நிசப்த சங்கீதம் – 7| ஜீ.ஏ.பிரபா

 நிசப்த சங்கீதம் – 7| ஜீ.ஏ.பிரபா

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

“காலம் மாறலாம், நம் காதல் மாறுமோ”

வாணி ஜெயராமின் குரல் மிருதுவாக காதுகளில் நுழைந்து தாலாட்டியது.

சின்ன மியூசிக் பிளேயர் மெதுவாகப் பாடியது. சிட் அவுட்டில் ஈஸிசேரைப் போட்டு படுத்திருந்தார் சாய் நாதன், இங்கிருந்து பார்த்தால் தெரு கடைசி வரை தெரியும். மதியம் மூன்றுமணி, காலை பத்தரை மணிப்போல் இங்கு வந்து அமர்ந்து விடுவார்.

சன்னமாகப் பாட்டு கேட்டபடி சாய்ந்திருப்பார். எல்லாமே என்பதுகளில் வந்த பாடல்களாய்த்தான் இருக்கும். மெலடி,குத்துப்பாட்டு என்று கலந்துதான் இருக்கும். அனைத்துமே வசு விரும்பிக் கேட்டது. அவளுக்கு இந்த ரசனையை ஊட்டியது அவர்தான்.

அவள் பாட்டு கேட்க மாட்டாள். அது நம்மை மென்மயாக்கி விடும். என் ஆர்வத்துக்கு இது தடை என்று ஒதுங்கி விடுவாள். மெல்ல, சாய் அவளை மாற்றினார். பாட்டு என்பது நம் மனதை லகுவாக்கி செய்யும் வேலைகளில் ஒரு சுவாரஸ்யத்தைத் தந்து விடும். பாலையில் போகும்போது ஒரு ரிலாக்ஸ் என்று செலக்டிவாக பாடலைக் கேட்க வைத்து, வார்த்தைகளை விளக்குவார்.

வாழ்க்கை படம் வெளியாகி சில மாதங்கள் கழித்துதான் சுக்கான் விரும்பினான் என்று கூட்டிப் போனார். அவன் சிவாஜி ரசிகன். வசந்த மாளிகை படம் வெளியான்போது அது ஓடிய அத்தனை நாட்களும் முதல் ஷோவுக்குப் போய் விடுவான். கிச்சன் முழுக்க மயக்கமென்ன, உந்தன் மௌனமென்ன பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்று பாடியபடிதான் காஃபி கொண்டு வருவான். வசு வந்த பிறகு சுக்கானுடன் படத்துக்குப் போனவர். காலம் மாறலாம் என்ற பாடலை கேட்டு அவளுடன் படத்தைப் பார்க்க விரும்பினார். அவள் அய்யே என்று மறுத்து விட்டாள். பாட்டை மட்டும் அவளுக்கு போட்டு லிரிக்ஸை விவரித்த போது சட்டென்று மனதைக் கவர்ந்து விட்டது.

“காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ
தடைகள் தீண்டும்போதும் தலைவி பார்வை போதும்.” மெல்லப் பாடுவார்.

“வாவ், தலைவி பார்வைக்கு அவ்வளவு மஹிமையா?”

“பின்ன காதலியின் கடைக்கண் பார்வை பட்டால் கடு மலையும் கடுகாகும்னு பாடலையா? பாட்டை அனுபவிச்சுக் கேள். கவிஞ்சர்கள் எவ்வளவு அனுபவித்துப் பாடி இருக்காங்கன்னு தெரியும் என்றவர் பாடிப்படி அவளை மெருகேற்றினார்.

“காலம் என்ற பேறாற்றில் நாமிரண்டு ஓடங்கள்
வாழும் நம் வாழ்க்கைதான் வையகத்தின் பாடங்கள்”

என்று பாடுபவர் தனக்குப் பிடித்த வரிகளாய் “உன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேன்” என்றபோது அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெகிழ்ந்து விட்டாள்.

வாழும் காலம் யாவும் மடியினில் சாய்ந்தால் போதும்
தோளில் தூங்கும் பாரிஜாதம் – இனி வரும் காலம் மாறலாம்
நம் காதல் மாறுமோ— என்று பாடுவார்.

அவர்களின் அந்தரங்க நிமிடங்கள், இசையாலும், கவிதைகளாலும் நிரம்பி இருந்தது. தன் முழுமையான அன்பு மழையால் அவளை முக்குளிக்க வைத்தார். அனைத்தையும் உதறி விட்டு அவள் விலகியது அதிர்ச்சிதான். ஆனால் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவளின் ஆசையை அவர் புரிந்து கொண்டார்.

“நீ என் மனைவி இல்லை. என் தோழி. சகல உரிமையுடன் உன் ஆசைகளை நீ அனுபவிக்கலாம். உன்னை எப்பவும் நான் கட்டுப் படுத்த மாட்டேன்” என்றார்.

மனைவிங்கறதுனால நான் உன்னை கட்டுப்படுத்த மாட்டேன். என்று கூறி விட்டார். தன் அன்பு உண்மையானால் அவள் என்றேனும் ஒரு நாள் தன்னைத் தேடி வருவாள் என்று நம்பினார்.

சந்தீப் கல்லூரி முடித்து எம். எஸ் படிக்க பிலானி சென்ற போது அவர் தன் நண்பர்களுடன் அமெரிக்கா சுற்றுப் பிரயாணம் போனார். வசு எங்க இருக்குன்னு பாத்துட்டு வாங்க என்றான் சுக்கான். அவருக்கும் ஆசைதான். ஆனால் எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை. முதலில் ஒரு நாலைந்து வருஷம் கடிதத் தொடர்பு இருந்தது. அதன் பின் நின்று விட்டது. மெல்ல, மெல்ல அவள் தன் வாழ்விலிருந்து ஒதுங்கி விட்டாள் என்று புரிந்தது.

வசுவின் அப்பாவை முதியோர் இல்லத்தில் போய்ப் பார்த்து விட்டு வருவார். அவர் இறந்த போது அவர் சுற்றுப் பிரயாணத்தில் இருந்தார். வசு வந்து விட்டுப் போனாள் என்று கேள்விப் பட்டார். அப்பா போய் நாலைந்து வருடங்கள் கழித்து அத்தையும் இறந்து விட்டதாக ஒரு முறை அத்தையின் மச்சினன் பையன் கூறினான்.

வங்கிக்கு வந்தவன் அவரை அடையாளம் கண்டு வந்து சந்தித்தான்.

“தன்னுடைய வசதிகள் போயிடும்னு அவங்க வசுவுக்கு துர்போதனை செஞ்சிருக்காங்க. இருந்த வரை எதோ தொடர்பு இருந்துச்சு. இப்போ வசு எங்க இருக்கான்னு தெரியலை. ஒரு அழகான குருவிக் கூட்டைக் கலச்சு தான் சுகமாக இருந்துட்டு போயாச்சு. இப்போ வசுவுக்கு யார்? எங்க கூடவெல்லாம் அவ நெருங்கினதே இல்லை. ”

அதன் பிறகு அவளைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.

மனம் ஒரு ஏக்கத்துடன் அவளையே தொடர்ந்து செல்லும்.

தினசரி இரவு எல்லா வேலையும் முடித்து தனிமையில் அமர்வார். கண்னை மூடி தன் ஆசைகளை எல்லாம் தொகுத்து பிரபஞ்சத்துக்கு அனுப்புவார். எல்லையற்ற சக்தி தனக்கு நல்லது செய்யக் காத்திருக்கிறது. அது நிச்சயம் தனக்கு உதவும் என்று நம்பினார்.

எப்போது நேரம் கிடைத்தாலும் கண் மூடி தனக்குள் மூழ்கி விடுவார். தியானம் என்று இல்லை. அமைதியாய் எந்தச் சிந்தனைகள் அற்று இருப்பது கூட ஒரு தியானம் என்று நினைத்தார்.

இப்போதும் அப்படிதான் இருந்தார். கண்மூடி பாட்டில் லயித்து இருந்தவரிடம் அருகில் வந்து நின்றான் சுக்கான். ஆள் நடை தெரிந்து கண் விழித்தார்.

“மைசூர் ரசம் செஞ்சிருக்கேன். குடிக்கிறியா?”

“ஏண்டா? தமிழ் நாட்டு ரசம் செய்யலையா?”

“ந்தா இப்ப வீடு இருக்கற நிலைல கிண்டல் வேனாம்”

“வீட்டுக்கு என்னடா? நல்லாத்தானே இருக்கு?”

“பெத்த புள்ள ரெண்டு நாள் ஆகியும் வீட்டுக்கு வரலை. என்னன்னு பாத்தியா?”

“அவன் என்ன சின்னப் புள்ளையா? தானே வருவான். ”

“இதென்ன பிடிவாதம்? நீ வயசுல பெரியவன், புள்ளையை கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேட்டு அது ஆசைப் பட்டதைக் கட்டி வை,”

நான் என்ன கட்டி வைக்கிறது? எல்லாம் அவனே செஞ்சிப்பான். ”

“நீ பேசறது நல்லா இல்லை” சுக்கான் கோபத்துடன் உள்ளே போனான்.

நேற்று அவருடன் சண்டை போட்டுவிட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர் ஹாஸ்பிடலில் இருந்தபோதும் வரவில்லை. மாலையே டிச்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டார். சங்கரன் கூடவே இருந்தார் இரவு முழுக்க. காலையில் ஹரிணி வந்து அவருக்கு வேண்டியதைச் செய்து விட்டு மாத்திரைகளைக் கொடுத்து விட்டுப் போனாள். இன்னும் சந்தீப் வரவில்லை.

அவரும் அவனைப் பற்றி விசாரிக்கவில்லை. வரட்டும் என்று விட்டு விட்டார். மித்ராவை தன்னை எதிர்த்து அவன் மணக்க மாட்டான் என்று அவருக்குப் புரியும். எந்தக் காலத்திலும் அவன் தன்னை எதிர்த்து எதுவும் செய்ய மாட்டான் என்று தெரியும். ஆனால் அவன் தன் செலக்க்ஷன் தப்பு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

ஹரிணி வேண்டாம். சரி ஆனால் மித்ராவைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமானாலும் வரட்டும் என்று நினைத்தார். இதை அவனே புரிந்து கொள்ளட்டும் என்றுதான் முடிவு எடுத்தார். வரட்டும் என்றது உள் மனசு படபடவென்று பைக் சப்தம். சந்தீப் என்று புரிந்தது.

கர்சிப்பை கண் மேல் போட்டு ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். அருகில் வந்து நிற்பதை உணர்ந்தார். ஆனால் கண் திறக்கவில்லை. உள்ளே போவதும் சுக்கானிடம் எதோ கேட்பதும் காதுகளில் விழுந்தது.

“என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? நான் இந்த வீட்டு வேலைக்காரன்”

“சுக்கா, சாரி, எதோ கோபத்துல அப்படிப் பேசிட்டேன். ”

“மனசுல இல்லாம எப்படி அந்த வார்த்தை வரும்?”

“கடவுளே, தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன்ல. மன்னிச்சுடு சுக்கா”

“நான் யாரு உன்னை மன்னிக்க? அம்மாம் பெரிய எஜமானையே தூக்கி எறிஞ்சுட்டே. நான் எம்மாத்திரம்? போ சாமி, கை கால் கழுவிகிட்டு வா. வந்து சாப்பிடு. இனி நான் இந்த வீட்டு வேலைக்காரன்தான். ” முறுக்கு விடாமல் பேசினான் சுக்கான்.”

“பிளீஸ், பிளீஸ் சுக்கா” சந்தீப் கெஞ்சுவது காதில் விழுந்தது.

சுக்கான் யானை மாதிரி. அடி பட்டதை, அடித்தவர்களை என்றும் மறக்க மாட்டான். சந்தீப் அவன் வளர்த்த குழந்தைதான். ஆனால் அவன் எஜமான் அவனை விட உசத்தி. அவரை அவமானப் படுத்தியவனை ஏற்றுக் கொள்ள அவன் தயாராயில்லை.

“ந்தா, நீ எங்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவருகிட்ட கேளு போ. அந்த மனசு நொந்து போயிருக்கு. உனக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செஞ்ச சாமி அது. அதையே தூக்கி எறிஞ்சுட்ட. இனி யார் உன்னை மன்னிச்சா என்ன? மன்னிக்காட்டா என்ன?”

“அப்பா தூங்கிட்டிருக்கார். ”

“அப்பா தூங்கலை. உன்னைப் பாக்க விருப்பமில்லாம இருக்கார்.”

“நீயும் வாயேன்” சந்தீப்பின் கெஞ்சல் சுக்கானை இழுத்து வந்தது.

கன்னை இறுக மூடி, கர்சீப்பை இழுத்து விட்டுக் கொண்டார் சாய் நாதன்.

கம்மென்று சந்தீப்பின் சென்ட் வாசனை. அவன் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்தான் பயன்படுத்துவான்.

“அப்பா” மெல்லிய அழைப்பு ஊனை உருக்கியது. நழுவிய மனதை இழுத்துப் பிடித்தார்.

சந்தீப் அருகில் அமர்வது புரிந்தது.

மெல்ல மார்பில் கை வைத்தான். சந்தீப்பின் கை வசுமதி போலவே இருக்கும். மெத்தென்று, வழவழப்பாய். அவன் மார்பில் கை வைக்கும்போதெல்லாம் வசுமதியை உணர்வார். இப்போதும் சட்டென்று தன்னை மறந்து கண்னைத் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“சாரிப்பா”

“- – – – – – – – – – – – – – – -”

“உன் கோபம் புரியுதுப்பா. நியாயம்தான். ஆனா நினைச்சுப் பாரு. நம்ம வீட்டுக்கு முதல் முறையா ஒரு பொண்ணை அழைச்சுண்டு வரேன். நான் அவகிட்ட நம்ம வீட்டைப் பத்தி நிறைய பெருமையா சொல்லி வச்சிருக்கேன். அது அத்தனையும் தகர்ந்து போற மாதிரி நடந்தா என் பொறுமை போயிடாதா?”

“நீ இன்னாரைக் கூட்டிண்டு வரேன்னு சொல்லியிருக்கணும். ”

“சொன்னாலும், சொல்லாட்டினாலும் நம்ம வீட்டில் வரவேற்பு பிரமாதமா இருக்கும்னு நம்பினேன்”

“உன் செலக்க்ஷனும் நம்ம குடும்ப கௌடவத்துக்கு ஏத்த மாதிரி இருக்கும்னு நான் நம்பினேன்.”

“அப்பா, அவ பிறந்ததிலேர்ந்து வெளி நாட்டுல வளர்ந்தவ. நம்ம நாட்டு பழக்க வழக்கம் தெரியாது. ஹைஜீனிக்னு மட்டும்தான் எதையும் செய்வாங்களே தவிர, சம்பிரதாயம், பண்பாடுங்கறது தெரியாது.”

“- – – – – – – – – – – – – -”

“நான் அவளை நம்ம குடும்பத்துக்கு ஏத்த வகைல மாத்திடுவேம்பா. அவ நல்ல பொண்ணுப்பா. திறமைசாலி. இப்ப கூட அமேரிகன் கம்பெனி ஒன்று அவங்க சி. ஈ. ஓ வுக்கு இவளைத்தான் உதவியாளரா நியமனம் செஞ்சிருக்கு. ஒரே பொண்ணு. நாங்க மூணு வருஷமா லவ் பண்றோம்பா. அவகிட்ட ஒரு கெட்ட வழக்கம் நான் பார்த்ததில்லை.”

மகன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார் சாய் நாதன்.

மித்ரா வேஷம் போடுகிறாள் என்றால் இவன் நம்ப மாட்டான்.

ஆனால் அவளிடம் போலித்தனம் இருக்கிறது என்று நினைத்தார் சாய் நாதன். அவள் கண்ணில் ஒரு கயமை தெரிகிறது. பேராசையுடன் பார்வை வீட்டை அளந்தது.

காதல் போதையில் மூழ்கி இருக்கும் சந்தீப்பிடம் எந்த கெட்டதும் கண்ணில் படாது.

“அப்பா, அம்மா போய் எத்தனையோ வருஷமாச்சு. ஆனா நீ இன்னமும் அவளை மறக்காம நினைசுகிட்டு இருக்கே. காதல் உனக்கு மட்டும்தானா?”

“சட்டென்று எழுந்து உட்கார்ந்தார் சாய் நாதன்.

“அம்மாவை நீ பார்த்து விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுகிட்ட? நானும் அதே மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்து விரும்பி அவகூட வாழ்ணும்னு விரும்பிக் கேக்கறேன். இது தப்பா அப்பா?” சந்தீப்பின் குரல் கலங்கியது. அப்படியே அவர் மார்பில் படுத்து கண்ணீர் விட்டார்.

சாய் நாதன் அனைத்தையும் மறந்தார். அப்படியே சந்தீப்பை அணைத்துக் கொண்டார்.

“மித்ராவோட அப்பாவை வந்து என்னைப் பார்க்கச் சொல்லு.” என்றார்.

பகுதி – 6……………………………………………………………………………………………………………..பகுதி – 8 >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...