சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

முதல் நாளில் 12-ம் வகுப்புக்கு உயிர்தொழில்நுட்பம், தொழில்முனைவோர், சுருக்கெழுத்து தேர்வுகளும், 10-ம் வகுப்புக்கு கணிதம் தேர்வும் நடந்தது. இதை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
இந்தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை 43 லட்சத்து 67,870 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வை எழுதுவதாகக் கூறப்படுகிறது.
இதற்காக நாடு முழுவதும் 8,074 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2 முறை நடத்தப்பட உள்ளது. அதன்படி முதல் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 2-வது தேர்வுமே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
முதல் தேர்வு மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ள விரும்பினாலோ அந்த தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று கருதினாலோ இந்த தேர்வை எழுதி மதிப் பெண்ணை அதிகரிக்க முடியும். இவ்விரு தேர்வுகளில் அதிகமான மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
