தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 9 | ஆரூர் தமிழ்நாடன்
மரணம் என்பது வரம்!
விருந்துக் கூடம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வட்ட வடிவிலான அறைக்குள், சுற்றிலும் தரையில் அமர்ந்து சாப்பிட அழகிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் இருந்த ஆண்களும் பெண்களும்
குழந்தைகளும் கலகலப்பாக சகஜமாக உரையாடியபடியே அமர… எளியவகை அறுசுவை உணவு
வகைகள் பரிமாறப்பட்டன. அதில் காய்கறிகளும் கனிவர்க்கங்களும் மட்டுமே அதிக
முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தன. வறுவல் வகைகள் தென்படவில்லை.
பெரும்பாலும் அவியல் வகை உணவுகளே தயாரிக்கப்பட்டிருந்தன. கீரை வகையறாக்களும்
பிரதானமாய் இலைகளில் இடம்பிடித்திருந்தன.
சுவையும் ஆரோக்கியமும் கொண்ட உணவுவகைகளை ரசித்து ரசித்துச் சாப்பிட்டாள் அகிலா. அவள்
கொடுத்திருந்த மெனுபடி வரவழைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை அகிலா கையால் கூடத் தொடவில்லை.
அறவழிச்சாலை அன்பர்களுடன் அறிவானந்தர் அளவளாவியபடியே உணவு உட்கொண்டார்.
இதை அடிக்கடி அவள் விழிகள் கவனித்தன. ஆண்களும் பெண்களும் விகல்பம் இல்லாமல் தோழமை உணர்வோடு பழகியதையும் அவளால் பார்க்க முடிந்தது. ஒரு
மேம்பட்ட உலகிற்குள் தான் நுழைந்த மாதிரி இருந்தது அகிலாவிற்கு.
சாப்பிட்டபின், கொஞ்சம் வெளியில் இருந்த நடைமேடையில் நடைபோட்டாள் அகிலா.
மனம் முழுக்க இனம்புரியாத அமைதி சூழ்வதை உணர்ந்தாள்.
அப்போது வீட்டிலிருந்து போன் வரந்தது. லைனில் வந்த அம்மா காவேரியோடும் அப்பா ஞானவேலோடும் மாறி மாறி அன்பாக உரையாடினாள். அவர்களைப் பிரிந்த பிரிவு தகித்தது. ‘ உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றாள் கமறலாக. அம்மா காவேரியோ ‘அகில், உன்னைப்
பார்க்கனும் போலிருக்கு. ரெண்டு நாளைக்குக் கூட பிரிவைத் தாங்க முடியலை.’ என்று மனம் கனத்துப்போய்ச் சொல்ல..
‘என்னம்மா சின்னப் பிள்ளையா நான்? இனி வீட்டிலேயே உன்னை சுற்றிச் சுற்றி வரவா? நாலு இடத்துக்குப் போனால்தானே உலக அனுபவங்கள் கிடைக்கும். என்னைப் பற்றிக் கவலைப்படாதேம்மா.இங்கு நிம்மதியாக இருக்கிறேன். இங்குள்ள அறச்சாலைக்கு ஒரு தரம் நீயும் அப்பாவும் வரவேண்டும். வந்தா உனக்கே இந்த
இடம் பிடிக்கும்.ரொம்பவும் அமைதியான இடம். அன்பான மனிதர்கள். அழகான இயற்கைச் சூழல். சந்தோசமா இருக்கேம்மா. இன்னும் ரெண்டுமூணு நாள்ல நான் அங்க
இருப்பேன். போதுமா?’ என்று அம்மாவிடம் திரும்பத் திரும்பச் சொன்னாள் அகிலா.
உணவு நேரம் முடிந்து மீண்டும் உரையாடல் தொடங்கியது.
அறிவானந்தருடன் மேலும் சிலர் வந்திருந்தனர்.
‘அகிலா சாப்பாடு பிடித்திருந்ததா?’ என்றார் அறிவானந்தர்.
‘ஓ. நல்ல ஆரோக்கியமான உணவுவகையாக இருந்தது. .ருசியான ருசி. நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்’ என அகிலா சொல்ல, அறிவானந்தர் உட்பட
எல்லோரும் மெலிதாகச் சிரித்தார்கள்.
’உங்கள் உலகம் இந்த அறவழிச்சாலைக்குள்ளேயே முடிந்துவிடும் போலிருக்கிறதே’ என அகிலா சொல்ல…
அறிவானந்தரோ ‘உலகமே அறவழியில் நடக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இந்த அறவழிச்சாலை எங்கள் குடில். எனினும் எங்கள் பணிகள்
குடிலுக்கு வெளியில்தான் பெரும்பாலும் இருக்கிறது. சமூகத்தை அன்பும் அறனும் கொண்டதாக
மாற்றவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கான முயற்சியில் எங்களை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறோம். எங்கள் எண்ணமும் எழுத்தும் பேச்சும்
சிந்தனையும் அதை நோக்கியே இருக்கிறது. சமூகத்தையே மாற்ற நினைப்பது பிரபஞ்சத்துக்கே வெள்ளையடிக்க முயல்வதற்கு சமம் என்பதும் எங்களுக்குத்
தெரியும்’ என்றார் அறிவானந்தர்.
‘முடியாத வேலையில் இறங்குவது விரய முயற்சியல்லவா?’ என்றாள் அகிலா.
அறிவானந்தரோ.. ‘முப்பது நாற்பது வருடத்திற்கு முன்புவரை இந்த சமூகம் வர்ணாசிரமத்தின் பிடியில் இருந்தது. பிறப்பில் ஏற்றத் தாழ்வு தீவிரமாகக்
கடைபிடிக்கப்பட்டதால், மனிதாபிமானம் மூச்சுத் திணறியது. சமூகத்தின் ஒரு பகுதி மனிதர்கள், மிருகங்களை விடவும் கேவலமாகக் கிழ்மையாக நடத்தப்பட்டனர். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. சம உரிமை தடுக்கப்பட்டது. ஆடு,மாடுகள் கூட சுதந்திரமாக
உலவும் ஆதிக்க சமூகத்தினரின் தெருக்களில் மனிதர்கள் நடக்கமுடியாத நிலை இருந்தது. சாதிக்கு ஒரு நீதி போதிக்கப்பட்டது. பெண்கள் ஒடுக்கப்பட்டனர்.
கணவனை இழக்கும் பெண்கள் கணவரின் சிதையோடு எரிக்கப்பட்டனர். கைம்மை நோன்பு என்ற பெயரில் பூவும்,பொட்டும் பறிக்கப்பட்டு சில பெண்கள் நடமாடும் சடலங்களாக முடக்கப்பட்டனர். அப்போது இத்தகைய கொடுமைகளை ஒழிக்க முயல்வது இயலாததாகத்தான் தோன்றியது. கனவிலும் நடக்க முடியாத காரியமாகத்தான் அதை எண்ணினார்கள். ஆனால், பெரியாரைப் போன்ற சீர்திருத்தவாதிகளும் வள்ளலார், விவேகானந்தரைப் போன்ற ஆன்மீக மறுமலர்சியாளர்களும், ராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும் பட்டுக்கோட்டை
அழகிரி, குத்தூசி குருசாமி போன்ற பகுத்தறிவுப் பிரச்சாரகர்களும், சம்மட்டியால் அடிமேல் அடிவைத்ததால்தான் சமூகத்தின் மீது இருந்த இதுபோன்ற
துருக்கள் உதிர்ந்தன. அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட இயக்க ஆட்சி மலர்ந்தபோது மறுமலர்ச்சி சித்தாந்தங்களெல்லாம் சட்டமாகத் தொடங்கின.
எனவே இப்போது இயலாது என்று மலைப்பாகத் தோன்றும் செயல்கள், கொஞ்சம் கொஞ்சமாக மகத்துவச் செயல்களாக மாறி வெற்றியைக் கொடுக்கும். மந்திரத்தால்
மாங்காய் பறிப்போதுபோல் திடும் என்று எந்த மாற்றத்தையும் எங்கேயும் உண்டாக்கமுடியாது. நாமும் நமக்கு பின்னால் வரும் சந்ததியினரும் முயன்றால், அன்பும் அறனும் ததும்பும் உலகத்தை உருவாக்க முடியும்.
நியாயமான முயற்சிகளில் வெற்றி தோல்விகளைப் பற்றி யோசிக்காமல் இறங்குவதே சிறந்தது’ என்றார் புன்னகையோடு.
‘நல்லது’ என இதை ஆமோதித்த அகிலா…
‘உலகமும் உயிர்களும் உண்டாகக் காரணம் எது?’ என்றாள்.
‘இயற்கைதான். அதனால் இயற்கையை ஆராதிக்கவேண்டும்’. என்ற அறிவானந்தர், இயற்கையை ஆராதிப்பது என்றால் அதற்கு தீபமேற்றி சாம்பிராணி போடவேண்டும் என்பதில்லை. இயற்கை வளத்தைக் காக்கவேண்டும், பராமரிக்கவேண்டும். இதுதான் உண்மையான ஆராதிப்பாக இருக்க முடியும்’ என்றார்.
‘இயற்கைதானே எல்லாவற்றையும் படைத்தது. அப்படியிருக்க அந்த இயற்கைக்கு முரணாக அதை மனிதன் வெல்ல நினைப்பது சரியா?’ என்றாள் அகிலா.
‘இயற்கையையை யாராலும் வெல்ல முடியாது. ஆனால் இயற்கையோடு இயைந்து இயற்கையை அனுசரித்து நாம் வாழமுடியும்’-இது அறிவானந்தர்.
‘இயற்கைதான் மனிதனைப் படைக்கிறது. அந்த இயற்கைதான் அந்த மனிதனுக்கு நோய்களையும் பின்னர் மரணத்தையும் தருகிறது. அப்படியிருக்க, இயற்கை
கொடுத்த நோயை நாம் மருத்துவம் மூலம் குணமாக்க முயல்வதும் மரணத்தைத் தள்ளிப்போடத் துடிப்பதும் இயற்கையைத் தோற்கடிக்கும் முயற்சிதானே?’-அகிலாவிடமிருந்து கேள்வி கூர்மையாய் வந்தது.
அறிவானந்தரோ மறுப்பது போல் தலையாட்டிவிட்டு‘இல்லை. மனிதனை படைத்த இயற்கை அவன் ஆரோக்கியமாக வாழ, எண்ணற்ற விசயங்களைப்
படைத்திருக்கிறது. இயற்கை தூய்மையான நீரைக் கொடுத்தது. அழுகற்ற காற்றைக் கொடுத்தது. வளமான நிலத்தைக் கொடுத்தது. செழுமையான வளங்களைக் கொடுத்தது. புஷ்டியான விளைச்சலைக் கொடுத்தது. ஆனால் நாம் இயற்கையோடு இயைந்தும் அனுசரித்தும் வாழாமல் இயற்கையைப் புறக்கணிக்க முயல்கிறோம். இயற்கையை அழிக்கப் பார்க்கிறோம். மரங்களை வெட்டிச்சாய்த்து காடுகளையெல்லாம் கான்கிரீட் காடுகளாக மாற்றிவிடுகிறோம். அதனால் தூய்மையான ஆக்ஜிஜனை நாம் இழக்க ஆரம்பிக்கிறோம்.. தண்ணீரையும் காற்றையும் மாசு படுத்துகிறோம். இயற்கை உரத்தை மறந்துவிட்டு கெமிக்கல் கலந்த செயற்கை உரத்தை பயிர்களுக்குத் தருகிறோம். இதனால் உண்ணும் உணவுகள் மூலம், கெமிக்கல் குப்பைகள் உடம்பில் சேர, நாம் நமது ஆராக்கியத்தை உருக்குலைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம். செயற்கை உரங்களால்தான் விளைச்சல்கள் எல்லாம்
நஞ்சாக மாறுகிறது. இப்படி இயற்கைக்குக் கேடு புரிந்தும் அதைப் புறக்கணித்தும் நாம் வாழத் தலைப்பட்டாதால்தான் நோய்கள் பெருகுகிறது. எனவே
மருத்துவத்திடம் ஓடிப்போய் தஞ்சமடையவேண்டிய நிலை உருவாகிறது’ என்றார் அழுத்தமாய்.
’சரி, மனிதனுக்கு இயற்கை கொடுக்கிற சாபம்தானே… மரணம்’ என்றாள் அகிலா.
’வெளிப்பார்வைக்கு அப்படி தெரியலாம். உள்ளபடியே மரணம் என்பது இயற்கை தரும் வரம்’
’உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு மரண பயமே இல்லையா?’என்றாள்.
‘இல்லவே இல்லை’ என்றவன், ‘பயந்தால் மரணம் தள்ளிபோகும் என உறுதியாகத் தெரியுமானால் நாம் பயப்படலாம். பயந்தாலும் வரும் பயமின்றி எதிர்கொண்டாலும் மரணம் வரும் என்றால், துணிச்சலாலும் பயத்தாலும் ஆகப்போவது என்ன?’ என்றான் அவன்.
இதைக்கேட்டு சற்றே திகைத்த அகிலா ‘மரணத்தைத் தடுக்கவோ எதிர்க்கவோ இயலாது என்று தெரிந்ததும் அதனிடம் கைகளைத் தூக்கி சரணடைந்து விடுவதா? இது ஒருவகைக் கோழைத்தனம் இல்லையா?’ என்றாள் லேசான கோபத்துடன்.
நடக்காத ஒன்றோடு போராடிக்கொண்டிருப்பதுதான் அறியாமை. நடப்பது நடந்தே தீரும் என்றால் அதைப் பற்றிக் குழப்பிக்கொள்ளாமல் வரும்போது வரட்டும் அதுவரை நான் என்னை சமூகத்திற்கு அர்பணிக்கிறேன் என்று நினைப்பது புத்திசாலித்தனம். நாம் புத்திசாலித்தனத்துக்கு உரியவர்களாகவே இருக்கலாமே.
மரணம் வரும் முன்பாகவே முடிந்தவரை சாதிக்கலாமே. இன்னொரு வகையில் யோசித்தால் மரணம் ஒருவகையில் நிம்மதியின் தாய்மடி. உலக சஞ்சலங்களில் இருந்து கிடைக்கும் அரிய விடுதலை. முதுமையால் ஆரோக்கியம் இழக்கும், காயலான்கடை உடம்பிலிருந்து நாம் விடுபடும் வசீகர வாய்ப்பு அது’என்றார் அறிவானந்தர் புன்னகையோடு.
’மரணத்தை நிம்மதியின் தாய்மடி என்கிறீர்களே? தந்தை பெரியாரை அது கொள்ளையடித்தபோது நிம்மதியிழந்தது பகுத்தறிவு உலகம். இப்படி சமூக அக்கறைகொண்ட பெரும் பெரும் தலைகளையெல்லாம் மரணம் களவாடிச் சென்றதால்தான் நமது சமூகம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது’ என்றாள் உடைந்த குரலில் அகிலா,
அறிவானந்தரோ ‘இப்படி யோசியுங்கள் அகிலா. தந்தை பெரியார் வயதுக்கு மீறியும் தன் வாழ்நாளுக்கு மீறியும் உழைத்திருக்கிறார். தனது 96 வயதில், சரிவர நடக்க முடியாத தள்ளாமையில், வயிற்றுத் துளை மூலம் கசியும் சிறுநீருக்காக ஒரு வாளியை அவர்போகிற இடங்களுக்கெல்லாம் தூக்கிச் சென்ற நிலையில், அவர் உடல் ஓய்வுக்குக் கெஞ்சிய சூழ்நிலையில், அவர் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டுமா? அவர் ஓய்வுகொள்ளக் கூடாதா? இயற்கை அவரை தன் நிம்மதியின் மடியில் சாய்த்துக்கொண்டது தவறா? அவர் இன்னும் இருக்க வேண்டும். நமக்காக அந்த நிலையிலும் தொடர்ந்து உழைக்க வேண்டுமென்பது மோசமான சுயநலம்.-நம் சுயநலத்துக்காக நம் சான்றோர்களை சக்கையாக உறிந்துகொண்டே இருக்கவேண்டுமா? வெயிலில் அலைந்து களைத்து நம் அப்பா வரும்போது, கொஞ்சம் தூங்கி ஓய்வெடுங்கள் அப்பா என்று நாம் சொல்வது இல்லையா? ஓய்வே இல்லாது உழைத்த தந்தை பெரியாருக்கு இயற்கை ஓய்வு கொடுத்தது எப்படி தவறாகும். வள்ளலாராக இருந்தாலும் ராமகிருஷ்ண பரமஹம்ஸராக இருந்தாலும் ரமணராக இருந்தாலும் இயற்கை அவர்களுக்குக் கருணையோடு ஓய்வு கொடுத்தே தீரும். வாழ்க்கை நம் தலையில் ஏற்றிய சுமைகளை இறக்கிவைத்து நிம்மதியாகிற இடம் மரணம். உறவுகளின் சலன சஞ்சல ஊசலாட்டங்களில் இருந்து தப்பிக்கிற இடம் மரணம். பிறந்த நொடியில் இருந்தே தவித்தலையும் புத்தியும் புலன்களும் உடலும் சாந்தமாகிற நிம்மதிச் சன்னதி மரணம்’ என பேசிக்கொண்டே போனார் அறிவானந்தர்.
அகிலாவுக்கு அந்த மரண வாதம் திகைப்பாக இருந்தது. எனினும் உள்ளுக்குள் எதுவோ துயர சங்கீதமாய் வழிவது போலிருந்தது. நான் என் அன்பான அம்மாவையும் அப்பாவையும் கூட இந்த மரணத்திடம் ஒருநாள் பறிகொடுத்துத்தான் ஆகவேண்டும் என அவளுக்குள் குபீரென முளைத்த எண்ணம், அவள் விழிகளை சட்டென ஈரமாக்கியது. கள்ளங்கபடமற்ற அம்மாவின் முகமும் அப்பாவின் முகமும் நினைவில் வந்துபோனது. அவர்களின் உடல்கள் குளிர்பதன கண்ணாடிப் பேழைக்குள் இருப்பது போன்ற கோர நினைவு திடீரெனத் தோன்றி அவளை மிரட்டியது.
அவள் முகத்தில் திடீரென விளைந்த கலவரத்தையும் கலக்கத்தையும் பார்த்த அறிவானந்தர், ‘அகிலா, ஏன் திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்டீங்க. சரி மரண சிந்தனைகளை உங்களில் இருந்து வழித்தெறியுங்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள். ஆசிரமப் புல்வெளிகளில் கொஞ்சம் தனியாக சுதந்திரமாக சுற்றிவாருங்கள். மனம் இலகுவாகும். பிறகு பேசலாம்’ என்றார். எழுந்தார். கை கூப்பிவிட்டு நடந்தார்.
அவரை நோக்கி கைகூப்பினாள். அது உணர்வுப்பூர்வமான கைகூப்பல்.
(தொடரும்)
| அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |