான் பணத்தை ரெடி பண்ணுறேன், நீ பணத்தை பிளாக் மெயிலர்ட்ட குடுத்துடு, அவன்கிட்ட பணம் போய்ச் சேர்ந்ததும், நாம இந்த ஊரைவிட்டு கிளம்பிடணும் ஓகேவா?”

“கரும்பு தின்னக் கூலியா? உன் நினைவிலேயே அஞ்சு வருஷத்தை கடத்திட்டேன், இனி மிச்சமிருக்கிற வாழ்க்கையை எங்கயாவது வடநாட்டுல போய் வாழ்ந்து முடிச்சிடுவோம் ஓகேவா?.”

“சரி. நான் பணத்தை ரெடி பண்ணுறேன், மதியம் வந்து வாங்கிட்டுப் போய், சாயங்காலம் பீச்சுல வச்சுடு, நாம கிளம்புறது எப்ப?”

“நாளைக்கு சாயங்காலம் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்துடு வடக்க போற எதாவது ஒரு ட்ரெய்னுல ஏறுறம் நம்ம புது வாழ்வை எதாவது ஒரு வடநாட்டுல தொடங்குறோம்”

அவன் கூறவும் மனம் தெளிந்தாள் சிந்து. சில மணி நேரங்களில் அவளுடைய நகைகள் பணமாக மாறி கிருஷ்ஷிடம் கொடுக்கப்பட்டது.

மாலை பிளாக்மெயிலரிடம் இருந்து மெசேஜ், “சொன்னபடி நடந்து கொண்டதற்கு நன்றி, இனி உங்கள் வாழ்வில் நான் தலையிட மாட்டேன். வீடியோவை டிலேட் செய்துவிட்டேன், இந்த நிகழ்வை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடவும் உண்மையுள்ள முகம் தெரியாத நண்பன்.”

மெசேஜை படித்ததும் ஆசுவாசம் ஆனாள் சிந்து, கிருஷ்ஷுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினாள்.மறுநாள் ஊரை விட்டுக் கிளம்பும் நேரத்தை அவனிடம் உறுதிப்படுத்திக் கொண்டு செல்லை அணைத்தாள் சிந்து.

மறுநாள் மாலை மணி ஐந்து. ரயிலில் அந்த சாதாரண வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தான் கிருஷ். அருகில் அவனுடன் அமர்ந்திருந்தத கல்யாண் கூறினான்,

“குருவே. உங்க மூளையே மூளை இப்ப நம்ம கையில இருபது லட்ச ரூபாய். எப்படி குருவே சர்வசாதாரணமா உங்க பழைய ஆளை மடிச்சீங்க?”

“டேய். நான் படிச்சது சைக்காலஜிடா. பொண்ணுங்க சைக்காலஜி எனக்கு அத்துப்படி எங்க தட்டுனா எப்படி விழுவாங்க அப்படிங்கறது எனக்குத் தெரியும்”

“ஆமாம் குருவே நாம இப்ப ஏன் நாகர்கோவில் போறோம்?”

“டேய் கல்யாண் எனக்கு சிந்து மட்டும் தான் காதலின்னு நெனைச்சியா?, காலேஜ் முடிச்சப்புறமும் என் லிஸ்ட்டுல நெறைய பேர் இருக்கறாங்க. அதுல ஒருத்தி ஒரு பணக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு நாகர்கோவிலுல அல்லாடுறதா தகவல். அடுத்த நம்ம டார்கெட் நாகர்கோவில் ரக்ஷனா.” என்று கூறி அட்டகாசமாய் சிரித்தான்.

நேரம் ஓடியது. தென்மாவட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். ஸ்டேஷன்கள் தாண்டி தாம்பரம் வந்து சேர்ந்தது வண்டி, கண்ணயர்ந்திருந்தான் கிருஷ். பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்.

ப்ப்ராங் .. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்ட ஹாரன் சத்தத்தில் கலைந்தாள் ஸ்டேஷனில் அமர்ந்திருந்த சிந்து.

ரயில் பெட்டியில் ஓரத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு கையசைத்துக் கொண்டு சென்றது. அதற்கு பெஞ்சில் அமர்ந்திருந்த சிந்து புன்னகைத்து கையசைத்தாள்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தன் வேகத்தை அதிகப்படுத்தி பிளாட்பாரம் கடந்தது. சிந்து காத்திருந்தாள் பெட்டியுடன் கிருஷிற்காக!

கமலகண்ணன்

1 Comment

  • நல்ல நடை. வாசகர்களை சுவாரஸ்யப்படுத்த எப்போதுமே இது போன்ற முடிவுகள் தேவைப்படுகின்றது. கதாசிரியர் சற்று பெயர் வாங்கி விட்டால், இது கதையின் ‘யார்த்த முடிவு’ என கொண்டாடப்படும். புதுமுகம் எனில் ‘சார் கொஞ்சம் திருந்தனும்…’ என கமென்ட் வரும். சகிதா சாருக்கு என்ன மாதிரியான கமெண்ட் வந்திருக்கும்னு யோசிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...