வரலாற்றில் இன்று – 16.11.2020 சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
சர்வதேச சகிப்புத்தன்மை தினம் நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமான யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1995ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஜோஸ் டிசோஸா சரமாகூ
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஜோஸ் டிசோஸா சரமாகூ 1922ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி போர்ச்சுக்கல் நாட்டின் ரீபாட்டஜோ மாகாணத்திலுள்ள அசின்ஹாகா என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது முதல் நூலான ‘லேண்ட் ஆஃப் சின்’ 1947ஆம் ஆண்டு வெளியானது. 1950ஆம் ஆண்டின் இறுதியில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு பிரபல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது.
இவர் 1966ஆம் ஆண்டு ‘பாஸிபிள் போயம்ஸ்’ என்ற கவிதை நூலை வெளியிட்டார். தொடர்ந்து,’பிராபப்ளி ஜாய்’,’திஸ் வேர்ல்டு அண்டு தி அதர்’,’டிராவலர்ஸ் பேக்கேஜ்’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய ‘பால்டாஸர் அண்ட் ப்ளிமுண்டா’ (Baltasar and Blimunda) என்ற நாவல் உலக அளவில் அங்கீகாரத்தையும், வாசகர்களையும் பெற்றுத் தந்தது. இந்த நாவலுக்கு போர்ச்சுக்கீசிய பென் கிளப் விருது கிடைத்தது. 1980ஆம் ஆண்டில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள் என ஏராளமான படைப்புகளை எழுதினார்.
இவருடைய உலகப் புகழ்பெற்ற நாவலான ‘பிளைண்ட்னஸ்’ (Blindness) 1995ஆம் ஆண்டு வெளிவந்தது. 1998ஆம் ஆண்டு இவர் இலக்கியத்திற்காக நோபல் பரிசை பெற்றார். ஜோஸ் டிசோஸா சரமாகூ 2010ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1904ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஜான் பிளெமிங் வெற்றிடக் குழாயை கண்டுபிடித்தார்.
1945ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.