வரலாற்றில் இன்று – 21.08.2020 ப.ஜீவானந்தம்

 வரலாற்றில் இன்று – 21.08.2020 ப.ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் ‘இந்திய தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும், பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார்.

இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். இவர் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.

1932ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.

தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப.ஜீவானந்தம், 1963ஆம் ஆண்டு மறைந்தார்.

பிரம்ம பிரகாஷ்

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதல் இயக்குநர் டாக்டர் பிரம்ம பிரகாஷ் 1912ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார்.

பிரபல விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்னாகருடன் இணைந்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1949ஆம் ஆண்டு பம்பாயில் உள்ள அணுசக்தி நிறுவனத்தில் ஹோமி பாபாவால் உலோகவியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1951ஆம் ஆண்டு பெங்கள10ர், இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் படிப்புக்கு நவீன பாடத்திட்டம் வகுத்தார்.

1952ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை நாட்டின் அணுசக்தி திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். விண்வெளி ஆணைய உறுப்பினராக இறுதிவரை செயல்பட்டார். பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றவர்.

நாட்டின் பல வெற்றிகரமான செயற்கைக்கோள், ஏவுகணை திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய இவர் தனது 72வது வயதில் (1984) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தடகள ஆட்டக்காரர் உசேன் போல்ட் ஜமேக்காவில் பிறந்தார்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாரத ரத்னா விருது பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் மறைந்தார்.

1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சச்சிதானந்த ராவுத்ராய் மறைந்தார். 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...