வரலாற்றில் இன்று – 18.08.2020 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
இன்று நினைவு தினம்…!
இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த வேலையை துறந்தார். அந்த வேலையை விட்டு விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கென தனிக் கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 48வது (1945) வயதில் மறைந்தார்.
பாஜிராவ்
இந்திய பேரரசர் முதலாம் பாஜிராவ் 1700ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி பிறந்தார்.
இவர் தமது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்திக்கவில்லை.
பாஜிராவ் 1740ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டு தன்னுடைய 39வது வயதில் இறந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பெண்ணுரிமைக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளர் ஆர்.எஸ்.சுபலட்சுமி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் பிறந்தார்.
1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சன் சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் போது ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார்.
1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.