நீயெனதின்னுயிர் – 16 | ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 16 | ஷெண்பா

“சொல்லு ராகவ்!”

“………..”

“ஓகே! நான் நாளைக்கு ஆஃபிஸ் வந்ததும் பேசிக்கலாம்…”

“………..”

“ஓகே சீயூ” என்று பேசிக்கொண்டே வந்தவன், அவனது அன்னையின் அருகில் அமர்ந்தான்.

“யாரு கண்ணா? ராகவா?” என்று கேட்டார் செந்தளிர்.

“ஆமாம்மா. ஒரு வழியா அவனோட பிரச்சனை யெல்லாம் முடிஞ்சிடுச்சி. விஷயத்தைச் சொல்லத்தான் ஃபோன் செய்திருக்கான். அதோட, நாம அவனுக்குக் கொடுத்திருக்கும் ஆஃபர், தன்னோட தகுதிக்கு மீறினதுன்னு நினைச்சி ஏத்துக்க ரொம்பத் தயங்கறான். நாளைக்கு ஆஃபிஸ் போனதும் நீ அதுக்குப் பொறுத்த மானவன்னு அவனைக் கன்வின்ஸ் பண்ணணும்” என்று புன்னகைத்தான்.

“உங்க அப்பாவோட கணிப்பு என்னைக்கும் சோடை போனதில்லை. நான் கூட ஆரம்பத்தில் உங்க அப்பா, அவன்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கறாருன்னு நினைச்சேன்…”

“அப்பா என்னோட செக்ரெட்டரியா ராகவை கொண்டு வந்தார்ன்னா அதுக்குக் காரணம் இல்லாமல் இருக்குமா!”

“ம்ம்… சாதாரண அப்ரண்டீசா வேலைக்கு வந்தவனை உங்க அப்பா உனக்கு செக்ரெட்டரி ஆக்கினார். நீ அவனை ஒரு கம்பெனிக்கே எம்.டி ஆக்கப் போற! எல்லாம் நல்லபடி நடந்தால் சரி” என்றார் செந்தளிர்.

“எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது… கீதைல பகவானே சொல்லியிருக்காரே அத்தை…” என்றபடி அங்கே வந்தாள் சீமா.

ஆமென ஆமோதித்த செந்தளிர், “லஞ்ச் தயாரா இருக்கா சீமா…” என்று விசாரித்தார்.

“ஆல்மோஸ்ட் முடிஞ்சது. கீர் தயாராகிட்டு இருக்கு” என்று பதிலளித்தாள்.

பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்க, ரவீந்தருடன், சீமாவும் வாசலுக்கு விரைந்தாள்.

“வாங்க நமஸ்காரம்” என்று அழகான தமிழில் விக்ரமின் தந்தை ரவீந்தர் வரவேற்க, சங்கரனும், தேவிகாவும், “நமஸ்காரம்” என்றனர்.

“வைஷாலி!” என்றபடி அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் சீமா.

“சீமாக்கா!” என்று சிரித்தவள், ரவீந்தரின் காலைத் தொட்டு வணங்கினாள்.

“வாங்க வாங்க…” என்ற குரல் கேட்டுத் திரும்பியவள், விக்ரமின் அன்னை சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்துப் போனாள்.

சக்கர நாற்காலியைப் பிடித்துக் கொண்டிருந்த விக்ரமை, செய்வதறியாதவள் போலப் பார்த்தாள். அவனோ எப்போதும் போல பளீர் புன்னகையுடன் நின்றிருந்தான். சங்கரனும், தேவிகாவும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் சுதாரித்துக்கொண்ட தேவிகா, மகள் கையை யாரும் அறியா வண்ணம் தட்ட, சுதாரித்துக் கொண்ட வைஷாலி அவரது காலைத் தொட்டு வணங்கினாள்.

வேலையாள் கொண்டு வந்த பழச்சாறை வாங்கி அனைவருக்கும் கொடுத்த சீமாவை, “இவள் என் நாத்தனார் பொண்ணு” என்று செந்தளிர் அவளை அறிமுகப்படுத்த, “வணக்கம்” என்றாள் சீமா.

”நம்ம ஊர்க்காரங்களை சந்திச்சு பேசறதே அலாதிச் சந்தோஷம்தான்” என்றார் செந்தளிர்.

“உண்மைதாங்க. விக்ரம் தம்பிகூட தமிழ்ல பேசினப்போ எனக்கு ஆச்சரியமா இருந்தது. அப்போதான் வைஷு, விஷயத்தைச் சொன்னா…” என்று பெண்கள் இருவரும் மென்குரலில் பேச ஆரம்பிக்க, ஆண்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

வைஷாலி கையிலிருந்த பழச்சாற்றைப் பருகுவதும், வீட்டைக் கண்களால் அளப்பதுமாக இருக்க, “சீமா, வைஷாலியை கூட்டிட்டுப் போய் நம்ம வீடு, தோட்ட மெல்லாம் சுத்திக்காட்டும்மா” என்றார் ரவீந்தர்.

“வா வைஷாலி!” என்று சீமா அழைத்ததும், அனுமதிக்காகத் தன் அன்னையைப் பார்த்தாள் வைஷாலி. தேவிகாவும் ‘போய்வா’ என்பது போல தலை யசைக்க, மடமடவென ஜூஸை காலி செய்தவள், சீமாவுடன் சென்றாள். அனைத்தையும் செந்தளிர் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார்.

“வைஷாலி ரொம்ப நல்லா பழகுவான்னு விக்ரம் சொல்லியிருக்கான். இங்கே என்னடான்னா பேசவே மாட்டேங்கறாளே” என்றார் செந்தளிர்.

லொடலொடன்னு அங்கேல்லாம் போய் பேசக் கூடாதுன்னு அதட்டி அழைத்து வந்திருப்பதை எப்படிச் சொல்வார் தேவிகா. சிரித்து மழுப்பியவர், “முதல் முறை இல்லையா, கொஞ்சம் பழகினா சரியாகிடுவா” என்று சமாளிப்பாகச் சொன்னார்.

சங்கரனுடன் பேசிக்கொண்டிருந்த விக்ரமின் மொபைல் ஒலித்தது.

“டேய்! என்னை இங்கே விட்டுட்டு அங்கே என்னடா செய்துட்டு இருக்க. அவங்ககூட எப்போ வேணாலும் பேசிக்கலாம். ஒழுங்கு மரியாதையா எழுந்து வா” என்று ரகசியக் குரலில் பேசினாள் சீமா.

பேசிக்கொண்டிருந்தவர்களிடம், “எக்ஸ்கியூஸ் மீ!” என்று அனுமதி கேட்டுக் கொண்டு சற்றுத் தள்ளி வந்தான். “ஹேய்! நான் எப்படி வரமுடியும்? இதுக்குத் தான் நீ வராதே. உனக்கு ஷாலு வருவது வெறும் இன்ஃபர்மேஷன் மட்டும்தான்னு சொன்னேன். கேட்டியா? குதிச்சிகிட்டு வந்த… இப்போ பாரு என்னாச்சுன்னு? நீ வராமல் இருந்திருந்தா, நானே ஷாலுவை அழைச்சிட்டுப் போயிருப்பேன்” என்றான் அப்பாவியாக.

“இதாண்டா… வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கிறது” என்று பல்லைக் கடித்தவள், “ஒண்ணை மட்டும் மனசுல வச்சிக்க தம்பி! இன்னைக்கு இல்லைனாலும், ஒரு நாளைக்கு இந்தச் சீமாவோட உதவி உனக்குக் கட்டாயம் தேவைப்படும். என்னைப் பகைச்சிக்காதே! சொல்லிட்டேன். சரி, வைஷாலி வர்றா. நீ அங்கிருந்து வர்ற வழியைப் பாரு. போனை வைக்கிறேன்” என்றவள், அவசரமாக போனை அணைத்தாள்.

மீண்டும் தந்தையின் அருகில் வந்து அமர்ந்தவன், என்ன சொல்லிவிட்டு இங்கிருந்து செல்வது என யோசித்துக் கொண்டிருக்க, வைஷாலியுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் சீமா.

“விக்ரம்! நீ இவளுக்கு வீட்டைச் சுத்திக் காட்டு… நான் லஞ்ச் தயாராகிடுச்சான்னு பார்த்துட்டு வரேன்” என்றவள் வேகமாக அங்கிருந்து அகன்றாள்.

“இல்லை பரவாயில்லை…” என்று வைஷாலி மறுக்கும் போதே, “அழைச்சிட்டுப் போ விக்ரம்” என்ற ரவீந்தர் குறும்புடன் மகனைப் பார்த்தார்.

தந்தையின் பார்வையைக் கவனித்துவிட்டவன், பின்னந்தலையைக் கோதியபடி அவரைப் பார்க்காமல், “வா ஷாலு!” என்று முன்னால் செல்ல, வைஷாலி அவனைப் பின் தொடர்ந்தாள்.

சங்கரன் யோசனையுடன் மனைவியைப் பார்த்தார். அவரோ, ஆனந்தத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவருக்கு, விளக்க முடியா கவலை ஒன்று புதிதாக முளைத்தது.

மாடியிலிருந்த விசாலமான காரிடாரில் இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர். விக்ரமிற்கு பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவிப்புடன் அவளைப் பார்க்க, அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

“இந்தப் புடவை உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு ஷாலு!” என்றான்.

குனிந்து தன்னைப் பார்த்துக்கொண்டவள், “தேங்க்ஸ். அம்மாவோட வற்புறுத்தல்” என்று புன்னகைத்தாள்.

“ஓ!” என்றவனுக்கு ஏனோ பேச வார்த்தைகளே கிடைக்காதது போலத் தவித்தான். ‘வீட்டைச் சுற்றிக் காட்டுகிறேன் பேர்வழி என்று அவளை அழைத்து வந்துவிட்டு, அப்படியே இருந்தால் எப்படி?’ என்று நினைத்தவன், அவளிடம் பேசவேண்டுமே என்பதற்கா கவே அங்கே மாட்டியிருந்த ஆளுயர புகைப்படங்களை அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் அதுவும் முடிந்துவிட, அடுத்து என்ன என்பது போல அவன் முகத்தைப் பார்த்தாள். அய்யோ பாவமாக இருந்த அவளது முகத்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பாக வந்தது.

“ஹேய்! ஷாலு, ரொம்ப போரடிச்சிட்டேனா… இப்படிக் கண்ணெல்லாம் சொருகிப் பாதித் தூக்கத்தில் எழுப்பி உட்கார வச்சது போல இருக்க” என்று சொல்லிச் சிரிக்க, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

“டெண்ட்த் ஸ்டாண்டர்ட்ல எங்க ஹிஸ்ட்டரி டீச்சருக்குப் பிறகு இப்படி எனக்குக் கதை சொல்லித் தூக்கம் வர வச்ச புண்ணியம் உங்களைத் தான் சார் சேரும்” என்றாள்.

“வெயிட் வெயிட்… அன்னைக்கு யாரோ என்னை விக்ரம்ன்னு அழகா பேர் சொல்லிக் கூப்பிட்டாங்க… அவங்க யாருன்னு தெரியுமா உனக்கு…?” என்றான்.

“அப்படியா…?” என்று யோசித்தாள்.

“ஹேய்! என்ன உண்மையா தெரியலையா இல்லை வேணும்னே சொல்றியா?” என்று கேட்டான்.

“ஒரு ஃப்ளோவில் வந்திருக்கும் சார். நீங்க என்னைவிட ஏழு வருஷம் பெரியவர்…” என்று கண்களை விரித்தவள், “அது சரி நீங்க ஏன் என்னை ஷாலுன்னு கூப்பிடுறீங்க?” என்றாள்.

‘நீ எனக்கு ஸ்பெஷல்’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அதுவும் உன் பெயரொட ஷார்ட் ஃபார்ம் தானே…! அதோடு எல்லோரும் கூப்பிடுவது போலக் கூப்பிட்டால் எப்படி? நான் கூப்பிட தனியா ஒரு பெயர் இருக்கட்டுமே” என்றான்.

“ஓ! நீங்க கூப்பிட தனிப் பெயரா…? அப்போ எல்லோரும் கண்ணை கண்ணுன்னும் மூக்கை மூக்கு-ன்னும் தான் சொல்றாங்க. அதை மத்தவங்க மாதிரித் தான் சொல்வீங்களா? இல்லை, அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் பெயர் வச்சிருக்கீங்களா?” என்று அப்பாவியாக கேட்க, விக்ரம் புரையேறும் அளவிற்குச் சிரித்தான்.

“என்ன சார் எது சொன்னாலும் சிரிக்கிறீங்க? நியாயமா உங்களுக்குக் கோபம் வரணும்” என்ற போதும் சிரித்தவனைப் பார்த்து அசடு வழிந்தாள்.

அறையைச் சுற்றிப் பார்த்தவள், “சிரிக்காதீங்க விக்ரம்… இத்தனை பெரிய ரூமில் நீங்க சிரிக்கறது எனக்குப் பயமா இருக்கு” என்று சொல்ல, சிரிப்பை அடக்கியவன், “நைஸ்… ஷாலு! இன்னையிலிருந்து என்னை சார்ன்னு கூப்பிடுவதை விட்டுடு. விக்ரம்னே கூப்பிடு சரியா!” என்றான் எதிர்பார்ப்புடன்.

“ஓகே” என்றவள் அழகாகப் புன்னகைத்தாள்.

ஹாலில் பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு இருவரது சிரிப்புச் சப்தமும் கேட்க, அன்னையர் இருவரும் அர்த்தமாக சிரித்துக் கொண்டனர்.

வைஷாலி விக்ரமிடம் அவனது அன்னையின் நலக்குறைவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, அன்னையர் இருவரும் அவர்களது பூர்வீகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

இருவருமே திருநெல்வேலி ஆட்கள் என்று தெரிய பேச்சில் சுவாரசியம் கூடியது. தங்களது ஊர், பெற்றவர்கள் என்று பேசிக்கொண்டே போக கடைசியில் இருவரும் அத்தைப் பெண், மாமன் மகள் என்று தெரியவந்தது. தங்களது பள்ளிப் பருவத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட இருவரும், நீண்டகாலத்திற்குப் பிறகு சந்தித்துக் கொண்டதில் மகிழ்ந்து போயினர்.

“பார்த்தியா தேவி… இத்தனை வருஷம் பக்கத்தி லேயே இருந்தும் தெரியாமலேயே இருந்திருக்கு” பிரிந்த உறவை அறிந்துகொண்டதில் செந்தளிருக்கு சந்தோஷ மாகிவிட்டது.

“எங்க அத்தை அவங்க பசங்களைப் பத்தியெல்லாம் சொல்லிட்டு இருப்பேன் இல்ல… இப்போ பாருங்க எப்படியெப்படியோ போய் விட்ட குறை தொட்ட குறையா வந்து சேர்ந்தாச்சு” என்றார் செந்தளிர்.

“ஆமாம் அண்ணி. கடைசியில் நம்ம பிள்ளைங்க மூலமா நாம ஒண்ணு சேர்ந்திருக்கோம்” என்று ஆமோதித்து, தங்களது உறவை மேலும் நெருக்கமாக பிணைத்துக் கொண்டார் தேவிகா.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 15 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...