மார்ச் முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிட திமுக திட்டம்

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து மார்ச் முதல் வாரத்தில் பட்டியலை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனு விநியோகம் என தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுக முடுக்கிவிட்டுள்ளது. மறுபுறம் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டையும் 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளான நேற்று சென்னை அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மமக 5 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக தரப்பில் 2 ஒதுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மமக தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். இந்த முறை 5 தொகுதிகள் வேண்டுமென கேட்டுள்ளோம். கூடுதலாக தொகுதிகளைக் கேட்டாலும் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட உள்ளோம். திமுக தரப்பில் முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்றே மதிமுக-வுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது திமுக. இதில் மதிமுக சார்பில் அவைத் தலைவர் அர்ஜூனராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதிமுக 6 தொகுதிகள் கேட்டதாகவும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் 4 இடங்கள் வரைஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னத்தில் போட்டி, மாநிலங்களவை இடம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எத்தனை இடங்கள் என்பதை பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சொல்கிறோம். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளைக் குறைத்து கொள்ள வேண்டும் என எதுவும் திமுக தரப்பில் சொல்லவில்லை’’ என்றார்.

நேற்றே மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், அது 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, வரும் 26-ல் மார்க்சிஸ்ட், 27-ல் இந்திய கம்யூனிஸ்ட், 28-ல் விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அனைத்துக் கட்சிகளுடனும் விரைவில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, மார்ச் முதல்வாரத்தில் தொகுதிகள் பட்டியலை வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!