விலகாத வெள்ளித் திரை – 11 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 11 | லதா சரவணன்

மீண்டும் மெட்ராஸ் பயணம். ராமதுரையின் வீட்டு வாசப்படியில் தன் எதிர்காலம் குறித்த கேள்வியில் கண்ணனும். இந்த பயலின் வாழ்க்கையில் எந்த சிக்கலும் வரக்கூடாது என்ற வேண்டுதலில் வாத்தியாரும். வெற்றிலை சீவலைக் குதப்பியபடி எனக்கு அப்பவே தெரியும் ஸார். “அந்த பொண்ணு அழகு அப்படி ஆனா… அவங்க அம்மா விவரம் அந்த பொண்ணை சம்மதிக்க வைக்க அவங்கம்மா அத்தனை போராடினா ஆனா பாருங்க என் கூட அந்த ஊருக்கு வந்த இரண்டே நாள்ல ஒப்புகிட்டா ?!”. என்று வெகு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார் யாரோ ஒருவருடன்.

“என்னமோ சட்டுன்னு ஒ.கேன்ன சொல்லிட்டாங்க அவருக்கு நல்ல ராசி உடனே உடனே படமும் புக்காயிட்டு, ஒரே நேரத்தில இரண்டு படம். அடடே வாங்க சுவாரஸ்யமான பேச்சிற்கு தடையாய் இருந்து விட்டானே என்று கூட இருந்தவன் பார்க்க ராமைய்யா !”. சிறு நெற்றிச் சுருக்கலுக்குப் பின் சந்தோஷமா வரவேற்றார்.

அதிகமான வருவாய் தந்தவன் ஆயிற்றே. “தம்பி வாங்க உட்காருங்க காப்பித்தண்ணி தரச் சொல்லட்டுமா.?”

கண்ணனின் கண்கள் வீட்டுக்குள் அலைபாய வேறு யாரோ ஒரு சிறு பெண் தண்ணீர் கொண்டு வந்தாள்.

“இவங்க போனமுறை நீங்க இருக்கிறப்ப வந்தாளே வேணி. அவளைப் போலத்தான் இந்த பொண்ணும் சினிமா வாய்பு கேட்டு வந்திருக்கு.’

“ஆமா அந்த வேணி எங்கே ?”

“அது இப்போ பெரிய இடம் தம்பி அவளுக்கு அடிச்சது யோகம். இரண்டு படத்துலே நடிக்கிறாள். சினிமாவிலே அதிர்ஷ்டம் ஒருத்தர் பக்கம் இருந்தா தூக்கி விட்டுடும். பத்து நாளுக்கு முன்னாடியே அரிதாரம் பூசியாச்சு அதுவும் மெயின் ரோல்ல… இப்ப கூட ஏ.வி.எம் லதான் சூட்டிங். நீங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க மறுபடியும் கொட்டகையிலே ஏதாவது நாடகம் போடனுமா சொல்லுங்க ஜமாய்ச்சிடலாம்.” அடுத்த வருமானத்திற்கு அடி போட்டபடியே பேசிய ராமதுரை வாத்தியாரின் பேச்சிற்கு வாய்விட்டு சிரித்தார்.

“அய்யா நீங்க எந்த காலத்துலே இருக்கீங்க ? பொண்ணு இப்போ இருக்கிற ஸ்டேஜ் தெரியாம பேசிகிட்டு இருக்கீங்க ஆனா அந்த பொண்ணு இப்போ, சான்ஸ் கிடைச்ச பத்து நாட்களுக்கு மேல் ஆகலை, அதுக்குள்ளே தயாரிப்பாளரை கையிலே போட்டு அவருக்கு ஒரு சொந்தமான வீட்டில் போயிட்டாங்க.!”

“சார் வேணி ரொம்ப நல்லவ ஸார். அவ என்னை மனசார விரும்பறா ?!”

“தம்பி ! காசுக்கு முன்னாடி நல்லவன் கெட்டவன் யாரு ?! சினிமா மேல ஆசையுள்ள பொண்ணு குடும்பத்துக்கு ஒத்து வராது.!”

“அய்யா எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன் ஒரேயொரு முறை அவங்களைப் பார்க்க…?!”

“ஏப்பா…! கதைக்கு உதவலைன்னா எதுக்கு காலிலே போட்டுக்கணும். கண்ணனின் அடிபட்ட முகத்தைக் கண்டதும் ராமதுரைக்கு பாவமாய் தோன்றியது போலும், சரிப்பா தூரத்திலே இருந்து வந்திட்டீங்க. சின்னப் பையனோட வாழ்க்கை வேற, என்ன சொன்னாலும் மின்னுவதெல்லாம் பொன்னில்லைங்கிற விவரத்தை நீ நேரிலேயே வந்து பார்த்துக்கோ. அப்பறம் இப்போ போகப்போறது பெரிய இடம் ஸ்டிடூயோக்குள்ளே நடந்தெல்லாம் போனா கெளரவமா இருக்காது. வாட்ச்மேன் கூட உள்ளே விடமாட்டான். அவங்களே என்னை அழைச்சா காரை அனுப்பிடுவாங்க, நீங்க போய் ஒரு காரு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க இப்போவே கிளம்பலாம்!” என்று ராமதுரை எழுந்திருத்து விட கண்ணன் காரை கொண்டு வர சென்றான்.

“ஏன் ஸார் பார்த்தா பெரியவர் மாதிரி தெரியறீங்க நீங்களாவது தம்பிக்கு புத்தி சொல்லக் கூடாதா ? ஆடின காலும் பாடுன வாயும் என்னைக்கு சும்மா இருந்திருக்கு அவனுக்குத்தான் சின்ன வயசு உலகம் புரியலை. பாசம் எல்லாம் மனுஷங்க மேல இல்லை பணத்தின் மேலதான் கார் வந்திடுச்சி நேரிலே பார்த்தா எல்லாம் பகட்டும் புரிஞ்சிடும்.!”

அடுத்த சில விநாடிகளில் கார் வந்துவிட்டது. மிகப் பிரம்மாண்டமான செட்டுக்கு நடுவில் பலதரப்பட்ட மக்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பலநூறு மக்களுக்கு நடுவில் வேணி மட்டும் கண்ணனின் கண்களுக்குப் பளிச்சென்று தெரிந்தாள். கண்ணனை அவளும் கண்டுவிட்டால் என்பதற்கு ஆதாரமாய் அவளின் உடலில் சிறு அதிர்வும் கண்களில் ஒரு மிரட்சியும் இருந்தது. இரைதேடி வரும் பருந்திடம் புறாவின் பயத்தைப் போல ஆனால் என்னைப் பார்த்ததும் அவளுக்கு ஏன் அப்படியிருக்கவேண்டும் என்று யோசனையோட நடந்தான். வேணியின் ஒவ்வொரு செய்கைகளும் அவன் கண்கள் படம் பிடித்துக் கொண்டு இருந்தது.

ராமதுரைக்கு அங்கே நல்ல வரவேற்பு இருந்ததால் உடனே சுடச்சட டீயும் வந்தது அவர்களுக்கு.
“என்ன வேலம்மா எப்படியிருக்கே ?” வேணியின் அம்மா பட்டுபுடவை சொற்ப நகை சகிதம் முதல் தடவை பார்த்ததில் இருந்து சற்றே வித்தியாசமாய் தெரிந்தாள். வேணி இன்னமும் பக்கத்தில் இருந்தவனிடம் சிரித்து பேசிக்கொண்டே இருந்தாள் இவர்களைப் பார்த்தாலும் அருகில் வரவில்லை.

“அடடே இந்த தம்பி அன்னைக்கு வீட்டுக்கு வந்த புள்ளையாண்டான் தானே வாப்பா நல்ல யோகக்காரன் தம்பி தம்பி என்னைக்கு உங்களுக்கு பாப்பா பர்ஸ்ட் காப்பி கொடுத்தாளோ அப்பவே லக்கு அடிச்சிடுச்சி. இப்போ பாருங்க இரண்டு படம் சாயந்திரம் ஒரு பிரபல பத்திரிக்கையிலே இருந்து பேட்டி வேற அதோ நடிக்கிறாரே அந்த பையன், இந்த நாதன் படகம்பெனி முதலாளியோட கடைசிபிள்ளை பிள்ளைக்காகத்தான் படமே எடுக்கிறாராம் முதலாளி அவனுக்கு நம்ம வேணி மேல கொள்ளைப் பிரியம். வேலம்மாள் வாய் கொள்ளாத சிரிப்புடன் சொல்ல,மேற்கொண்டு ஏதாவது அபத்தமாக பேசி வைக்கப் போகிறாள் என்று ராமதுரை இடைவெட்டினார். இந்த தம்பி உன்கிட்ட ஏதோ பேசணுன்னு வந்திருக்கு வேலம்மா.”

“நல்லா பேசட்டும் மறுபடியும் கிராமத்திலே நாடகமா பாப்பா ரேட்டு இப்போ ஏறிடுச்சி நேரம் தேதியெல்லாம் என்கிட்டே கொடுத்திடுங்க?!”

“இரும்மா அவர் உம்பொண்ணை புக் பண்ணவரலை, கல்யாணம் பண்ண அனுமதி கேட்டு வந்திருக்காரு ? அதிலும் வேணியும் அவரை விரும்புதாம்.!?

“நல்லாச் சொன்னீங்க இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்காங்க, எம்பொண்ணு அன்னாடங்காச்சியா இல்லாதப்பட வராத லவ்வு இப்போ கையிலே கொஞ்சம் காசு பணம் புழங்கிணதும் வருதோ ?! உன் கூட வந்ததாலதான் இத்தனை நேரம் அமைதியா பேசறேன். அவளோட ஆசை என்னன்னு உனக்குத் தெரியாதா அண்ணே. பூசாரி வரங்கொடுத்த கதையா இப்பத்தான் அவளுக்கு புத்தி வந்து சரியான வழியிலே போறா இத்தனை சீக்கிரம் கல்யாணம் எல்லாம் வேண்டாம்.”

“அப்பறம் அவ இவனை நேசிச்சான்னு தேவையில்லாத புளுகு எல்லாம் பேசவேண்டான்னு சொல்லுங்க, ஏன்னா இந்த கம்பெனி முதலாளி பையனே அவளோட காலடியிலே விழுந்து கிடக்கிறாங்க நாளைக்கு ஒரு நகையும் பட்டும் பவிசுமா அவளுக்கு வாழ்க்கை காத்திருக்கும் போது அந்த குக்கிராமத்திலே எதுக்கு அல்லாடணும். அவ கலைச்சேவை செய்யட்டும் அதுக்குபிறகு இவங்ககளுக்கு பிராப்தம் இருந்தா நானில்லை யாரும் தடுக்க முடியாது.!”

வெட்டு ஒண்ணு துண்டு இரண்டாக வேலம்மாள் பேசியபிறகு மேற்கொண்டு என்ன சொல்வது என்று வாத்யாரும் ராமதுரையும் கண்ணனைப் பார்க்க அவனின் விழிகளோ ஷாட்டில் இருந்த வேணியின் மேல் படிந்தது. வெகு சுலபமாக அருகில் அத்தனை பேரின் மத்தியில் இடுப்பில் கைபோட்டு அவளை இழுத்து வளைவில் முகம் புதைத்தான் அந்த முதலாளியின் மகன். அவளும் அதற்கு இசைந்ததைப் போல மயக்கமாய் ஒரு புன்னகையோடு.

“உங்க முன்னாடிதான் முதன் முதலாக காபி கொண்டு வந்தேன் என் கண்முன்னாலே நம்ம கல்யாணம் நாளோட ஆரம்பம் !” என்று என்னிடம் பேசிய வேணி வேறு யாரோ போலத் தோன்றியது.

வேணி என்று ஒருமுறை சொல்லிப் பார்த்தான். அவள் கண்கள் கண்ணனிடம் வந்து மீண்டும் மீண்டதைப் போல தோன்றியது. சட்டென்று அவர்கள் இருக்குமிடம் வந்தவள் கண்ணனையோ மற்றவர்களையோ லட்சியம் செய்யாமல் தாயிடம், “என்னம்மா சாயந்திரம் நம்ம புதுப்படத்துக்கு ஸ்டீபன் வர்றேன்னு சொல்லியிருக்கிறார் சீக்கிரம் போகணும். நான் மேக்கப் அறைக்குப்போய் தயாராகிறேன் நீங்க சீக்கிரம் பேசிட்டு
வந்திடுங்க ?”கண்ணன் பக்கம் மறந்தும் திரும்பாமல் ஒரு வித துள்ளலோடு ஓடினாள் வேணி.

“அம்மா நம்ப புதுமுகம் வேதிகாஸ்ரீ பாப்பாவை பேட்டி எடுக்க பத்திரிக்கைகாரங்க வந்திருக்காங்க ?!”

“அப்படியா கொஞ்சம் காத்திருக்க சொல்லு உடனே பேட்டி கொடுத்திட்டா நாம சும்மா வாய்ப்பில்லாம இருக்காங்கன்னு நினைப்பாங்க ஒரு பத்து நிமிஷம் ஆகுன்னு சொல்லிடு ?”. வேலம்மாள் ராமதுரையின் பக்கம் திரும்பினாள். “இந்த பையன் சொன்னதைப் போல பாப்பாக்கு விருப்பம் இருந்தா இவனைப் பார்த்து ஒரு சிரிப்பாவது சிரிச்சிட்டு போவாயில்லை இப்படியா முன்னபின்ன தெரியாத மாதிரி போவா ? இனிமே இப்படி ஆளுங்களை எல்லாம் கூட்டி வராதீங்க அண்ணே?”.

ராமதுரை “வேலம்மா அந்த ஸ்டீபன் கொஞ்சம் அப்படியிப்படி ஆளாச்சேம்மா ?”

“அட நீங்க வேற உங்களுக்கு தெரியாத சினிமாவா அண்ணே கொஞ்சம் வளைஞ்சி நெளிஞ்சி தானே போகணும். பாப்பா இப்போ எனக்கு மேல தேறிட்டா நான் வர்றேன் தன் கனத்த உடலை சுமக்க முடியாமல் மேக்கப் ரூம் நோக்கிப் போக…. !” சட்டென திருப்பி நடந்தான் கண்ணன். வாத்தியாரும் ராமதுரையும் மனக் கவலையோடு, “நீங்க அந்தத்தம்பிக்கு புத்தி சொல்லி ஊருக்கு கூட்டிப்போங்க எனக்கு இங்கன கொஞ்சம் ஆட்களைப் பார்க்க வேண்டியிருக்கு என்று ராமதுரை கழண்டு கொள்ள தன் மாணவனின் அருகில் ஓடினார் அவர். கண்ணா நில்லுடா ஏன் ஒடி வந்திட்டே ?!”

“என்னாலே அங்கே நிற்க முடியலை நான் பார்த்த வேணி இவ இல்லை ஸார். இவங்க வேதிகாஸ்ரீ வேணாம் ஸார் நாம போகலாம். இனிமே இந்த இடத்தோட காத்துக் கூட எம்மேல படறதை நான் விரும்பலை!”

“கண்ணா….?!”

“துரோகம் ரொம்ப கனமா இருக்கு ஸார் வலிக்குது ?!. அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. தோளில் சாய்ந்து கொண்டவனை தேற்றி ஊருக்கு அழைத்து வந்தார் வாத்தியார்.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...