நவ பாஷாணன் -2 | பெண்ணாகடம் பா.பிரதாப்

 நவ பாஷாணன் -2 | பெண்ணாகடம் பா.பிரதாப்

போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட ‘நவபாஷாண முருகன்’ சிலையில் உள்ள ஒன்பது வகையான பாஷாணங்களின் பெயர்கள். வீரம்,பூரம்,சாதிலிங்கம்,கெளரி,வெள்ளைப் பாஷாணம், மனோசிலை, அரிதாரம்,சிங்கி, தாளகம்.இவை மட்டுமின்றி சில உப்பு அதாவது, பாறை உப்புகள் மட்டும் 4448வகையான மூலிகையை இணைத்தே நவபாஷாண முருகனை போகர் சித்தர் உருவாக்கினார்.மொத்தம் எத்தனை நவபாஷாண முருகன் சிலையை போகர் சித்தர் உருவாக்கினார்?அதையும் சொல்கிறேன் கேளுங்கள்”.

காலைப்பொழுது! கதிரவனின் கதிர்கள், வீட்டில் ஜன்னல் வழியாக சரவணனைச் சுட்டது. சரவணன் மெல்ல எழுந்தான். தன் அறையை விட்டு வெளியே வந்தான்.சிவநேசன் சின்ன அம்மியில் மூலிகையை வைத்து அரைத்துக் கொண்டிருந்தார்.மீனாட்சியோ மும்மரமாக தோசை சுட்டுக்கொண்டிருந்தாள்.

“அப்பா.!எப்ப வந்தீங்க”.?

“காலையில தான் வந்தன் ராசா….நீ முதல்ல குளிச்சிட்டு வா! உன்கிட்ட நிறைய பேசணும்.”

“என்னப்பா ஏதாவது முக்கியமான விஷயமா.?”

“ஆமாம்…நீகுளிச்சிட்டு வா! நான் சொல்றேன்.”

“சரிப்பா.”

சரவணன் தன் மனதிற்குள், இன்று எப்படியாவது ‘திவ்யா’விடம் தன் காதலை சொல்லிவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தான்.

திவ்யா பார்ப்பதற்கு அழகாக இருப்பாள்.பிரம்மாவின் படைப்பிலேயே பிரமிப்பை ஏற்படுத்துபவள்.அழகில் ‘வள்ளி’யைப் போலவும், குணத்தில் தெயவாம்சத்துடன் திகழக்கூடிய ‘தெய்வானை’ப் போலவும் திகழ்ந்தாள்.

திவ்யாவின் தந்தை இறந்துவிட்டார். திவ்யாவின் தந்தை ‘தருமன்’ திவ்யாவிற்கு ஆறு வயது இருக்கும்போதே காசநோயால் இறந்துவிட்டார். திவ்யாவை டீச்சர் ட்ரைனிங் வரை படிக்க வைத்தது, அவளின் தாய் ‘அலமேலு’. பழனிமலை அடிவாரத்தில் இட்லிக்கடை வைத்து வியாபாரம் செய்வதே அலமேலுவின் பிரதான தொழில். வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூக்கட்டியும் விற்பாள்.

“சரவணா… சீக்கிரம் வாப்பா…சாப்பிடலாம்.” மீனாட்சியின் குரல் ஒலித்தது.

குறும்பாடு போல தலையை உதறிக்கொண்டே…..சரவணன் வேகமாக தலையைத் துவட்டிக்கொண்டே வெளியே வந்தான்.

சரவணன் டீ-ஷர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும்,மாட்டிக்கொண்டு தன் தந்தையின் முன் அமர்ந்தான்.

“என்னப்பா…ஏதோ சொல்றேன்னு சொன்னிங்களே..!

“உன்கிட்ட ஒண்ணு சொல்லுவேன் கேட்பியா?”

“என்னப்பா…?”

பழனிமலை கோவிலுக்கு அடிவாரத்துல ஒரு ஆட்டோ ஸ்டாண்டு இருக்கு, உனக்கு தெரியும்ல..?

“தெரியும் பா…”

“அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு பக்கத்துல, நாலு கடைத் தாண்டி, ஒரு குடிசை இருக்கு,அந்த குடிசையில ‘சாக்கடைச் சித்தர்’னு ஒருத்தர் இருக்கிறார் .அவரைப் பார்த்து நல்ல வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு வாப்பா….”

“அப்பா…என்ன சொல்றீங்க சடை வச்சவங்க எல்லாம் சித்தராகிட முடியுமா.?”

சரவணனின் கேள்வி…சிவநேசனின் இதயத்தைக் கீறியது.”அப்படியெல்லாம் பேசாத ராசா….என்னை மதிக்கிறது உண்மையாக இருந்தால்சாக்கடைச் சித்தரைப் போய்பார்த்துவிட்டு வா….. என்றார்.”

சாக்கடைச் சித்தர் என்பது காரணப்பெயர்.ஏனெனில், சாக்கடைச் சித்தர் சாலை மற்றும் தெருக்களில் கடந்து செல்லும் போது, திடீரென தெருவோரத்திலுள்ள சாக்கடை நீரை அள்ளிப் பருகுவார்.

ஆரம்பத்தில் சாக்கடைச் சித்தரைப் பிச்சைக்காரனாக, பைத்தியக்காரனாகப் பார்த்த பழனி மக்கள் பின்னரே,அவர் ஒரு ‘சித்தபுருஷன்’ என்பதை உணர்ந்து வணங்கத் தொடங்கினர்.

பெரும்பாலும் சாக்கடைச் சித்தர் மௌனியாகவே இருப்பார்.யார் எதை கொடுத்தாலும் வாங்கி உண்ணமாட்டார்.காசு பணத்தைஒரு பொருட்டாகவே எண்ணமாட்டார்.யாரவதுஒரு சிலரிடம் மட்டுமே பழங்களை வாங்கி உண்ணுவார்.அவர் கண்ணிற்கு, மனதிற்கு கெட்டவர் எனப்பட்டால் உடனே விரட்டிவிடுவார்.இத்தனைக்கும் அவர் ஒருமுறை கூட ‘பழனிமலை தண்டாயுதபாணியை’ தரிசித்ததில்லை!

சரவணனும் அரை மனதுடன் தன் தந்தை சிவநேசனின் மன திருப்திக்காக ”சரி” என்றான்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது…’கதிர்வேலு’ வீட்டிற்குள் நுழைந்தான்.

மீனாட்சியையும்,சிவநேசனையும் பார்த்து, “வணக்கம்மா, வணக்கம்ப்பா !” எப்படி இருக்கீங்க“ன்னு கேட்டான்.

இருவரும் நன்றாக இருக்கிறோம் என்றனர்.

மீனாட்சி, கதிர்வேலுக்கு காபி போட சமையற்கட்டிற்கு சென்றாள்.சிவநேசன் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

“கதிர்வேலு, வீட்டுல அப்பா, அம்மா, தங்கை எப்படி இருக்காங்க.?

“நல்லா இருக்காங்கப்பா.”

ஆமாம், தங்கை கல்யாணி “எப்படிபடிக்கிறா”?

“நல்லா படிக்கிறாள். ஆனால், அவளுண்டு அவள் வேலையுண்டு என்பது போல மௌனமாகவே இருக்காளப்பா….”

“ம்..அதெல்லாம் போக போக சரியாகிடும்.அப்பா வேலையெல்லாம் எப்படி போகுது.?

“ஏதோ அந்த முருகன் அருளால் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.

“ரசவாதம், ரசமணி,அது,இதுன்னு செய்ய முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாரே என்னாச்சு.?”

கதிர்வேலுவின் தந்தை சுப்பையா…ஒரு பொற்கொல்லர் என்பதால் சட்டென அந்த கேள்வியைக் கேட்டுவிட்டார் சிவநேசன்.

“அதைப் பற்றி எல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாதப்பா…அதுலயெல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல.”

கதிர்வேலுவின் பேச்சை வைத்தே சரவணைப் போல கதிர்வேலும் எளிதில் எதையும் நம்பாதவன் என்பதை சிவநேசன் புரிந்துக் கொண்டார்.

“சரி என்ன விஷேசம்.?”

“எங்கக்கூட படிச்ச ராஜன் இன்ஸ்பெக்டரா பழனியில இருக்கான்.உங்களுக்கு தெரியும்ல…”

“ஆமாம். அந்த ராமசாமி வாத்தியார் பையன்தானே.?

“ஆமாம்ப்பா….”

“அந்த தம்பிக்கென்ன.?”

“வேலை விஷயமா என்னையும் சரவணனையும் வரச்சொல்லிஇருக்கான்.அதான் அவனைப் பார்க்கப் போகணும்ப்பா …!

“நல்ல விஷயம் தானப்பா… ராஜன் தம்பிய பாக்கறத்துக்கு முன்னாடி பழனி மலை முருகனை கும்பிட்டுட்டு போ நல்லதே நடக்கும் என்றார்.”

மீனாட்சி சுடச்சுட டபரா செட்டில் காபியை நீட்டினாள்.

கதிர்வேலு “ப்பூ…ப்பூ..” என்று காபியை ஊதிக் குடித்தான்.

“சரவணா போகலாமா.? என்றான்கதிர்வேலு.”

“ம்…போகலாம்….”

சிவநேசன் கதிர்வேலுவிடம், “நான் தம்பியைக் கேட்டதாக சொல்லுப்பா” என்றார்.

“சரி…சொல்றேன்ப்பா….என்றனர் இருவரும்.

இருவரும் பழனி நோக்கி பயணித்தனர்.

சிவநேசன் மனதிற்குள் ‘கழுகு சித்தர்’ சொன்னது உருண்டோடியது!

(தொடரும்)

| அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

கமலகண்ணன்

2 Comments

  • கதை மிக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. அருமை. மேலும் விருவிருப்புக்கு பஞ்சமிருக்காது என நினைக்கிறேன். வாழ்த்துகள்.

  • ஐயா! மிகவும் விறுவிறுப்பாக இருந்தது முதல் இரு பகுதிகள். என்னால் மற்ற பகுதிகளை பார்க்க முடியவில்லை. தொடரை நிறுத்தி விட்டீர்களா? அல்லது இணையத்தில் இருந்து நீக்கிவிட்டீர்களா?
    தயைகூர்ந்து விடை பகரவும்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ சதீஷ்குமார்
    நன்றி !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...