ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் நினைவு நாள் இன்று இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தனது புதிய கண்டுபிடிப்பான அணுகுண்டுகளை பரிசோதிக்கும் தளமாக ஜப்பானை அமெரிக்கா பயன்படுத்த தீர்மானித்தது.. இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில் தான் சரணடைவதாக ஜப்பான் அறிவித்த போதிலும் அந்த தகவல் தனக்கு கிடைக்கவில்லை என்று பொய் கூறி அமெரிக்க நாடு தான் கண்டுபிடித்த புதிய ஆயுதத்தை சோதித்து பார்க்க வேண்டி இந்த கொடுமையை செய்தது. சின்னப் பையன் (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகஸ்டு 6-ம் தேதியும், குண்டு மனிதன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாகி நகர் மீது மூன்று நாட்களுக்குப் பின்னர் அதாவது ஆகஸ்டு 9-ம் தேதியும் வீசப்பட்டன. இதனால் நினைத்துப்பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன. ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர். குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.
மயிலப்பன் சேர்வைக்காரர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. காலமான தினம் இந்த மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் உள்ள மக்களை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மக்களை சந்தித்து பேசி பெரும் போர் களத்தை உண்டாக்க முனைந்தார். அவ்வப்போது மன்னர் ரிபேல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரை மாறு வேடத்தில் சென்று நாட்டை பற்றி ஆலோசித்து வந்தார் ஒரு நாள் கொடியவன் ஒருவன் கம்பெனியாரின் தூண்டுதலின் பேரில் பொருளாசை காரணமாக சேர்வைகாரரின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுத்தான். இதனால் பிடிப்பட்டு மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையை மேற்கொண்ட மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிடப்பட்டார்.
ருக்மணி லட்சுமிபதி காலமான தினமின்று 1951- ருக்மிணி லட்சுமிபதி ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை மற்றும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமாவார் ராகுகாலமாவது கேதுகாலமாவது, எதுவந்தால் என்ன? அதுதான்,நம் நாட்டைச் சனியனே பிடித்திருக் கிறதே! அப்புறம் என்ன?” இன்றைக்கும் பொருந்தும் இந்த நகைச்சுவையை 1946ஆம் ஆண்டு ஒரு பெண் உதிர்த்தார் என்பது ஆச்சரியமான உண்மை. சென்னை ராஜதானியில் அமைச்சர்கள் எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வது என்ற வாதத்தையொட்டி அவர் இப்படிக் கூறினார். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக அதுவும் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றார். இது நடந்தது 1946ஆம் ஆண்டு. பிறப்பால் இவர் வைதீக பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர். ஆனால் சனா தன பழக்க வழக்கங்களை கடுமையாகச் சாடியவர்.
நினைவை விட்டு போகாத சோகம் ஏர்வாடி தீ விபத்து: 28 மனநோயாளிகள் பரிதாப சாவு – இதே நாள் (6-8-2002) ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை. மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
வசனங்களால் இன்றும் வாழும் வியட்நாம் வீடு சுந்தரம் நினைவு நாளின்று இந்த வெள்ளித்திரையுலகில் ஒரு ஆக்டரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, டைரக்குடர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே இல்லை. பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், கதையை ஒருவர் எழுதியிருப்பார். வசனத்தை ஒருவர் எழுதியிருப்பார். அதன் பின்னர், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், பாலசந்தர், பாக்யராஜ் என அடுத்தடுத்து வந்த டைரக்டர்கள் அவர்களே கதை, வசனம் எழுதினார்கள். ஆனால் எழுபதுகளில், ‘கதை நல்லாருக்கு’ என்று பல பாராட்டுகளைப் பெற்று, ‘வசனமெல்லாம் பளிச் பளிச்சுன்னு இருக்குய்யா’ என்று பல கைத்தட்டல்களைப் பெற்று, அந்தக் கதாசிரியரை, வசனகர்த்தாவை ‘யார் யார்’ என விசாரித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர் எந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கார் என்பதை அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அடைமொழியுடன் சொன்னால் போதும்… தடக்கென எல்லோருக்கும் புரிந்துவிடும். அவர் பெயர்- வியட்நாம் வீடு சுந்தரம். சிவாஜியின் பெயரைச் சொல்லாமலே, அவர் நடித்த கேரக்டர்களின் பெயர்களைச் சொல்லி, அந்தப் படங்களின் மொத்தக் கதையையுமே சொல்லிவிடுவோம். அப்படியாக, சிவாஜிக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் ஏராளம். அவற்றில், மிக மிக முக்கியமானதொரு இடத்தை மக்களின் மனங்களின் பிடித்த கேரக்டர்கள்… பிரஸ்டீஜ் பத்மநாபன், பூண்டி மாதாக்கோயில் ஆன்டனி,பாரீஸ்டர் ரஜினிகாந்த். முதலாவது ‘வியட்நாம் வீடு’. அடுத்தது… ‘ஞானஒளி’. மூன்றாவது… ‘கெளரவம்’. இந்தக் கேரக்டர்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜிகணேசன். கேரக்டர்களை உருவாக்கியவர்… சுந்தரம். வியட்நாம் வீடு சுந்தரம். திருச்சிதான் பூர்வீகம். சென்னைக்கு வந்த சுந்தரம், டன்லப் டயர் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். அதேசமயம், எழுத்திலும் ஆர்வம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதினார். அப்போது சினிமாவை விட நாடகத்தின் மீதுதான் எல்லோருக்குமே மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சுந்தரம் நாடகத்துக்காக கதை ஒன்றை எழுதினார். 62ம் ஆண்டு அரங்கேறிய அந்த நாடகத்துக்கு வந்தவர் எம்ஜிஆர். ‘இந்தக் கதையை எழுதிய பையன், பின்னாளில் பெரியாளாக வரப்போகிறான்’ என்று சொல்லி வாழ்த்தினார். டயர் கம்பெனி ஜாப் என்பதாலோ என்னவோ வாழ்க்கைச் சக்கரமும் சுழன்றது. ஒருபக்கம் வேலை… இன்னொரு பக்கம் எழுத்து என்று ஓடிக்கொண்டிருந்தார் சுந்தரம். ஒரு சூழலில் ஒரு நாடகத்தைக் கருத்தில் வைத்து, கதையை எழுதினார். அந்தக் கதையை எழுதி, ஒய்.ஜி.பார்த்தசாரதியிடம் கொடுத்தார். படித்துப் பார்த்த ஒய்.ஜி.பி., ‘யோவ், இந்தக் கதை பிரமாதமா இருக்குய்யா. ஆனா எங்க ட்ரூப்புக்கு பொருந்துறதை விட, இதுல சிவாஜி கணேசன் நடிச்சாத்தான்யா பொருத்தமா இருக்கும். முயற்சி பண்ணிப்பாரேன்’ என்று, வாசலைக் காட்டினார். ஆனால் வழி? சிவாஜியை நெருங்கும் வழி தெரியாது கைபிசைந்து தவித்தார் சுந்தரம். ‘’அது 65ம் வருஷம். அதுக்குப் பிறகுதான் என்னென்னவோ நடந்துச்சு. என் சகோதரிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். அவளுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அந்தக் கதையை அவங்களோட பக்கத்துவீட்டு மாமிகிட்ட சொல்லிருக்கா. அந்த மாமியை கதை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிருச்சு. மாமி அவங்க வீட்டுக்காரர்கிட்ட கதையைச் சொல்லி, விவரத்தைச் சொல்லிருக்காங்க. அவர் என்னடான்னா… சிவாஜி அண்ணாகிட்ட இந்தக் கதையைச் சொன்னார். அவர், சிவாஜி அண்ணாவோட ஆடிட்டர். ‘அந்தப் பையனை வரச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டார் சிவாஜி. அங்கேருந்துதான் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் அல்ல… வாழ்க்கையே ஆரம்பிச்சுது’’ என்று ஒருமுறை சுந்தரம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில்‘கெளரவம்’. படத்தை ‘தி இந்து’ ரங்கராஜனுடன் இணைந்து தயாரிக்க முடிவு செய்து, அதனை சிவாஜியிடம் தெரிவிக்கச் சென்றார் சுந்தரம்.“அப்படியா… நல்லது நல்லது. நீ என்ன பண்றே? இந்தப் படத்தை நீயே டைரக்ட்டும் பண்ணிடுறே” என்று சிவாஜி சொல்ல, படத்துக்குக் கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கினார் வியட்நாம் வீடு சுந்தரம். அப்படியாக திரைப் பயணம் தொடர்ந்தது. சில படங்களுக்குக் கதை மட்டும் கொடுத்தார். சில படங்களுக்கு மட்டும் வசனம் எழுதினார். சித்ரா லட்சுமணன் தயாரித்து கமலை வைத்து இயக்கிய ‘சூரசம்ஹாரம்’ படத்துக்கு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் தான் வசனகர்த்தா. தொலைக்காட்சி பக்கமும் கால் பதித்து, கதையிலும் வசனத்திலும் ஏன் நடிப்பிலும் ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கதையை எப்படி உருவாக்க வேண்டும், எந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஒரு காட்சியில், ஒரு சம்பவத்தில் என்ன வசனம் பேசினால், ரசிகர்கள் ஒன்றிப்போவார்கள் என்பதன் சூட்சுமங்களை அறிந்து வைத்த மிகச்சிறந்த கதை வசனகர்த்தா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம். 2016 இதே ஆகஸ்ட் 6-ல் காலமானார்.
எண்ணற்ற மக்களின் உயிர் காக்கும் மருந்தான பெனிசிலினை கண்டுபிடித்த
அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்த நாள் இன்று. உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு,. அலெக்ஸ்சாண்டர் பிளமிங் 1945 ஆம் ஆண்டு அவருடைய கண்டுபிடிப்புக்காக மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
