விண்வெளியில் தங்கள் கடைசி சில நாட்களின் காட்சிகளைப் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம்-4 பயணத்தின் 3 சக குழு உறுப்பினர்களான முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி தங்கள் ஆய்வு பணிகளை முடித்தனர்.
இந்தநிலையில், இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் கிரேஸ் விண்கலத்தில் புறப்பட்டு, சுமார் 22 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்குவார்கள். இதற்கு 4 விண்வெளி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில், விண்வெளியில் தங்கள் கடைசி சில நாட்களின் காட்சிகளைப் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நாசா
விண்வெளி வீரர் பெக்கி விட்சன், தன்னுடைய எக்ஸ் பதிவில், எங்கள் கடைசி சில நாட்களை நீரேற்றம் செய்யப்பட்ட இறால் உணவுகள் உண்டு மகிழ்ந்து, நல்ல நண்பர்களுடன் அனுபவித்தோம். அத்துடன், சுபான்ஷு சுக்லா இந்தியாவிலிருந்து கேரட் அல்வா, மாம்பழ ஜூஸ் கொண்டு வந்திருந்தார். சக விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரவு உணவை எடுத்து கொள்ளும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர் ஜானி கிம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்த பணியில் நான் அனுபவித்த மிகவும் மறக்க முடியாத மாலைகளில் ஒன்று, புதிய நண்பர்களுடன் ஒரு உணவைப் பகிர்ந்து கொண்டது’ என்று கூறி உள்ளார்.
