வரலாற்றில் இன்று – 27.10.2020 காலாட்படை தினம்
காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம்
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
கே.ஆர்.நாராயணன்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1920ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திருவாங்கூரிலுள்ள பெருந்தனம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்து, ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றினார்.
பின்பு 1984ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர், ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார்.
இவர் 1992ஆம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1997 ஜூலை 25 முதல் 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவி வகித்தார்.
கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த கே.ஆர். நாராயணன் 2005ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1858ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அமெரிக்க அதிபராக மிக இளம் வயதில் பொறுப்பேற்றவரும், சிறந்த எழுத்தாளருமான தியோடர் ரூஸ்வெல்ட் பிறந்தார்.
1961ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
1605ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முகலாய மன்னன் அக்பர் மறைந்தார்.