குறைந்த விலைக்கு கொரோனா தடுப்பு மருந்து!!
கொரோனாவை தடுப்பதற்காக இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்தை தண்ணீர் பாட்டிலை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்வதே தங்கள் நோக்கம் என பாரத் பயோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா அமைச்சர் தரகா ராமராவ், பாரத் பயாடெக் நிறுவனத்திற்கு சென்று, கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பாரத் பயோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, கோவாக்சின் தடுப்பு மருந்து குறித்து பல்வேறு ஆய்வு செய்து தாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
அமெரிக்காவும், உலக சுகாதார அமைப்பும் கோவாக்சின் மருந்து கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்றும், உலகின் பொது எதிரியை எதிர்க்கும் தங்களின் ஒரே நோக்கம், கோவாக்சின் மருந்தை தண்ணீர் பாட்டில் விலையை விட குறைந்து விலைக்கு விற்பது தான் என தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட பரிசோதனையில் தன்னார்வலர்கள் யாருக்கும் எந்த பக்க விளையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்கான இரண்டாவது கட்ட சோதனை செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் கோவாக்சின் கிடைக்கும் என கிருஷ்ணா எல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.