இந்திய தபால் துறையின் தந்தி (Telegraph) சேவை 2013 ஜூலை 14ம் தேதி இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனம் இந்தியாவில் 160 ஆண்டுகளாக இருந்த தந்தி சேவையை நிரந்தரமாக நிறுத்தியது. காரணங்கள்: தொழில்நுட்ப முன்னேற்றம் (மொபைல் போன், இமெயில், SMS) காரணமாக தந்தி சேவைக்கான தேவை குறைந்தது. நிதி நட்டம் (ஒரு தந்திக்கு ₹25-30 விலை வைத்து இருந்தாலும், செலவு அதிகமாக இருந்தது). கம்ப்யூட்டரில் இ-மெயில் வசதி. அதற்கு முன் “பேக்ஸ்’. அதற்கும் முன் “டெலி பிரிண்டர்’. இப்போது பேக்ஸ், டெலிபிரிண்டருமே காலாவதியாகி வரும் போது, தந்தி மரிப்பது “புதியன புகுதலும் பழையன கழிதலும்’ என்ற வகையில் ஒரு நியதியே. ஆனாலும், நள்ளிரவி சார் தந்தி என்றொரு குரல் கேட்டால் கிளம்பும் பகீர் இன்றைய இளசுகளுக்கு தெரியாது. ஆம்.,தந்தி சேவகனைக் கண்டால், என்ன கெட்ட செய்தியோ என்று, குடும்பமே பதைபதைக்கும் காலமும் இருந்தது. அப்போது, பெரும்பாலான தந்திகள் மரணச் செய்திகளே. தந்தியின் ஜனனமே, ஒரு மரணத்திற்குப் பின்தான், தெரியுமா? வாழ்த்துத் தந்திகள், தந்தி மணியார்டர் என்பவை, பிறகே வந்தன. தந்தியை மனுவாக பாவித்து, வழக்கை எடுத்து நடத்திய நீதிபதிகளும் உண்டு. உரிய காலத்தில், தூக்கு தண்டனையை நிறுத்திய தந்திகளும் உண்டு.
உலக மஞ்சள் தினம் (World Turmeric Day) இந்தியர்களின் வாழ்வியலில் மஞ்சள் இல்லாமல் ஒரு நாள் கூட முழுமை அடையாது என்று கூறும் அளவிற்கு மஞ்சள் நம் வாழ்க்கை முறையில் இன்றியமையாதப் பொருளாக இருந்து வருகிறது. முழு மனதுடன் நாம் மஞ்சளை ஏற்றுக் கொண்டிருக்கும் விதமும் மஞ்சள் உபயோகத்தின் மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் பல்லாயிரம் ஆண்டுகள் பரிச்சயத்தின் மூலமாக மட்டுமே வர முடியும். அதனை உறுதி செய்யும் விதத்தில் இந்தியாவின் மஞ்சள் பயன்பாடு குறித்த சான்றுகள் சிந்து சமவெளி நாகரிகம் முதலே கிடைக்கின்றன. சிந்துவெளி மக்கள் மஞ்சளை விளைவித்தது அகழ்வாராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், அங்கு கிடைத்தப் பானைகளை ஆராய்ந்ததில் மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை சமையல் செய்யப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மஞ்சளின் தாயகம் பண்டைய இந்தியாவாகும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டு மஞ்சள் (Turmeric / Haldi), அதன் மருத்துவப் பயன்கள், சமையல் முக்கியத்துவம் மற்றும் பண்பாட்டுத் தாக்கம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாளில், மஞ்சளின் ஆரோக்கியப் பயன்கள், வரலாறு மற்றும் அதன் பல்துறை பயன்பாடுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம். மஞ்சளின் முக்கியத்துவம்: ஆரோக்கியப் பயன்கள்: இயற்கை எதிர்ப்பு சக்தி ஊக்கி (Immunity Booster). எரிச்சல் குறைப்பான் (Anti-inflammatory). நோய் எதிர்ப்பு சக்தி (Antioxidant-rich). தொற்று எதிர்ப்பு (Antiseptic properties). சமையலில் பயன்பாடு: இந்திய, ஆசிய மற்றும் உலகளாவிய உணவுகளில் முக்கிய மசாலா. சிக்கன் கறி, சாம்பார், பால் (ஹல்தி டோடா) போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பண்பாட்டு & சடங்குகள்: இந்திய திருமணங்களில் ஹல்தி விழா.
கார்ல் மார்க்ஸ் அறிவித்த “8 மணி நேர வேலைதிட்டம்” தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தினம் இன்று 1889-ம் ஆண்டு 14-ம் நாள் பாஸ்டில் வீழ்ச்சியின் நூற்றாண்டு விழா பாரிஸில் நடந்தது. இதற்கான உலகெங்கிலுமிருந்து சோஷலிச இயக்க தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். 25 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் மாபெரும் ஆசான்களான மார்க்ஸும், எங்கெல்சும் உருவாக்கிய அகிலத்தை போன்ற ஒன்றை உருவாக்கவே அவர்கள் அங்கு கூடினர். பின்னர் அதுவே இரண்டாவது அகிலம் என்று அழைக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்கள் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து 8 மணி நேர இயக்கப் போராட்டத்தைப் பற்றியும், சமீபத்தில் அதற்கு புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டது பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதன் விளைவாக பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.– ‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது”
பிரான்சு நாட்டில் கொடுங்கோல் மன்னராட்சி முறைக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழ செய்த பிரெஞ்சு புரட்சி துவங்கியது. 1789, ஜூலை 14 – –பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். இன்றய தினம் பிரான்ஸ் நாட்டில் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சிவானந்த சரஸ்வதி என்ற இயற் பெயருடைய சுவாமி சித்தானந்தர் நினைவு நாள். அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மிக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திருப்பிக் கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மிக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துகளைச் சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.
சிகரம் தொடும் தமிழன் ஷிவ் நாடார் பிறந்த தினம் இன்று. 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள “மூலைபொழி” என்ற கிராமத்தில், சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாக ஷிவ் நாடார் பிறந்தார். 1968ஆம் ஆண்டு டெல்லி டி.சி.எம் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், ஷிவ் நாடார் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். 1970ஆம் ஆண்டு, ஐ.பி.எம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, ஷிவ் நாடார் தன்னுடைய “எச்.சி.எல்” நிறுவனத்தை வெற்றிகரமாகத் தொடங்கினார். 1982ஆம் ஆண்டு, எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80% பெருகியுள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என கூறலாம். 1980ஆம் ஆண்டில், எச்.சி.எல், ஐ.டி மென்பொருள் விற்க சிங்கப்பூர் மற்றும் தூரக் கிழக்குக் கணினி நிறுவனத்தை திறக்க சர்வதேச சந்தையில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினார். தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார், அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார். 1996இல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் நிறுவினார். 2011–ல் கரக்பூரில் உள்ள “இந்திய தொழில்நுட்ப கழக” குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய வாழ்க்கையில், சரியான பாதையை தேர்தெடுத்து, மிக விரைவில் இலக்கினை அடைந்து, குறுகிய காலத்திற்குள் ஷிவ் நாடார் தனது கடின உழைப்பால் புகழின் உச்சியை அடைந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.
1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்ட நாள் மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அந்தந்த சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன. கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன. மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
எவராலும் மறக்க இயலாத எம்.எஸ்.வி. நினைவு நாளின்று தொடக்கத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தாய்ங்க்க. பின்னாளில், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினாய்ங்க. மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினாய்ங்க மக்கள். அவரே… எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன். சேர நாட்டிளம் பெண்களுடனே என மகாகவியால் மகிழ்ந்துரைக்கப்பட்ட கேரள மாநிலம். பாரம்பரிய இசைக்கு பேர்போன பாலக்காடு. அதன் அருகேயுள்ள எலப்பள்ளி கிராமம். அங்குதான், 1932-ம் ஆண்டு “எம்.எஸ். விஸ்வநாதன்” என்ற இசைப்பறவை உருவானது. எம்.எஸ்.வி. என்ற அந்தக் குழந்தையின் முதல் அழுகை கூட நிச்சயம் சங்கீதமாகத்தான் இருந்திருக்கும். மூன்றரை வயதில் தந்தையை இழந்த எம்.எஸ்.வி., தாயின் அன்பிலும், தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயர் அரவணைப்பிலும் வளர்ந்தார். கண்ணனூருக்கு மாற்றம் செய்யப்பட்ட கிருஷ்ணன் நாயரோடு, அங்கே சென்ற எம்.எஸ்.வி.க்கு, இசை மீது தவிர்க்க முடியாத பற்று. 3 ரூபாய் கொடுத்து இசைப் பள்ளியில் சேரமுடியாததால், இசைப்பள்ளியின் ஆசிரியர் நீலகண்ட பாகவதருக்கு எடுபுடி வேலைகள் செய்து, இசையின் அகரம் அறிந்துகொண்டார் எம்.எஸ்.வி. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் எம்.எஸ்.வி. வளர, இசையும் அவரிடம், அவரை விட வேகமாக வளர்ந்தது. ஜூபிடர் பிக்சர்ஸ்… தமிழ் சினிமாவின் ஆலமரம். இங்கு S.V. வெங்கட்ராமன், வரதராஜூலு, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல இசைக்கூடுகள் சுவாசித்தன. இந்த இசையை, ரசிகர்களின் மனங்கள் நேசித்தன. எம்.எஸ்.வியின் தாய் மாமன் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், எம்.எஸ்.விக்கு அங்கு வேலை கிடைத்தது. S.M. சுப்பையா நாயுடுவிடம், இசை உதவியாளனாய் சேர்ந்தார் எம்.எஸ்.வி. படிப்படியாகத்தான் வளர்ச்சி, ஆனால் எல்லாப் படிகளிலும் முன்னேறிவிட முடியாமல் எம்.எஸ்.விக்கு எத்தனையோ தளர்ச்சி. என்ன செய்வது, என்னதான் அறிவு, ஆற்றல், அழகு இருந்தாலும், பிருத்திவிராஜன்கள் வரும்வரை சம்யுக்தைகள் காத்துக்கொண்டுதானே இருக்க வேண்டி இருக்கிறது!. வீர அபிமன்யு என்ற படத்தில், ஒரு பாடலுக்கான மெட்டு, இசை மேதை சுப்பையா நாயுடுவோடு போர் புரிந்துகொண்டிருக்க, சிறுவனான எம்.எஸ்.வி. யாருக்கும் தெரியாமல், அழகான மெட்டொன்றை வாசித்துக் காட்ட, மெய்சிலிர்த்த சுப்பையா நாயுடு, அந்த மெட்டைத் தன்னுடையது என இயக்குநரிடம் கொண்டுபோய் சேர்க்க, இது அற்புதம் என்று புகழப்பட்டு, அந்தப் பாடல் வெளியானது. முதல் முதலாக மெட்டு அமைத்தாலும், எம்.எஸ்.வி. பெயர் வராததால் ஏமாற்றம். தான் பெற்ற பிள்ளையை, வேறு ஒருவர் உரிமை கொண்டாடினால், உடைந்து போகாதா மனது. பரவாயில்லை. திறமைசாலிகள் துவண்டு விடமாட்டார்கள். எம்.எஸ்.வி துவளவில்லை. ஒரு வழியாக பல போராட்டங்களுக்குப் பிறகு, சென்னையில் இசையமைப்பாளர் C.R. சுப்பராமனிடம் உதவியாளனாய்ச் சேர்ந்து, எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டிருந்த “ஜெனோவா” படத்திற்கு, இசையமைப்பாளர் வாய்ப்பு எம்.எஸ்.விக்குக் கிடைத்தது. நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில், முதன்முதலாய் எம்.எஸ்.விக்கு ஒரு வசந்தம் அறிமுகமானது. இதில் சிறப்பாகப் பாடல்கள் அமைத்திருந்தார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என எத்தனையோ கதாநாயகர்களின் படங்களுக்கு எழுதப்பட்டிருந்த வெற்றியின் முகவரியில், எம்.எஸ்.வி.யின் பெயர் பிரதான இடம் பெற்றிருந்தது. சந்தம் பெரிதா? பாடல் பெரிதா? எல்லாம் சந்தங்களுக்கும் பாடல் எழுத முடியுமா? மெல்லிசை மன்னருக்கும், திரையுலகல் கம்பன் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி. ஆனால் இந்தப், போட்டியில் உண்மையான வெற்றி ரசிகர்களுக்குத்தான். அந்தப் பாடல்தான் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ என்ற பாடல். தமிழ் சினிமா இசை வரலாற்றில், அமர்க்களமான அத்தியாயமாகத் திகழ்ந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
