ஆட்கடத்தலுக்கு எதிரான தினம் இன்று. (World Day Against Trafficking in Persons) ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின்68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின்46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை அறிவித்தது.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நினைவு தினம்.
- கோயில்கள் குறித்த பழைய வரலாறுகளை ஆராய்வதில் நாட்டம் கொண்டிருந்த இவர், கோயில்களிலும் வேறு பல இடங்களிலும் உள்ள கல்வெட்டுகளைப் படித்தறியும் திறனை வளர்த்துக்கொண்டார். எப்போதும் எதைப் படித்தாலும் மனதில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்த இவர், இவற்றைத் தன் படைப்புகளிலும், உரைகளிலும் பொருத்தமான இடங்களில் வெளிப்படுத்தும் திறமை பெற்றிருந்தார்.
- ‘நீலகண்டேஸ்வரக் கோவை’, ‘தென்தில்லை’ (தில்லைவிளக்கம்), ‘உலா சிவகீதை’, ‘நரிவிருத்தம்’, ‘பழையது விடு தூது’, ‘மாணாக்கராற்றுப்படை’, ‘மருதப்பாட்டு’, ‘களப்பாழ்ப் புராணம்’, ‘வீரகாவியம்’ உள்ளிட்ட நூல்கள் மிகவும் பிரபலம். குறிப்பாக, சங்க இலக்கியத்தில் உள்ள ‘திருமுருகாற்றுப்படை’, ‘பொருநராற்றுப்படை’ போலவே மாணவர்களை ஆற்றுப்படுத்தும் இவரது ‘மாணாக்கராற்றுப்படை’ தனித்துவம் வாய்ந்ததாகப் போற்றப்பட்டது.
- குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இவை இனிய நடை, திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி இருப்பதோடு, ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.
- சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய ‘பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதினார். இவரது இயன்மொழி வாழ்த்து நூல், புதுக்கோட்டை நகரின் சிறப்புப் பற்றியும் அதை ஆண்ட மன்னரைப் பற்றியும் எடுத்துக் கூறுகிறது.
- சிறந்த தமிழறிஞர், உரையாசிரியர், நினைவாற்றல் கலைஞர், கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்டிருந்த பி.அ.நாராயணசாமி ஐயர் 1914-ம் ஆண்டு ஜூலை மாதம் இதே 30ம்தேதி 52-வது வயதில் மறைந்தார்.
குஞ்சிதம் குருசாமி அம்மையார் காலமான நாளின்று
இவர் திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர். குஞ்சிதம் டி. சுப்பிரமணிய பிள்ளை – தங்கம்மாள் தம்பதிகளுக்கு தலைமகளாக சென்னையில் பிறந்தார். சென்னை ஜார்ஜ் டவுனில் தொடக்கக் கல்வி பயின்றார். பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார். இராணி மேரி கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்று, பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி இந்தியாவிலேயே முதல் கல்வியதிகாரியாகப் பணியாற்றியவர். ‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில இதழின் இதழாசிரியராக இருந்த குருசாமி என்பவரை 08.12.1929 இல் பெரியார் – நாகம்மையார் முன்னிலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார், இதுவே முதல் சுயமரியாதைத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவரும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், கணவரின் கொள்கைக்கேற்ப தாலி, குங்குமம் முதலியவற்றைத் துறந்தார். இவர் பல சுயமரியாதை இயக்க மாநாடுகளுக்கு கணவருடன் இணைந்து சொற்பொழுவுகள் பல நிகழ்த்தியும், சுயமரியாதை மாநாடுகளுக்கு தலைமைப் பொறுப்பேற்று சிறப்புற நடத்தியும் சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். ஆதி திராவிடர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்கவும், கடவுளின் பெயரால் செய்யப்படும் வீண் செலவுகளைத் தவிர்த்து, ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு துணி, புத்தகம் முதலியவற்றை வாங்கிக் கொடுக்கவேண்டும். வாண வேடிக்கைக்காக விரயமாகும் பணத்தைச் சுகாதாரத்தைப் போதிக்கும் காண்காட்சிகள் அமைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். தெய்வங்களுக்காகச் செலவிடப்படும் பணத்தில் நூலகங்களும், மருத்துவமனைகளும் அமைக்கப்பட வேண்டும் என்பன போன்ற முற்போக்குச் சிந்தனைகளை முன்வைத்துப் போராடினார். புரோகிதர்களை எதிர்த்தார். பால்ய விவாகம், பெண்ணடிமை முதலானவற்றைச் சாடினார். “ஜாதகம் சரியாயிருப்பதாக ஒரு பெண்ணை ஒரு கழுதைக்குக் கட்டிக் கொடுப்பதா” என்று கேட்டு ஜோதிட மூட நம்பிக்கையை எதிர்த்தார். அதுமட்டுமல்லாமல் எல்லா சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் மதங்களே காரணம் அவை ஒழிய வேண்டும் என முழக்கமிட்டார். கலப்பு மணம், விதவை மணம், காதல் மணம் முதலியவற்றை ஆதரித்தார். பாரதிதாசன் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் தொகுப்பாக வெளியிட்டது இவரது குறிப்பிடத்தக்க இலக்கியப்பணி. பெண்கல்வி, சமூகச்சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக உழைத்து சுயமரியாதை இயக்க வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றார். அப்படியாபட்டவர் இதே 30.07.1961 இல் புற்றுநோயின் காரணமாக மறைந்தார்.
இண்டர்நேஷனல் பிரண்ட்ஷிப் டே ‘உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. நட்பு என்பது அந்த அளவுக்கு நெருக்கமான, இனிமையான, தூய்மையான ஓர் உறவு. நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை. நண்பர்கள், எல்லோருடைய வாழ்விலும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். ஏழை – பணக்காரன், ஆண் – பெண், வெள்ளை – கருப்பு, ஜாதி – மதம், வயது – வரம்பு, நான் – நீ, போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு. இன்றைய வேகமான உலகில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. நட்புக்கு மதிப்பளிக்கும் விதமாக, ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.,3) உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தினமும் சந்திக்கும் நண்பர்களை நினைவுபடுத்த தேவையில்லை. எனினும், பள்ளிக்கூட, கல்லூரி கால நண்பர்களை நினைவுபடுத்தி, சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நண்பர்கள் தினம். குறைந்தது ஒருமுறை: ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய, புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இவர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் மொபைல், சாட்டிங், இ-மெயில், வாழ்த்து அட்டை அனுப்புவதன் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது. அதற்காக பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம், ‘பகைமை’. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்பை, திரும்பவும் உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கை தான், அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது. நண்பர்கள் தினம் தோன்றியது எப்படி? கிரீட்டிங் கார்டு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் கிரீட்டீங் கார்டுகளின் விற்பனையை உலகம் முழுவதிலும் அதிகரிக்கச் செய்யவும் நண்பர்கள் தினம் என்று ஒன்று கொண்டாடலாம் என்று முன்மொழிந்தார்கள். நண்பர்கள் தினத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது எப்போது? கடந்த 2011 ஆம் ஆண்டு தான் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மூலம் நண்பர்கள் தினம் கொண்டாடுவதற்கான அங்கீகாரம் கிடைத்தது நண்பர்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? சர்வதேச நண்பர்கள் தினம் ஜூலை 30 ஆம் தேதியும் இந்தியாவில் தேசிய நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் கொண்டாடப்படுகிறது. நட்பின் குறியீடு என்ன? மஞ்சள் நிற ரோஜா தான் நட்பின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. இது நட்பு, கொண்டாட்டம் மற்றும் அதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குறியீடாக இருக்கிறது.
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் எழுத்தாளருமாய் திகழ்ந்த மா.நன்னன் (Ma. Nannan) பிறந்த தினம் இன்று.
- கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் எனும் ஊரில் பிறந்தவர் (1924). இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன்
உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘திருக்குறள் மூலமும் விளக்க உரையும்’, ‘பைந்தமிழுரைநடை நைந்திடலாமா?’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக் கழகு கசடற எழுதுதல்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்த இவர், அதைக் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
- இவற்றில் ‘பெரியாரைக் கேளுங்கள்’ என்ற நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. தமிழக அரசின் சமூக சீர்திருத்தக் குழுத் தலைவராகவும், அஞ்சல்வழிக் கல்லூரியின் முதல்வராகவும் செயல்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கும் வாக்கியங்களை முறையாக அமைப்பதற்குமான சிறந்த ஆலோசனைகளை வழங்கியதோடு, தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளையும் அந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது, திரு.வி.க. விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
- ‘நன்னன் குடி’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் அறக்கட்டளை, கல்வியில் சாதனை புரியும் மாணவர்களுக்கும் பல்வேறு தமிழ்ப்பணிகள், சமூகப் பணிகளில் தடம் பதிப்போருக்கும் பரிசளித்து ஊக்குவித்து வருகிறது. வயோதிகம் காரணமாக அவர் 2017 நவம்பர் மாசம் காலமாகிவிட்டார்.
#தூர்தர்ஷனில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற கல்வி ஒளிபரப்பு மிக முக்கியமானது. 17 ஆண்டுகள் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி மூலம் நேயர்களுக்குத் தமிழைச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்தார்.
ஏ.எல்.சீனிவாசன் நினைவு நாளின்று தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களாக விளங்கியவர்களில் ஏ.எல்.சீனிவாசன் மிக முக்கியமானவர். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான சீனிவாசனின் நினைவுகள் சில… சிவகங்கை மாவட்டம் (அன்றைய ராமநாதபுரம் மாவட்டம்) சிறுகூடல்பட்டியில் 1923 ஆம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சீனிவாசன் பிறந்தார். சாத்தப்பன் – விசாலாட்சி தம்பதிகளுக்கு மொத்தம் 9 பிள்ளைகள். அவர்களில் ஆறாவதாகப் பிறந்தவர் சீனிவாசன். சிறுகூடல்பட்டியில் எட்டாம் வகுப்பு வரை படித்த ஏ.எல்.எஸ்.க்கு சிறுவயதிலேயே சினிமா மீது ஆர்வம்.காரைக்குடியில் உள்ள சினிமா தியேட்டருக்கு (8 மைல் தூரம்) சைக்கிளில் சென்று, தொடர்ந்து மூன்று காட்சிகளையும் பார்த்து விட்டுத் திரும்புவாராம். குடும்ப சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாத சீனிவாசன், 1941-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நாற்பது ரூபாய் மாத சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த வேலையிலும் நீடிக்க முடியாமல் கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தவர், அங்கு திரைப்படங்களில் விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.அந்த சமயத்தில் தான் புதிய திரைப்படக் கம்பெனி ஒன்றை நிறுவினார். ‘கோயம்புத்தூர் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில், திருமலைசாமி கவுண்டர், முத்து மாணிக்கம், துரைசாமி கவுண்டர் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த ‘வேலைக்காரி’ படத்தை வெளியிட்டபோது அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு நல்ல வருவாயையும் ஈட்டி கொடுத்தது. 1951-இல் சென்னையில் ‘மெட்ராஸ் பிக்சர்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கினார். கலைஞர் கருணாநிதி கதை, வசனத்தில், எம்.எஸ்.விஸ்வ நாதன்–டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து முதன் முதலாக இசையமைத்த ‘பணம்’ என்ற திரைப்படம் இந்தக் கம்பெனி சார்பில் தயாரிக்கப்பட்டது தான்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் – பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஏ.தங்கவேலு, டி.ஏ.மதுரம், வி.கே.ராமசாமி ஆகியோர் நடிப்பில் உருவான இந்தப் படத்தை ஏ.எல்.சீனிவாசன் தயாரித்தார். சிவாஜிக்கு இது இரண்டாவது படம். அடுத்ததாக 1957-ஆம் ஆண்டு சிவாஜிகணேசன், பி.பானுமதி நடிக்க ‘அம்பிகாபதி’ என்னும் படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் என்.எஸ்.கிருஷ்ணன் காலமானார்.இதையடுத்து கம்பெனியின் பெயரை ‘ஏ.எல்.எஸ்.புரொடக்சன்ஸ்’ என்று மாற்றம் செய்து, 1958-இல் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க ‘திருடாதே’ என்ற படத்தைத் தயாரித்தார். இப்படம் எம்.ஜி.ஆருக்கு முதல் சமூகப்படமாக அமைந்தது. அடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘சாரதா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தையும், பி.மாதவனின் இயக்கத்தில் ‘மணி ஓசை’ என்ற படத்தையும் தயாரித்து இவ்விருவரையும் இயக்குநர்களாக அறிமுகம் செய்ததோடு, ஏ.பீம்சிங்கையும், கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலையும் அறிமுகப்படுத்தினார். ‘பெண் என்றால் பெண்’ (1967) என்ற படத்தில் வசன கர்த்தா ஆரூர்தாஸ் என்பவரை இயக்குநராக்கினார். ‘கன்னியின் சபதம்’, ‘நியாயம் கேட்கிறேன்’, ‘செந்தாமரை’, ‘சாந்தி’, ‘கந்தன் கருணை’, ‘சினிமா பைத்தியம்’, ‘லட்சுமி கல்யாணம்’ உள்ளிட்ட படங்கள் ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் வெளிவந்தவை தான். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்த இவர், தனது அக்கா மகள் அழகம்மை ஆச்சியை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஏ.எல்.எஸ் அவர்கள் 1977 ஆம் ஆண்டு, இதே ஜூலை 30 ஆம் தேதி தனது 54 வது வயதில் காலமானார்.
