கொரோனா காலக் கவிதைகள் – தமிழ்மணவாளன்

 கொரோனா காலக் கவிதைகள் – தமிழ்மணவாளன்

லாக்-டவுன்-6

முகக்கவசத்தின் உள்ளே ஒளிந்து கொள்ளும்
வெறிச்சிட்ட வானம் மிகப்பெரியது.
சுவாசத்தின் வெளியேகும்
கரியமிலவாயு பரவிப் பரவி
மேகமாய் அழுத்தம் கொண்டு மோதுமந்த
மலைமுகட்டின் தரையெலாம்
வெப்பம் பூக்கும்.
பள்ளத்தாக்கில் இறங்கி
தூறலாய் மாறாமல் ஈரமாயாகும்
மென் குளிரில்
பறந்து செல்லுமப் பறவைக்கூட்டம்
அறிந்திருக்கிறது
ஈரத்தின் மென்குளிரையும்
இதமான இளஞ்சூட்டையும்


லாக் டவுன் – 5

முகக்கவசம் அணிந்தபடி
பேசிச் செல்பவர்கள்
என்ன பேசுகிறார்கள்
எனப் புரியவில்லை

தொலைபேசியில் நண்பர்
தெரிவித்த செய்தியோ
இதுவரை யறியாததாய்
இருக்கிறது

தொலைக்காட்சியில்
செய்தி வாசிப்போர்
அண்மைச் செய்திகளுக்காக
ஆளாய்ப் பறக்கிறார்கள்

சுகாதாரத்துறையின் அறிக்கை
இளவயது கற்ற
கூட்டல் கணக்குத் திறனை
மீளப் புதுப்பிக்கிறது

முடக்கம் செயலின்மையிலிருந்து
வார்த்தைப் பிரயோகமாய்
வடிவம் கொண்டு விட்டது

தளர்வு புத்தெழுச்சிக்கு மாறாய்
தளர்வைத் தருவது
தாங்கொணாத் துயர்வெளியாய்

காரணங்கள் இல்லாதிருக்காது தான்
வேறு வழியில்லையென்பதே
வழியாகிப் போன
கொடும் பயணத்தில் மக்கள்

நெருப்பு சுடும் என அறிந்தும்
சீதைகளை மட்டுமல்ல
இராமன்களையும் சேர்ந்தே
தீக்குழியில்
இறங்கச் சொல்கிறது
காலம்.


லாக்டவுன் – 4

தூள் மாற்றி மூன்று சுற்று
தேநீர் போட்ட பின்
இன்னும் கூட சாத்தியமாவென
வடிகட்டியிலிருந்து வடியும்
நிறம் குறைந்த இளம்பழுப்பு
டிக்காசனை
இருமனசாய்ப் பார்க்கும்
டீ மாஸ்டரைப் போல்
கவனிக்கிறேன்
இந்த நான்காம் கட்ட
ஊரடங்கை.

எதற்காக அச்சமுற்றிருந்ததோ
அதற்கான காரணி
தீவிரப்பட்டிருக்கும் போதும்
மனம் அச்சம் விலக்கத் தொடங்கிவிட்டது
காலத்தின் நீட்சியால்

இயல்பு வாழ்க்கையென்பது
எண்ணிக்கையை
இயல்பாய் எடுத்துக் கொள்வதென்பது
எத்தனை துயரம்

அடர் பேரிருளில்
போகும்வழி தெரியாமல்
கண்கள் தடுமாறுவது குறித்து
பரிகசித்தபடி
பாதமே பாதையாகி
தொடரும் பயணம்.

முதல் மூன்று
ஊரடங்கு போலில்லை….
எகிறும் எண்ணிக்கை சென்னையில்
என்ற போதிலும்
சென்னையில் தான் கவிஞர்கள்
இன்னும் கூட
நிதானம் தவறாமல்
கவிதையெழுதக்கூடிய
வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.


ஊரடங்குத் தளர்வு – 2

உடலின் சோம்பல் முறுக்கி
கை கால்களை உதறியபடி
கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு
விழித்தெழுகிறான்
கதிரவன்.

காற்று வெளியில் பிராணவாயுவை
சேகரித்துக் கொண்டு
பரவுகிறது ஆசுவாசத்தோடு

காகங்கள் கரைந்தபடி
வழக்கமான இடம் தேடி
வந்தமர்கின்றன

வாழ்க்கை நீட்டிக்கப்பட்ட
ஆடுகள் வெட்டப்படுகின்றன

ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னும்
நமக்கின்னும்
அச்சம் குறைந்தபாடில்லை

தேநீர் கடைகள் திறந்து வைத்த போதிலும்
தேநீர் அருந்தச் செல்வதில்
தேவை உந்தவில்லை

தடைகளைத் தவிர்த்து விட்ட
சாலைகள்
தனக்கான அவசியமற்றச் சூழலை
தவிப்போடு அறிந்தபடி
வெறித்துக் கிடக்கிறது

வெளியே செல்லலாமென்னும்
எண்ணத்தின் குரல்வளை நெறிக்கும்
கொரனா தீநுண்மியின்
சவாலை எதிர்கொண்டு யத்தனிக்கையில்

இன்னும் கூட அடங்கியிருக்கலாம் தானே
என்கிறது எனது ஈருருளி
ஸ்டாட் ஆக மறுத்த படி.


ஊரடங்கின் மத்தியக் காலம்

பிரவாகத்தின் இடையே
திடீரென தடுப்பணை
ஏற்படுத்தி விடும்
சாத்தியத்தின் ஐயத்தோடு தான்
மணல் மூட்டைகள்
அடுக்கப்பட்டன
அவசர கதியில்
குவிக்கப்பட்ட மணல் மூட்டைகள்
உடைதலை மறுதலித்ததென
உணரத் தலைப்பட்ட போதினும்
நிரம்பி வழிதலின்
நினைவும்.
இல்லை.
வழியெங்கும் இது போலவே…
வரத்தேயில்லாத போது
நிறைவதாவது
வழிவதாவது…
சலனமற்று ஓட்டம் மறந்து
நிதானமாய்
நேற்றைய இயக்கத்தை
நாளைக்கு உறுதி செய்ய
மிதந்து வந்த சருகுகளை
முகக்கவசமாக்கி
முடங்கிக் கிடக்கும்
பெருநதி.


தனித்திருத்தல்

ஒரு கோடி நட்சத்திரங்கள்
ஆனாலும்
ஒவொன்றும் தனித்தனியே..

ஒற்றை நிலவு
ஒளிர்கிறது தானே..
இரவென்னும் பயமின்றி

நீர்க்குமிழி கூட
மற்றொன்றைத் தொட்டவுடன்
உடைந்து போகிறது
முன்னமே..

தெருப்பக்கம் வேறு யாரும்
வந்தால்
குரைத்துக் குரைத்துக்
கத்துகிறான்,”மைலோ”..

சேட்டிங்கில் கூட
ஒருவரோடு நிகழும்
தனித்த உரையாடலின் போது
அடுத்த ஒருவரின், “ஹாய்”
பதற்றமூட்டுகிறது
சமூக இடைவெளி சிதைந்து
விடுமோவென….

எழுபது ஆண்டுகளாய்
எங்கள் ஊர்க் கண்மாய்க் கரையில்
உயிர்த்திருக்கும் ஆலமரம்
காரணம்
தனித்திருப்பதால் தானா.?

வலது கையைப்பற்றக் கூட
இடது கை அச்சமுற்றிருக்கும்
இக் கொடுங்காலத்தில்..

ஒற்றையாய் இருப்பதே
உயிர்வாழும் உபாயமென
பிரிவைப் போற்றி….

எழுதுவதென்பது
எத்தனை பெரும் சோகம்
என் போன்ற
கவிஞனுக்கு…


அகாலம்

அலைபேசி அழைப்பை எடுத்ததவுடன்
“எங்கே இருக்கீங்க..?”
எதார்த்தமாய் அனிச்சைக் கேள்வியாக
இருந்த போதிலும்
ஏனோ கிண்டலாய்த் தோன்றுகிறது.
“வீட்ல தான் இருக்கேன்”
“என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க.?”
“எதார்த்தமென்றாலும்
இது கொஞ்சம் ஓவர் இல்ல”
என்ன காலமிது..?
என் அந்தரங்கம் அனைத்தையும்
யாவரும் யூகிக்கும் காலம்.
“இப்ப தான் நிகழ்ச்சிக்குக் கிளம்புறேன்”
“நண்பர்களோட சின்ன மீட்டிங்”
“பெரம்பூர் வந்துட்டேன்
அரை மணி நேரமாகும் வீட்டுக்குப்போக”
“அப்புறம் கூப்பிடவா..?”
““திரும்ப கூப்டறேன்..”
“சாயங்காலம் கூப்டுங்க.ஃப்ரீ தான்”
எல்லா பாவனைகளையும்
துகிலுரித்து
அகாலமாக்கியிருக்கிறதே
காலம்.


ஊரடங்கின் நீட்சி

ஒரு நாள் ஊரடங்கென
டீஸரைக் கேட்டதும் எப்படியெல்லாம்
அதிர்ந்து போனது மனசு
இலவசக்காட்சியாய் அடைக்கப்பட்ட
விலகியிருத்தலின்
முழு நீளப்படமாகி மூர்ச்சையாக்கும்
காலத்தின் இறுக்கம்.
கண்ணுக்கெட்டிய தூரம்
பாலையென பரந்து கிடக்கும்
அறையின் சுவரை வெறித்தபடி
நீண்ட கால்களால் மணல்வெளி
நடந்து சலிக்கும்
ஒட்டகமாய்.
பயணிக்கும் சமவெளியின்
ஏதோவோரிடத்தில்
சட்டென எதிர்ப்படும் பள்ளத்தாக்காய்
முன்னகரவியலாத
பேரச்சத்தில்
முடங்கிக் கிடக்கும் வேளையில்
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
புலம் பெயர் மக்களின்
பிறந்தமண் நோக்கிப் பெரும்பயணம்
வாழ்க்கையை வழியிலேயே
தொலைத்தபடி.
பசிக்கும் வயிற்றின்
தசையிழுப்பின் உயிர்வாதையைக்
“கொரனா”, தொற்றின்
அறிகுறியில் சேர்க்காதது தான்
அரசியல் மருத்துவம்.
நித்தம் நித்தம் மாலை
எத்தனை பேருக்கென
அறிவதும்
அதிர்வதும்
மாறி யிப்போதெல்லாம்
எண்ணிக்கைகளைப்
பார்க்கும் போது
கூட்டல் கணக்கைச் சரிபார்க்கும்
குமாஸ்தா போலாகி
உணர்வுகள் கூட
மனம் விட்டு
இடைவெளியைக் கடைபிடிக்கத்
தொடங்கிவிட்ட
ஊரடங்கின் நீட்சியில்
உலகின் திரள் விட்டொதுங்கி
ஒற்றை மனிதனாய்
வானம் பார்த்து மல்லாக்கப்
படுத்தவாறு
விழிகளை நம்பி ஏமாந்து
விடக்கூடாதென
விரல் நீட்டி விரல் நீட்டி
நட்சத்திரங்களை
எண்ணத் தொடங்கியிருக்கிறேன்.
ஆனால்
இந்த முன்னிரவின்
இருள்வெளியில்
எனக்கு நானே
ஏன் சிரிக்கத் தொடங்குகிறேன்
என்பது தான் புரியவில்லை.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...