இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட ‘பஞ்சாபகேசன்’ அவர்கள்..!

இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட பஞ்சாபகேசன் அவர்கள்..!

ஆம் 13/07/25 அன்று மாலை திரு.ஹண்டே அவர்களின் தலைமையில், வேத விற்பனர் சூரிய நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில், பூலோகத்தில் இரண்டு லட்ச திருமணங்களை தன்னுடைய சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸில் ஏற்பாடு செய்து நடத்திவைத்து உலக சாதனை புரிந்த எளிய 74 வயது இளைஞருக்குப் பாராட்டு விழா நடந்தது!

சூரிய நாராயணன் பேசும் போது ஒரு திருமணத்தை நடத்தினால் அது ஒரு கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தினாற்போன்று புண்ணியம் வந்து சேரும் எனக் கூறினார்.

இரண்டு லட்சம் திருமணங்களை நடத்திவைத்த பஞ்சாபகேசன் அவர்கள் இரண்டு லட்சம் கோயில் கும்பாபிஷேகங்களைக் கண்டவர் என்ற கூற்றும் உண்மைதானே!

விழாத்தலைமையேற்றுப் பேசிய மாண்புபிகு முன்னாள் சுகாதார அமைச்சர், 98 வயதான, திரு. ஹண்டே அவர்கள், தாம் தம் மனைவியாரை மணந்து 70 ஆண்டுகள் பூர்த்தியானதைக் குறிப்பிட்டபோது, இவரைவிட திருமண பந்தங்களை உருவாக்கி மகிழும் பஞ்சாபகேசன் அவர்களை பாராட்ட தகுதியான நபர் உண்டோ என எங்களுக்குத் தோன்றியது!

விழா நாயகனை மொய்க்கும் நம் கண்களை கூசச் செயதன, அந்த இளைஞரைப் பாராட்டி மகிழ்ந்த எண்ணற்ற எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், உபன்யாசர்களும், என சாதனை புரிந்த நட்சத்திரங்கள் மேடையில் குழுமியது,  அந்த மாலைவேளையை ஜொலிக்க வைத்தன!

பத்திரிகையாளர்கள்- மக்கள்குரல் ராம்ஜி அவர்கள், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், எழுத்தாளர் இமயம் NCM அவர்கள், K.G.ஜவஹர் அவர்கள், பாலசாண்டில்யன் அவர்கள், TNR அவர்கள், ராம்கி அவர்கள், நாடக நகைச்சுவை வேந்தர் காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் திருமதி கிரிஜா அவர்கள், மற்றும் சேவையாளர்கள்- வெங்கடேஷ், அவர்கள், பாபு ராவ் அவர்கள், ஈசான நீலக்கண்ணன் அவர்கள், உரத்த சிந்தனை தலைவர் திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள் என கலையுலக நட்சத்திரப் பட்டாளமே வந்து வாழ்த்தியது!

திருமண பந்தத்தை உருவாக்கித் தரும் உன்னத சேவையை தமது வங்கி வேலையைவிட்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்தார் என்றால், அதையும் கடந்து தமிழகத்தின் கலையுலக சேவையையும் மேற்கொண்டு சாதனை புரிந்தவர் இவர் என பாராட்டியவர்களின் பேச்சுகளின் மூலமாக அறிந்து வியப்பெய்தினோம்!

எழுத்துத் துறையாகட்டும், இசைத்துறையாகட்டும், பல்வேறு சமூக நலப்பணிகளாகட்டும், எந்த ஒரு விழாவானாலும், முன்னின்று நடத்தி, வருவோர் செவிகள் நிறையும் போதே, வயிற்றுக்கு உணவளிக்கும் மகத்தான சேவையை தாம் மேற்கொண்டு பங்களித்தவர்  இவர் என அறிந்து நல்லியாருக்கு வாரிசாக இதோ எங்கள் பஞ்சாபகேசன் அவர்கள் என உரத்துக் கூறி மகிழ்ந்தார்கள்!

தன்னலம் மீறிய பேரன்பும், கருணையும் கொண்டு சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய சேவைகளை மனமுவந்து மேற்கொண்டு, தாமே ஒரு எழுத்தாளராகவும், கவிஞராகவும் மிளிர்ந்து, தேச சேவையாற்றிவரும் இந்த இளைஞரை வானளவு உயர்த்திப் போற்றினாலும், தகுமோ? நமக்குத் தான் மனதிருப்தி வருமோ?

இப்படி ஒரு சடையப்ப வள்ளலை நம்முடைய சென்னை மாநகருக்கு, தமிழகத்திற்கு கிடைத்த நற்பேற்றை பாராட்டாமல் போவது தான் தருமமோ?!!

இன்றைய நாளில், நவீன அதிவேக உலகத்தில், மாய கைப்பேசியின்  ஜாலத்தில் மதி மயங்கிப் போன இளைய சமுதாயம் .தொலைந்து போய்க்கொண்டிருக்கும் இந்த காலத்தில், இந்த கலைஞரைப் போல், வள்ளலைப் போல், வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நம்மனங்களிலே பதியச் செய்யும் இத்தகைய பெருவிழாக்கள் அவசியம் வேண்டும்!

இத்தகைமையாளர் வாழ்வாங்கு வாழ்ந்து, நல்லோர் ஒருவர் உளரேல் வானிரங்கி பொழியும் மழைபோல, இவரின் கருணையுள்ளத்திலிருந்து, பொழியும் கொடையும் வற்றாமல் இச்சமூகத்திற்குப் பயனளிக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு, வாத்தியார் சூரிய நாராயணார் அளித்த அருமையான உணவை உண்டு, மனதிருப்தியுடன் வீடு திரும்பினோம்!

இடையில் இலக்கியச் செல்வர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு நான் எழுதிய காவிய நாயகியர் புத்தகத்தைப் பரிசளித்து மகிழ்ந்தேன்!

-பால சாண்டில்யன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!