உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 17 | சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 17 | சுதா ரவி

ஆர்ஜேவின் வீடு இருந்த தெருவில் நுழைந்தவன் வீட்டில் இருந்து பத்தடி தள்ளி நின்று அங்கிருக்கும் சூழ்நிலையை கணக்கிட்டு கொண்டான்.. மாளிகையாகவும் இல்லாமல் சிறிய வீடாகவும் இல்லாமல் நான்கு புறமும் கோட்டை மதில் போன்ற சுவற்றுடன் இருந்தது . வீட்டை சுற்றி ஆங்காங்கே ஆட்கள் காவலில் இருந்தனர்.

முழுவதுமாக ஆராய்ந்த பின் எங்கே எப்படி நுழைவது என்று மனதிற்குள்ளேயே மடிவு செய்ய ஆரம்பித்தான். வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்த டீ கதையில் டீயை வாங்கி அருந்திக் கொண்டே யோசித்தான். இன்னும் சற்று இருட்டிய பிறகு உள்ளே நுழையலாம் என்று எண்ணி அங்கேயே நின்று கொண்டான். ஆர்ஜே உள்ளே இருக்கிறானா என்று எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்தான்.

பின் மெல்ல டீக்கடைகாரரிடம் பேச்சுக் கொடுத்து சில விஷயங்களை வாங்கிக் கொண்டான். இருட்டிய பிறகு மெதுவாக நடந்து வீட்டின் பின் புறம் மரங்கள் அடர்ந்து இருந்த பகுதிக்கு வந்தான் . எந்த இடத்தில் மதில் மேல் ஏற முடியும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த பக்கம் வந்த ஒரு சிறு பூனை குட்டியை எடுத்து தன் சட்டைக்குள் போட்டுக் கொண்டான். அதுவும் முதலில் முரண்டு பிடித்தாலும் பின் குளிர் காற்று வீசியபடியால் அவன் உடம்பு சூட்டிற்கு நன்றாக அடங்கி கொண்டது. பின் பக்கத்தில் இருந்த ஒரு மரக்கிளை மதில் மேல் படர்ந்து அந்த பக்கம் சாய்ந்திருந்தது. அதை கவனித்தவன் உடனே மரத்தின் மேல் சரசரவென்று மேல் ஏறி அக்கிளையில் காலை வைத்து மதில் மேல் இறங்கி அந்த பக்கம் குதித்தான். அவன் குதித்த சத்தம் கேட்டு சிறிது தூரத்தில் இருந்த ஆட்கள் வரவும், உடனே தன் சட்டைக்குள் இருந்த பூனை குட்டியை எடுத்து அவர்கள் வந்த பக்கம் வீசினான்.

அதுவரை இதமான உடல் சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்த பூனை திடீரென்று எடுத்து வீசப்பட்டதில் ஒரு முறைப்புடன் கடூரமாக கத்திக் கொண்டு ஓடியது. சத்தம் கேட்டு வந்த ஆட்கள் பூனையை கண்டவுடன்…..”சை..இந்த சனியனா..” என்று சொல்லி விட்டு மீண்டும் அந்த

இடத்தை பார்வையால் துழாவி விட்டு சந்தேகப்படும்படி ஒன்றும் தோன்றாததால் சென்று விடுகின்றனர். அவர்கள் போகும் வரை மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து நின்று அவர்கள் சென்ற பாதையை பார்த்தான்.

மெதுவாக ஓசை எழுப்பாமல் நடந்து அவர்கள் இருந்த இடத்தை அணுகினான். அங்கு ஒருவன் மரத்தின் மேல் சாய்ந்து நின்றிருக்க இன்னொருவன் கீழே காலை மடக்கி அமர்ந்து பீடி குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இன்னொருவன் அங்கு இருந்த கயிற்று கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான். அப்போது உள்ளேயிருந்து ஓங்கு தாங்காக ஒருவன் வரவும், அதுவரை வழக்கடித்துக் கொண்டிருந்தவர்கள் பயத்துடன் எழுந்து நின்றனர்.

“என்ன லோகு ஒரே கும்மாளமா இருக்கு” என்றான் வந்தவன்.

அவன் கேட்டதும் லோகு தலையை சொரிந்து கொண்டே” இல்லய்யா சும்மா தான் பொழுது போகாம.”

அதற்கு அவன் மெல்ல சிரித்து கொண்டு” சரி சரி எது பண்ணினாலும் கவனமா இருங்க” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

அவன் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்தி. உயர்ந்தவன் சென்றதும் சிறிது நேரம் வரை அமைதியாக இருந்தவர்கள் அவன் இனி வர மாட்டான் என்று தெரிந்து கொண்டதும், ஒருவன் எழுந்து சென்று பம்ப் செட் அறைக்குள்ளிருந்து சரக்கும் கப்புகளும் எடுத்து வந்தான். அவர்கள் தண்ணியடிக்கப் போவதை பார்த்த கார்த்தி எப்படியும் சிறிது நேரத்தில் அவர்கள் மட்டையாகி விடுவார்கள் என்று உணர்ந்து அதுவரை பொறுத்திருப்போம் என்று அங்கேயே அமர்ந்து விட்டான்.

அவன் நினைத்தபடியே சிறிது நேரத்திலேயே ஒவ்வொருவராக இருந்த இடத்திலேயே நிதானமிழந்து சரிந்து விழுந்தார்கள். அவர்கள் விழுந்ததும்

மெல்ல அங்கிருந்து எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கதவருகே சென்று உள்ளே எட்டி பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆளரவம் எதுவும் தெரியவில்லை. அவன் உள்ளே நுழைந்த இடம் சமையலறை அதை தாண்டி உணவறையும் பூஜை அறையும் இருந்தது. வீடே நிசப்தத்தில் மூழ்கி இருந்தது. ஆனால் எங்கோ ஓரிடத்தில் மட்டும் ஒரு விதமான சப்தம் வந்து கொண்டிருந்தது.

வரவற்பறையில் மெலிதான வெளிச்சத்தில் ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தது. அதை பார்த்தவுடன் மெதுவாக அதில் ஏற ஆரம்பித்தான். அங்கு மூன்று அறைக் கதவுகள் தெரிந்தது. முதலில் தெரிந்த அறையில் இருந்து தான் சத்தம் வருகிறது என்பதை உணர்ந்தவன் . அது என்ன சத்தம் எனபதை அறிந்து கொண்டு சற்று வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். அடுத்து இருந்த அறைக்குள் நுழைந்தவன் விளக்கை போடாமல் உள்ளே ஆராய்ந்தான். ஒரே ஒரு கட்டிலும் ஒரு மேஜையும் மட்டுமே இருந்தது. அதை பார்த்ததும் இது ஆர்ஜேவின் வீடு தானா என்கிற சந்தேகம் வந்தது. இப்படி ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கா இத்தனை சம்பாதிக்கிறான் என்று தோன்றியது. அங்கிருந்த அலமாரிகளை எல்லாம் ஆராய்ந்து ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெளியில் வந்தான்.

அவன் வெளியில் வந்து அடுத்த அறைக்கு செல்லும் நேரம் பக்கத்து அறை கதவு திறக்கப்பட்டது. உடனே அவசரமாக அறைக்குள்ளேயே நுழைந்து கதவை சாத்திக் கொண்டான் .பக்கத்து அறையில் இருந்து வெளியில் வந்தவன் போனில் பேசிக் கொண்டே கார்த்தி இருந்த அறை வாயிலில் நின்றான். அதனால் அவன் பேசுவது காதில் விழுந்தது.

“நானே போன் பண்ணனும்ன்னு நினைச்சேன் ஆர்ஜே….பெரியவர் பசங்க இன்னைக்கு என் கிட்ட பேசினாங்க.”

“……………………”

“எப்படி தெரியும் பாண்டியை பிடிச்சு இருக்காங்க , அவன் தான் என் பேரை சொல்லி இருக்கான்……..உன்னை பார்க்கணுமாம்” என்று சொல்லி சத்தமாக சிரித்தான்.

“………………..”

“ ஹாஹா………..இந்த கிஷோர் ஒருநாளும் ஆர்ஜேவாக முடியாது……சரி சரி எங்கே மீட் பண்ண ஏற்பாடு பண்ணலாம் நீயே சொல்லு.”

“……………………….”

“சரி அப்போ நம்ம புவனகிரி குடௌன்ல நாளைக்கு பார்த்திடலாமா?”

“………………………………….”

“ நீ வர மாட்டே இல்லையா?ஓகே டன்.நானே பார்த்துக்கிறேன்…….சரக்கு எல்லாம் பத்திரமா இருக்கு.அதெல்லாம் அவங்க கிட்ட கூட நெருங்க முடியாது..”

“………….”

“ ஓகே” என்று சொல்லி போனை வைத்து விட்டு மீண்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான் கிஷோர்.

அறை கதவு சாத்தும் சத்தத்தை கேட்டதும் மெல்ல வெளியில் வந்து அதுவரை கிஷோர் பேசியதை மனதில் ஓட்டிப் பார்த்தான். அவன் பேசியதில் இருந்து தாண்டவம் குரூப்பும் ஆர்ஜே குரூப்பும் புவனகிரியில் சந்திக்க போகிறார்கள் என்பது. இந்த கிஷோர் அவனது வலது கை என்பதையும் புரிந்து கொண்டான். பின் தான் வந்த பணி நியாபகத்துக்கு வர அவசரமாக அடுத்த அறையை திறக்கப் பார்த்தான். அது லாக் செய்யப்பட்டு இருந்தது. தேவை ஏற்படும் என்று உணர்ந்து தன் கையில் கொண்டு வந்திருந்த சிறு கம்பியை கொண்டு லாக்கை நெம்பி திறக்கும் போது லாக்கில் இருந்த ஆணி லேசாக கைகளில் கீறி சிறிது ரத்தம் வந்தது அதையும் மீறி கதவை திறந்தான்.. உள்ளே சென்று கதவை மூடி விட்டு மெல்ல அந்த இருளில்

கண்கள் பழகும் வரை ஒரு நிமிடம் நின்றிருந்தவன் பின் அங்கே உள்ள பொருட்களை ஆராய்ந்தான். பெரிதாக ஒன்றும் சாமான்கள் இல்லா விட்டாலும் அது தான் ஆர்ஜேவின் அறை என்று தெரிந்தது.

பின் ஒவ்வொன்றாக ஆராய்ந்தபோது அவனுக்கு தேவையான தகவல்கள் ஒன்றுமே கிடைக்கவில்லை. கடைசியாக அங்கிருந்த அலமாரியைத் திறந்து அதிலும் தேடினான். எல்லாம் முடித்தாயிற்று என்று நினைத்து மூடப் போன நேரம் ஒரு தட்டில் இருந்த புடவைகள் கண்ணில் பட்டது. அதை பார்த்ததும் மனதில் என்னனென்னவோ கற்பனைகள் தோன்ற அப்படியே நின்று விட்டான். புடவையின் அடியில் ஒரு புகைப்படமும் கிடைத்தது. அது உத்ரா கல்லூரி விழாவில் ஆடிய போது எடுத்தது.

‘அந்த புகைப்படத்தை பார்த்ததும் உறுதியாக தெரிந்து போயிற்று ஹரியின் ஆதராம் உண்மை என்று. இந்த புடவைகள் யாருடையது? கண்டிப்பாக அவளின் புடவையாக தான் இருக்க வேண்டும்….ஆனால் அவள் எங்கே என்று மனம் தவிக்க ஆரம்பித்தது….அது கொடுத்த வேதனையில் அந்த அறையை விட்டு வெளியில் வந்தவன் மரத்தின் மீதேறி மதிலில் இருந்து குதித்தான்.

வீட்டில் இருந்து வெகு தூரம் வந்தவன் சற்று நிதானித்து அங்கிருந்த மைல் கல்லின் மீது அமர்ந்து கொண்டான். மனமோ கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆர்ஜேவின் அறையில் கண்ட உத்ராவின் புகைப்படம் இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த கதையை சொல்லியது. தான் தேடி வந்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் இரு தரப்பினரும் சந்திக்க போவது பற்றி அறிந்து கொண்டதும் , உத்ரா ஆர்ஜேவிடம் தான் இருப்பாள் என்கிற நம்பிக்கை தரும் விஷயங்கள் கிடைத்ததில் சற்று தெளிந்தான்.

இருளில் தன் பேண்ட் பையை துழாவி அதிலிருந்த மொபைலை எடுத்து ஆதிக்கு அழைத்தான் ” ஆதி நான் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் ரூமுக்கு வரேன். முக்கியமா சில வேலைகளை செய்தாகணும்.” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அதே நேரம் தாண்டவத்தின் வீட்டிலும் ஆர்ஜேவை சந்திப்பதற்கான விவாதத்தில் இருந்தனர் . கிஷோரிடம் பேசி எங்கே சந்திப்பது என்று முடிவெடுத்த பிறகு யார் செல்வது என்பதில் யோசனை எழுந்தது. தாண்டவம் இந்த முறை மகன்களை நம்பாமல் தானும் வருவேன் என்று சொன்னார். அதை ஏற்கப்பிடிக்காமல் தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் அவர் அவ்வாறு சொல்கிறார் என்று மகன்கள் இருவரும் அதிருப்தியை காட்டினர்.

“ உங்க மேல நம்பிக்கை இல்லாம சொல்லல கந்தா,குமரா. என்ன தான் இருந்தாலும் எனக்கு அனுபவம் அதிகம். அதுக்கு தான் நான் வரேன்னு சொன்னேன்” என்றார்.

அங்கே நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளை பார்த்துக் கொண்டிருந்த கதிர் ஏதோ முக்கியமான பிசினஸ் மீட்டிங்கிற்கு தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று எண்ணினான். தான் ஏதாவது பேசினாலும் அனைவரும் சேர்ந்து தன்னை திட்டுவார்கள் என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் கதிருக்கு போன் வர அதை பார்த்தவன் அங்கிருந்து எழுந்து போனை காதில் வைத்துக் கொண்டு வெளியே சென்றான். அதை பார்த்த தாண்டவம் “ இங்கே இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்தோம் ஒரு வார்த்தை என்ன விஷயம்ன்னு கேட்கல புத்தர் மாதிரி உட்கார்ந்து இருந்தான். இதுல இவனுக்கு போன் வேற என்னவோ நூறு கோடி பிசினஸ் பார்க்கிற மாதிரி”என்றார் கடுப்புடன்.

“அவனை விடுங்கப்பா. நீங்க வரதுல எனக்கு அவ்வளவு சம்மதம் இல்லை. அங்கே ஏதாவது கைகலப்பு ஆகிட்டா நாங்க உங்களை காப்பாத்தியாகணும். அதுக்கு தான் சொல்றேன்” என்றான் கந்தவேல்.

“இதுக்கு தான் சொல்றேன் கந்தா, கைகலப்பு வர அளவுக்கு நாம வச்சுக்க கூடாதுன்னு. நமக்கு எப்படி இருந்தாலும் நம்ம சரக்கை சத்தமில்லாம கொண்டு வரணும் அது தான் முக்கியம்.”

அதை கேட்ட குமாரவேல்” அப்பா சொல்றது சரி தான் கந்தா . பிரச்சனை இல்லாம வேலையை முடிக்கணும். அப்பாவும் வரட்டும் பார்த்துக்கலாம்” என்றான்.

பேசி முடிவுகளை எடுத்த பின் ஆபீஸ் அறையை விட்டு வெளியே வரும் நேரம் கதிர் உள்ளே நுழைத்தான். அவனை பார்த்த குமார் “ கதிர் நாளைக்கு எங்களுக்கு வெளில வேலை இருக்கு. அதனால நீ என்ன பண்ற பத்து மணிக்கு சில அப்பாயின்மென்ட்ஸ் எல்லாம் நீ தான் பார்க்கணும். என்னென்னனு விவரம் நான் கொடுக்கிறேன் நோட் பண்ணிக்கோ” என்றான்.

அதற்கு சரியென்று ஒப்புக் கொண்டு அவன் தந்த விவரங்களை சேகரித்துக் கொண்டு தன்னறைக்குச் சென்று விட்டான்.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 | அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 | அத்தியாயம் – 17 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...