உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 15 | சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 15 | சுதா ரவி

தான் கிடைத்தது. இனி வர மாட்டான் என்று தீர்மானித்துக் கொண்டு மாடிக் கதவருகே சென்றாள். கதவில் கை வைக்கும் நேரம் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்று அறியும் முன்னே அவளிடையில் கையை கொடுத்து தூக்கி தன்னோடு சேர்த்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டான்.

அவன் எதிர்பாராமல் வந்ததில் இன்ப அதிர்ச்சி அடைந்தாலும், அதுவரை கிடைத்த ஏமாற்றத்தில் அவன் மேல் கோபம் கொண்டு அவன் பிடியில் இருந்து தப்பித்து தள்ளி நின்று கொண்டு….” ஐ ஹேட் யு……எனக்கு உங்கள பிடிக்கல…பிடிக்கல” என்று கத்தினாள்.

அவள் கத்த கத்த அவளின் அருகில் சென்றான். “ நான் சொல்றேன் கிட்ட வராதீங்க.ரொம்ப கோவமா இருக்கேன் உங்க மேல.நீங்க கிட்ட வந்தா என்னால திட்ட முடியாது அங்கேயே நில்லுங்க”என்றாள்.

அதையும் கேளாமல் மேலும் அவளிடம் நெருங்கி” நீ எது செஞ்சாலும் என் கைப்பிடிக்குள்ள நின்னு பண்ணு நீ எவ்வளவு திட்டினாலும் வாங்கிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே இடையில் கையை கொடுத்து அவளை தன்னருகே இழுத்துக் கொண்டான்.

அதுவரை தவிப்பிலும் அலைபுருதளிலும் கொந்தளித்துக் கொண்டிருந்த மனம் அவன் தொடுகையில் நீரிட்ட நெருப்பாக அணைந்து போயிற்று. அவன் தீண்டலில் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து நின்று விட காதல் கொண்ட மனங்கள் அந்த நிமிடத்தை இழக்க மனமில்லாமல் தொடர்ந்தனர். அந்த நேரம் விஸ்வாவின் வீட்டு மாடியில் ஏதோ சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு இருவரும் பிரிந்தனர். அப்போது அங்கு பேச்சு குரல் கேட்க அதை கேட்டு பயந்து தாங்கள் நின்றிருந்த இடத்திலேயே அவன் கால் நீட்டி அமர அவளையும் தன் மீதே அமர்த்திக் கொண்டான்.

அங்கு சத்தம் அடங்கும் வரை இருவரும் ஒருவரின் அருகாமையை ஒருவர் ரசித்துக் கொண்டிருந்தனர். அவன் மெல்லிய குரலில் ” ஏன் அம்மு என்னை ரொம்ப தேடுனியா?”என்றான்.

அவன் நெஞ்சில் முகத்தை புதைந்துக் கொண்டு” நீங்க வருவீங்கன்னு தினமும் பத்து தடவையாவது மாடிக்கு வந்து பார்த்தேன்.”

அவள் கூந்தலின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே” சாரிடா…நானே எதிர்பார்க்கல நிறைய வேலை வந்திடுச்சும்மா..”

அவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க மீசையின் முடிகள் ஏற்படுத்திய குறுகுறுப்பில்……” யாரோ என்னை சின்ன பொண்ணு நல்லா படி அப்புறம் பார்க்கலாம்ன்னு சொன்னாங்க…..அது யாருன்னு தெரியுமா பீகே.”

அவள் வெற்றிடையில் பதிந்த கைகள் ஊர்வலம் போக” வயசை பார்த்து சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்…….ஆனா அப்படி இல்லேன்னு”…என்று அவன் முடிக்கும் முன் அவன் கைகளை தட்டி விட்டு மூக்கை பிடித்து ஆட்டியவள்“ரொம்ப தான் ஓவரா போறீங்க”என்றாள்.

அதற்குள் அவனும் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து” நீ என் பக்கத்தில் இருந்தாலே என் கைக்குள்ள தான் இருக்கணும்ன்னு தோணுதுடா”

அவன் நெஞ்சில் தன் கைகளால் குத்தியவள்“நீங்க ரொம்ப மோசம்! நான் உங்களால் நிறைய மாறி போயிட்டேன்…..அம்மா அப்பா கிட்டே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.அவங்களுக்கு துரோகம் பண்ண வச்சுட்டீங்க, .நான் நானாகவே இல்ல……எனக்குள்ள நீங்க இருந்து என்னை ஆட்டுவிக்கிறீங்க. இது தப்பு உங்களை மறக்கலாம்ன்னு நினைச்சாலும் முடியல.எனக்கு குழப்பமா இருக்கு.ஒரு நாள் உங்களை பார்க்கலேன்னாலும் மனசு கிடந்தது தவிக்கிறது.நான் என்ன பண்றது சொல்லுங்க?” என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் துளிகள் நிறைந்து நின்றது.

குழம்பிய அவள் முகத்தை பார்த்தவன் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தியது. அவளின் குழப்பத்தை தீர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான். அவள் முகத்தை இரு கைகளிலும் தாங்கி அவள் கண்களுடன் தன் கண்களை கலக்க விட்டு”அம்மு எப்பவும் உன் மனசுல ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுக்கோ! என்னோட உயிர் நீ தான்!உன்னையும் என்னையும் யாராலையும்

பிரிக்க முடியாது.உனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நான் கூடவே இருந்து உன்னை என் நெஞ்சிலே தாங்குவேன்.நீ என் வாழ்க்கையில் எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.உன்னை எந்த காரணத்துக்காகவும் மிஸ் பண்ணவே மாட்டேன்”என்று சொல்லி தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவன் பேசியதில் ஆறுதலடைந்து அவன் நெஞ்சிலயே சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்து இருக்க….திடீரென்று அவளுக்கு அடுத்த நாள் தான் பிச்சாவரம் போவது நியாபகம் வர மெல்ல எழுந்து அவன் முகம் பார்த்து ”நான் நாளைக்கு காலேஜ் டூர் பிச்சாவரம் போறேன்” என்றாள்.

அதை கேட்டு அவள் நெற்றியில் லேசாக ஒரு முட்டு முட்டி”.நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா சின்னு.இதெல்லாம் இந்த நேரத்துல கிடைக்கிற அனுபவங்கள் மிஸ் பண்ணிட கூடாது.”

அவசரமாக எழுந்து அவனை பார்த்தவள் ” ஒரு ஐடியா நீங்களும் வாங்களேன்.எனக்கு உங்களை பார்த்துகிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.”

“ஹாஹா….என்று சிரித்தவன்”உனக்கு பார்த்துகிட்டே இருந்தா போதும், ஆனா நீ உன் பிரெண்ட்ஸ் கூட இருப்ப நான் தனியா வரணும்.எனக்கு நீ எங்கே போனாலும் இப்படி இருந்தா தான் பிடிக்கும்.முடியும்னா சொல்லு வரேன்” என்றான் குறும்புடன்.

அவன் பதில் கேட்டு முகம் சிவந்து ” ச்சே..வர வர நீங்க ரொம்ப மோசமா பேசுறீங்க என்று விட்டு,அப்போ நீங்க வர மாட்டீங்களா” என்றாள் ஏக்கத்துடன்.

அவள் முக வடிவை விரல்களால் அளந்து கொண்டே” இல்லடா…..எனக்கு முக்கியமான வேலை ஒன்னு கடலூர்ல இருக்கு அங்கே போயாகனும்…ஆனா சாயங்காலம் கண்டிப்பா நீ போயிட்டு வந்த கதையை கேட்க நான் இங்கிருப்பேன் சரியா?” என்றான்.

“ம்ம்ம்…….”என்று சொல்லியவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். “நான் இந்த நாளை என்னைக்கும் மறக்க மாட்டேன் பீகே. நமக்கே நமக்குன்னு எத்தனை நாட்கள் கூட வந்தாலும் இது மிகவும் ஸ்பெஷல் இல்லையா?”

அவளின் கூற்றை ஆமோதித்தவன் ” ஆமா அம்மு, இந்த நாள் நம் வாழ்வின் மறக்க முடியாத நாள் தான்”

காதலின் நெருக்கத்தில் கட்டுண்டு கிடந்தவர்களை கண்ட வெள்ளி நிலவு வெட்கிச் சிவக்காமல் நாளை நடக்கப் போகும் நிகழ்வை எண்ணி வருந்தி மேகத்தில் முகம் புதைத்து அழுதது……

அன்று எப்பவும் போல் விடியும் நேரம் எழுந்து வேலை செய்யும் ராஜிக்கு மனம் ஒரு வித தடுமாற்றத்துடனே இருந்தது. சரி சிறிது நேரம் வேலையில் மூழ்கினாள் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் வேலைகளை செய்யத் தொடங்கினார். அடுப்படியில் பால் பாத்திரத்தை கழுவி எடுத்துக் கொண்டு மேடையில் வைக்கப் போகும் நேரம் காலில் சுருக்கென்று ஒரு வலி ஏற்பட்டது. என்னவென்று குனிந்து பார்க்கும் நேரம் கட்டை விரலில் இருந்து லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

ஏதோ கவரில் இருந்து பிரித்தெடுத்த கொக்கி காலில் குத்தி ரத்தத்தை வரவழைத்தது. ‘என்ன இது என்றைக்கும் இல்லாமல் இன்று காலையிலேயே ரத்த காயத்துடன் நாள் ஆரம்பிக்கிறதே’ என்று சங்கபடபட்டுக் கொண்டே பாலை காய்ச்சத் தொடங்கினார். காய்ச்சத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாலும் திரிந்து போக மனம் நொந்து போனார்.

மன சஞ்சலத்துடன் வேகமாக பூஜை அறைக்கு சென்று கடவுளின் முன் நின்று”அம்மா தாயே இன்றைக்கு எந்த கஷ்டம் வருவதாக இருந்தாலும்

அதை தடுத்து நிறுத்த வேண்டியது உன் பொறுப்பு” என்று வேண்டிக் கொண்டார்.

கடவுளிடம் வேண்டியதும் மனம் கொஞ்சம் அமைதியடைய அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பித்தார். நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக எழுந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும், அலுவலகத்துக்கும் கிளம்பினர். உத்ரா மனதளவில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை’அம்மா பிச்சாவரம் செல்ல அனுமதி கொடுத்ததை’மித்ரா வேறு”ம்ம்ம்…..அக்கா நீ பயங்கரமான ஆளு அப்பா கிட்ட சொல்லி அனுமதி வாங்கிட்டே அப்படியே எனக்கும் சொல்லேன்..நானும் எங்க ஸ்கூலில் கூட்டிட்டு போகும் டூருக்கு போயிட்டு வரேனே”என்று அக்காவின் கன்னத்தை பிடித்து கெஞ்சினாள்.

அவள் தலையை செல்லமாக தட்டிய உத்ரா ” நிச்சயமா சொல்றேன் மித்து…….முதலில் நான் இன்னைக்கு போயிட்டு வந்திடுறேன்.அப்புறமா மெதுவா கேட்கலாம்.”

“சரிக்கா,நீ போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா,.உன் பிரெண்ட்ஸ் எல்லாம் வராங்க தானே.”

“ம்ம்ம்……எல்லோரும் வராங்க மித்து .”

இளம் மஞ்சள் வண்ண சல்வார் அணிந்து புத்தம் புது ரோஜா மலர் போன்று கிளம்பிய மகளை பார்த்து ஒரு புறம் மகிழ்ந்தாலும், மற்றொரு புறம் அவள் சுற்றுலாவிற்கு செல்வது மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தியது ராஜிக்கு. மெல்ல மகளிடம் சென்று அவளுக்கு தேவையான அறிவுரைகளை சொல்லி மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் படி கூறினார். பின்னர் மணியிடம் உத்ராவை அன்று கல்லூரிக்கு அழைத்து சென்று விட்டு விட்டு பயணத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு வரும் படியும் கூறினார். அதை கேட்டு முகத்தை சுளித்த மகளிடம்” இப்போ உனக்கு தெரியாது எங்க பயம் எல்லாம்.நீயும் அம்மாவாகும் போது தான் அது புரியும்” என்றார்.

அப்பாவுடன் கிளம்பி கல்லூரிக்கு வந்த உத்ராவை தோழிகள் படை சூழ, அவளும் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் அளவளாவிக் கொண்டே உள்ளே சென்றாள். சிறிது தூரம் சென்றவள் திரும்பி தந்தையை பார்த்து மகிழ்ச்சியுடன் சிரிப்பை உதிர்த்து அருகில் வந்து கையை பிடித்துக் கொண்டு”தேங்க்ஸ் பா” என்று சொல்லி உற்சாகத்துடன் திரும்பி செல்வதை பார்த்த மணி நிம்மதியாக அங்கிருந்து சென்றார்.

எல்லோரும் வந்ததும் பேருந்து கல்லூரி வளாகத்தை விட்டு கிளம்பி பிச்சாவரத்தை நோக்கிப் புறப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தங்கள் உற்சாகத்தை ஆடியும் பாடியும் கொண்டு வந்தனர். சரியாக ஒரு மணி நேரத்தில் பிச்சாவரத்தை அடைந்த பேருந்தில் இருந்து இறங்கி அனைவரும் படகு துறையை நோக்கி சென்றனர். அங்கிருந்த படகுகளுக்கான பயண சீட்டை வாங்கி ஒவ்வொரு படகிலும் ஆறு பேர் ஏற்றப்பட்டனர். ஐந்து மாணவர்களும் ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் ஏறினர். உத்ரா ஏறிய படகில் அவளின் தோழிகள் மூவரும் வேறு துறையை சேர்ந்த இரு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் ஏறினர்.

படகு நீரை ஊடுருவி செல்லத் தொடங்கியதும் உத்ராவிற்கு சொல்லொணாத உணர்வு தோன்றி மறைந்தது. ‘பூலோக சொர்க்கம் என்பது இது தானா? என்ன ஒரு அழகு……மேலே நீல வானம், பக்கத்தில் பச்சை பசேலென்ற மரங்கள் கீழே நீரின் ஓட்டமும் மனதை கொள்ளை கொள்ளும் காட்சியாக இருந்தது. இதுவரை இப்படி ஒரு காட்சியை பார்த்தது இல்லையே.இத்தனை நாளும் இதை எல்லாம் பார்க்காமல் போய் விட்டோமே’ என்று வருந்தினாள்.

சிறிது தொலைவு சென்றதும் அகன்ற கால்வாயை விட்டு விலகி இரு புறமும் மரங்கள் அடர்ந்த குறுகிய ஓடையின் வழியே படகை செலுத்தினார் படகோட்டி. மரங்களின் மீது அமர்ந்திருந்த பறவைகள் படகுகளை கண்டதும் எழுந்து பறந்ததை பார்த்து மயங்கி அமர்ந்திருந்தாள். அதுவரை தங்களின் வயதிற்குரிய உற்சாகத்தில் இருந்த சிறியவர்கள் கண்முன்னே விரிந்திருந்த இயற்கை காட்சியில் தங்களை மறந்து அமர்ந்திருந்தனர். அப்பொழுது குறிப்பிட்ட எல்லை வரை போய் விட்டு படகை திருப்ப முற்பட்ட

படகோட்டியை பார்த்து இரு மாணவர்களும் ” இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போகலாமே”என்றார்கள்.

அவர்களின் கோரிக்கையை மறுத்த படகோட்டி” உள்ளே போக போக ஆழம் அதிகமா இருக்கும் இங்கே வரை போக தான் அனுமதி இருக்கு” என்றார்.

உத்ராவிற்கும் அவள் தோழிகளுக்குமே இன்னும் சற்று தூரம் சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற உடனே ஆசிரியரிடம் அனுமதி கேட்டனர்.” ப்ளீஸ் மேம்….நாங்க இதை விட்டா மறுபடியும் எப்போ வருவோம்ன்னே தெரியாது.எங்களுக்காக இன்னும் கொஞ்ச தூரம் உள்ளே போயிட்டு வரலாமே” என்று கேட்டாள்.

முதலில் மறுத்தவர் பின் அவர்களின் அன்பு தொல்லையில் சரி என்று அனுமதி அளித்தார். அவரின் ஒப்புதலின் பேரில் படகு மெல்ல அடர்ந்த காட்டிற்குள் சென்றது. அவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் திரும்பி விட்டபடியால், இவர்களின் படகு மட்டும் நீரைக் கிழித்துக் கொண்டு மெல்ல உள்ளே சென்றது. படகில் இருந்தவர மற்ற மாணவர்களும் ஆசிரியரும் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க உத்ரா கீழே குனிந்து நீரை அலைந்தபடியே வந்தாள்.

அப்போது எதிர் பக்கம் அமர்ந்திருந்த இரண்டு மாணவர்களில் ஒருவன் அவசரமாக எழுந்து உத்ரா இருந்த பக்கம் வந்தான். அவன் எழுந்து நடந்ததிலே படகு ஆட ஆரம்பித்தது. படகோட்டி கோபத்துடன்.”என்ன இது இப்படி எழுந்து நடக்குறீங்க….போய் உங்க பக்கமே உட்காருங்க…..நீங்க இப்படி நடந்தா படகு கவிழ்ந்துடும்” என்று விரட்டினார்.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 | அத்தியாயம் – 13 | அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...