7 வயது கண்ணனின் வளர்ச்சியில் இயற்கை தன்னைமீறிய வேகத்தை கொடுத்ததது என்றுதான் சொல்லவேண்டும். கொட்டகையின் வாசலில் பலகாரக்கடை ஆரம்பித்தபோதே கண்ணன் தன் அன்னையை அங்கே வரவிடமாட்டேன் என்று சொல்லிவிட்டான். “அம்மா அங்கன எல்லாம் வேண்டாம் ஸார் நான் எதுக்கு இருக்கேன் பராசக்தி படத்திலே அந்தம்மா புருஷனையும் இழந்து வேலைக்குப் போய் என்ன கஷ்டப்பட்டாங்க தெரியுமா நான் இருக்கிறவரையில் என்னை பெற்றவங்களுக்கு அதை வரவிடமாட்டேன்.!”
“அது சரி கண்ணா தினமும் மூணு கிலோமீட்டர் உன்னால எப்படிடா நடந்துபோய் வரமுடியும். சரியான நேரத்துக்கு பலகாரம் எல்லாம் எப்படிடா கொண்டு போவே ?”
“நம்ம தெரு முக்கு சைக்கிள் கடையிலே வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கிறேன் ஸார்” சொன்னவனை புதியதாய் பார்த்தார் வாத்தியார்
“பரவாயில்லை கண்ணா உங்கம்மா உன் படிப்பை நிறுத்தறாங்களேன்னு கவலைப்பட்டேன் நீ வாழ்க்கையைப் படிக்க கத்துக்கிட்டே ரொம்பவே சந்தோஷமா இருக்கு சைக்கிளுக்கு நான் ஏற்பாடு செய்யறேன் நீ வாடகைக்கு எடுக்க வேண்டாம், நான் ஸ்கூலுக்கு போனபிறகு வண்டி சும்மாதானே இருக்கு அதையெடுத்துப் போ.”
“சார் வேண்டாம் சார் எனக்காக ? நீங்க நடந்து போய் வேணாம்”
“சுண்டக்கா கா பணம் சுமக்கூலி முக்கா பணமா ? பரவாயில்லைடா உன் படிப்புக்குத்தான் என்னால உதவ முடியலை இதுக்காவது உதவிட்டு போறேன். நீ நல்லா வரணும் கண்ணா. அதுவுமில்லாம சைக்கிளுக்கு எண்ணெய் எல்லாம் போட்டு நல்லா வைச்சிருக்கிறேன் ஆனா திரும்பினவுடனே நாலுதெரு எட்டு முனையிலே பள்ளிக்கூடம் அதுக்கு எதுக்கு சைக்கிள். நடைப்பயிற்சி நல்லதுதானே ?!”
கண்ணன் தன் கூடையில் உள்ள பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு அடுத்த ஆட்டம் தயாராவதற்குள் வீட்டுக்குப் போய் பலகாரம் வாங்கியாந்து விடவேண்டும் என்று சைக்கிளைத் திருப்பினான். பைக்குள் முழுதாய் ஒரு ரூபாய் 80 காசுகள் இருந்தது. இப்போதெல்லாம் கண்ணனின் தினப்படி வருமானம் ஐந்து ரூபாய்க்கு மேல் வந்தது. காலையில் அம்மா போடும் இட்லி கடையின் விற்பனை பதினோரு மணிக்குமேல் பலகாரக்கூடையோடு சைக்கிளை தள்ளியபடியே வந்துவிடுவான். சைக்கிளை ஓட்டும் அளவிற்கு உயரம் இருந்தாலும் மூங்கில் கூடைக்குள் தட்டியை வைத்து மூடி இரண்டு கூடைகளை ஒரு சணல் கயிறு துணை கொண்டு ஓட்டி வருவதைவிடவும் உருட்டி வருவது பலகாரத்திற்கு செய்யும் உபகாரமாய் பட்டது அவனுக்கு எனவே வெறும் கூடைகளை வைத்து மட்டும் வண்டியை ஓட்டுவான்.
“இரண்டு முறை சாலடிச்சா தாணிக்கு தீனி சரியாப்போகுமேடா?” என்று ஒருமுறை முதலியார் கேட்டபோது கூட
“இல்லைங்கய்யா அம்மா கொடுக்கிற காசுக்கு நியாயமா இருக்கணும்டா அதனால வெள்ளென கொண்டு போனா பலகாரம் ஆறிடும் நீ திரும்பி வா அதுக்குள்ளே சூடா இட்டுத் தர்றேன்னு சொன்னாங்க. முதலியார் ஒரு தட்டி முறுக்கும், பனியாரத்தையும் ருசித்தார். அருமைடா பனங்கருப்பட்டியிலே பனியாரம் செய்திருக்காங்க உங்க அம்மா, எங்க அப்பத்தா சுட்டுத்தரும் இதபோல தட்டு முழுக்க நானே உன் வயசிலே இருக்கும் போது காலி பண்ணிடுவேன்?” என்று நான்கு பனியாரத்தை எடுத்து தின்றுவிட்டு சில்லரைக் காசுகளைத் திணித்த போது பதறித்தான் போனான் கண்ணன்.
“அய்யா தவிச்ச வாய்க்கு தண்ணியைப் போல பொழைக்க இடங்கொடுத்து இருக்கீங்க அந்தக்கடனையே எப்போ தீர்க்கப்போறேன்னு தெரியலைன்னு அம்மா சொல்லும் இப்போ கடவுள் மாதிரி நீங்க சாப்பிட்டதுக்கு காசு வாங்கினா அம்மா கொன்னேபோடும்.” ஒவ்வொரு வார்த்தைக்கும் நேர்மைக்கும் கண்ணன் முதலியாரின் மனதில் உயர்ந்தே நின்றான்.
“கண்ணா என்னதான் உறவுமுறை, நன்றின்னு இருந்தாலும் வியாபாரம் தனிதான்டா, அதனால கேனைத்தனமா யோசிக்காம வாங்கிக்கோ தொழில்ல நேர்மை முக்கியம்டா.”
பக்கத்தில் நின்றிருந்த டிக்கெட் கிழிப்பவர், “அண்ணாச்சியோட கை ராசி கண்ணா வாங்கிக்கோ ?” என்று வெற்றிலைப் பற்கள் தெரிய சிரிக்க தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான். வாத்தியாரின் வாழ்த்து பலித்ததோ என்னவோ முதலியாரின் மனதில் ஒரு இடம் கண்ணனுக்கு என்று ஒதுக்கப்பட்டு விட்டது.
புழுதியைக் கிளப்பியபடியே வேகமாய் இறங்கியது முதலியாரின் பிளஷர், அதைவிட வேகமாய் இறங்கினார் முதலியார் “டேய் அவனை விடுங்கடா ? நான்கு தடிமாட்டுப் பயல்கள் ஒரு பச்சப் பிள்ளையைப் போட்டு அடிக்கிறீங்களா ?” ஆவேசம் வந்தவராய் அவர்களை நகர்த்திவிட்டு, கசங்கிய துணியைப் போலிருந்த கண்ணனை தூக்கினார். “ஏண்டா இளவட்டம் மாதிரியிருக்கே அவனுங்களை இரண்டு தள்ளிதள்ளி போடவேண்டியதுதானே “ முதலியாரின் பேச்சில், சுற்றியிருந்தவர்கள் அதிர்வுடன்,
“அய்யா அவன் என்ன பண்ணான்னு ?”
“எல்லாம் எனக்குத் தெரியுன்டா, நேத்திக்கே வாத்தியார் என்கிட்டே எல்லா விவரத்தையும் சொல்லிட்டார். தப்பு அவனா பண்ணான் ? என் உப்பைத் தின்னுட்டு கமிஷனுக்கு கைவிரிக்கிற உங்களை அவன் கண்டுபிடிச்சு காட்டிக் கொடுத்திட்டான் அந்த கோவத்திலே இப்படியாடா அடிக்கிறது?” அதன்பிறகு அவர்கள் நால்வரும் அங்கே நிற்கவில்லை ஒரு நொடி முதலியாரின் கண்முன்னால் நின்றாலும் தாங்கள் கம்பி எண்ண வேண்டுமே என்ற பயத்தில் மூலைக் கொன்றும் முக்குக் கொன்றுமாக அவர்கள் நகர, சிறுவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டார் முதலியார். “உன்னோட நேர்மையும், தைரியமும் எனக்கு பிடிச்சிருக்கு கண்ணா.?!”
“நீ இனிமே கொட்டகையும் வரவு செலவையும் பார்த்துக்க உங்க அம்மாவுக்கு நம்ம பண்ணைவீட்டைத் தர்றேன் அங்கன வைச்சி சமைச்சி பலகாரத்தை அனுப்ப சொல்லு, ஆளு எடுத்துக்கிடுவான். அப்படியே எனக்கும் சோத்தைப் பொங்கி அனுப்பிடச் சொல்லுடா ?!” முதலியார் எப்போதும் இப்படித்தான் கொடுத்தாலும் அதிகம்தான். கெடுத்தாலும் அதிகம்தான். கண்ணன் மீண்டும் வாத்தியாரின் முன்னாலேயே போய் நின்றான்.
“நல்லதா போச்சுடா, நம்ம பள்ளிக்கூடத்துக்கு புதிசா கல்யாணமானவங்க புருஷனும் பொண்டாட்டியுமா வாத்தியாரா வர்றாங்க அவங்க தங்க இடமில்லையேன்னு நினைச்சேன் உங்க வீடு கல்லுவீடுதானே அங்கன இருக்கச் சொல்லிடறேன் மாசம் நாலு ரூவா வாடகை கொடுத்திட சொல்றேன், நாலு காசு சேர்த்துவை உனக்கும் உன் தங்கச்சிக்குமாச்சு!” என்று நம்பிக்கை கொடுக்கவும் கண்ணன் முதலியாரின் வீட்டிலேயே ஒருவனாகிப் போனான். நாட்கள் கரைந்தாலும் கண்ணனின் வளர்ச்சி நிறைந்தது.
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |
