வைகாசி விசாக நாளில், மனமொன்றி வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை நினைத்து, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு வழங்குவோம். கேட்கும் வரம் அனைத்தும் தந்தருள்வான் வடிவேலன்.
பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதத்து பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள். பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், வைகாசி விசாகம் முதலான நாட்களில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகன் சந்நிதியில், தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலையெல்லாம் வைத்து முறையிடுவார்கள்.
அதேபோல், வீட்டில் கந்த வழிபாடுசெய்வது ரொம்பவே விசேஷம். வைகாசி விசாக நாளில், வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிடவேண்டும். விளக்குகளுக்கு சந்தனம் குங்குமமிட்டு, விளக்கேற்றவேண்டும்.
முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரிக்கலாம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.
வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை, முருகப்பெருமானுக்கும் உகந்தது. கந்தக் கடவுளை ஞானகுரு என்கிறது புராணம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்று சொல்லி மகிழ்கிறோம். எனவே ஞானகுரு முருகப் பெருமானை, வேலவனுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திர நாளில், வணங்கி வளம் பெறுவோம்.
கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளுவார்.
வைகாசி விசாகம் விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்
வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும்.*
இந்த ஆண்டு வைகாசி விசாகம் வைகாசி 22ஆம் தேதி வியாழக்கிழமை ஜூன் 4ஆம் தேதியன்று வருகிறது.
கொரோனா நோய் தொற்று பரவி வருவதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து இல்லத்தில் இருந்து வழிபடுவதன் மூலம் பகை விலகும். உறவுகளிடையே பாசம் பெருகும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் தானம் செய்வதன் மூலம் குலம் தலைக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகம் புராண கதை
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.
அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் மீன்களாக மாறக்கடவது என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.
மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.
ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது.
சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
இன்று *வைகாசி விசாகம்
ஸுப்ரமண்யம் என்றால் நல்ல ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால் வேதத்தை அனுசரிப்பவன். ப்ரஹ்மம் என்ற பதத்திற்கு வேதம் என்ற அர்த்தமும் உண்டு. வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீட்சை கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு ப்ரஹ்மோபதேசம். எனவே அவன் ப்ரஹ்மச்சாரி ஆகிறான். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிய பரமாத்மா ஸ்வரூபமாக இருப்பவர் ஸுப்ரமண்யர்.
வேதத்திற்கு முக்கியம் அக்னி உபாசனை. ஸுப்ரமண்யர் அக்னி ஸ்வரூபம். ஏனென்றால் பரமேஸ்வரரின் நேத்ராக்னியிலிருந்து தோன்றியவர்தான் ஸுப்ரமண்யர். வேதஸ்வரூபம். வேதம் படிப்பதும் சொல்லிக் கொடுப்பதும் தொழிலாக உள்ள ஷட்கர்ம நிரதராகிய ப்ராம்மணரின் தெய்வம் ஸுப்ரமண்யர்.
எனவே ஆசார்யாளும் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “மஹீதேவ தேவம்” என்று கூறியிருக்கிறார். மஹீதேவர் என்றால் ப்ராம்மணர். அவர்கள் தெய்வம் (மஹீதேவ தேவம்) ஸுப்ரமண்யர்.
நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் ஒவ்வொரு முகமாக வர்ணிக்கும் பொழுது,
“ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழா அது அந்தணர் வேள்வியோர்க்கும்மே” என்று கூறுகிறார். எனவே ஸுப்ரமண்யர் வேதத்திற்கும் வைதீகத்திற்கும் அதிதேவதை.
ஸுப்ரமண்யர் மநஸிஜ கோடி கோடி லாவண்யர். மநஸிஜன் என்றால் மன்மதன். ஆகவே ஸுப்ரமண்யர் கோடி கோடி மன்மதர்களின் அழகு ஒருங்கே சேர்ந்த அழகைப் பெற்றவர்.
எந்த நேத்ராக்னியால் மன்மதனை பஸ்மம் செய்தாரோ அந்த நேத்ராக்னியிலிருந்து பிறந்தவர்தான் ஸுப்ரமண்யர்.
பிரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் பகவத்பாதாள் மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதத்தில் முப்பத்திரண்டாவது ஸூத்ரத்தில் பாஷ்யம் எழுதும்பொழுது பிரம்மாவின் மானஸ புத்ரராகிய ஸனத்குமாரர் கூட தானே ருத்ரனுக்கு வரம் கொடுத்துவிட்டு அதற்காக ஸ்கந்தனாகப் பிறப்பெடுத்தார் என்று கூறியுள்ளார். திரிபுர ரஹஸ்யத்தில் மஹாத்ம்ய காண்டத்தில் முப்பத்தேழாம் அத்யாயத்தில் இது கூறப்பட்டிருக்கிறது.
ஸனத்குமாரர் சுகாசாரியார் மாதிரி பிரம்மஞானி. அவர் தன் கனவில் தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் தான் தேவ சேனாபதியாக இருப்பதாகக் கனவு காண்கிறார். இந்தக் கனவைப் பற்றித் தன் தகப்பனார் பிரம்மாவிடம் கூற அவர் “ஒருநாள் நீ உண்மையாகவே தேவசேனாபதியாகி அசுரர்களை ஸம்ஹாரம் செய்யப் போகிறாய்.” என்று கூறுகிறார். மேலும் பிரம்மா கூறும்பொழுது, “இந்த ஜன்மாவில் நீ எல்லாம் ஒரே பிரம்மம் என்று நினைப்பதால் இன்னொரு ஜன்மாவில் இதைச் செய்வாய்.” என்று கூறுகிறார்.
ஒருவருக்கு வாக்கு, மனம், சரீரம் ஆகிய மூன்றும் ஒன்றாகிவிட்டால் அவருக்கு ஒரு சக்தி வந்து விடும். அவர் கனவில் நினைப்பவை கூட உண்மையாக நடந்துவிடும். ஸனத்குமாரர் பரப் பிரம்மத்தை தன்னில் தானாக அனுபவித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். உலகமே ஒரு கனவு என்ற நிலையில் தான் கண்ட கனவைப்பற்றிச் சிந்திக்கவேயில்லை.
கனவில் கண்ட நிகழ்ச்சி பொய் ஆகிவிடக்கூடாதே என்பதால் பரமேஸ்வரன் தம்பதி ஸமேதராக அவர் முன் காட்சியளித்தார். எல்லாமே பிரம்மம் என்ற நிலையில் இருந்த ஸனத் குமாரருக்கு அவர்களை உபசரித்து பூஜை செய்ய வேண்டும் என்ற நினைப்பே ஏற்படவில்லை.
நீண்ட நேரம் நின்று பார்த்த பார்வதி பரமேச்வரர்கள் “ஞானி என்ற கர்வத்தினாலே உலகத்தின் தாய் தந்தையாகிய எங்களை அவமதித்துவிட்டாய். நாங்கள் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?” என்று ஸனத்குமாரரிடம் கேட்டார்கள். ஆனால் ஸனத்குமாரரோ “ருத்ரனாகிய நீங்கள் என்ன சாபம் கொடுத்தாலும் ஆத்மாவை பாதிக்காது” என பதில் கூறினார்.
இந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்த பார்வதி பரமேச்வரர் அவருடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டி “உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் தருகிறேன்.” என்று கூறினார்.
ஆனால் ஸனத்குமாரர் “எதை அடைந்தபின் வேறு எதையும் அடைய வேண்டியது இல்லையோ, வேறு எதையும் அடைய வேண்டிய ஆசையும் கூட இல்லாமல் நிறைந்த நிறைவாக இருக்கும் எனக்கு உம்முடைய வரத்தினால் எந்தப் பயனும் இல்லை.” என்று பதில் கூறினார். “அதுமட்டுமல்ல, உமக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் நான் தருகிறேன்.” என்றும் கூறினார்.
அதையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த பரமேச்வரன் “மகாஞானியான நீ இந்த ஜன்மாவில் பிரம்மாவின் பிள்ளை. அவருக்குக் கிடைத்த இந்த பாக்யம் எனக்குக் கிடைக்க அடுத்த ஜன்மாவில் நீ எனக்கு மகனாகப் பிறக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ஸனத்குமாரர் பதில் கூறும்பொழுது “உமக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று வாக்கு கொடுத்தார். பார்வதி பரமேச்வரராக அவர்கள் காட்சியளித்தும் “உங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று கூறாமல் பரமேச்வரனை மட்டும் நோக்கி “உமக்கு பிள்ளையாகப் பிறக்கிறேன்.” என்று கூறினார். இதைக் கேட்டதும் பார்வதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிற போது அவர் நேராக தனக்கும் பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.
சாஸ்திரங்களில் கணவன் எதைப் பிரார்த்தித்துக் கொண்டாலும் அது மனைவிக்கும் சேர்த்துத்தான் என்று கூறியிருக்கின்றன. எனவே மனைவி தனியாக வரம் கேட்கவேண்டும் என்றில்லை. கணவர் கேட்டதால் அது அவளுக்கும் சேர்த்துத்தான் என்பதால் மனைவிக்கும் புத்திரன்தான்.
ஆனால் ஸனத்குமாரராகிய பிரம்மஞானிக்கு கர்ப்பவாசத்தில் பிறக்க இஷ்டமில்லை என்பதை பார்வதி தேவியிடம் வேண்டினார்.
யார் தலையில் கை வைத்தாலும் அவன் பஸ்மம் ஆகிவிடுவான் என்ற வரத்தை பஸ்மாசுரன் பரமேச்வரரிடமிருந்து பெற்றிருந்தான். அதன்படி அதைப் பரிசோதிக்க அவன் பரமேச்வரன் தலையில் கைவைக்க முயன்றபோது அவர் மறைந்து விட்டார். அம்பாளும் சாதாரணப் பெண்போல் தன்னை மாற்றிக் கொண்டாள். பரமேஸ்வரன் மறைந்ததைக் கண்ட அவன் அப்படியே உருகி ஒரு பொய்கையாக (குளமாக) மாறிவிட்டான். பஸ்மாசுரன் மறைந்ததும் பரமேச்வரன் மீண்டும் தோன்ற பார்வதியும் தன் திவ்யதேகத்தை மீண்டும் எடுத்துக் கொண்டதுடன், தன்னுடைய பதிவிரதா தர்மத்துக்கு அடையாளமாக அந்தப் பொய்கை அப்படியே இருக்குமாறு அருள்புரிந்தாள்.
ஸனத்குமாரர் அடுத்த ஜன்மாவில் ஸ்ரீபரமேச்வரரின் தேஜஸாகப் பிறப்பதென்றும் பிறகு அம்பாள் அதை தன் சரீரமாகிய பொய்கையில் அதைத் தாங்குவது என்றும் முடிவு செய்தாள்.
ஸ்ரீபரமேச்வரன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை வெளியிட்டவுடன் கங்கை பிரம்மாவின் உத்தரவின் பேரில் அந்தப் பொறிகளை அந்தப் பொய்கையில் சேர்த்த பிறகு சரவணப் பொய்கையான அதில் ஸுப்ரமண்யர் அவதரித்தார்.
பிறகு அவர் தேவர்களுக்கெல்லாம் சேனாபதியாகி அசுரர்களை வெல்கிறார். ஸனத்குமாரரின் கனவின்படி அவரே இப்படி சரவணப் பொய்கையில் பிறந்து கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு முன் ஜன்மத்தில் அவர் கண்ட கனவின்படி தேவ சேனாபதியாகி அசுரர்களை வெற்றி கொண்டார்.
ஸ்வாமி என்றால் எல்லாக் கடவுள் களையும் குறிக்கும் பொதுச்சொல் என்றாலும் அது குமாரஸ்வாமியாகிய ஸுப்ரமண்யரையே குறிக்கும். அமரகோசம் என்ற சம்ஸ்க்ருத அகராதியில் ஸ்வாமி என்பதற்கு, தேவஸேனாபதி:சூர:ஸ்வமீ:கஜமுகானுஜ என்றே கூறியிருக்கிறது. தேவர்களின் படைத்தலைவன்:சூரன்:ஸ்வாமி:யானை முகன் தம்பி என்று அர்த்தம்.
வால்மீகி இராமாயணத்திலும் பாலகாண்டம் 37ஆவது சர்கத்தில் விசுவாமித்திரர் இராம லக்ஷ்மணர்களுக்கு மேலே குறிப்பிட்ட ஸ்கந்த அவதாரக் கதையை விரிவாகக் கூறுகிறார்.
முடிவில் பலஸ்ருதியாக “குமார சம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தைக் கொடுக்கும். புண்யத்தைக் கொடுக்கும். காகுத்ஸ! இந்த உலகில் ஒருவன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்து விட்டால் போதும். தீர்க்காயுள், புத்திர பௌத்ர பாக்யம், எல்லாம் கிடைக்கும். முடிவில் அவன் ஸ்கந்த லோகத்திற்கு சென்று அங்கு நித்ய வாசம் செய்வான்” என்று கூறுகிறார்.
“ய இமம் ஸ்ருணுயாத் ராம
கார்த்திகேயஸ்ய ஸம்பவம்|
ஸர்வ பாப விநிர்முக்தோ
யாதி ப்ரஹ்ம ஸநாதனம்||
பக்தஸ்ச ய: கார்த்திகேயே
காகுஸ்த புவி மானவ:|
ஆயுஷ்மான் புத்ரபௌத்ரச்ச
ஸ்கந்தலோக்யமவாப்னுயாத்||
(பாலகாண்டம் 37ஆவது சர்க்கம்)
குகன், ஸ்கந்தன், குமரன், ஆறுமுகன், மயில்வாஹனன், கார்த்திகேயன், சரவணபவன், ஸ்வாமிநாதன், சிவகுரு,தேவசேனாபதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
1.ஈஸான முகம், 2.தத்புருஷமுகம், 3.அகோரமுகம், 4.வாமதேவமுகம், 5.ஸத்யோஜாதமுகம், 6.அதோமுகம்
என்ற ஆறுமுகங்களைக் கொண்ட ஸ்ரீஸுப்ரமண்ய ஸ்வாமியை வைகாசி விசாகத் திருநாளில் போற்றி வணங்குவோம்.
