நீயெனதின்னுயிர் – 19 | ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 19 | ஷெண்பா

“இந்த மீனாட்சி வீட்டுக் கல்யாணத்தைவிட, நம்ம வைஷூவோட கல்யாணத்தைப் பிரமாதமா நடத்தி, அவளை மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி செய்யணும். ஆனாலும், இத்தனை அலட்டல் ஆகாது. தெரிஞ்சவளாச் சேன்னு, அவளோட பொண்ணு கல்யாணத்துக்குப் போனா… என்னமோ, ஊர்ல இல்லாத மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டாளாம். விக்ரமைப் பத்திச் சொல்லியிருந்தா அவ்வளவு தான். அவளுக்கு நெஞ்சே வெடிச்சிருக்கும்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் தேவிகா.

‘நல்லவேளை… சொல்லாமல் வந்தியே’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்ட சங்கரன், மனைவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்கலானார்.

“நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன்… கூடச் சேர்ந்து அதைப் பத்தி பேசலைனாலும், அட்லீஸ்ட்… அப்படியா? ஆமாம்… சரின்னு ஏதாவது ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? எது சொன்னாலும், ஒண்ணும் தெரியாத மாதிரி ஒரு பார்வை…!” என்று சலித்துக் கொண்டார்.

“கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா இதையே தானே சொல்லிட்டு இருக்க தேவி” என்ற சங்கரனின் குரலில் எந்த வித்தியாசமும் இல்லை.

“எப்பவும் ஒரே மாதிரி ரியாக்ஷன். இருபத்து மூணு வருஷமா இதையே தான் பார்த்துட்டு இருக்கேன். சலிச்சிப் போச்சு” என்று சப்தமாகவே முணுமுணுத்தார் தேவிகா.

ஒரு பெருமூச்சுடன் சாலையில் தனது கவனத்தைத் திருப்பினார் சங்கரன்.  கால் டாக்சியிலிருந்து இறங்கிய தேவிகா, எதேச்சையாக பின்னால் திரும்பிப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார்.

வாசலில் பைக்கை நிறுத்திய ராகவையும், அவனது தோளைப் பற்றியிருந்த வைஷாலியையும் பார்த்தவருக்கு, மனம் கொதித்தது. ‘கடவுளே! இதெல்லாம் பொய்யாக இருக்கவேண்டும்’ என்று அவரது உள்ளம் துடித்தது.

பெற்றோரைக் கண்டதும் பைக்கிலிருந்து வேகமாக இறங்கிய வைஷாலி, அன்னையின் திகைத்த பார்வையில் தவிப்புடன் திரும்பி ராகவைப் பார்த்தாள். பைக்கிலிருந்து இறங்கியவன், உரிமையுடன் அவளது வலது கரத்தைத் தனது கரத்துடன் பிணைத்துக் கொண்டு நிற்பதை, கையாலாகாத்தனத்துடன் பார்த்தார் தேவிகா.

“வணக்கம் அத்தை! சௌக்கியமா இருக்கீங்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராகவ்.

‘அத்தை’ என்ற அழைப்பில், தன் மண்டையில் யாரோ சுத்தியலால் ஓங்கி அடித்ததைப் போல் துடிதுடித்துப் போனார் தேவிகா. ‘அவனது பார்வையில் இருந்த வெற்றிக் களிப்பு, நான் சொன்னதைச் சாதிச்சிட்டேன்… இனி என்ன? என்று கேட்பது போன்ற அவனது சிரிப்பு’ என அனைத்தையும் பார்த்தவருக்கு மயக்கம் வரும் போலிருந்தது.

டாக்சியை அனுப்பிவிட்டு வந்த சங்கரன், “வாப்பா ராகவ்! உள்ளே வா” என்று அழைத்தபடி வீட்டினுள் செல்ல, அவரைப் பின் தொடர்ந்தான் அவன்.

அசையாமல் நின்ற தன் அன்னையைக் கண்ட வைஷாலிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.

“நீங்க உள்ளே போங்க…” என்று ராகவிடம் சொன்னவள், தனது கரத்தை விடுவித்துக்கொண்டு அன்னையின் அருகில் சென்றாள்.

ராகவும் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான்.

“அம்மா, பையைக் கொடுங்க” என்று அவரிடமிருந்து வாங்க முயன்றாள்.

சடாரென நிமிர்ந்து அவளை முறைத்த தேவிகா, விறுவிறுவென உள்ளே செல்ல, தவிப்புடன் அவரைத் தொடர்ந்தாள் வைஷாலி.

சங்கரனும், ராகவும் பேசிய எதுவும் தேவிகாவின் காதில் விழவில்லை.

ஒரு தட்டில் பழங்கள், இனிப்பு, தங்கையின் வளைகாப்பு அழைப்பிதழ் என்று அடுக்கியவன், “தங்கச்சிக்கு வளைகாப்பு. முதல் அழைப்பு உங்களுக்குத் தான் மாமா. நீங்களும், அத்தையும் முன்னால இருந்து… நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்!” என்று உரிய மரியாதையுடன் அழைத்தான்.

‘அழைப்பைப் பெற்றுக் கொள்ள தேவிகா நிச்சயம் வரமாட்டார்’ என்று தெரிந்த போதும், ஒரு எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்தான் ராகவ். ஆனால், தேவிகா இறுகிய முகத்துடன் டைனிங் ஹாலில் அமர்ந்திருக்க, ஏமாற்றத்துடன் சங்கரனைப் பார்த்தான்.  சங்கரனும், வைஷாலியும் தர்மசங்கடமான நிலையில் இருந்தனர்.

“நீ கொடுப்பா” என்று வாங்கிக்கொண்ட சங்கரன், “பொறுப்பான ஒரு மனுஷனா உன்னைப் பார்க்க, ரொம்பச் சந்தோஷமா இருக்கு ராகவ்” என்றவர்  அழைப்பிதழைப் பிரித்துப் படித்தார்.

சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ராகவ் கிளம்ப, தந்தையும், மகளும் வாசல்வரை வழியனுப்பச் சென்றனர்.

“நாளைக்குத் தானே கிளம்பற ராகவ்?”

“ஆமாம் மாமா. ஃப்ரெண்ட் வீட்டில் தங்கியிருக்கேன். நாளைக்கு விக்ரம் சார் வர்றார். அவங்க வீட்டுக்கும் பத்திரிகை கொடுத்துட்டு, மதியம் கிளம்பிடுவேன்.”

“நல்லதுப்பா. நீ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் வைஷுவுக்கு ஒரு ஃபோன் செய்து பேசிடு. அப்போதான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும். அதுவரை தூங்காமல் உட்கார்ந்திருப்பா” என்று சங்கரன் சிரிக்க, “கட்டாயம் மாமா…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான் ராகவ்.

அதுவரை புன்னகைத்தபடி நின்றிருந்த இருவரின் முகமும், சட்டென்று உணர்ச்சியற்ற பாவனையை வெளிப்படுத்தியது. ஒரு பெரிய புயலை எதிர்பார்த்த படியே தந்தையும், மகளும் வீட்டினுள் நுழைந்தனர். ஆனால், அங்கே தேவிகா இல்லாததைக் கண்ட இருவருக்குள்ளும், இப்போது லேசான பயம் தோன்றியது. அது வெறும் புயல் அல்ல… பெரிய சுனாமியே வரப்போவதற்கான அறிகுறியாக இருவருக்கும் பட்டது.

கலக்கத்துடன் பார்த்த மகளை, “நீ உன் ரூமுக்குப் போடா” என்றார்.

“நான் நினைச்சதை விட அம்மா ரொம்ப அப்செட்டா இருக்காங்க போலப்பா. அவங்க ஏதாவது கேட்டுட்டாலும் பரவாயில்ல. எனக்னென்னவோ பயம்மா இருக்கு” என்றாள் அச்சத்துடன்.

”நடக்கறது நடந்தே தீரும். அப்பா இருக்கேன் இல்ல. நீ மனசை உழட்டிக்காம போம்மா” என்றதும் அரை மனத்துடன் தலையாட்டிவிட்டு, தன் அறைக்குச் சென்றாள்.

 ராகவ் தன் தங்கையின் வளைக்காப்பிற்கு தன்னை அழைத்ததோ, அவன் பேசியதோ… எதுவுமே தேவிகா வின் மனத்தில் பதியவில்லை. ‘மகளும், கணவரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் ஏமாற்றும் அளவிற்கு, தான் முட்டாளாக இருந்து விட்டோமே!’ என்ற சுயபச்சாதாபத்திலும், அவமானத்திலும் அவரது மனம் குமுறியது.

‘கூடாது… இவர்கள் நினைப்பது எதுவும் நடக்கக் கூடாது. என் தோழிகள் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும் நான் தோற்றுப் போகக்கூடாது. அவர்களை ஜெயிக்கவிடக் கூடாது’ என்று நினைத்தவர், தனது எண்ணத்தை எப்படி ஈடேற்றுவது என்ற முடிவோடு படுத்திருந்தார்.  

இருண்டிருந்த அறையின் விளக்கைப் போட்ட சங்கரன், இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்த மனைவியைப் பார்த்தார். கணவர் வந்திருப்பதை அறிந்த போதும், தேவிகா அசையாமல் படுத்திருந்தார்.

“தேவி!” என்றவரது அழைப்பிற்கு, அங்கு எந்த எதிரொலியும் இல்லை.

மீண்டும் அவர் அழைத்ததும், “என்னை எதுவும் பேச வைக்காதீங்க. அதோட விளைவு… ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கும்…!” என்று போர்வையை விலக்காமல் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன தேவிகாவின் குரலில், அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“தேவி! உன் கோபம் தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனால், நியாயமும் இல்லை. எல்லாமே நம்ம வைஷாலிக்காகத் தானே. புரிஞ்சிக்க!” என்றார்.

கோபத்துடன் எழுந்தமர்ந்த தேவிகா, “அவள் எனக்கும் மகள்தான். ஒரு பெண்ணோட வாழ்க்கையில்… அவளோட அம்மாவைவிட.. அடுத்தவங்களுக்கு அத்தனை அக்கறையும், உரிமையும் இருக்கா என்ன? அது, அவளோட பெத்த அப்பாவாக இருந்தாலும் கூட!” என்று கத்திய மனைவியை, உணர்ச்சியைத் துடைத்த முகத்துடன் பார்த்தார்.

கடந்த இருபத்தி மூன்று வருடத் தாம்பத்தியத்தில், தன் மனைவியை நன்கு புரிந்து வைத்திருந்தார் சங்கரன். அவருடைய மனத்தில் இருக்கும் அத்தனை உணர்வுக ளையும் படித்துவிட்டவராக, மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து தோட்டத்திற்குச் சென்றார்.

வைஷாலி பால்கனியில் நின்று ஜோதியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது மலர்ந்த முகமும், உற்சாகம் ததும்பிய பேச்சும், அவரது கவலையை சற்று மறக்கச் செய்தது. ‘தனது வாழ்க்கையில் பாதியை வாழ்ந்து முடித்து விட்டதால், இனி வாழ்க்கையைத் துவங்கப் போகும் மகளுக்கு, எந்தக் குறையுமில்லாமல் அதை அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்ற திடமான முடிவுக்கு வந்தார் சங்கரன்.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 | அத்தியாயம் – 17 | அத்தியாயம் – 18 | அத்தியாயம் – 19 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...