இன்று மகாபரணி 2025 : பித்ருதோஷம்
மகாளய பட்சம் முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலமாகும். இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது ஒவ்வொரு விதமான பலன்களை தரக் கூடியதாகும். மகாளய பட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் கண்டிப்பாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட வேண்டும்.
மகாளய பட்ச காலத்தில் செய்ய வேண்டிய மற்றொரு மிக முக்கியமானது மகாபரணி வழிபாடு. இது பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றை நீக்கக் கூடியதாகும். மகாபரணி நாளில் என்ன செய்ய வேண்டும், இந்த நாளின் சிறப்பு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மஹாபரணி 2025 :
மஹாபரணி 2025 :
“மஹாபரணி” என்பது புரட்டாசி மாதத்தில் மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்கள் அனைவரும் அவரவரின் கர்ம வினைக்கேற்ப யமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதியாகும். யமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதிகள், தர்ப்பணம் செய்வது மற்றும் யம தீபம் ஏற்றுவது போன்றைவைகளை செய்தால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து, சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐதீகம்.
இந்த ஆண்டு மஹாபரணி செப்டம்பர் 12ம் தேதி வருகிறது. செப்டம்பர் 11ம் தேதி மாலை 06.10 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 12ம் தேதி மாலை 04.30 மணி வரை பரணி நட்சத்திரம் உள்ளது. இதனால் செப்டம்பர் 11ம் தேதி மாலை அல்லது செப்டம்பர் 12ம் தேதி காலை இந்த தீபத்தை ஏற்றலாம்.
மஹாளய பட்சம் :
மஹாளய பட்சம் :
தக்ஷிணாயன புண்ணிய காலத்தில், புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பட்சம் எனும் புண்ணியகாலம் இந்த ஆண்டு செப்டம்பர் 08ம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது. இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மஹாளய பக்ஷம். “பக்ஷம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் (சில சமயங்களில் 14 அல்லது 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பெளர்ணமிக்கு மறு நாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும்.
புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே, மஹாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மஹாளய பட்ச தர்ப்பணம் :
மஹாளய பட்ச தர்ப்பணம் :
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிரார்த்தம் ஆகியவற்றை செய்வோம். ஆனால், மஹாளய பட்சம் காலத்தில் பிரதமை துவங்கி, அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து யமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றைச் செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும் என்பது நம்பிக்கை.
யம தீபம்:
யம தீபம்:
மஹாளய பட்சத்தில் மஹா பரணியிலும் தீபாவளிக்கு முந்தைய தினத்தன்றும் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரண பயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்ம ராஜனை தவறாமல் வழிபட வேண்டும். மஹாளயபட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மஹாளய பட்சம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டும்.
யம தீபம் ஏற்றும் முறை :
யம தீபம் ஏற்றும் முறை :
எமதீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக சுவாமிக்கு விளக்கேற்றும் போது, தனியே ஓர் அகல் விளக்கை ஏற்றி வழிபடலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்னைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களை செய்வார்கள். யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று அந்தந்த திசைகளின் தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டு திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எம பயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணை புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

