வரம் தந்த சாமிக்கு – ஆதிபிரபா

விசேஷ வீட்டிற்கு உண்டான கலகலப்போடு மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது வளைகாப்பு விழா.

வருமானவரித் துறையில் அதிகாரியாக இருந்த வருண்.மனைவியின் வளைகாப்பு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தான்…

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் வளைகாப்பைஇவ்வளவு செலவு செய்து செய்ய வேண்டும். அதுவும் இத்தனை விமர்சையாக செய்ய வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் இந்த ஒற்றை நாளுக்காய் அவன் மனைவி தவமிருந்ததும். கோயில் கோயிலாக அழைந்ததும் அவனுக்கு மட்டுமே தெரியும்.அவர்களுடைய திருமணத்திற்கு ஆறு வருடங்களுக்கு பின்பு இந்த திருநாள் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது….

அவன் வேலை பார்க்கும் ஊரில் தான் வளைகாப்பு விழாவையும் வைத்திருந்தான்.அவன் மனைவியின் ஊருக்கோ.தன் அம்மாவின் வீட்டிற்கோ அழைத்து செல்லவில்லை. கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்…

விழா முடிந்து நட்புகள் அனைவரும் கிளம்பிய பிறகு.வீட்டு சொந்தங்கள் மட்டும் இருக்க அவர்களுடைய அறையில் உடை மாற்றி விட்டு தளர்வான உடையில் அமர்ந்திருந்தவளின் அருகே அமர்ந்து அவள் கையோடு கை கோர்த்து கொண்டவனுக்கு அவளுடைய மனநிலை என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசை தான்.ஆனால் வாய் திறந்து கேட்கவில்லை.

கைகோர்த்துக்கொண்டு அமர்ந்தவன் தோளில் மெதுவாக சாய்ந்தவள் மெதுவாக கண்ணை மூடி தன் பழைய நினைவுகளுக்குள் செல்ல தொடங்கினாள்….

திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நேரத்தில் ஒருமுறை ஊர் திருவிழாவுக்கு சென்று இருந்த இடத்தில் அவள் நாத்தனாரின் மகளை தூக்கி வைத்திருந்தாள். அன்றுதிருவிழாவில் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாததால் இரவு குழந்தை வயிற்றுப் போக்கில் அவதியுற.. முதல் முதலாக அம்மா போல் கவனித்துக் கொண்ட மாமியாரின் வாயிலிருந்து விஷம் தோய்ந்த அம்புகள் சொற்கள் அவளை பந்தாடியது…

அவள் அறையின் வாசலில் நிற்பதை கவனிக்காது. “ஏண்டி சித்ரா உனக்கு அறிவு இல்லை. உங்க அண்ணன் பொண்டாட்டி பிள்ளையதூக்குனா கைல கொடுத்துட்டஅவளே நாலு வருஷம் பிள்ளை இல்லாமல் இருக்கா..சரி நம்ம வீட்டுக்கு வந்த பிள்ளையை சொல்லிக் காட்டக்கூடாது என்று நானும் சத்தம் காட்டாமல் இருக்கேன்..இந்த லூசு பையன கேட்டா.டாக்டரை பார்த்தீங்களா ன்னு கேட்டா. எல்லாம் பார்த்தாச்சு ஒரு குறையும் இல்லை னு சொல்லுறான்.எதையும் மறைக்கானோ.என்ன கழுதையோ.யாருக்கு தெரியும். நீ பேசாம அவ கையில் பிள்ளையை கொடுக்க.. இந்தா இப்ப கஷ்டப்படுறது யாரு. இனிமேல் அவ கையில் பிள்ளை கொடுக்காதே” என்று சொல்ல வாசலின் அருகே நின்றவளுக்கு கேட்டு விட்டது.

அவளுக்கு பின்பாக நின்றவனும் கேட்டுவிட்டான். “ஏன்மா ஏன் இப்படி பேசுறீங்க. ஏன் அந்த குறை என்கிட்ட இருக்க கூடாதா.குறை இல்லன்னு சொல்றேன்.ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்றேன்.ஆனாலும் நம்ப மாட்டேங்கறீங்க இல்ல..எப்பவுமே பொண்ணுங்க பக்கம் தப்பு இருக்கணுமா..ஆம்பளைங்களுக்கு குறை இருந்தாலும்.. பொண்ணுங்க ட்ட மட்டும் தான் பிரச்சனை அப்படித்தானே” என்றான்.

“ஏன்டா அவளை சொன்னது.உனக்கு இவ்ளோ கோவம் வருது.உனக்கு இவளை தான் புடிச்சிருக்குன்னு சொன்ன. கட்டி வைச்சாச்சி. இப்ப நாலு வருஷம் ஆச்சு. குழந்தை இல்ல.இதுக்கு ஏதாவது ஒரு முடிவு பண்ண சொன்னா.. நான் சொல்றத மட்டும் காதிலேயே வாங்குவது கிடையாது.ஏதாவது பதில் சொல்லுறீயா”என்றார்.கோபமாக.

“அம்மா உங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதா..யார் யாருக்கு தலையில் என எழுதி இருக்கோ. அது தான் நடக்கும். நான் இவளை னு இல்லை. யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இத்தனை வருஷம் கழிச்சு தான் குழந்தை கிடைக்கணும் னு விதிச்சிருந்தா. விதிப்படி தான் நடக்கும்.

நீங்களே இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி பேசாதீங்க.. இத்தனை நாள் நல்ல தானே பார்த்துட்டீங்க.வெளியே மத்தவனெல்லாம் பெருமையா சொல்லும் போது.என் மருமக எனக்கு மகள் மாதிரி னு சொல்ல தெரிஞ்சு இல்ல. இதேஇது உங்கள் பிள்ளைக்கு குழந்தையில்லை னா.இந்த வார்த்தை உங்க வாயில இருந்து வருமா”. என்று இவனும் பதிலுக்கு கோபமாக கேட்டான்.வாயை மூடிக் கொண்டார்.

அவன் அறைக்கு செல்ல தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த அமிர்தா தான் கண்ணுக்கு தெரிந்தாள்…

வருணுக்கு தான் வருத்தமாக இருந்தது.ஒவ்வொரு முறையும் ஊருக்கு வந்துவிட்டு செல்லும் போதெல்லாம் யாராவது இது போல ஏதாவது வார்த்தை சொல்லி விட. இவள் அதையே நினைத்துஅழுது கொண்டிருப்பாள். எதையும் விட்டுத் தொலைக்க மாட்டாள். என்று கோபம் தான் வந்தது.

வேறு யாரிடம் கோபத்தை காட்ட முடியும் என்ற எண்ணமும் தோன்றியது.பின்பு அவளை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் முதுகை தட்டிக் கொடுத்து “எல்லாம் சரியா போயிடும் ஃபீல் பண்ணாத..இப்பவும் சொல்றேன், நமக்கு எப்ப பேபி கிடைக்கணும் இருக்கோ,அப்ப கிடைக்கும் அழாத விடு”என்று சொல்லி சமாதானப் படுத்தினான்.

அவனுக்கும் மற்றவர்கள் அவனிடம் கேட்கும் போது வருத்தமாக தான் இருக்கும்.ஆனால்குழந்தை இல்லை. இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்னும் போது கண்டிப்பாக குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தான்.

அந்த நம்பிக்கை இவளுக்கு மட்டும் வர மறுத்துக் கொண்டே இருந்தது..

நாட்கள் போகப் போக ஐந்து வருடம் முடியப் போகும் நேரத்தில் பக்கத்துவீட்டில் இருந்த பெண்மணி தான். “ஒரு முறை குருவாயூருக்கு சென்று வாருங்கள் அங்கு குன்றின் மணி நிறைய வைத்திருப்பார்கள்.அதை கை நிறைய அள்ளி கடவுளிடம் வேண்டி விட்டு அதே இதில் போட்டு விட்டு வந்து விடேன்.கண்டிப்பாக உனக்கு குழந்தை கிடைக்கும்” என்று சொல்லியிருந்தார்.

அவனிடம் “குருவாயூருக்கு போக வேண்டும்.அந்த கோயிலுக்கு போயிட்டு வந்தா கண்டிப்பா நமக்கு பேபி இருக்குமாம்”என்று சொன்னாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் “இது என்ன புது நம்பிக்கை” என்று கேட்டான்.

“இல்ல சொன்னாங்க.வாங்க நாம் போவோம்” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

அதே சமயம் அவனுக்கும் வேலை மாறுதல் வரும் போல இருக்க. அவன் குருவாயூருக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு வந்து விட்டான். அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை எல்லாம் கிடையாது.. ஆனால் மனைவியின் நம்பிக்கையை கெடுக்க மனமில்லாமல் அழைத்து வந்தான்.

அவனுடைய வேலை மாற்றம் ஆன விஷயத்தை சொல்லி. “வேற ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைச்சு இருக்கு..எங்கன்னு சொல்லு அம்மு”என்று கேட்டான்.

“நீங்களே சொல்லுங்க” என்றாள் அவளுக்கு எதிலும் ஒரு ஈடுபாடு இல்லாமல்.

அவன் சிரித்த படி”நீ எந்த ஊருக்கு போகனும் னு சொன்னியோ அந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கியாச்சு.கோயிலுக்கு போகலாம். அங்கேயே இருக்கலாம்” என்றான்.

“நிஜமாவா. நிஜமாவா”என்று அவனிடம் நம்பாமல் பலமுறை கேட்டு உறுதி செய்த பின்பே சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள்.

குருவாயூர் சென்ற பிறகு அவன் அலுவலகம் கிளம்பவும். இவள் கோயிலுக்கு கிளம்பி விடுவாள். வீட்டில் அனைத்துவேலைக்கும் ஆள் உண்டு. அதனால்அங்கு இருக்கும் கூட்டத்தில் எப்படியாவது காத்திருந்து கடவுளை வணங்கிய பின்னே வீட்டிற்கு வந்து உணவு எடுத்துக் கொள்வாள்.

தினம் தினம் குருவாயூரப்பனிடம் கண்ணீர் மல்க மடிபிச்சை கேட்டுக்கொண்டே இருந்தாள்.ஒரே ஒரு குழந்தை மட்டும் ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் நல்ல அறிவும் கொடுத்துவிடு என்று….

அவள் கண்ணீர் மல்க தினமும் கோயிலை சுற்றி வருவது. அங்குதினம்வந்து போகும் அருகில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும்..

அவள் கண்ணீரை கண்டு அந்த கோயில் தூண்கள் கூட கரைந்து இருக்கும் போல.. ஆனால் உள்ளே கல்லாக நின்ற அந்த கண்ணனுக்கு மட்டும் மனம் இரங்கவில்லை..

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தினமும் கோயிலுக்கு செல்வது அவளது வழக்கமாக இருந்தது. செல்லக் கூடாத நாட்களை தவிர மற்ற நாளெல்லாம் அவள் கோயிலுக்கு சென்று விடுவாள்.

அது அவன் விடுமுறை நாளாக இருந்தால் அவனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போவாள். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும். அவளுக்காக அவளின் மன திருப்திக்காக அவன் சென்று வருவான்.போகும் போதெல்லாம் தினமும் கை நிறைய குன்றின் மணியை அள்ளி குருவாயூர் கண்ணனிடம் வேண்டுதலை வைத்துவிட்டு. அங்கு போட்டு விட்டு வருவாள்.அவளின் கண்ணீரை கண்டவனுக்கு ஆறு மாதம் கழித்து தான் மனம் இரங்கியது போலும்..

அப்போது தான் அவளுக்கு குழந்தை தரித்ததை. அதுவும் ஒருநாள் கோயிலில் வைத்து தான் உணரத் தொடங்கினாள்.கண்ணீர் மல்க சுவாமியின் முன் நின்று இலைப் பிரசாதத்தை வாங்கும் போது தலை சுற்றுவது போலவும். கண்கள் கட்டுவது போலவும் இருந்தது. முதல் நாள் இரவு ஏதோ மாமியார் திட்டியதை நினைத்து சாப்பிடாமல் இருந்தது நினைவு வர..இப்பொழுது அதற்கும் சேர்த்து தான் தலைசுற்றுகிறது போல என்று நினைத்துக் கொண்டாள்..எனவே சற்று நேரம் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்.

அவள் பின்னே யாரோ புடவையைப் பிடித்து இழுப்பது போல தோன்ற திரும்பிப் பார்த்தாள்.

ஒரு சிறு பையன் நின்று அவளுக்கு ஏதோ கொடுப்பது போல தோன்றியது. கண்ணீர் கண்ணை மறைக்க. கண் சிமிட்டி கண்ணீரை அடக்கி கொண்டு பார்க்க.அவன் கையில் ஒரே ஒரு அப்பம் இருந்தது. அவன் கொடுக்க “நீ சாப்பிடு குட்டி பா” என்று சொன்னாள்.

அப்போது அருகில் வந்த முதியவர் தான். “சின்ன பிள்ளைங்ககொடுக்கும் போது வேண்டாம்னு சொல்ல கூடாது. வாங்கிக்கோ மா”என்று சொல்லிவிட்டார்.

பிரசாதத்தைவாங்கிக் கொண்டாள்.இவளுக்கு மட்டும் அச் சிறு பையன்இரண்டு பேராக காட்சி தந்தது போல இருந்தது.ஒருவேளை தனக்கு தலை சுற்றுவதால் அப்படி இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது அந்த முதியவர் தான் “அதை சாப்பிடுமா.. பிரசாதமாக கொடுக்கும் போது வீணாக்காமல் உடனே சாப்பிடுமா” என்று சொன்னார்.

அவள் எப்பொழுதும்எது என்றாலும் கணவனோடு பகிர்ந்து தான் சாப்பிடுவாள். ஆனால் பெரியவர் சொல்லவும் தனக்கும் தலை சுற்றுவது போல இருக்க.அது இனிப்பாக இருந்ததால் கொடுத்ததை அப்படியே சாப்பிட்டு விட்டாள்.

எப்போதும் சிறுபிள்ளைகளை தொடவே பயப்படுவாள். யாரும் வார்த்தையால் வதைத்து விடுவார்களோ. என்றுஆனால் ஏனோ இவள் அறியாமல் அச்சிறுவனின் தலைக்கோதி கன்னம் தடவியவளுக்கு மறுபடியும் கண்ணீர் தேங்கியது.

தன்னை கட்டுப்படுத்தி குழந்தையை பார்த்து சிரித்தவள். அங்கிருந்து கிளம்பினாள். அவளோடு கைப்பற்றியப் படி குழந்தையும் வர.அந்த முதியவரும் உடன் வந்தனர்.

கோயிலின் வெளி பிரகாரத்தை அடைந்து அவள் எப்பொழுதும் ஆட்டோ ஏறும் இடம் நோக்கி வர. முதியவரும் குழந்தையும் அங்கே விடைப்பெற்றனர்.

அப்போது அச்சிறுவன் அவள் கையைப் பிடித்து அழைத்து. தூக்கச் சொல்லவும். வெகு நாளுக்கு பிறகு ஒரு குழந்தையை தூக்கியவள் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.

அவள் அறியாமல் கண்ணீர் வடியஅதை துடைத்தது அப் பிஞ்சு விரல்கள். உடன் வந்த பெரியவரிடம் குழந்தை இவள் கண்ணீரை சுட்டி காட்டி அவர்கள் மொழியில் பேசினாலும் இவளுக்கு புரியும் என்பதால். இவளும் பதிலுக்கு அழமாட்டேன் என்று அவர்கள் மொழியில் சொன்னாள்.

அப்போது அக்குழந்தை சற்று அழுத்தமாகவே சொன்னது… “நீ இனி அழவேண்டாம்”என்று சொன்னதை கேட்கும் போதே உடல் எங்கும் ஒரு அதிர்வு தோன்றுவதை உணர்ந்தாள்.

பின்பு திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்று ஆட்டோவில் ஏறி விட்டு திரும்பும் போது அங்கு இருந்தவர்கள் கூட்டத்தோடு போனது போல தெரிந்தது..

அத்தோடு விட்டு விட்டாள். அதன் பிறகு இரண்டு நாளில் அவளுக்கு பிரக்னன்சி டெஸ்ட் அவளேப் போட்டு பார்த்தாள். ஒரு நாள் தாமதம் ஆனாலும் எப்போதும் போட்டு பார்த்து விடுவாள். இந்த முறை ஐந்து நாட்கள் தாமதமாக டெஸ்ட் போட்டு பார்த்தவளுக்கு பாசிட்டிவ் என்று இரட்டை கோடுகளைக் கண்டவளுக்கு. அத்தனை சந்தோஷம்.

அவன் அலுவலகத்திற்கு போன் செய்து “உடனே லீவு போட்டுட்டு வாங்க”என்று சொன்னாள்.

‘எதுக்கு என்று தெரியவில்லையே.அவளும் லேசாக அழுதபடி பேசவும்.பயந்துவிட்டான். ஏனெனில் அவ்வப்போது அவன் அம்மாவோ. அல்லதுஅவள் அம்மாவோஇந்த மாசம் ஏதாவதுவிசேஷம் இருக்கா.. என்று கேட்டு கேட்டு அவளை நச்சரித்து கொண்டிருப்பதால். யாராவது போன் பண்ணிரொம்ப நோகடிச்சிட்டாங்க போலியே’. என்று பயந்து போய் தான் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஓடி வந்தான்.

வந்தவனுக்கு இவள் சந்தோஷ செய்தியை சொல்ல.. அவன் வீட்டிற்கு செல்வோம் என்று கேட்டான்.

“முதல்ல ஹாஸ்பிடல் போகணும்.ஹாஸ்பிடல் போயிட்டு எனக்கு கோயிலுக்கு போகணும்”என்று மட்டும் தான் சொன்னாள்.

அது போல மருத்துவமனை சென்று பார்க்கும் போது குழந்தை உருவாகி இருப்பது கன்பார்ம் செய்தனர்.அதிகமான வேலை செய்யக் கூடாது என்று சொன்னாலும். இவள் கோயிலுக்கு செல்வதை யாராலும் நிறுத்த முடியவில்லை..

எத்தனை மாதம் வரை கோயிலுக்கு செல்லலாம் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு அத்தனை மாதம் வரை கோயிலுக்கு சென்று கொண்டு தான் இருந்தாள். அதன்பிறகு ஸ்கேனில்இரட்டை குழந்தைகள் என்று தெரிய. இன்னும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.கடவுள்தன்னை காக்க வைத்ததற்கு வரமாக இரட்டை குழந்தைகளை கொடுத்திருக்கிறான் என்று.

கண்ணீர் மல்க ஒவ்வொருமுறையும் இப்பொழுதெல்லாம் அவனுக்கு நன்றி சொல்ல தவறுவதில்லை.. அதுபோல சிறுவன் பிரசாதம் கொடுத்த இடத்தையும். அவளைத் தூக்கச் சொல்லி அழவேண்டாம் என்று சொன்ன இடத்தையும்..வரும் போது நின்று பார்த்து விட்டு வருவதும் தவறுவதில்லை..

அவளைப் பொருத்தவரை அச்சிறுவன் அந்த கண்ணன் தான். என்ற நம்பிக்கை அவளுள்பலமாக எழுந்தது.

இதோ இன்று வளைகாப்பு முடிந்து அவன் தோளில் சாய்ந்து இதை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு மனம் நிம்மதியோடு உணர்ந்தது.

கடவுளிடம் கேட்ட வரம் எனக்கு கிடைத்துவிட்டது.6 வருடம் தவமிருந்து கிடைத்தவரம் இது..

வரம்பெற்றவர்களுக்கு மட்டும் தான் அந்த வரத்தின் அருமை தெரியும். வரமாய் வந்த குழந்தைகளை தெய்வத்திற்கு சமமாக பார்ப்பது தான் அந்த தாய்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!