திரு. வி. கலியாணசுந்தரனார் நினைவுநாள். இலக்கிய உலகில் பெரும் புலவராக, – சமய உலகில் சான்றோராக, – அரசியல் உலகில் தலைவராக – பத்திரிகை உலகில் வழிகாட்டியாக – தொழிலாளர் உலகில் தனியரசராகக் கோலோச்சியவர் திரு.வி.க. ‘தொட்டவற்றை எல்லாம் பொன்னாக்கும் எழுத்தாளர்’ என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில எழுத்தாளருக்கு பெயர் உண்டு. தமிழ் மொழியில் ஒருவருக்கு அப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றால், அவர் திரு.வி.க.வே என்று உடனே கூறி விடலாம். உரைநடை, சொற்பொழிவு, பத்திரிகைக் கட்டுரை, கவிதை, உரை, பதிப்பு முதலான பல்வேறு துறைகளின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டவர் திரு.வி.க. இருபதாம் நுாற்றாண்டின் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பாரதியார் ஆணிவேராய் விளங்கியது போல், உரைநடை வளர்ச்சிக்குத் திரு.வி.க. மூலவராய்த் திகழ்ந்தார். ‘உரைநடைக் கம்பர்’ எனச் போற்றத் தக்க அளவிற்கு அவர் உரைநடையில் நுால்களை எழுதிக் குவித்தார். ‘முருகன் அல்லது அழகு’, ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’, ‘இந்தியாவும் விடுதலையும்’, ‘உள்ளொளி’, ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ முதலான நுால்கள் இவ் வகையில்சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
எம்.ஆர்.ராதா காலமான நாள் மூடநம்பிக்கைகளும் வழிபாட்டுணர்வை எதிர்பார்க்கும் பிம்பங்களும் போலி.ப்பெருமிதங்களும் நிறைந்த தமிழ்த்திரைப்பரப்பில் தனித்ததொரு தீவாய் மிதந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ஒளிவட்டங்களின் சூட்டில் பொசுங்கிய பெருவெளியில் கோபம் கொண்ட ஒரு காட்டுவிலங்கைப்போல கட்ஜித்தவர் ராதா என்னும் கலைஞன் தன் மீதான மதிப்பீடுகளைக் கூட தலைகீழாகக் கவிழ்த்துப்பார்த்துப் பகடிசெய்தவர் ராதா. போர்க்குணங்களும் அரசியலுணர்வும் , நியாயங்ககளும் மரத்துப்போன காலகட்டத்தில் வாழும் நாம் அந்த கலகக்கலைஞனின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாக்கும் ராதாவின் பிறப்பு ஒரு குண்டுவெடிப்போடு தொடங்கியதொன்றும் அதிசயமானதல்ல. எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னை சூளையில் முதன்முதலில் எம்டன்குண்டு வீசப்பட்ட தினத்தில் பிறந்தார். மதராஸ் ராஜகோபால் (நாயுடு)வின் மகன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். இவ்வாறாகத் தொடங்கிய ராதாவின் நாடகவாழ்க்கை சினிமா உலகில் இணைந்தும் விலகியும் ஊடாடியபடியே தொடர்ந்தது ராதா தன் நாடகங்களில் செய்த கலகங்களும் அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அதனை அவர் எதிர்கொண்ட முறைகளும் சொல்லிமாளாதவை. இந்திய வரலாற்றிலேயே இத்தகைய துணிச்சல்மிக்க ஒரு நாடகக் கலைஞனைக் காண்பது அரிது. சினிமாவின் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நாடகம் நடத்துவதற்கும் இயக்கப் பணிகளுக்கும் செலவிட்டார். ராதா வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் ‘ராமாயணம்’ நாடகத்தை நடத்தினார். நாடகத்தின் முதல் காட்சியிலேயே ஒரு புத்தக அலமாரி காட்டப்படும். அதில் ராமாயண ஆராய்ச்சி நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலனவை பார்ப்பன வரலாற்றாய்வாளர்கள் எழுதியவைதான். அதன்படி ராமனைக் குடிகாரனாகவும் புலால் உண்ணுபவனாகவும் சித்தரித்து நாடகம் நடத்தப்படும். தொடர்ந்து பார்ப்பனர்களும் வைதீகர்களும் காங்கிரசுக்காரர்களும் கலாட்டா செய்வர். அரசு தடை விதிக்கும். போலீசு கைதுசெய்யும். எத்தனைமுறை தடைவிதிக்கப்பட்டாலும் கைதாகி நாடகங்களை தொடர்ந்து நடத்துவார் அல்லது அதேநாடகங்களை வேறுபெயரில் நடத்துவார். பெரியாருக்காகவே அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டதும் முதன்முதலில் தேசியச்சின்னங்கள் அவமதிப்புத்தடைச் சட்டம் அவருக்காகவே கொண்டுவரப்பட்டதும் வரலாற்றின் பக்கங்களில் எஞ்சிப்போன உண்மைகள். கிளர்ச்சியையும் அதிகார எதிர்ப்பையும் தாங்கவியலாத ஆளும்வர்க்கங்கள் புதிதுபுதிதாய்ச் சட்டங்களை உருவாக்குவதும் இருக்கும் சட்டங்களை இல்லாதழித்தொழிப்பதும் புதிதல்லவே. அதேபோலத்தான் ராதாவை ஒடுக்குவதற்காகவே தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தைத் தயாரித்தது. முதன்முதலாக நாடகத்தடை சட்டம் கொண்டுவரப்பட்டது ராதாவிற்காகத்தான். 1954ல் நாடகங்களின் திரைக்கதையை அரசின் அனுமதிபெற்றே நாடகம் நடத்தப்படவேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கெதிராக சட்டமன்ற வளாகத்திலேயே போய் வாதாடினார் ராதா. ராமாயண நாடக நோட்டீசில் ‘உள்ளேவராதே’ என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன்கீழ் ‘இந்துக்கள் தங்கள் மனம் புண்படுகிறது என்று கருதினால் நாடகத்திற்கு வரவேண்டாம். அப்படி மீறிவந்து மனம் புண்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல’ என்னும் வாசகமும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ராமாயண நாடகம் மட்டுமல்ல ராதாவின் பெரும்பாலான நாடகங்கள் தடை செய்யப்படவே செய்தன. கூட்டங்களில் புகுந்து கலகம் செய்யப்படவே செய்தன.ஆனால் இதையெல்லாம் மீறி ராதாவின் நாடகங்கள் பலமுறை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. (ரத்தக்கண்ணீர் நாடகம் மட்டும் 3021 நாட்கள் நடத்தப்பட்டிருக்கிறது.) ஒருமுறை ராதா நாடகம் நடத்தும்போது அவருக்குத் தீராத வயிற்றுப்போக்கு. அவரால் நடிக்க முடியாத நிலை. எனவே தனக்குப் பதிலாகத் தன்மகன் வாசு நடிப்பார் என்று அறிவித்த ராதா, “விருப்பமிருப்பவர்கள் நாடகம் பார்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் கவுண்டரில் சென்று டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்தார். இன்னொருமுறை நாடகத்தினிடையில் பெரியார் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதாக அறிவிக்கப்பட்டபோது முன்வரிசையிலிருந்த சில பார்ப்பனர்களும் காங்கிரசுக்காரர்களும் எழுந்து ‘ராதா, உன் நாடகம் பார்க்கத்தான் காசுகொடுத்து வந்தோம். அந்தாள் (பெரியார்) பேச்சைக் கேட்க இல்லை” என்று கலாட்டா செய்தனர். உடனே ஒலிபெருக்கி முன் வந்த ராதா, “நாடகம் பார்க்கத்தானே வந்தாய். நான் சொல்றேன். நாடகம் முடிஞ்சுபோச்சு. இனிமே நாடகம் இல்லை. இனிமேல் பெரியார் மட்டும்தான் பேசுவார்” என்று அறிவித்தார். அதேபோல பொதுவாகவே எல்லா நிகழ்ச்சிகளிலுமே வி.அய்.பி. இருக்கை என்று தனியாக இருப்பது இன்றுவரை வழக்கத்திலுள்ள நடைமுறையே. இந்த வி.அய்.பிக்கள் எப்போதுமே இலவச அழைப்பாளர்கள்தான். ஒருமுறை காசுகொடுத்து தரை டிக்கெட் வாங்கிய கூட்டம் அலைமோதியது. இன்னொருபக்கம் வி.அய்.பிக்கள் வரிசையும் நிரம்பிவழிந்தது. அப்போது மேடையில் தோன்றிய ராதா, “காசுகொடுத்தவன்லாம் தரையிலே உக்காரமுடியாம தவிக்கிறான். ஆனால் ஓசியிலே வந்தவன்லாம் சேர்லே உட்கார்ந்திருக்கான்” என்று அவரது பாணியிலேயே முகத்திற்கு நேராக விமர்சித்திருக்கிறார். இத்தகைய தைரியமும் துணிச்சலும் ராதாவைத் தவிர வேறு எவனுக்கு வரும்? பொதுவாக ராதாவைக் கைதுசெய்ய வரும் போலீஸ் அதிகாரிகள் நாடகம் முடிந்தபிறகே கைது செய்வது வழக்கம். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி நாடகம் தொடங்குவதற்கு முன்பே கைது செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்திருக்கிறார். நாடகக்குழுவினர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ராதாவிடம் போய்ச் சொல்லியிருக்கிறார்கள். ராதா நாடகத்தைத் தொடங்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். நாடகத்தின் முதல்காட்சியில் ராதா பேசிய முதல் வசனம், “யாருடா அங்கே நாயை அவிழ்த்துவிட்டது,? அதுபாட்டுக்குக் குலைச்சுக்கிட்டிருக்கு”. அந்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஒருமுறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்.ஏ.பி.அய்யர் தலைமை தாங்கியிருந்தார். அப்போது ஒரு பாத்திரம் ராதாவிடம் பேசுவதுபோல ஒரு வசனம். “உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?”. அதற்கு ராதா சொன்ன பதில், “பார்ப்பான் பார்ப்பான்”. ராதா யாருடைய முகத்திற்காகவும் தயங்குபவரோ அஞ்சுபவரோ அல்ல என்பதற்கு இது ஒரு சான்று. மேலும் அவர் வெறுமனே வசனவீரர் மட்டுமில்லை, செயல்வீரரும் கூட. நாடகத்திலும் மேடைகளிலும் கலகம் செய்பவர்களைக் களத்திலே இறங்கிச் சந்திப்பவர். சிலம்புச்சண்டை, துப்பாக்கிசுடுதல், குதிரையேற்றம் போன்ற பலகலைகளைத் தெரிந்துவைத்திருந்தார். எலெக்ட்ரிக்கல் வேலைகள் பார்ப்பதிலும் நிபுணர். ஆரம்பகாலகட்டங்களில் நாடகங்களில் தந்திரக்காட்சிகள் அமைப்பதற்கும் ராதாவின் உதவியே தேவைப்பட்டது. (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு திருப்பதிக்கு ஏழுமலையானைத் தரிசிக்க சென்றிருக்கிறார் ராதா. மாலைவரை காத்திருந்தும் தரிசனம் பார்ப்பதற்குத் தாமதமாகவே ஆத்திரங்கொண்ட ராதா திருப்பதிமலையைத் தகர்ப்பதற்குத் டைனமைட் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்.) ராதாவின் மேடையில் எப்போதும் கலைஞர்களும் எதிர் வன்முறைக்குத் தயாராக இருப்பார்கள், ஆயுதங்களும் தயாராக இருக்கும். யாரேனும் எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் நாடகக்குழுவினரும் பதில் தாக்குதலைத் தொடுப்பார்கள். ஒருமுறை நாடகக்குழுவினர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து பார்ப்பனக்கூலிகள் தாக்குதலைத் தொடுக்க அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமிருந்த நாடகக்குழுவினரின் தாக்குதல் தாங்கமுடியாது ஓடிவிட்டனர். மறுநாள் எப்படியும் இன்னும் அதிக ஆட்களை அழைத்துவருவார்கள் என்று எதிர்பார்த்த ராதா கதவின் கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சியிருந்தார். தாக்கவந்தவர்கள் மின்சார அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள். விலையுயர்ந்த இம்பாலா காரைப் பலரும் பொத்திப்பொத்திப் பாதுகாத்து வந்த சூழலில் தினமும் படப்பிடிப்பிற்கு வைக்கோல் ஏற்றிவந்து பார்ப்பவர்களை ராதா அதிரச்செய்த சம்பவம் பலரும் அறிந்தவொன்று. ஒருமுறை அப்போதைய குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனை வரவேற்பதற்காக சில அதிகாரிகள் ராதாவிடம் இம்பாலா காரைக் கேட்டிருக்கின்றனர். ‘நான் அந்த ராதாகிருஷ்ணனுக்காக (ஜனாதிபதி) கார் வாங்கலை, இந்த ராதாகிருஷ்ணனுக்காகத்தான் கார் வாங்கியிருக்கிறேன்’ என்று மறுத்திருக்கிறார். இப்படிக் கலகபூர்வமாக வாழ்ந்த ராதாவின் இன்னொருபக்கம் நெகிழ்ச்சியால் நிரம்பியது. பேரன்பும் பெருங்கருணையும் விரிந்து பரந்த நேசமும் ததும்பிவழியும் மனம்தானே தார்மீக ஆவேசமும் அறவுணர்வும் நிரம்பப்பெற்றதாயிருக்கும். அப்படியான கலைஞன்தான் ராதா. வறுமையில் வாடிய எத்தனையோ இயக்கத்தோழர்கள் மற்றும் நாடகக்கலைஞர்களுக்கு விளம்பரங்களை எதிர்பாராது உதவிய ராதா, அவர்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இலவசமாக நாடகங்களும் நடத்திக்கொடுத்திருக்கிறார். புகழ்பெற்ற நாதசுவரக்கலைஞர் ராஜரத்தினம்(பிள்ளை) தனது இறுதிக்காலத்தில் வறுமையில் வாடினார். அவரது குடும்பநலத்திற்காக பல்வேறு நடிகர்களிடமும் நிதிதிரட்டினார் ராதா. ஆனால் பெரிய நடிகர்கள் வழக்கம்போல கைவிரித்துவிட சிறிய கலைஞர்கள் மட்டுமே தங்களால் இயன்ற நிதியை அளித்திருக்கிறார்கள். சொற்பத்தொகையே சேர மனம் நொந்துபோனார். அந்த சிறிய தொகையையும் தன்மானத்தின் காரணமாக வாங்கமறுத்துவிட்டார் ராஜரத்தினம். கடைசியில் வறுமையிலேயே அந்தக் கலைஞன் மாண்டுபோக தனது சொந்த செலவிலேயே அவரை அடக்கம் செய்த ராதா அவரது நினைவகத்தில் 48 அடி உயரத்தில் நாதசுவர நினைவுச்சின்னம் அமைத்தார். ராதா நம்புதற்கரிய சாத்தியங்களோடு வாழ்ந்தவர். எதிர்ப்பையுண்டு வாழ்ந்த ராஜாளி. அவரது பிறப்பு ஒரு குண்டுவெடிப்போடு தொடங்கியதென்றால் அவரது வாழ்க்கை பல அதிர்வுகளை உண்டுபண்ணியது. அவரது இறப்பும் ஒரு ஆச்சரியம்தான். திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பியதிலும் படத்தில் புகுத்தியதிலும் கலைவாணர் என்.எஸ்.கே, அண்ணா, கலைஞர்.கருணாநிதி போன்ற பலரும் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ளனர் என்பது மறுக்கத்தக்கதல்ல. ஆனாலும் அவர்களிடத்தில் தமிழ்ப்பெருமிதம், பண்பாடு குறித்த மயக்கங்கள் மலிந்துகிடந்தன. இவை அவர்களது பிரதிகளிலும் கலைவெளிப்பாடுகளிலும் வெளிப்பட்டன. ஆனால் இத்தகைய மயக்கங்களுக்கு அப்பாற்பட்டு பெரியாரின் சிந்தனை வெளிச்சத்தைச் சரியாகப் பிரதிபலித்த கலைஞன் என்று ராதாவைச் சொல்லலாம். பெரியாரை நிழல்போலவே பின்தொடர்ந்த ராதா இறந்தது பெரியார் பிறந்தநாளான செப்டம்பர்17. இறந்த நேரம் பெரியார் இறந்த அதே காலை 7.25 மணி.
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் அரங்கேறிய தினம் வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கோரி 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் தொடங்கி தமிழ்நாடெங்கும் ஒருவாரத்திற்கு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதை அடுத்து ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த 7 நாள் சாலை மறியல் போராட்டத்தில் 21 உயிர்கள் பலியான நாளின்று.
ஈ . வெ . ரா. பெரியார் பிறந்த நாள் தனது இறுதிக் காலம் வரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தியவர். நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு! அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்! அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என இளைஞர்களை அழைத்தார்! பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய்தவர்.அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளிமையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர். அவரது பிறந்த நாளான இன்று பெரியார் என்ற பெருங்கடலிலிருந்து சில துளிகள்: “நான் ஒரு சுதந்திர மனிதன்; சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கின்றேன்”. (புரட்சி 17-12-1933). “நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடு வீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைக ளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்.” (குடியரசு 11.9.1927) “சிலரின் அருவருப்புக்கோ, கோபத்திற்கோ பயந்து நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல; அவ்விதம் செய்வது பயத்தாலும், சுயநலத்தாலுமே யாகும்… …. … ஒவ்வொரு இடங்களிலும் சுய மரியாதை உணர்ச்சி உண்டாக பாடுபடுங்கள்; உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங் கள் மிதித்து அடிமைப்படுத்தி வாழும் பழக்கத்தை- உங்கள் மயிர்க்காம்புகளிலெல்லாம் கூடி தடுப்பேறிய மானமற்ற வாழ்க்கை நிரம் பிய உணர்ச்சியை – உடனே உதறித்தள்ளுங்கள்.” (வைக்கம் வீரர் சொற்பொழிவு 1923).!
திமுக தொடங்கிய தினம் அன்று நடந்தவை. பெரியாருடன் மனவருத்தம் கொண்ட அனைவரும், பெரியாரை திராவிடர் கழகத்திலிருந்து விலக்குவது தான் முறையாகும் என்று வலியுறுத்தினர். 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாளில், சென்னை பவளக்கார தெருவில், குடந்தை பெரியவர் கே கே நீலமேகம் அவர்கள் தலைமையில் கழகத் தோழர்களின் கூட்டம் நடைபெறும் என்றும், எதிர்கால வேலைத் திட்டம் பற்றி அதில் முடிவு செய்யப்படும் என்று அண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார். அண்ணாவின் பிரகடனம். “புதிய தலைமையின் கீழ் நமது பணியை நடத்துவதும் சாத்தியமான காரியமேயாகும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். போதிய வலிவும் தேவையான வசதியும், மறுக்க முடியாத நியாயமும் நம்மிடமிருக்கின்றன. எனினும் நாம் இவ்வழி செல்வதும் நாட்டின் நர்த்தனம் செய்வதும், பாசிசத்திற்கும் பழமைக்கும் நம்மையறியாமல் இடம் தேடிக்கொடுத்திடவும் நாம் ஆளாகிவிடுவோமோ என்று அஞ்சுகிறேன். கனி பறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலை சுற்றிக்கொள்வதைப் போல், பெரியாரிடமிருந்து கழகத்தை மீட்கும் காரியத்தில் நாம் ஈடுபட்டிருக்கும் சமயமாக பார்த்து அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு பாசிசமும் பழமையும் மக்களை பிடித்தாட்ட முற்படக்கூடும். கழகத்தை கைப்பற்றுவது என்பதற்கு யாரும், எவரும் கட்டுப்பட வேண்டிய முறைகள் உண்டு. நாம் அறிந்துக்கொண்ட பெரியார் இம்முறைகளுக்குக் கட்டுப்படவோ இதனை ஏற்கவோ தயாராயில்லை. நாம் ஒரு புறம் திராவிட கழகம் என்ற லேபிளுடனுடன், அவர் மற்றொரு பக்கம் அதே லேபிளுடன் உலாவுவதும்-இருசாராருக்கும் இடையில் மோதவிட விரும்பும் சந்தர்ப்பவாதிகளின் ஆட்டம் ஆடுவதற்கும் இந்த சூழ்நிலையை சாதகமாக ஆக்கிக்கொண்டு நாட்டை நாசமாக்குவதற்குத் தான் காரியம் தான் நடைபெறும். கழகத்தின் ‘லேபிள்’ அல்ல முக்கியம், கொள்கைகள் வேலைத் திட்டம் இவைகளே முக்கியம். ஒரு தனி நபர் கூட லேபிள் தன்னிடம் இருப்பதாக எப்போதும் கூறிக்கொண்டு இருக்க முடியாது. ஆனால் கூட்டு முயற்சி இல்லாமல் கொள்கை பரவாது. இலட்சியம் உருப்பெறாது. அந்த கூட்டு முயற்சிக்கான வசதியும், வாய்ப்பும், வழியும் நம்மிடம் இருக்கின்றன. ஏராளமான அளவில் வளரக்கூடிய விதத்தில் கொள்கைகளை பரப்பி, இலட்சியத்தை வெற்றிகரமாக ஆக்க நாம் தனித்திருந்த்து அவருடைய தலைமை மட்டுமல்ல, லேபிளையே நீக்கிவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயருடன் பணியாற்றி வருவது தான் நல்ல வழி என்பது என் கருத்து. நமக்குள்ள ஆதரவின் அளவையோ, தரத்தையோ குறைத்து மதிப்பிட்டு, நான் அந்த முடிவிற்கு வருகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம். அந்த ஆதரவு பெரியாரின் தலைமையோ, அவரிடம் உள்ள லேபிளோ இல்லாமலேயே, நாட்டுக்கு தேவையான நல்ல கருத்துக்களை பரப்பி சமுதாயத்தைச் சீராக்குவது என்ற ஆசையாலும், நம்பிக்கையாலும் இந்த முடிவை நான் உங்களுடைய கருத்துக்கு வைக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையை கூட்டத்தினர் ஏற்றுக்கொண்டார்கள். பொதுக் குழு என்றும், அமைப்பு குழு என்றும், சட்டதிட்டக் குழு என்றும், நிதிக் குழு என்றும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதை அறிவிக்க அன்று மாலை சென்னை, ராயபுரம், ராபின்சன் பூங்கா மைதானத்தில் பொத்தம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இறுதியாக அறிஞர் அண்ணா பேசும்போது.”முக்கியமாக, முதல் வேலையாக, எழுத்துரிமை, பேச்சுரிமை, எதையும் அடக்கும் அரசாங்கத்தின் போக்கை எதிர்த்து போரிட திராவிட முன்னேற்ற கழகம் முன்னணிப் படையாக அமையவேண்டும் அதில் பங்கு கொள்ள அனைவரும் வாரீர், பெரியார் அவர்களே! நீங்கள் அளித்த பயிற்சியும் பக்குவமும் பெற்ற நாங்கள் உங்கள் வழியே அரசை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் இந்த வேண்டுகோள் விடுக்கிறேன், துவக்க நாளாகிய இன்றே” என்று பேசி முடித்தார்.
