வேகத்தடை – படித்ததில் பிடித்தது
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?”
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.
“நிறுத்துவதற்கு”
“வேகத்தைக் குறைப்பதற்கு”
“மோதலைத் தவிர்ப்பதற்கு “
“மெதுவாக செல்வதற்கு”
“சராசரி வேகத்தில் செல்வதற்கு”
என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.
“வேகமாக ஓட்டுவதற்கு” என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது.
ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது.
பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.
இதுபோலத் தான் தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.
உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.
ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் மனிதர்கள் நம்மை ஏதாவது ஒரு வகையில் பாதித்து விடுகின்றனர்.
நம்முடைய வாழும் வாழ்க்கை அர்த்தமுடையதாக மாறும் போது தான் நாம் கடந்த மனிதர்கள் நம்மை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள் என்பது உண்மை.
பல நேரங்களில் மனக்காயங்களால் நாம் தூக்கி எறியப்பட்டாலும் அவசரப்பட்டு அவர்களுக்கு பதில் சொல்லாமல் நமது செயல்களால், நாம் வாழும் வாழ்க்கையால் அழகிய பதிலை அனைவருக்கும் கொடுக்க முடியும் என்பதே வெற்றியாளர்களின் வேதம்.
இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!