நெஞ்சமெல்லாம் காதல் – ஒரு குறுநாவல் | உமாதமிழ்
ரொம்ப நேரம் அடித்து கொண்டு இருந்த மொபைலை எடுக்கல,
ஒரு புது நம்பர்.
மீண்டும் மீண்டும் ஒலிக்க இப்போ எடுத்தேன்
“ஹலோ”
மறு முனையில் “ஹலோ”
ஒரு இளம் வயசு பெண் குரல்.
“நீங்க”
“நான் நான்சி அங்கிள்”
“நான்சி ! அப்படி யாரும் எனக்கு தெரியாதே”
“அங்கிள். போன மாசம். பாண்டியன் எக்ஸ்பிரஸ். ரயில் பயணத்தில். நான் என் பையன் பிரபாகரன் அம்மாவோட மீட் பண்ணோம். திண்டுக்கல்லில் இறங்கிட்டீங்க. நாம பேசிக்கொண்டிருந்தபோது பத்திரிகை ஆசிரியர்னு சொல்ல நான் உங்க கார்டை நான் கேட்டேன். கொடுத்தீங்க. அதான் பேசறேன்”
இப்போ எனக்கு அது ஞாபகத்திற்கு வர,
“இப்போ ஞாபகம் வருது. எப்படி இருக்கே? நான்சி. அம்மா பிரபாகரன் எப்படி இருக்காங்க?”
“எல்லோரும் நலம். அம்மா உங்க கிட்ட பேசணும் னு சொன்னாங்க. அதுக்கு தான் போன் பண்ணேன்”
“சரி. அம்மா கிட்ட கொடு”
அந்த பயணத்தின் பிளாஷ் பேக் உங்களுக்கு வாசகர்களே !
பிளாஷ் பேக்.
போனமாதம். ஒரு இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மிக வேகமாக ஓடி வந்து திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டி பாண்டியன் எக்ஸ்பிரஸில் தடுமாறி வண்டியை துரத்தி பிடித்தேன்.
கம்பார்ட்மெண்ட் மாறியதால் ரயிலுக்குள் ஒரு நடைப்பயணத்தில் ஒரு வழியாக எனது கம்பார்ட்மெண்ட் வந்து அந்த ஓர விண்டோ இருக்கையில் அமர்ந்தபோது மூச்சு வாங்கியது.
குடிக்க தண்ணீர் தேவைப்பட, தண்ணீர் பாட்டில் வாங்கல. எதிரே ஒரு வயதான பெண்மணி, பக்கத்தில் ஒரு சிறுபையன். ஒரு இளவயது பெண்.
வயதான பெண்மணியை பார்க்க முடியல தனது புடவை தலைப்பை முகத்தை மூடியிருந்ததால் கண்கள் மட்டும்தான் தெரிந்தது. பையன் 5 வயது இருக்கலாம். அவனுக்கு பத்கத்தில் அமர்ந்திருந்த பெண் பையனின் அம்மாவாக இருக்கக்கூடும்
என் கணிப்பில் 30 வயது இருக்கலாம் அவளிடம் “நான் மிக அவசரமாக வண்டியை பிடித்தேன். தண்ணீர் பாட்டில் வாங்கல. குடிக்க கொஞ்சம் தண்ணீர்” கேட்க தயக்கமில்லாமல் ஒரு பாட்டிலை நீட்ட “தாங்ஸ்” என சொல்லிக்கொண்டே குடித்தேன்.
இப்படி அறிமுகம் நான்சி.
அவ பையன் பிரபாகர். மிகவும் சுட்டி.
“அவங்க என் அம்மா ரொம்ப ரிசவர்டு யாருக்கிட்டேயும் அதிகமாக பேச மாட்டாங்க சார்”
“மதுரை சொந்த ஊரா”
“இல்ல சார். சார் நான் உங்களை அங்கிள்னு கூப்பிடவா”
“ம்”
“நாங்க சென்னை, என் கணவர் ஊரு, அவரு இப்ப குவைத்ல இருக்கார். இங்க ஒரு பங்சனுக்கு வந்தோம், ஊருக்கு திரும்பறோம்”
“அப்பா என்ன பண்றாரு”
“அங்கிள், நான் பொறந்து 3 வயசான போது அப்பா இறந்துட்டாரு” என்னை படிக்க வைச்சு வேலை வாங்கிக்கொடுத்து கல்யாணம் பண்ணி வைச்சது எல்லாம் அம்மாதான்” என அவ சொல்லும் போதே நான்சி கண்களில் நீர்த்துளிகள்.
நான் எதுவும் பேசல.
நான்சியோட அம்மாவோட முகத்தை பார்க்க முடியாதததால் அவளின் உணர்ச்சிகளை அறியமுடியல.
“சாப்பிடலயா” எனபேச்சை மாற்றினேன்.
“இதோ. நீங்க அங்கிள்”
“நான் ரொம்பஅவசரமாக வண்டியை பிடிச்சேன் சாப்பிட எதுவும் வாங்கல இங்க கேட்டரிங் ஆள் வருவான் என பார்த்து கொண்டிருக்கிறேன்”
“அவன் வரும்போது வரட்டும் எங்களோட சப்பாத்தி சாப்பிடுங்க”
என சொல்லிக்கொண்டே 4 சப்பாத்திகளை ஒரு சின்ன தட்டில் குருமாவுடன் நீட்டினாள்.
எனக்கு வாங்கி சாப்பிடத்தயக்கமாக இருந்தது.
அவ அம்மாவைப் பார்த்தேன். எப்போதும் போல முகம்.
ஒரே வார்த்தையில் சொன்னாங்க.
“அவங்களாம் நம்ம சாப்பாட்டையெல்லாம் சாப்பிடமாட்டாங்க” என
“அப்படியெல்லாம் இல்லை” என் சொல்லிக்கொண்டே வாங்கிக்கொண்டேன்.
நன்றாக இருந்தது.
“அம்மா செய்தது” என நான்ஸி சொல்ல
நான் அவங்க அவ அம்மாவை பார்க்க,
முகத்திலே ஒன்னும் தெரியல.
இப்படி தொடர்ந்தது.
“நீங்க என்ன செய்யறீங்க அங்கிள்?”
“நான் ஒரு பத்திரிகை ஆசிரியர்”
கார்டு கொடுத்தேன்.
“அம்மாவுக்கு இதல்லாம் ரொம்ப பிடிக்கும் ஓவியங்கள் கூட வரைவாங்க”
நான் ஒன்றும் சொல்லலை.
செங்கற்பட்டு வர என் பக்கத்திலே இரண்டு பசங்க உட்கார்ந்தாங்க.
“நான் துங்கபோறேன் நான்சி நான் திண்டுக்கல்ல இறங்குவேன்”
என சொல்லிக்கொண்டே நான்சி உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலுள்ள நடு பெர்த்தில் படுக்க போனேன், அது நான்சி அம்மாவுக்கானது.
“அம்மாவை என்னுடைய பெர்த்ல லோயர்ல படுத்துக்க சொல்லு நான்சி”
“அதல்லாம் வேணாம் உங்களுக்கு எதுக்க சிரமம்” நான்சி அம்மா.
“பரவால குட்நைட்” என சொன்னேன்.
நான் படுத்து கொண்டேன்.
விடியற்காலை திண்டுக்கல் வர இறங்கினேன்.
நான்சி பிரபா நல்ல துக்கத்தில் இருக்க,
நான் இறங்கும் சத்தம் கேட்டு நான்சி அம்மா விழித்துக்கொள்ள
“வரேங்க” என்றேன்
“நான்சி கிட்ட சொல்லிடுங்க”
அவங்க பதிலை ஏதும் எதிர்பார்க்கமல் கிளம்பிட்டேன்.
இதான் அந்த பிளாஷ்பேக்.
இனி வருவது நானும் நான்சி அம்மாவும் பேசிக்கொண்டது
“ஹலோ”
மறு முனையில் “ஹலோ”
“சொல்லுங்க. நலமா. அன்றைக்கு ட்ரெயின்ல எதுவும் பேசல. உங்க குரல் பரிச்சயம் இல்லை;
“நலம். நான்சி கொடுத்த கார்டுல நீங்க ஒரு பத்திரிகையாளர் என தெரிஞ்சு கொண்டேன். உங்க கதை கட்டுரை களை இணையம் மூலம் படித்தேன்”
“ஓ. மகிழ்ச்சி”
“அது விஷயமா பேசணும்”
“எனக்கும் வாசகர்கள் இருக்காங்க”
சிரித்து கொண்டே கேட்டேன். “பேசலாம்”
“காதல் அனுபவங்கள்” என்ற ஒரு கட்டுரையில் வரும் அந்த பொண்ணு பேரு”
“சாரி, நான் சொல்ல மாட்டேன் அது பர்சனல். தெரிய வேண்டியவங்களுக்கு தெரியும்”
“இப்படி சொன்னால்”
“நீங்கள் வேறு எதாவது பேசணுமா எனக்கு நெறய ஒர்க் இருக்கு”
“சாரி.” என்னை மிகவும் பாதித்தது. உங்க அந்த அனுபவம் உங்க படம் போட்டு இருக்கலாமே”
“அது தேவை இல்லை என நினைக்கிறேன்”
“கடைசியா ஒரு கேள்வி. உங்களை போல அவங்களும் உங்களை தேடி கொண்டு இருந்தால்”
“சரியான சந்தேகம். கட்டயாம் எனக்கு அந்த செய்தியை என்னால் அறிய முடியும் என நம்புறேன்”
“உங்க பேரு என்னங்க”
“பிரகாஷ்”
“உங்க பேரு”
“நேரம் வரும்போது சொல்றேன்”
அந்த கட்டுரையின் சுருக்கம். முழுவதும் படிக்கணும் என்றால் பத்திரிகை வாங்கி படியுங்கள்.
உங்கக கற்பனையில் அது ஒரு காதல் கதையாக இருக்கும்.
இதோ அந்த கட்டுரையின் சுருக்கம்.
இது நாற்பது வருடங்களுக்கு முன், நடந்த நிகழ்வு
எனக்கு அப்போது வயது 20 இருக்கலாம். அரசு உத்யோகம். அதுவும் முதல் பணி
சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு தாலுகாவில் இருந்தது அந்த ஆபிஸ்.
அந்த தாலுகா ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்த அந்த அரசு அலுவலத்திற்கு ரயில் நிலையத்தில் இறங்கி அந்த ஊரிலுள்ள லோக்கல் பஸ் மூலம்தான் போய் வரவேண்டும்.
ரயில் இறங்கி பஸ் பிடித்து போவேன், அதேபோல மாலை பணி முடிந்த பிறகு திரும்புவேன்
அந்த அலுவலகத்தில் பணி சேர்ந்து ஆறு மாதம் ஆகியிருக்கும்.
அப்போதுதான் அவளைப் பார்த்தேன்.
தினமும் பகல் சாப்பாடு சாப்பிட்டபின் நண்பர்களுடன் அந்த பஸ் டெர்மினஸ்க்கு அருகே உள்ள பொட்டிகடைக்கு வருவோம். பல நண்பர்கள் ‘தம்’ அடிப்பார்கள். எனக்கு அதுபழக்கமில்லை. கடலை மிட்டாய் சாப்பிடுவேன். அப்படிப்பட்ட ஒரு நாளில் லோகல் பஸ் வர அதிலிருந்து இறங்கிய அவள் நேரேதிரே தெருவில் நின்று கொண்டு இருந்த என்னைப் பார்க்க அந்த நொடியில் மனதை என்னவோ பண்ணியது.
பச்சைப்பாவாடை, வெள்ளைத்தாவணி. நீண்ட பறந்த கூந்தல் பின்புறம் இடுப்பு வரை பிரீ ஹேர்ஸ்டைலில் காற்றில் பறந்து மணத்தை ஊட்டியது.
நெற்றியில் திலகமில்லை. கைகளில் வளையல்களும் இல்லை. கழுத்தில் மட்டும் மெல்லிய சங்கிலி, வண்டுகளை போல சுழன்ற கண்கள்.
நான் என்னவோ ஆனேன்.
அவளுடன் அவள் தோழிகள் இரண்டு பேர் பஸ்ஸை விட்டு இறங்கி என்னை கடந்து போனார்கள்.
மார்போடு அணைந்த புத்தகங்கள் ஒரு சுருட்டிய வெள்ளைப் பேப்பர், டைப்ரைட்டிங் கற்றுக் கொள்றாங்க போல என நினைத்தேன்.
என் பார்வை அவள் பின்னே.
எல்லாம் மறந்து பார்த்துக்கொண்டு இருந்தேன்.
கொஞ்ச தொலைவு சென்று சட்டென அவள் திரும்பி பார்த்தாள்.
நானும் அவளை பார்ப்பதைக்கண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவளின் முகத்தில் என்ன ரியாக்ஷன் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் என் இதயம் பறிபோய்விட்டதை உணர்ந்தேன்.
பிற்பகல் ஆபிஸ்ல வேலை ஓடவில்லை.
அன்னிக்கு சாயந்தரம் பஸ்க்கு காத்திருக்க பஸ் வர ஏறினேன்.
சீட்டு கிடைக்கல, நின்று கொண்டிருந்தபோது
அவள் தனது தோழிகளுடன் பஸ்ஸில் ஏற என்னை பார்த்துவிட்டு சற்று திடுக்கிட்டு மீண்டும் பார்க்க ரெண்டு பேர்களின் பார்வைகள் சந்தித்தது அவள் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.
பஸ்ஸில் கூட்டம் அதிகமானமால் அவளை பார்க்க முடியல.
ஸ்டேஷன் வந்ததும் எல்லாம் இறங்கினாங்க.
நான் அவளைத் தேடினேன். அவள் தன்தோழிகளுடன் இறங்கி நடந்து போய்க்கொண்டு இருந்தவ திரும்பி எதையோ தேடுவதபோல பார்வை இருக்க நானும் பார்ப்பதை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். அவ வசிக்கும் இடம் ஸ்டேசன் அருகே இருக்கிறது என புரிந்தேன்.
இதுதான் ஆரம்பம்.
இது தினம் வாரம் மாதங்கள் என தொடர, இருவர் பார்வைகளும் சந்திக்காத நாளில்லை.
எனக்கு யார் மீதும் பிடிப்பு வரல, அவளைத்தவிர.
சாப்பாடு இறங்கல. இரவு உறக்கம் இல்லை.
இது தொடர. தினம் அவஸ்தைகள்
அலுவலக நண்பர்கள் எனக்கு உதவி செய்ய தயாராக இருந்தனர்.
அவ பெயரை கண்டு பிடித்து சொன்னாங்க. கேத்ரீன்
அருமை பெயர். மதம் பற்றி எனக்கு கவலை இல்லை
இது தான் காதலா !
ஒரு நாளாவது அவ தனியாக வருவாளா என காத்திருந்து பேச நினைப்பேன். ஒரு நாளும் தனியாக வரல.
நண்பர்கள் என்னை ரவினு கூப்பிட என் பெயர் அவளுக்கு தெரிந்து இருக்கும்.
இந்த சமயத்தில் இடியான செய்தி.
என்னை பணி மாற்றம் செய்து சென்னக்கு மாற்றல் உத்தரவு.
ஒன்னும் புரியாமல் புலம்பினேன்.
வேறு வழி இல்லை
நாளைக்கு போய் சென்னையில் ஜாயின் பண்ண வேண்டும்.
எல்லாம் முடிந்து போயிடச்சு. அழுதேன்.
கடைசி நாள் எப்படியாவது அவகிட்ட பேசணும்னு ஒரு துண்டு சீட்டில் ஒரு விலாசம் எழுதி வைத்துக்கொண்டு அவ ரயில்வே ஸ்டேசனில் இறங்கியவுடன் அவள் பின்னாலே சென்று அவளைக் கூப்பிட்டு சீட்டை காண்பித்து “இந்த அட்ரஸ் தெரியுமா” என கேட்க
அவ திடுக்கிட்டு “தெரியாதுங்க” என சொல்லிட்டு போய்விட்டாள்.
அங்கேயே நின்றேன்.
கொஞ்ச தொலைவு சென்ற பின் அவள் திரும்பினாள்,
இங்கிருந்து அவ முகத்தின் எந்த சலனுமும் தெரியல.
அவ முகத்தில் எந்த வெறுப்பும் இல்லை அதற்கு பிறகு இன்று வரை அவளை பார்க்கல.
40 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் மனதில் அவள்
இன்னொன்னு அவளின் நினைவாக என் முதல் மகளுக்கு அவ பெயரை வைத்து இருக்கேன். இது ஒரு ஆறுதலே,
இந்த கட்டுரையை அவள் படிக்க நேர்ந்தால் அவள் உணரட்டும் என் காதலை இதை தவிர வேறு எண்ணம் இல்லை.
இது ஒரு மன ஆதங்கம் என முடித்து இருந்தேன்
கட்டுரையின் சுருக்கம் படிச்சிட்டீங்களா!
இனி எங்க உரையாடலின் இறுதி பகுதி
“எனக்கும் உங்க காதல் அனுபவம் போல உண்டு. ஏறக்குறைய எல்லா சம்பவங்களும் அதே. நானும் அது பற்றி ஒரு கட்டுரை தரவா, போடுவீங்களா?
“தாரளமாக”
“நிஜமா சொல்றீங்களா?”
“ம். கார்டுல பத்திரிகை ஆபிஸ் அட்ர்ஸ் இருக்கு கூரியர் பண்ணலாம்”
“நன்றீங்க” போனை வைத்து விட உரையாடல் முடிவுக்கு வந்ததது
………………………………………………………………….
எனக்கு அந்த வாரம் டெல்லி போக வேண்டியிருந்தது.
பவானிக்கிட்டே சொன்னேன். “நான் பத்திரமாக இருக்கேன், நீ பத்திரமா போய்ட்டு வா”
“சரி செல்ல மகளே”
பவானி என் 2வது மகள். செம ஜாலியாக இருப்பா.
என்னைப்பற்றி பிற விவரங்கள் பின்னால் தெரிஞ்சிப்பிங்க.
நான் டெல்லி போய் திரும்பி வந்த பின் ஆபீஸ் போனேன்.
பல கடிதங்கள். நான்சி அம்மா வின் கூரியர் தேடினேன்.
அனுப்புனரில்
கேத்ரீன்
C/o நான்சி
எடுத்து பிரித்து படித்தேன். ஒரே சமயத்தில் மகிழ்ச்சி. ஆச்சரியம்
ஒரு கடிதம். ஒரு கட்டுரை.
இணைப்பில் சில ஓவியங்கள்.
அதுதான் என்னை மகிழ்ச்சி படுத்தியது.
ஆம். என்னோட உருவம் தான் ஒவியங்களாக. ஓவியம் பை ரவி னு போட்டு இருந்தது.
நான்சியோட அம்மா தான், நான் காதலித்த கேத்தரின் எனக்கு புரிந்துவிட்டது.
கடவுளே உனக்கு நன்றி.
இதோ அவளின் கட்டுரை சுருக்கம்.
நான் நேசித்தவர் இவர்தான்.
எனக்கு தெரிந்து இவரை நண்பர்கள் ரவி என கூப்பிடு வாங்க
நான் விரும்பினேன், என்னால் சொல்ல முடியல. அந்த காலத்தில் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணமுடியாது. மதம் விட்டு மதம் மிகவும் கஷ்டம்.. அவருக்கும் இதே நிலைமை..
அந்த ஓரு வருடம் எங்கள் கண்கள் சந்தித்து கொண்டது. அவர் பார்வையில் எந்த காமமும கிடையாது. என் கண்களை தவிர வேறு எங்கும் பார்வை இருக்காது. என்னை பார்த்ததும் மிக உற்சாகமாகிவிடுவதை உணர்ந்தேன்.
எனக்கு இரவு தூக்கம் கிடையாது.
மனசுல பாரம். இந்த காதல் வேதனை எனக்கு தான் தெரியும்
மற்றபடி நாங்க சந்தித்ததெல்லாம் பார்வைகளில்தான்.
(பிரகாஷ் கட்டுரை மாதிரியேதான் )
கடைசியா ஒரு நாள் ரவி வந்து அந்த ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு துண்டு பேப்பரை என்னிடம் காண்பித்து “இந்த அட்ரஸ் எங்கே இருக்கு தெரியுமா?” என கேட்டார்.
கூட என்தோழிகள் எனக்கு என்ன சொல்றது னு தெரியல.
“எனக்கு தெரியாதுங்க” னு சொல்லிட்டு போய்ட்டேன்.
கொஞ்ச தொலைவு போய் திரும்பி பார்த்தேன்.
அங்கேயே நின்று கொண்டு இருந்தார்.
முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது, அன்று தான் அவரை நான் கடைசியாக பார்த்தேன்.
அன்று இரவு முழுவதும் தூங்கலை. சே. நான் அந்த பேப்பரை வாங்கிட்டு நாளைக்கு சொல்றேன் என சொல்லி இருக்கலாம் போல் என நினைத்தேன்.
மறுநாள் அவர் வந்திருப்பார், அப்படி நடந்திருந்தால் எங்க காதல் தொடர்ந்திருக்குமே.
அப்புறம் இன்று வரை அவரை நான் பார்க்கல்ல.
மூன்று வருடம் கழித்து எனக்கு திருமணம் ஆச்சு. என் கணவர். பிசினஸ்மன். என் இல்லற வாழ்க்கை. நல்லா தான் இருந்தது.
அவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டார் அப்போ நான்ஸிக்கு ஒரு வயசு. எனக்கு ஒரு பிரைவேட் கம்பெனி யில் வேலை கிடைச்சுது.
நான்சிய படிக்க வச்சு கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன்.
ரவியை மறக்க முடியல. அதுக்காக அவர் பெயரில் ஓவியங்கள் வரைவேன்.
விற்பனை செய்வதும் உண்டு. அந்த தொகையை ஒரு நல ட்ரஸ்ட் அவர் பேரில் ஏற்படுத்தி உதவுகிறேன்.
யாரு ரவி என கேட்பாங்க. யாருக்கும் சொன்னது இல்லை.
இப்போ இந்த கட்டுரையில் சொல்லிட்டேன்.
என் காதல் உண்மை என அவருக்கு தெரியனும். நான் நேசித்தது உண்மை என அவர் இதை படிச்சா தெரிஞ்சுப்பார்
மற்றபடி வேறு எந்த எண்ணம் இல்லை,
கேத்தரின்
பி.கு (சார் பத்திரிகையில் என் பெயர் போடாமல் ஒரு வாசகினு போடுங்க)
இது கடிதத்தில்
என் காதலை என் ஓவியத்தில் பதித்தேன்.
இந்த காலம் போல் இல்லை அப்போ. போட்டோ எடுக்க மொபைல். பேச போன் இந்த வசதி கிடையாதே. என் மனசுல பதிந்து அவர் உருவம் ஓவியமாக மிகவும் தத்ருபமாக. இருந்தது
தினம் இந்த ஓவியங்களுடன் தான் பேசிக்கொண்டிருப்பேன்.
வயதான அவர் தோற்றத்தை பார்த்தாலும் என்னால் அடையாளம் காண முடியும் சார்.
இதைப்படித்தபின் என் மனநிலை எப்படி இருந்து இருக்கும் என இந்நேரம் நீங்கள் யூகிச்சு இருப்பீங்க
அன்னிக்கு என் கட்டுரையை படிச்சுட்டுதான் துருவித்துருவி கேதரின் போனில் கேட்டது இதற்காகத்தானா?
எனக்கு இது புரியாமா போச்சே!
உடனே போன் பண்ணி கேத்ரின் க்கு பேசணும் னு தோணிச்சு.
ஆனா ஒரு சந்தேகம் நான் தான் ரவினு, எப்படி சொல்வது.
தயக்கம் இருந்தது. மேலும் இது பற்றி நான்சிக்கு தெரியுமா அதுவும் தெரியல.
வேறு எதாவது சிக்கல் வந்துவிட்டால்,
யோசனை பண்ணேன்.
கேசுவல பேச நினைத்து நான்சி க்கு கால் பண்ணேன்.
போன் சுத்தமா ரிங் போகல,
அன்று முழுவதும் அப்புறம் தினம் பண்ணேன்.
வாட்ஸாப்ப் பும் நோ மெசேஜ்.
கேத்ரீன் கிட்ட பேசணும், அவளை பார்க்கணும் என்ற ஆசை அதிகமாகியது.
கூரியர் ல அட்ரஸ் இருக்கவே நேரில் போய் பார்க்க முடிவு செய்தேன்.
பவானிகிட்ட சொன்னேன். “மதுரை போய்ட்டு வரேன். அப்புறம் விஷயம் விவரமா சொல்றேன் என்றேன்.
“சரிப்பா” என சொல்ல மதுரைக்கு கிளம்பினேன்.
அங்கே நான்சி வீட்லே நடந்ததை கேட்டா அதிர்ச்சியாகிவிடுவிங்க.
இனி நடந்ததை நான்சியே சொல்வாள்.
ரொம்ப நேரம் காலிங்க பெல் அடிக்க கதவை திறந்தேன்.
பிரகாஷ் அங்கிள் நின்று கொண்டு இருந்தார். எனக்கு ஆச்சரியம் எப்படி இவருக்கு எங்கள் வீடு தெரியும் என நினைத்துக்கொண்டே,
“வாங்க அங்கிள்”
“எப்படி மா இருக்கே. அம்மா., பிரபா, எப்படி இருக்காங்க.”
“நல்லா இருக்காங்க உட்காருங்க. டீ போட்டு எடுத்து வரேன்.”
“இருக்கட்டும். தண்ணீர் போதும்” என்றார் பின்
“அம்மா எங்கே. ?”
அவர் முகத்தில் அம்மாவை பார்க்கவேண்டும் என ஆவல் தெரிந்தது.
நான் ஏற்கனவே சோகத்தில் இருக்க. அம்மா பற்றி எப்படி சொல்வது என யோசித்தேன். அவர்கிட்ட உண்மையை சொல்லிடனும் என்று மனசுல தோணிச்சு. எனவே
“அங்கிள். அம்மாவுக்கு உடம்பு சரியில்ல ”
“என்ன ஆச்சு இப்போ எங்கே இருக்காங்க.”
அவர் முகத்தில் ஒரு கவலை ரேகை ஒரு படப்படப்பு
“மாடியில அம்மா ஒரு ரும்ல இருக்காங்க. வாங்க அங்கிள் போய் நாம அம்மாவை பார்க்கலாம்” என அவரை கூப்பிட்டு சென்றேன்.
ஒரு பதட்டத்துடனே வந்தார். உள்ளே ரூமுக்கு போனோம்.
“அம்மா” என்றேன்
அம்மா பார்க்கல எங்கேயோ பார்த்துக் கொண்டு இருந்தாங்க ஆமாம் அவங்களுக்கு சுத்தமா எந்த சுய நினைவும் இல்ல, தான் யார் என்ன என அவங்களுக்கு தெரியாத நிலையில் அங்கிள்,
அவர் முகம் வெளிறிப் போய்விட்டது.
“கேத்ரீன்” என கூப்பிட்டார்
எனக்கு ஆச்சரியம் இவருக்கு எப்படி அம்மா பேர் தெரியும்னு நினைத்தேன்.. ஆனா கேட்கல.
அம்மா முகத்திலே எந்த சலனமில்லை. பல தடவை கூப்பிட்டார்.
அம்மா எங்கேயோ பார்த்துட்டு இருந்தாங்க.
கடைசியா “கேத்ரீன் இங்கே பாருங்க நான் ரவி வந்திருகேன் ரவி” என்றார்.
எனக்கு இன்னும் குழப்பம் அதிகமாக ஆயிடுத்து
இவருக்கு எப்படி அம்மா பேரு தெரியும்னு “ரவி இவரா.? நான்சி என்னம்மா நடந்தது” அவர் குரல் உடைந்தது
“ஒன்னும் புரியல அங்கிள் ஒரு 10 நாட்களுக்கு மாடியிலே முன்னே போன் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. யாருக்குனு தெரியல. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்க. ரவி, ரவியை பார்க்கனும் நீங்கதான் ரவியா ரவியா” னு பேசறது கேட்டது.
ரொம்ப டென்சனாக இருந்தாங்க” மிகவேகமாக கீழே இறங்கி வந்தாங்க என்னவோ தெரியல பாதி படிக்கட்டிகளில் இருந்து கீழே விழுந்து மயக்கமாக ஆகிட்டாங்க. அடியெல்லாம் படல மயக்கம் தெளியல. மயக்கமாக இருக்கவே பக்கத்திலே இருக்கிற பேமிலி டாக்டருக்கு போன் பண்ண அவர் வந்து மயக்கம் தெளிவிச்சார்.
அவங்க விழித்து பார்த்து” நான் நான் ரவியை பாக்கனும்”
இதே தான் சொன்னாங்க. தான் யார் என்ற நினைவு இல்லாத போல் பேச நான் பயந்தேன்.
டாக்டர் அம்மாவை முழுவதுமாக டெஸ்ட் பண்ணார் “அவங்க உடம்புல ஏதும் காயமில்லை மனசிலே ஏதோ ஒரு பிரச்சனை. ஒரு அதிர்ச்சி, இது ஒரு வேளை ரொம்ப நாளாக அவங்களுக்குள்ளே ஓரு சம்பவமாக கூட இருந்திருக்கலாம். ஆகவே அவங்க இப்ப இன்றைய கால சுய நினைவை இழந்துட்டு வேறு ஏதோ கால கட்ட நினைவுகளில் இருக்காங்க” ரவி யாரு? அவங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன தொடர்பு? இதலாம் தெரிஞ்சாதான் நாம குணபடுத்த முடியும். பயப்பட வேண்டியது இல்லை, இவங்கள தனியாக விட்டு விட்டு எங்கும் போகாதீங்க. இப்போதைக்கு விட்டமின் மாத்திரை. டானிக் தரறேன் இரவில் துங்க பில்ஸ் தருகிறேன்” என்றார். பின்னர் சில சமயங்களில் தானாகவே சுய நிலைக்கு வரலாம். இடமாற்றம் பண்ணி பாருங்க.
இப்படி பல விஷயங்களை டாக்டர் சொல்ல “பயமா இருந்தது” என்றேன்
அங்கிளும் மிரண்டுபோய் உட்கார, “அங்கிள் அங்கிள்”
அவருக்கும் ஏதோ பிரச்சனைபோல சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தார்.
“அங்கிள் உங்களுக்கு என்ன ஆச்சு?”
“ஒன்னுமிலல. நான்சி நான் வரேன் இங்க ஒட்டல ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கறேன்.. ரவியை கண்டுபிடிப்போம்” என சொல்லிவிட்டு போய்விட்டார்.
………………………………………………………………….
இதுக்கு பிறகு என்ன நடந்தது பற்றி ஆவலாக இருப்பீங்க.
பவானி சொல்வாங்க கேளுங்க
நான்சி சொன்னதை கேட்டீங்களா!
நான் பவானி தொடர்கிறேன்.
அப்பா ஒட்டலுக்கு போனபிறகு எனக்கு போன் பண்ணார்.
போனில் ஒரே அழுகை, கதறல், அம்மா இறந்தபோதுதான் அவர் அழுததை நான் பார்த்தேன்
அதற்கு பிறகு இப்பதான்,
“என்னப்பா மனசை உடைக்காதீங்க”,
“இல்லம்மா”,
“சொல்லுங்க”,
சொன்னார், நான்சியை போன மாதம் ரயில் பயணத்தில் சந்தித்தது பின் கேதரின் சுய நினைவு இழந்தது வரை சொன்னார்.
பிறகு நிதானித்து அவருடைய இளமை கால அந்த காதல் சம்பவங்களை சொல்லி “கேதரீன்தான் தான் காதலித்த பெண்.” என்றார்
எனக்கு இந்த காதல் கதை ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
“நீயும் ஒரு காதல் நாயகனா” என்றேன் சிரித்துக்கொண்டே “இது அம்மாவுக்கு தெரியுமா?” என்றேன்.
“தெரியும். பவானி எல்லாம் அவளுக்கு சொன்னபோது அவளும் உன்னை மாதிரி தான் கேட்டாள். உங்களுக்கு அவ உங்களை காதலிச்சாலா என தெரியுனும், அதானே அதைத்தவிர வேறு எண்ணம் இல்லையே. உங்க எண்ணம் நிறைவேறட்டும் என்பாள் அடிக்கடி.”
“ஒ. அப்படியா அம்மா கிரேட்”
“கேதரீன்னு உன் அக்காவுக்கு ஏன் பெயர் வைத்தேன் என்பது எனக்கும் அம்மாவுக்கும் தெரியும்” என முடித்தார்.
“கேதரீன் கதை இதானா, நான் முதல்ல பொறந்து இருந்தா நான் கேதரீன் இல்லையா டாடி?” என சொன்னேன்
“உன் காதல் கட்டுரையை நான் படிக்கல. இப்ப படிக்கறேன் கதாநாயகனே” என்றேன்.
அவர் சிரிக்க “அப்பா நான் மதுரை வரேன். மற்றதை அங்கு பேசிக்கலாம்” என சொல்லி அப்பாவை சமாதானப்படுத்திவிட்டு அன்றே பிளைட் புக் பண்ணிட்டு மறு நாள் மதுரையில்.
………………………………………………………………………….
நானும் அப்பாவும் நான்சி வீட்டுக்கு போனோம்.
நான்சியை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவளுக்கும்தான்.
கேத்ரீன் அம்மாவை பார்த்தேன்.
ரொம்ப அமைதியான முகம், அந்த முனகல் இருந்தது
அந்த வயதிலும் இளமையாக இருந்தாங்க.
என் அப்பாவும் அப்படிதான். அவர் குரல் எப்பவும் இளமைதான் அவர் குரலுக்கு மயங்காத ஆட்களே இல்லை நல்ல அழகன்.
நான்சி வீட்ல மதிய சாப்பாடு. அதற்கு முன் நான் நான்சிக்கு எல்லாம் சொல்ல
“அப்ப ரவி தான் பிரகாஷ் சாரா?” இவ்வளவு நாளா தெரியாம போச்சே, நான் கூட அம்மா கிட்டே கேட்பேன் நீ வரையற ஓவியங்கள் எல்லாம் ரவி என்ற பெயரில் வருதே” அம்மா. சொல்வாங்க. அதுக்கு நேரம் வரல. நானே ஒரு நாள் சொல்லுவேன் என்பாங்க”
“நான்சி, இப்ப அப்பாவுக்கு கேத்ரீன் அம்மா அவரை விரும்பினாங்கனு தெரிஞ்சு போச்சு. அவருக்கு என்ன வருத்தம்னா அம்மாவுக்கு நான்தான் ரவினு தெரியாமா போச்சே என ரொம்ப கவலையில் இருக்கார்”
“அம்மாவுக்கும் இன்னும் அப்படியே எனதான் நினைக்கிறேன்”
“இவங்க ரெண்டு பேரும் ரயில்ல பாத்தபோது இருவருக்கும் தெரியல.
போன்ல பேசனபோது ம் தெரியல. ரவி தன்னை விரும்பினாரு. அவர் பொண்னுக்கு கேத்ரீன் என பெயர் வைச்சாருனு அம்மாவுக்கு தெரியாமல் போச்சே”
“இன்னும் விதி விளையாடுகிறது நான்சி”
நான் பெருமூச்சுவிட
“அவங்க சீக்கிரம் சுய நிலைக்கு வருவாங்க பவானி, அதுதான் என பிரார்த்தனை” என்றாள் நான்சி.
தொடர்ந்த அவள்,
“அன்றைக்கு அம்மா யாருகிட்டே பேசினாங்க என தெரியல, போன் பண்ணிட்ட பிறகு போன் லாக் ஆடுத்து. அதாலே போனை திறக்க முடியல பவானி” என்றாள் நான்சி
“இதுக்கு பதில் அப்பாவுக்குதான் தெரியும். அவர்தான் சொல்லனும்” என நான்சிக்கிட்டே சொல்லிக்கொண்டே அப்பாவை பார்த்தேன்.
………………………………………………………………….
“நானே சொல்லிடறேன் பவானி” இது நான் நான் தொடர்கிறேன்.
“நான்சி, அன்னிக்கு கேத்ரீனோட போன் பேசியது நானே. அது எப்பனா நான் டெல்லிக்கு போனேனே அன்றுதான். அப்ப நான் ஏர் போர்ட்ல இருந்தேன் செக் இன் முடிந்து விமானத்துக்கு காத்துகொண்டிருந்தபோது போன் வந்தது.”
“அலோ” நான்
“பிரகாஷ் சார், நான் நான்சியோட அம்மா பேசறேன்”
“ஓ நீங்களா என்ன விஷயம். நான் டெல்லிபோய்க்கிடடுஇருக்கேன்.” இப்ப சென்னை ஏர் போர்ட்ல.”
“ரொம்ப சந்தோசம், நான் அன்னிக்கு சொன்னா போல இன்னிக்கு அந்த கட்டுரையை கூரியர்ல அனுப்பிச்சிட்டேன்.”
“ஒ. நன்றி.”
“என் பேரை போட வேண்டாம் ஒரு வாசகினு போடுங்க.”
“நல்லது.” நான் டெல்லி போய்ட்டு வந்த பிறகு பாக்கறேன்”
“இன்னொரு விஷயம் சார். நான்சிக்கு குவைத் போக விசா கிடைச்சிடுச்சி
பிரபாவும் அவளும் அடுத்தமாசம் போறாங்க”
“மிகவும் மகிழ்ச்சிங்க”
“நான் தனியாக தான் இங்கே இருப்பேன் சென்னைக்கு வந்து ஒரு ஹாஸ்டல்ல சேரலாம் என இருக்கேன். உங்க பத்திரிகைக்கு தொடர்ந்து எழுத ஒரு சான்ஸ் கொடுங்க. தனியாக, இருக்கும் நேரங்களை உபயோகமாக பயன்படுத்தலாம் என நினைக்கிறன் சார்”
“தாரளமாக”
“அப்புறம் உங்ககிட்ட ஒன்னு கேட்கப்போறேன்”
“சொல்லுங்க”
இதற்கு நடுவே விமானம் தயாரானதற்கான பெண்மணியின் அறிவிப்பு.
“உங்க அந்த கட்டுரையில் இடம்பெற்ற நீங்க நேசித்த காதலியின் பெயர் என்னங்க சார், என் கட்டுரையும் அந்த நிகழ்வுகளும் அப்படியே” அதிலே பெயர் சொல்லல நீங்க உங்க பேர் பிரகாஷ் ஆகவே கேட்கிறேன். உங்க காதலி நினைவாக உங்க பொண்ணுக்கு அவர் பெயர் வைச்சதா சொல்லியிருக்கீங்க”
“ஆமாம்”
“அப்படி பெயர் வைச்சீங்களா சார்”
“ம். எனக்கு இரண்டு பெண்கள் முதல் பொண்ணுக்கு காதலி நினைவாக வைத்திருக்கிறேன்”
“அவ பெயர்”
மீண்டும் அறிவிப்பு பல மொழிகளில் வர,
“நான் கிளம்பறேன் டெல்லி போய்ட்டு வந்த பிறகு பேசறேன்” என்றேன்
“ப்ளிஸ் அவங்க பேரு”
“கேத்ரீன்”
மறுமுனையில் சத்தம் காணோம்.
“நான் வரேன் பை”
“சார். உங்களுக்கு பிரகாஷ் தவிர வேறு பெயர் இருக்கா சார்” மறுமுனையில்
அவங்க குரலில் பதற்றம் தெரிந்தது,
“ம். என் பெயர் ரவி பிரகாஷ். எல்லோரும் ரவின்னு தான் கூப்பிடுவாங்க. பத்திரிக்கை உலகத்திற்கு பிரகாஷ்ன்னு தான் தெரியும்”
என நான் சொல்லிவிட்டு போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு விமானத்தில் நுழைந்தேன்.
மறு முனையில் நான்சியோட அம்மாவின் ரியாக்ஷன் எனக்கு தெரியல.
“இதான் நான் உங்க அம்மாவோட பேசினது. இப்ப எல்லாம் புரிஞ்சிருக்கும் நான்சி”
“ஓ ஜீசஸ் இப்ப எல்லாம் புரிந்தது” என்றாள் நான்சி. எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைச்சிடுச்சி”
“ஆனா அம்மாவுக்கு நீங்கதான் ரவினு தெரிந்ததா என்பது இன்னும் சஸ்பென்சிலே இல்லையா அங்கிள். ஒ கிரேட் அங்கிள் நீங்க அந்த காலத்திலே இப்படி ஒரு காதல். அம்மா வரையற ஒவியங்களில் ரவி என போடும்போது சமயம் வரும்போது சொல்றேன் என்பாங்க. அந்த ஒவியங்களை விற்று அதில் வரும் பணத்தை அனாதை ஆசிரமங்களுக்கு கொடுத்து வந்தாங்க அங்கிள்”
“கேத்ரீன் முன் நான் ஒன்னுமில்லை” என்றேன்
“நான்சி, அப்பாவுக்கு என்ன வருத்தம்னா நான் தான் ரவினு அம்மாவுக்கு தெரிந்ததா என்பதே பெரிய கவலை அவருக்கு, மனசார நேசித்த பிறகு பேசிக்கல, பல ஆண்டுகள் கழித்து சந்தித்தபோதும் இரண்டுபேரும் யாருனு தெரியாம பேசியிருக்காங்க எல்லாம் தெரிஞ்ச பிறகு இரண்டு பேரும் சந்திக்க நேர்ந்த பிறகும் பேசிக்க இயலாத நிலை இல்லையா நான்சி” என்றாள் பவானி
“இதான் விதி” பவானி
நான்சி அழுதாள். நான் சமாதான படுத்தல.
என் கண்களில் கண்ணீர்.
எந்த சலனமின்றி கேத்ரீன்.
எனக்கும் மனதில் ஒரு வெறுமை.
“அப்பா நீங்க சென்னைக்கு வீட்டு போங்க நான் கொஞ்ச நாள் கழித்து சென்னைக்கு வரேன்” என்றாள் பவானி
நான் சென்னைக்கு வந்தேன்.
………………………………………………………………….
ஒரு வாரம் எந்த செய்தியும் வரல எனக்கு. பவானிக்கு போன் பண்ணினேன்
“என்னாச்சு ஒன்னும் சொல்லல”
“நான் அம்மா, நான்சி, பிரபா, நலம்” என்றவள் “அடுத்த மாதம் வரை பொறுங்க அப்பா. நான்சிய குவைத்துக்கு அனுப்பிட்டு கேத்ரீன் அம்மாவை சென்னைக்கு அழைத்து வருகிறேன் அங்கே வந்து பேசிக்கலாம்” என்றாள்
பவானி எது செய்தாலும் சரியா இருக்கும்.
நான் ஒன்னும் சொல்லல. அடுத்த மாதம் எப்போ வரும் என காத்திருந்தேன்
………………………………………………………………….
இப்போ நான் பவானி தொடர்கிறேன்
அப்பா ரொம்ப ஆவலாய் காத்து கொண்டு இருப்பார். எனக்கு தெரியும்
நான்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கு.
ஆகவே அவளையும் பிரபாவையும் குவைத்துக்கு அனுப்பிட்டேன். நான்சிகிட்டே, கேத்ரீன் அம்மாவை பார்த்துக்கிறேன் என சொன்னபோது அவளுக்கு நம்ப முடியல.
என்னை கட்டி பிடித்து அழுதாள்.
கேத்ரீன் அம்மாவை சென்னக்கு அழைத்து வந்தேன்.
ஆனால் நான் எங்க வீட்டுக்கு போகல. ஒரு ஹாஸ்டலில் இருந்து போன் பண்ணேன்.
அப்பா பதறி போய் வந்தார்
“என்னமா இது”
“அப்பா நான் எடுத்த முடிவு சரி னு சொல்வீங்க”
“புரியல” என்றார்
“அப்பா நான். கேத்ரீன் அம்மாவை முதல்ல நம்ம வீட்டுக்கு கொண்டு வந்து பார்த்து கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் இந்த சமூகம் வேறு விதமாக பார்க்கும் என்பதை உணர அது தேவையில்லாமல் உங்களுக்கு ஒரு அவ பெயரைத்தரும். அது மட்டுமில்லாமல் கேத்ரீன் அம்மாவையும் அது பாதிக்கும்.
ஆகவே தான் நாங்க இங்க”
“புரியுது மா”
“நான் இங்கே இருந்து தினம் ஆபீஸ் போறேன். அம்மாவை பார்த்துக்கிறேன். இதெல்லாம் கொஞ்சம் நாள் தான் டாடி. கேத்ரீன் அம்மா இப்போ பரவலா.”
அப்பா ஒன்னும் பேசல.
“உங்களை நான் தினம் வந்து பார்க்கிறேன் டாடி”
அவருக்கு எல்லாம் புரிந்தது.
“அக்காவுக்கு தெரியுமா. ?”
“ம்ம்ம்.” என்றேன்.
“அக்கா உங்களை பெங்களூர் வர சொன்னா. அவ உங்களை அங்கே நல்லா பார்த்துக்கிறளாம். மாமாவும் சரினு சொன்னார்.
“எல்லாம் சரி. எனக்குனு ஒரு கடமை இருக்கு இல்லையா.
“ம்ம்ம் நீங்க என்ன கேட்பீங்க னு தெரியும். என் கல்யாணம் இதானே.”
“ஆமா. ”
“இதான் இங்கே. பொண்ணா பொறந்துட்டா கல்யாணம் குழந்தை இப்படித்தான். இதுதான் வாழ்க்கையா நாங்க என்ன நினைக்கறோம்னு எண்ணாமல் ஒரு ஆடோ மாடோ புடிச்சி அது தலையல கட்டிவிடனும். இன்னும் பழைய பஞ்சாங்கமா நாங்க இருக்கனும் இல்லையா. கேத்ரீன் அம்மா தன் கணவரை இழந்து 3 வயசான நான்சியை வளர்த்து,. அவங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்க தன் சுயநலத்துக்காக வாழலியே டாடி.” என்றேன் கோபத்துடன்
“அப்படினா”
“டாடி. நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என சொல்லல. கொஞ்ச நாள். அம்மாக்கு குணம் ஆகும் வரை அம்மா குணம் ஆகி உங்களை பார்க்கணும் அதான் என் ஆசை நான்சியும் அம்மாவை வைத்து கொள்ள விசாவுக்கு ட்ரை பண்றாள் டேக் இட் ஈசி டாடி” என்றேன்
“என்னவோ போங்க”
என்றவர் என் கைகளை பிடித்து கொண்டு அழுதார்.
அந்த கைகளில் இருந்த பாசம் உன்னை விட்டா வேறு யாரும் கேத்ரீனை பார்த்துக்கொள்ள முடியாது என சொல்லியது.
“வரேன் மா.”
“சரிப்பா.”
உள்ளே சென்று அம்மாவை பார்த்தார்.
அவர் திரும்பி வந்த போது அவர் முகத்தில் முழு மதி போல பிரகாசம் தெரிந்தது.
பி.கு.
இது உங்களுக்கு மட்டும்தான்
எங்க அம்மா எனக்கு 15வயது இருக்கும் போது இறந்துட்டாங்க. ரொம்ப காய்ச்சல் இருந்தது.15 நாட்கள் ஆஸ்பத்திரியில். அப்பாதான் கூட இருந்து கவனித்து கொண்டார். அவங்க இறக்கும் போது நான் கூட இருந்தேன்.
அப்போ அப்பா இல்லை. “பவானி நீ உன் அப்பாவை நல்லா பார்த்துக்கோ. நல்ல மனுஷர். அவருக்குனு நான் ஒன்னும் செய்யலமா, அவரை பலதடவை இம்சை படுத்தியிருக்கேன். அவர் யாருக்கும் சொன்னது இல்லை. நான் படிப்பறிவு இல்லை. இந்த தாழ்வு மனப்பான்மை வைத்து அவரை கொடுமை படுத்தினேன். அவர் சொந்தங்ளை விரட்டினேன். இப்படி பல. உங்களுக்கு அவர் செய்யும் போதும் எனக்கு பிடிக்காது. இது எனக்கும் அவருக்கும் மட்டும்தான் தெரியும். உன் அக்கா காதல் கல்யாணம் எனக்கு பிடிக்கல. அவர்தான் அதை விடாப்பிடியா நடத்தினார் அவருக்கு நான் தகுதி இல்லை.
இதை தவிர வேறு ஏதும் சொல்ல தெரியல. அவர் ஒரு தெய்வம் போல. அதான் சொல்வேன். நீ அவரை பார்த்துக்கோ.” அப்படி சொல்லிட்டு என் மடி மேல உயிரை விட்டாங்க
இதற்கப்புறம் அப்பா மேல் எனக்கு அன்பு அதிகமாச்சு. அவரின் நிம்மதி மகிழ்ச்சிக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்
————————————–
4 Comments
அருமை சார்
அருமை. அதைப் படித்து மகிழ்ந்தேன். உணர்ச்சிகரமான ஒன்று.
Excellent. Enjoyed and engrossed reading it. Emotional one.
அருமை. மன நெகிழ்வை ஏற்படுத்துகிறது.பல மன ஓட்டங்களை கதை தூண்டி என்னவோ செய்கிறது. நல்ல ஓவியம். கதைஞர் திரு. உமாகாந்தன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். அழகு+ அருமை.
Hi, this is Anna. I am sending you my intimate photos as I promised.