அது ஒரு காலம்
பயணம் புறப்படும் இளைஞர் இளைஞிகள் கைக்குட்டை மறந்தாலும் கையில் பி.கே.பி.யின் க்ரைம் நாவல் இல்லாமல் பயணிப்பதில்லை.
பேருந்தோ ரயிலோ ஊர் வந்து சேர்வதே தெரியாமல் கடந்து வருவார்கள் , காரணம் கூடவே பிகேபி யும் பயணிப்பார்.
தஞ்சை, பட்டுக்கோட்டை, கோவை, சென்னை, நெல்லை என அந்த ஊர் பிரபலமில்லாத ஒரு கடையோ கோவில் அல்லது குளமோ குறிப்பிட்டு எழுதும்போது ஊர்வாசிகளே வியந்து வாசிப்பார்கள்.
வெளிமாநிலம், வெளிநாடுகள் என அந்தப் பகுதியில் வசித்த அனுபவமாய் இருக்கும் அந்த எழுத்துப் புழக்கம் , அத்தனையும் அழகும் சுவையும் கூட்டும் விறு விறு நடை.
டிக் டிக் லிப்ஸ்டிக், ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி, மேற்கு தொடர்ச்சிக் கொலை,
சாவி ஒன் சாவி டூ சாவித்திரி, நிற்காதே, கவனிக்காதே, காதலிக்காதே! இப்படி
நாவல் தலைப்பை ரசிக்கவே கல்லூரிக்கூட்டம் அலைமோதும்.
ஒரு முறை, தான் முதன் முதலில் எழுதிய சிறுகதை விகடனில் வெளிவந்தபோது….
விடியற்காலை எழுந்து அந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்த அனுபவம் இருக்கிறதே அதையே சிறுகதையாக்கலாம்.
அவ்வளவு திரில்லாக அந்தக் கட்டுரையை பின்னாளில் எழுதினார்..அது அவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது.
அவ்வப்போது எங்கள் இயக்குநர் திரைக் கதைத் திலகம் இயக்குநர் பாக்யராஜ் சார் அவர்கள் பிகேபியைக் குறித்து பெருமையாக சொல்வார்.
இப்போதும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாளில் வாழ்த்து அட்டையை எனக்கு அஞ்சல் வழியே அனுப்பி வாழ்த்தும் இவரது வாழ்த்துகளை நான் பொக்கிஷமாய் பாது காத்து வைத்திருக்கிறேன்!
சிறுகதை, நாவல், திரைக்கதை, வசனம், கட்டுரை , பேச்சாளர், பத்திரிகையாசிரியர் என பன்முகத் திறனாளர் , நண்பர்
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
அவரது பிறந்தநாள் இன்று.
நல் நலத்துடன் வளர் வளத்துடன்
இறையருளால் நிறை புகழால்
பிறந்த நாளில் மட்டுமல்ல
பிறக்கும் ஒவ்வொரு நாளும் சிறக்க செழிக்க
வாழ்த்துகிறேன்.
