சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தென் மாவட்ட விரைவு ரயில்களில் பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்கின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் இறுதி தேர்வுகள் அடுத்த மாதத்தில் தொடங்கி, ஏப்ரல் 2-வது வாரத்தில் முடியும். அதுபோல, கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிந்து பிறகு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.

சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கும், சிலர் சுற்றுலா இடங்களுக்கும் செல்வார்கள். இந்நிலையில், கோடை விடுமுறையில் ரயிலில் வெளியூர் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து,தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முன்பதிவு செய்கின்றனர். விரைவு ரயில்களில் பயணிக்க, 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் மூலமாக முன்பதிவு செய்கின்றனர்.

குறிப்பாக, பயணிகள் தேவை அதிகமாக உள்ள தென்மாவட்ட விரைவு ரயில்களில் பயணிகள் ஆர்வமாக முன்பதிவு செய்கின்றனர். சென்னை – திருச்செந்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கொல்லம் உட்பட பெரும்பாலான விரைவு ரயில்களில் வரும் ஏப்.24-ம் தேதி பயணத்துக்கு, முன்பதிவு முடிந்துவிட்டது. வந்தே பாரத் உட்பட சில ரயில்களில் மட்டுமே கணிசமாக டிக்கெட்டுகள் உள்ளன.
ஒவ்வொரு நாளும் முன்பதிவு தொடங்கும் போது, பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதிகமாக காத்திருப்பு பட்டியல் உள்ள ரயில்கள், வழித்தடத்தை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கான, அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
