தாமிரபரணி படுகொலை‘ தினம் ! 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் நடந்த தாமிரபரணி படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு பயங்கரமான மற்றும் மறக்க முடியாத சம்பவமாகும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மற்றும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். இந்த அமைதியான பேரணி, காவல்துறையின் மறுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த மோதலால் வன்முறையாக மாறியது. காவல்துறையின் தடியடியைத் தவிர்க்க முயன்று, பதினேழு பேர்—ஒரு ஒன்றரை வயது குழந்தை உட்பட—தாமிரபரணி ஆற்றில் குதித்து மூழ்கி உயிரிழந்தனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் குழந்தைகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்தப் படுகொலை, தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர்கள் மீது அரசு நடத்திய வன்முறையின் சின்னமாக மாறியது. இதனை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று “தாமிரபரணி படுகொலை நினைவு தினம்” கடைபிடிக்கப்படுகிறது, இதில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்துகின்றன. இந்தச் சம்பவம், அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் முக்கியத்துவத்தையும், தொழிலாளர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம். இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரியர்.
விடுதலைப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான பெ.வரதராஜுலு நாயுடு (P.Varadarajulu Naidu) நினைவு தினமின்று!
- சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் (1887) பிறந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வி கற்கும்போது, நாடெங்கும் பரவிய வந்தேமாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. மாணவர்களை ஒன்று திரட்டி ‘முற்போக்காளர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்.
- அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கேற்றதால், தொடர்ந்து கல்வி கற்க இயலவில்லை. சித்தவைத்தியம், ஆயுர்வேதம் கற்றுத்தேர்ந்தார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு, புகழ் பெற்றார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தேசிய அரசியலில் 19 வயதிலேயே ஈடுபட்டார்.
- புதுச்சேரியில் 1908-ல் பாரதியாரைச் சந்தித்தது, இவரது சுதந்திர வேட்கையை மேலும் அதிகரித்தது. 1916 முதல் தீவிர அரசியலில் பங்கேற்றார். மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஊக்குவித்துப் பேசியதற்காக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்.
- உயர் நீதிமன்ற மேல்முறையீட்டில் ராஜாஜி இவருக்காக வாதாடி விடுதலை பெற்றுத் தந்தார். 1917-ல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தை தொடங்கினார். பெரியகுளம் தாலுகா காங்கிரஸ் மாநாட்டில் தடையை மீறிப் பேசியதற்காக 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். காந்தியடிகள் 1920-ல் தமிழகம் வந்தபோது இவரது வீட்டில் தங்கினார்.
- காந்தியடிகள் 1922-ல் சிறையில் அடைக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வருமானவரி கட்டாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர், காந்தியடிகள் விடுதலையான பிறகுதான் செலுத்துவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதை அரசாங்கத்துக்கு தெரிவித்து இவர் எழுதிய கடிதம் காந்தியடிகளின் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தது.
- தமிழகம் முழுவதும் சென்று காங்கிரஸ், தேசியம், விடுதலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார். தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்த்த பெருமை இவருக்கும் உண்டு. 1925-ல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பணியாற்றினார். 1929-ல் காங்கிரஸில் இருந்து விலகி, ஆரிய சமாஜத்தில் இணைந்தார்.
- இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். பாரதியார், திருவிக-வுக்கு அடுத்து, தேசியத் தமிழ் இதழியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் எனப் போற்றப்பட்டார். ‘பிரபஞ்சமித்திரன்’ என்ற வார இதழ் மூலம் இதழியலில் அடியெடுத்து வைத்தார். நஷ்டத்தில் ஓடிய அந்த இதழை வாங்கி 2 ஆண்டுகள் நடத்தினார். அதில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்கையும் கடுமையாக சாடி எழுதினார். இதன் காரணமாக இவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அந்த இதழ் நின்றது.
*பின்னர் 1925-ல் ‘தமிழ்நாடு’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் இவர் எழுதிய கட்டுரைகள் தேசத் துரோகமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு 9 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார். பாரதியார் பாடல்களை சித்திர விளக்கங்களுடன் வெளியிட்ட முதல் இதழ் இதுதான். 1931-ல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் சென்னை பதிப்பைத் தொடங்கினார்.
- நாடு விடுதலை பெற்ற பிறகு 1951-ல் சென்னை மாநில சட்ட மேலவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல், சமூகம், தொழிற்சங்கம், இதழியல் என பல்வேறு களங்களிலும் முத்திரை பதித்த பெ.வரதராஜுலு நாயுடு 70-வது வயதில் இதே ஜூலை 23 (1957) மறைந்தார்.
பால கங்காதர திலகர் பிறந்த தினமின்று “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். முதன் முதலில் நாடுதழுவிய இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரிய இவர் இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர். இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதலில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்றவர் பால கங்காதர திலகர்.
பெண்ணுரிமை போராளி, சுதந்திர போராட்ட தியாகி, ஆசியாவிலேயே முதல் பெண் இராணுவபடை தளபதி, கேப்டன் லெட்சுமி சாகல் நினைவு நாள் இன்று! இந்தியாவிற்கான சுதந்திரத்தை ஆங்கிலேயர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பெற முடியாது. ஆயுதமேந்தினால் தான் இந்திய சுதந்திரம் அடையும் என இந்தியாவிற்கு ஒரு தனி ராணுவத்தை அமைக்க சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பு விடுத்த போது பெயர் கொடுத்த பெண்களில் முன்னோடி கேப்டன் லட்சுமி சாகல். சென்னை குயின்ஸ் மேரி கல்லூரியில் படித்துவிட்டு பின்னாளில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1938 ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கச் சேர்ந்தார். இன்று சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை என்று அழைக்கப்படும் அதே மருத்துவமனையில் தான் மருத்துவராக பணியாற்றினார். 1940களில் சிங்கப்பூருக்கு சென்றவர் அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்த போது அவரை நேரில் சந்தித்து அவருடைய இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர், ஜான்சியின் ராணி படைப் பிரிவுக்கு (பெண்கள் படை) தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது தான் அவருக்கு கேப்டன் பட்டம் கொடுக்கப்பட்டது. லட்சுமி சுவாமிநாதன் கேப்டன் லட்சுமி ஆனார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கான்பூரில் வாழ தொடங்கினர். கேப்டன் லக்ஷ்மி மீண்டும் ஸ்தெத்தஸ்கோப்பை கையில் எடுத்து மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். விளிம்பு நிலை மக்களுக்கு தன்னால் இயன்றவரை சேவை செய்தார்.1971ல் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 1972-ல் பங்களாதேசப் போர் நடைபெற்ற போது வலிய உதவி செய்யச் சென்றார். போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப்பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமைன்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றினார் ஒரு ராணுவ வீராங்கனையாக தன் வாழ்கையைத் தொடங்கி, மருத்துவராக சேவையாற்றி, மனிதத்தைப் பேசி, மருத்துவ கல்லூரிக்கு தன் உடலை தானம் செய்து உலகைவிட்டுப் பிரிந்த கேப்டன் லட்சுமி சாகலுக்கு வீர வணக்கம்
இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் “சந்திரசேகர ஆசாத்” (Chandra Shekhar Azad) பிறந்த நாள் 1931ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அலகாபாத்திலுள்ள ஆல்ப்ரெட் பூங்காவில் தீவிரமாக இளைஞர் ஒருவருக்கும், பிரிட்டிஷ் காவல்துறைக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்து கொண்டிருக்கிறது. நீண்ட நேரமாக நடைபெறும் சண்டையில் ஒரு முடிவு கிடைக்கவில்லை. ஒரு சூழலில் திருப்புமுனையாக அந்த இளைஞனின் காலில் குண்டு பாய்ந்து விடுகிறது. அப்போது அங்கு ஒரு மரத்தின் மீது சாய்ந்து அந்த இளைஞர் சரிகிறார். துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டாதான். என்ன ஆனாலும் ஆங்கிலேயர் கையில் இறந்து விட கூடாது என்று அந்த இளைஞனின் கண்ணில் தீர்க்கமான முடிவு. அந்த ஒரு குண்டை தன் தலையில் சுட்டுக்கொண்டு அந்த இளைஞர் அங்கேயே உயிரை மாய்த்து கொள்கிறார். பின்னாட்களில் அந்த இளைஞரின் பெயரே அந்த பூங்காவின் பெயராக மாறியது. அந்த மரம் தேசபக்தி கொண்டவர்களின் புனித ஸ்தலமாக மாறியது. அந்த இளைஞரின் பெயர்தான் சந்திரசேகர் ஆசாத். இவர் மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் பகத்சிங்கோடு தூக்கு மேடை ஏறியவர்களில் இவரும் ஒருவராக இருந்திருப்பார்.
