வரலாற்றில் இன்று – 15.07.2020 காமராஜர்
கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.
1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1946-52ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் ‘கருப்பு காந்தி’ என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் வழிகாட்டி என்று பாராட்டியுள்ளார்.
பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், 1975ஆம் ஆண்டு மறைந்தார். மறைவுக்குபின் 1976ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
மறைமலை அடிகள்
தனித்தமிழ் இயக்கம் ஆரம்பித்து, தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
தமிழ் பற்றால், வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் இருந்தே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.
மேலும் இவர் 1905ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911ஆம் ஆண்டு துறவு மேற்கொண்டார்.
மூடத்தனமான செயல்களை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 1950ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1909ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காபாய் தேஷ்முக் ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.
2006ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.