“நிழல் நிஜமான நாள்” நடிகை ஷோபாவின் பிறந்தநாள்
1962ம் ஆண்டு பிறந்த ஷோபா, பதினெட்டு வயது கூட நிறைவுறாத அந்தத் தேவதையின் தொடர்கதை, பாதியிலேயே தன்னை முடித்துக் கொண்டு முற்றும் போட்டுக்கொண்டது.
78ம் ஆண்டு ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் அறிமுகமான ஷோபா, 1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இறந்தார்.
1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி, அந்த நடிப்புக்கு தனி ஒருத்தியாகத் திகழ்ந்த ஷோபா, இறந்தார். மறைந்து, 40 ஆண்டுகளாகின்றன. ஆனாலும் நம் இதயத்தில், எந்தவொரு நடிகைக்கும் கொடுக்கப்படாத சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஷோபா 62ம் ஆண்டு பிறந்தார். 80ம் ஆண்டில் மறைந்தார். ஷோபா காலமான போது அவருக்கு வயது 18. செப்டம்பர் மாதம் 23ம் தேதி பிறந்தவர், இருபது வருடங்கள் கூட வாழவில்லை. எண்பதாம் வருடத்தில் காலமான ஷோபா, இறந்து 40 வருடங்களாகியும் இன்னமும் நம் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இருப்பார்.
பாலுமகேந்திராவின் ‘அழியாதகோலங்கள்’ படத்தில் டீச்சர் வேடம். நடிப்பில் ஆகச்சிறந்த பரிணாமம் காட்டி பிரமாதப்படுத்தினார். காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசம் காட்டி கொண்டாடினார்கள். ’நிழல் நிஜமாகிறது’ படத்தில் தாவணி. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் புடவை. ‘மூடுபனி’ படத்தில் மாடர்ன் டிரஸ்.
தியேட்டரில் வேலை பார்க்கும் சாமானியப் பெண், மிகப்பெரிய நடிகையாக உயர்வதை வெகு அழகாக தன் நடிப்பால் வெளிப்படுத்திய ‘ஏணிப்படிகள்’ படத்தையும் ‘பூந்தேனில் கலந்து’ பாடலையும் யாரால்தான் மறக்கமுடியும்?
விஜயகாந்தின் ஆரம்பகட்ட ‘அகல்விளக்கு’ படத்தில், ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் ஷோபாவின் நடிப்பும் ஏற்படுத்திய சலனம், என்றைக்குமாக நம் மனதில் தங்கிவிட்ட ஒன்று. விஜயகாந்துடன் நடித்த அந்தப் படம் ஓடியதோ இல்லையோ… அந்தப் படம் இன்றைக்கும் நினைவில் இருப்பதற்கு ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் இளையராஜாவின் இசையும் விஜயகாந்த் – ஷோபாவின் இயல்பான நடிப்புமே காரணம்.
’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’யும் மெச்சூரிட்டியான நடிப்பால் உள்ளம் கவர்ந்திருப்பார்.
இயக்குநர் துரையின் இயக்கத்தில் ‘பசி’ படம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. குப்பத்துக் கதாபாத்திரத்தை ஷோபாவை விட வேறு யார் பொருந்தியிருக்கமுடியும்? நடித்திருக்க முடியும்? ஷோபாவின் தன் மொத்த நடிப்பையும் மொத்தத் திறமையையும் கொடுத்திருப்பார். ஒரு பக்கம் வறுமை… இன்னொரு பக்கம் ஊதாரித் தந்தை, நடுவே லாரி டிரைவரின் காமப்பசிக்கு ஏமாறுவது என அத்தனை துயரங்களையும் நம் கண்முன்னே வாழ்ந்து காட்டியிருப்பார். அதனால்தான் அந்தப் படத்துக்காக அவருக்கு ‘ஊர்வசி’ விருது கிடைத்தது. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. நடிகை சாரதாவுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை வாங்கிய நடிகை ஷோபாதான்!