பன்னாட்டு உணவு விரய விழிப்புணர்வு நாள் . இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம்: உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான பங்குதாரர் முயற்சிகளை வலுப்படுத்துதல். உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் நிலையான உணவு உற்பத்தி வகிக்கும் அடிப்படை பங்கை அங்கீகரித்தல். உணவு விரயத்தை தடுப்பதன் மூலம் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுதல்.
உலக இதய தினம் மனித உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு இதயம். அத்தகைய இதயம் நோய்வாய்ப்பட்டால், எளிதில் மீண்டு வர இயலாது. எனவே இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளால், பல்வேறு இதய நோய்கள் ஏற்படுகின்றன. உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அத்தகைய இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள worldheartday.org என்ற இணையதளத்தில் 4 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1 – இதயம் அறிவோம்: நமது இதயத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், வரவிருக்கும் நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்க முடியும். சரியான கால அளவில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். 2 – போதிய உணவு: ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் இதயத்தின் நலத்திற்கு ஏற்றது. 3 – செயல்பாட்டு இதயம்: உடல் உழைப்பு மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலைப் பேணலாம். 4 – இதயம் காப்போம்: ஃபாஸ்ட் புட், ஒழுங்கற்ற உணவு நேரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்து தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) காலமான நாளின்று பிரான்ஸில் (1858) பிறந்தவர். இவரது அப்பா புத்தக பைண்டிங், தோல் பொருள் உற்பத்தி தொழில்கள் செய்தவர். பெற்றோர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்ச் – பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் குடியேறினர். l படிப்பைத் தொடர்வதற்காக சிறுவன் டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இயந்திரங்களுடன் அதிக நேரம் செலவிடுவதில் அவனுக்கு கொள்ளை ஆசை. படிப்பிலும் கெட்டிக்காரன். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றவர், ஆக்ஸ்பர்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார். முனீச்சில் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்தார். நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர். இன்ஜின்கள் குறித்தும் டீசல் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை 4 மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார். நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். கார்னாட் சுழற்சி அடிப்படையிலான இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார்.பல நாடுகளிலும் டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார். டீசல் இன்ஜினில் சில வகையான தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்பட்டு டீசல் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கும் ‘டீசல்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு, தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இப்பேர்பட்ட 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 வயதில் இதே நாளில் 1913இல் மறைந்தார்.
மறுக்க முடியாத ஆளுமையின் மறைக்கப்பட்ட வரலாறு-மேயர் ந. சிவராஜ் 1892 செப்டம்பர் 29 – 1964 செப்டம்பர் 29 இவரை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? சென்னையின் முன்னாள் மேயர், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் திரு ந.சிவராஜ். 1892 செப்டம்பர் 29ஆம் நாள் சென்னையில் பிறந்த இவர், 1964 செப்டம்பர் 29இல் பிறந்த அதே நாளில் மறைந்தவர்.தமிழ்நாட்டில் பிறந்து, பிறந்த சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் உழைத்த பல்வேறு தலைவர்களை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது என்றும் சொல்லலாம். அல்லது இவரைப் போன்ற பல தலைவர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டது என்றும் கொள்ளலாம்.அப்படி நாம் மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட சிலரில், சென்னையின் மேயராக இருந்த சிவராஜ் அவர்களைக் குறித்து சில செய்திகளை நாம் தெரிந்து கொள்வோம். ஆரம்ப வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில் சென்னையில் பிறந்து இவர் தனது நான்காம் வகுப்பு வரை வீட்டிலேயேப் பயின்றார். பின் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் சேர்ந்த இவர், பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்று பின்னர் வெஸ்லி கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்து சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதற்குப்பின் 1917-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 1925 இல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பின்பு பேராசிரியராக உயர்ந்தார். அண்ணலின் தங்கையை மணம் முடித்தவர் 1918 ஜூலை 10ஆம் நாள், அவரது 26ஆவது வயதில் மீனாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். பெரும் வணிகராகவும், செல்வாக்கு மிக்க மனிதராகவும் இருந்த ரங்கூன் பி.எம்.மதுரைப்பிள்ளை என்பாரின் மகளுக்கும், சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், அன்றைய புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகவும் திகழ்ந்த வி.ஜி.வாசுதேவப் பிள்ளைக்கும் மகளாக பிறந்தவர் திருமதி மீனாம்பாள் சிவராஜ். இவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் தங்கை என்று அன்போடு அழைக்கப்பட்டவர். பாபா சாகேப்பின் நம்பிக்கை நாயகன் 1937இல் தன்னுடைய சட்டக் கல்லூரி பேராசிரியர் பதவியை விட்டு விலகி முழுநேர அரசியலில் பங்கேற்றார். தொடக்கத்தில், ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று சொல்லப்பட்ட நீதிக் கட்சியில் பெரியாருடன் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். அண்ணல் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தபோது, அவர்களின் செயல்பாட்டை சென்னை மாகாண மக்களிடையே கொண்டு சேர்த்தவர் சிவராஜ். 1942இல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை தொடங்கியபோது, சிவராஜ் அவர்களை கூட்டமைப்பின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்தார். தொடர்ந்து இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்த இவர், பாபா சாகேப் அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னால் அவரது கனவை நினைவாக்கும் வண்ணம் இந்தியக் குடியரசுக் கட்சியினை உருவாக்கி அதனுடைய அகில இந்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாத்தா இரட்டைமலையின் அன்பிற்குரியவர் நாகரிக உலகத்துக்கு ஏற்ற உடையும், அன்பும்-அமைதியும் நிறைந்த உரையாடலும், பட்டப்படிப்பும், சட்டப் படிப்பும், சமுதாயத்தின் மேல் இருந்த அக்கறையும், சிக்கலான பிரச்சினைகளை அணுகுவதில் அவருக்கிருந்த நிதானமானப் போக்கும், பல்வேறு துறைகளில் இருந்த பட்டறிவும், வயதுக்கு மீறிய பக்குவமும் நிறைந்திருந்தக் காரணத்தினால், அன்றைக்கு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் அன்புக்கு உகந்தவராக விளங்கினார். பெண்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தவர் தான் பிறந்த குறிப்பிட்ட ஒரு சமூக மக்களுக்காக மாத்திரமல்லாமல் பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் சிவராஜ் நமச்சிவாயம் . ஆம்… 1928 மார்ச் 27இல் சென்னை சட்டமன்றத்தில், பால்ய விவாகம் எனப்படும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்றால், பெண்களின் திருமண வயது 16 எனவும் ஆண்களுக்கான திருமண வயது 21 எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு தீர்மானத்தை அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது அதனை ஆதரித்துப் பேசியவர் இவர். மன்னர்களை வசப்படுத்திய பார்ப்பனர்கள் 1928இல் நீதிக்கட்சி அமைச்சரவையில் இருந்த . முத்தையா முதலியார் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி ஆணையை எதிர்த்து, அன்றைய ஆதிக்க சக்திகளின் அடையாளமாக விளங்கிய திரு சத்தியமூர்த்தி அய்யர் பேசியபோது, கல்வித் துறையிலும், வேலை வாய்ப்பிலும் பார்ப்பனர் ஆதிக்கம் நிரம்பி வழிவதை சுட்டிக்காட்டி, வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீட்டு உரிமையின் தேவையை வலியுறுத்திப் பேசியவர் இவர்.தமிழ்நாட்டின் முடியாட்சிக் காலத்தில் அன்றைய மன்னர்களை வசப்படுத்தி பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அன்றைக்கு இருந்த நீதிக்கட்சி அரசு கையகப்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்க முடிவெடுத்தது. அதற்காக, ‘இனாம் நிலம் ஒழிப்பு’ என்கிற மசோதாவை 1933இல் பொப்பிலி அரசர் கொண்டு வந்த போது அதன் அவசியத்தை வலியுறுத்தி பேசி அந்த சட்டம் நிறைவேற துணையாக இருந்தவர் இவர். படையாட்சிகளுக்கும் பட்டியலினத்தவருக்கும் துணை நின்றவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் வாழ்ந்துவந்த ‘படையாட்சிகள்’ என்கிற பிரிவினர் குற்றப்பரம்பரை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களை அந்த பட்டியலில் இருந்து நீக்கி சமூக அந்தஸ்து உடையவர்களாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் ஒரு தீர்மானத்தை 1935 இல் சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்தவர் இவர்.சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியான பச்சையப்பன் கல்லூரியில், 1928ஆம் ஆண்டு வரை பட்டியலின வகுப்பில் பிறந்த எவரையும் மாணவராக சேர்த்துக் கொள்ளாத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையை மாற்றிட பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் மீது வழக்கு தொடுத்து அந்த வழக்கில் நேரடியாக வாதாடி வென்று ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் அக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கி தந்தவர் இவர். சிவராஜ் நமச்சிவாயம் வகித்தப் பதவிகள் 1926 முதல் 1936ஆம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவையின் உறுப்பினர். 1945 நவம்பர் முதல்1946 நவம்பர் வரையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சென்னை மாநகர மேயர்.
உலகின் முதலாவது மின்சார டிராம் வண்டி சேவை 1885-ஆம் ஆண்டு இதேநாளில் ஆரம்பிக்கப்பட்டது. ரயில் வண்டிகளின் முன்னோடியாக கருதப்படும் டிராம் வண்டிகள், ஆங்கிலேய காலத்தில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட பாதையில், டிராம் பெட்டிகளை குதிரைகள் இழுத்துச் செல்லும். பின்னர் குதிரைகளுக்கு பதில், நீராவி இயந்திரங்கள் கொண்ட இழுவைகள் பயன்படுத்தப்பட்டன. 1885-ஆம் ஆண்டு செம்படம்பர் 29-ந்தேதி, உலகின் முதலாவது மின்சார டிராம் வண்டி சேவை இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை இந்தியாவில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பின்னர் வந்து காணாமல் போய் விட்டது
வங்காளத்தை சேர்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீர பெண்மணி மாதங்கினி ஹஸ்ரா நினைவு நாள் செப்டம்பர் 29 , 1942. வங்காளத்தின் மித்னாபூர் மாவட்டம் தாம்லுக் காவல் நிலையம் முன்பு ஒரு பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிப் பெண்தான் மாதங்கினி ஹஸ்ரா. தனது 73வது வயதில் (1942) ஆறாயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு, தாம்லுக் காவல் நிலையத்தைத் தாக்கி, கைப்பற்றும் திட்டத்துடன் சென்றார். ‘144 தடை உத்தரவு அமலில் உள்ளது; கலைந்து செல்லுங்கள்‘ என்ற பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரியின் தடையை மீறி, ஓரடி எடுத்து வைத்ததும், அந்த வெள்ளை அதிகாரியின் துப்பாக்கி குண்டு, மதாங்கினியைப் பலி வாங்கியது. அதற்கு முன்பாக வெள்ளையனே வெளியேறு போன்ற பல விடுதலைப் போராட்டங்களில் மாதங்கினி ஹஸ்ரா பங்கேற்றுள்ளார். மாதங்கினி ஹஸ்ராவின் வீரத்தை போற்றும் நினைவு சின்னமாக இந்தியக் கொடியேந்தி கம்பீரமாக அவர் நடைபோடுவது போன்ற சிலை கொல்கத்தா நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
மலையாள இலக்கியத்தின் பாட்டிக் கவிஞர் பாலாமணியம்மா நினைவு நாளின்று கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புன்னயூர் என்னும் ஊரில் உள்ள நால்பாத் என்னும் அவர்களது பூர்வீக இல்லத்தில் 1909-ம் ஆண்டு ஜூலை 19 தேதியன்று பிறந்தார் பாலாமணி. அவர் பிறந்த காலகட்டத்தில் பெண்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் நிலை இல்லாததால் வீட்டிலிருந்துக்கொண்டே மலையாளம் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். சிறு வயது முதலே இலக்கிய சூழலில் வளர்ந்து வந்தார். இவரது அண்ணன் நாலாபாத் என். நாராயண மேனன் எழுதிய படைப்புகளின் மூலம் இலக்கியங்களைப் பயின்றார். அவைதான் இவருக்கு எழுதும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளித்தன. அவரது அண்ணன் நாராயணன் மேனனின் படைப்புகளே பாலாமணி அம்மாவைப் படைப்பாளியாக மாற்றியது எனலாம். . 19-ம் வயதில் பாலாமணிக்கு மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியின் நிறுவனர் வி.எம்.நாயருடன் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கு பின் பல்வேறு காரணங்களுக்காக அவரும், அவர் கணவரும் கல்கத்தா சென்றார். பின்னர் சில வருடங்களில் மீண்டும் கேரளா திரும்பி தங்கள் எழுத்துப்பணியை மேற்கொண்டனர். தன் கணவருடன் இணைந்து பல படைப்புகளை எழுதினார் பாலாமணி. பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். 1984-ல் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிரபல மலையாள மற்றும் ஆங்கில எழுத்தாளர் கமலா தாஸ் இவரின் மகள். இவர் தனது 21-ம் வயதில் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பான கூப்புக்காய் 1930-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதைய கொச்சி மன்னர் பரிஷத் தம்புரானிடமிருந்து ‘சாகித்ய நிபுண புரஷ்கார்’ என்ற சிறப்புமிக்க விருதைப் பெற்றதன் மூலம் மலையாள இலக்கிய உலகில் பிரபலமானார். இந்திய புராணங்களின் தீவிர வாசகரான பாலாமணி, தனது கதைகள் மற்றும் கவிதைகளில் பெண் கதாபாத்திரங்களின் மனப்பான்மையைக் காட்டியிருப்பார். இவரது படைப்புகள் புராணங்களின் கதைகள் மற்றும் குறிப்புகளை ஏற்றுக்கொண்டன. ஆனால் சாதாரண மனிதர்களாக இருந்த பெண்களை சக்திவாய்ந்த நபர்களாக சித்திரித்தன. ஆரம்ப காலத்தில் இவர் எழுதி 1934-ல் வெளியான ‘அம்மா கவிதைகள்’ தாய்மையை ஒரு புதிய வெளிச்சத்தில் வைத்து பெருமைப்படுத்தியது. எனவே இவர் ‘தாய்மையின் கவிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார். 1959 முதல் 1986 வரை இவர் எழுதிய கவிதை தொகுதிகள் தொகுக்கப்பட்டு ‘நைவேத்தியம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. குடும்பிணி, அம்மா,முத்தஸ்ஸி, ஸ்திரீ ஹ்ருதயம், லோகாந்தரங்களில், சொப்பனம், சந்தியா ,மழுவிண்டே கதா, போன்ற இவரின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. . சமஸ்கிருதத்தில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவரது கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. கவிதைகளில் நுட்பமான அறிவு,இவரின் எழுத்துநடை ஆகியவை தனித்துவமானவையாகும். . எழுத்தாளர் பாலாமணி அவர்கள் 500 க்கும் மேற்பட்ட கவிதைகள், சிறார் கதைப் புத்தகங்கள் மற்றும் உரைநடை, மொழிபெயர்ப்பு தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். முத்தாச்சி என்ற படைப்புக்காக கேந்தீரிய சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றவர். இவர் எழுதிய ‘அம்மா’என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் அம்மா என்ற பட்டமும், பேரக் குழந்தைகள் பற்றி எழுதிய முத்தாச்சி என்ற கவிதைத் தொகுப்பு இவருக்கு மலையாள இலக்கியத்தின் பாட்டி என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. இவர் தனது கவிதைகளுக்காக எண்ணற்ற விருதுகளைப் பெற்றவராவார். ஆசான் விருது, சரஸ்வதி சம்மான், வள்ளுந்தோள் விருது, சாகித்ய அகாடமி விருது, லலிதாம்பிகா அம்பர் ஞானம் விருது, எழுத்தச்சன் விருது போன்ற இலக்கியத்திற்காக வழங்கப்படும் அனைத்து விருதுகள் மற்றும் பரிசுகளையும் பெற்றவர் பாலாமணி அம்மா.. நாட்டின் சிறப்பு வாய்ந்த, சிறந்த பணிகளுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம பூஷண் விருதையும் தனது படைப்புகளுக்காக பாலாமணி அம்மா அவர்கள் பெற்றுள்ளார்.
- மலையாள இலக்கியத்தின் பாட்டி, தாய்மையின் கவிஞர் என்றெல்லாம் அன்புடன் புகழப்பட்ட பாலாமணி அம்மா அவர்கள் தனது 95 வயது வயதில் 2004 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 29 நாள் இவ்வுலகிலிருந்து மறைந்தார். இவரது மறைவையொட்டி முழு அரசு மரியாதையுடன் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இவரையும், இவரது படைப்புகளையும் கெளரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பாலாமணி அம்மாவின் பெயரில் கேரள அரசின் சார்பில் இலக்கியத்தில் சிறந்து விளங்குவோர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
பால்பாயிண்ட் பேனாவை கண்டுபிடித்த லடிஸ்லாவோ பிரோ பிறந்த நாள் இன்று – செப்டம்பர் 29 , 1899. இவர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் பிறந்தவர். அச்சகங்களில் பயன்படுத்தப்பட்ட மையில் சிறிது முன்னேறிய மாற்றம் செய்து இவர் பால் பாயிண்ட் பேனாவின் மையை தயாரித்தார். மிகவும் மெல்லிய துளை வழியே சீராக வெளியேறும் அந்த மை வெளியேறியவுடன் உலர்ந்து விடும் தன்மையை கொண்டது. எழுதுவதற்கு மட்டுமன்றி ஓவியர்களும் பயன்படுத்துவது பால்பாயிண்ட் பேனாவாகும்.
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் (1948) சமூக நோக்கும் மனித நேயப் பண்பாடும் வளர்ந்தோங்கிய நகரத்தார் சமுதாயத்திலே பெருஞ்செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த .ராம.முத்தையாச் செட்டியாரின் நான்காவது புதல்வரே அண்ணாமலைச் செட்டியார். தெய்வபக்தி, அறச்சிந்தனை, தொழில் அர்ப்பணிப்பு ஆகியன மேலோங்கிய குடும்பத்தில் பிறந்ததினால் “கருவில் அமைந்த திருவே” இவரின் பிற்காலத்திய சாதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது 1929 இல் இங்கிலாந்து மன்னர் “ராஜா” என்ற பட்டத்தினை அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார். அன்று முதல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் என்றபெயர் நீடித்து நிலைத்தது. பல்வேறு கல்வித்தொண்டு ஆற்றிய இவரால் நிறுவப்பட்டதே சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இசைப்பற்று மிக்க செட்டியார் சென்னையில் தமிழிசைச்சங்கம் உருவாக்கினார். இன்றும் அவரது நினைவை பறை சாற்றிக் கொண்டிருப்பது சென்னை பாரிமுனை அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம்.
