வேர்ல்ட் பாப்புலேசன் டே! உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படும். உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக திகழ்கிறது. உலக மக்கள் தொகை நாள் முதன்முதலில் 1989 இல் ஐநா மக்கள் தொகை நிதியத்தால் (UNFPA) அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 5 பில்லியனை எட்டியதைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், மக்கள் தொகை வளர்ச்சியால் ஏற்படும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது. அந்ட வகையில், 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள், மக்கள் தொகை வளர்ச்சியை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (Sustainable Development Goals – SDGs) இணைப்பது மற்றும் சமத்துவமான வளர்ச்சியை உறுதி செய்வது ஆகியவற்றை வலியுறுத்தலாம். இந்தியா, உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக (2023 இல் சீனாவை முந்தியது), மக்கள் தொகை மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை 1.4 பில்லியனைத் தாண்டியுள்ளது, இது பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பாக இருந்தாலும், வளங்களின் பற்றாக்குறை, வேலையின்மை, மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எழுப்புகிறது. இந்திய அரசு, குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி, மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.
ஸ்கைலேப் (Skylab) பூமியில் வந்து விழுந்த நாள் உங்களில் எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது? இந்த ஸ்கைலேப் ஆயுள் முடிந்த நிலையில் பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தது. அதை வைத்து மாலை முரசு போன்ற நாளிதழ்கள் அந்தந்த ஊரில் விற்பனை குறைந்த ஏரியாக்களின் மேப்பை போட்டு இங்கே எல்லாம் ஸ்கைலேப் வெடித்து சிதறி விழ வாய்ப்புண்டு என்று செய்தி போட்டு பீதியை கிளப்பியது 1973ம் வருசம் மே 14இல் ஏவப்பட்ட ஸ்கைலேப்-தான் நாசாவால்(அமெரிக்காவால்) ஏவப்பட்ட முதலாவதும், அமெரிக்கா தனியாக அனுப்பிய ஒரே விண்வெளி நிலையமுமாகும். (சோவியத் ஒன்றியம் 1971இலேயே முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1ஐ அனுப்பிபுடுச்சுது!) 1974 ஃபிப்ரவரிவரை 3 முறை மனிதர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தியபின் பயன்படுத்தப்படாமல்விடப்பட்ட ஸ்கைலேப்பை மேம்படுத்தி, மீண்டும் பயன்படுத்தும் திட்டங்கள் செலவைக்கருதி கைவிடப்பட்ட நிலையில், 77.5 டன் எடையுள்ள அது, சுற்றுவட்டப்பாதையைவிட்டு புவியைநோக்கி வரத்தொடங்கிபுடுச்சு. அப்படி வந்து நம் வளிமண்டலத்திற்குள் நுழையும் ஸ்கைலேப் சிதறும்போது, 152இல் ஒரு சிதறல் மனிதனைத் தாக்குவதற்கும், 7இல் ஒரு சிதறல் ஒரு லட்சம்பேருக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களைத் தாக்குவதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் கணிக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், உலகம் முழுவதும் மக்கள் தங்கள் தலையில் விழுந்துவிடுமோ என்று விண்ணைப் பார்த்துக்கொண்டே அலையும் அளவுக்கு பரபரப்பு ஏற்பட்டுச்சு. குறிப்பா இந்தியாவில், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் மத்தியில் அச்சம் பரவியது.விழுப்புரத்தில், ஜூலை 11, 1979 அன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஒரு முழு ஊரடங்கு போன்ற நிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை, பள்ளிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. இந்திய அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள், ஸ்கைலேப் விழுந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. உதாரணமாக, இந்தியாவின் அம்புட்டு மாநிலங்களிலும் காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டது, மேலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முக்கியமான மணி நேரங்களில் விமானங்களைத் தடை செய்ய திட்டமிட்டது. மேலும் ஸ்கைலேப் டி-ஷர்ட், தொப்பி என்று பலவும் விற்பனைக்கு வந்துச்சு. ஸ்கைலேப் மேலே விழாமல் தவிர்க்கும் தொப்பி என்றும் மீறி விழுந்தால் பணம் திருப்பித்தரப்படும் என்றும் விளம்பரங்கள் எல்லாம் அவுட் ஆச்சாக்கும். ஸ்கைலேப்-பின் சிதறலை முதலில் கொண்டுவருபவருக்கு பத்தாயிரம் டாலர் தருவதாக சான்ஃப்ரான்சிஸ்கோ எக்சாமினர் இதழ் அறிவிக்க, ஸ்கைலேப் விழுந்து தானோ, சொத்தோ பாதிப்படைபவருக்கு 2 லட்சம் டாலர் தருவதாக சான்ஃப்ரான்சிஸ்கோ க்ரானிக்கிள் அறிவிச்சுது. ஊடகங்களின் பங்கு: இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், ஊடகங்கள் ஸ்கைலேப் பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, மக்களிடையே பயத்தை அதிகரித்தன. உலகளவில், ஸ்கைலேப் எங்கு விழும் என்ற ஊகங்கள் பரவியதால், இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இது ஒரு பெரும் பேசுபொருளாக மாறியது. நம்நாட்டில், மக்கள் வானத்தை அவதானித்து, எதாவது விழுந்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருந்தனர். நான் அவரித்த நெல்லையில் மாலைமுரசு இதுக்காக ஸ்பெஷல் எடிசன் எல்லாம் போட்டு டவுண், பேட்டை மேப் எல்லாம் போட்டு இங்கெல்லாம் விழ சான்ஸ் இருக்குன்னு போட்டாய்ங்க ஒரு சூழலில் தென்ஆஃப்ரிக்காவில் விழலாம் என்று நாசா அறிவிச்சுது. இக்கணக்கீட்டில் ஏற்பட்ட 4 சதவீத பிழையால், ஸ்கைலேப் ஆஸ்திரேலியாவில் விழுந்துடுச்சு. அந்த சிதறல்கள் விழுந்த ஆஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியின் உள்ளாட்சி அமைப்பு, தங்கள் பகுதியைக் குப்பையாக்கிவிட்டதாக நாசாவுக்கு 400 டாலர் அபராதம் விதிச்சுது. நாசா செலுத்தாத அபராதத்தை, அமெரிக்காவில் வானொலி நிகழ்ச்சி நடத்தும் ஸ்காட் ப்ராட்லி என்பவர் நிதிதிரட்டி 2009இல் செலுத்தினாராக்கும்.
மும்பையில் அடுத்தடுத்து எழு ரயில்களில் எட்டு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன… 8 குண்டுவெடிப்புகளும் 11 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன. ஒவ்வொரு குண்டும் 8 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்தக் குண்டுகள் அனைத்தும் பயணிகள் இருக்கை கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. குண்டுகள் வெடித்த வேகத்தில் அந்தந்த ரெயில் பெட்டிகள் நொறுங்கிச் சிதறின. இவ்வெடி விபத்துகளில் 209 பேர் பலியாயினர் 817 பேர் படுகாயமடைந்தனர்.. – இந்தியன் முஜாஹிதீன் என்கிற தீவிரவாத அமைப்பு இக்குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக உளவுத்துறை நிறுவனங்கள் கூறின. பல கைது நடவடிக்கைகளும் நடந்தன. இந்த வழக்கு விசாரணை, மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில் தடா நீதிமன்றம், 100 பேரை குற்றவாளியாக அறிவித்து, 12 பேருக்கு மரணதண்டனையும், ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சத் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. மேல் முறையீட்டின்போது இக்குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட யாகூப் அப்துல் ரஸா என்ற தீவிரவாதிக்கு மட்டும் தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்உறுதி செய்தது, 10 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்த நாள் . இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் “நாவலர்” என்றும் ‘நம்பர் டூ’ அழைக்கப்பட்டார். தி.மு.க, மக்கள் தி.மு.க மற்றும் அ .தி.மு.க முதலான கட்சிகளில் இருந்துள்ளார் 1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார். 1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைந்த பொழுது ஏற்பட்ட பிணக்கால் மு. கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார். 1971 முதல் 1975 வரை மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார். 1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார். 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். அண்ணா இறந்த பொழுது பிப்ரவரி 3, 1969 முதல் பிப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன். இவரது வரலாறு மற்றும் விடுதலை போராட்டம் பற்றி தமிழர்களுக்கே கூட சரிவர தெரியாது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாளர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் கட்டாலங்குளம் அரசரான வீரர் அழகு முத்து கோன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய படைத்தளபதியான யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 6 படைத் தளபதிகளும் மற்றும் 248 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர். பீரங்கி முன் நின்ற சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவன் இவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகுமுத்து கோனின் வரலாற்றில் அவருடைய பிறந்த தினம் குறிப்பிடப்படவில்லை.இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களால் இன்றைய தினம் அழகுமுத்து கோனுக்கு குருபூஜை விழா நடத்தப்படுகிறது எனவே இன்றைய தினத்தை (ஜூலை 11 , 1710) அவரது பிறந்த நாளாகக் கொள்ளலாம்.
மதன் என்று அழைக்கப்படும் மாடபூசி கிருஷ்ணசாமி கோவிந்தகுமார் 78ஆவது பிறந்த நாள். இன்றையக் காலக்கட்டத்தில் சென்னை 757 அண்ணாசாலை என்ற முகவரி வாசலில் நின்று அந்த வளாகத்துக்குள் வருவோர் போவோரிடம் ‘மதன் என்றால் யார்?’ என்று கேட்டால் மேற்படி நபரை எவருமே குறிப்பிட மாட்டார்கள் என்பதே நிஜம்.. ஆனால் இவர் முன்னொரு காலத்தில் அந்த முகவரிக்கே அட்ரஸ் தந்தவர். இதழாளர்,கேலிச் சித்திர ஓவியர் மற்றும் திரைப்பட விமர்சகர் . இப்போது ஒரு இணையதள ஆசிரியராக இருக்கிறார்.குறைந்த அளவில் கோடுகளைப் பயன்படுத்தி சிறப்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் திறமைசாலி . இவர் ஒரு நடமாடும் என்சைக்கிளோபிடியா. விகடனில் தனது 23 வது வயதில் சேர்ந்தார் ..இரண்டு வருடங்களில் இணையாசிரியர் ஆகிவிட்டார் ..விகடனில் இவரது ஹாய் மதன் கேள்வி பதில்கள் அந்த காலத்தில் மிகவும் பிரபலமானவை . வந்தார்கள் வென்றார்கள் மனிதனுக்குள் ஒரு மிருகம் போன்றவை ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாக வெளி வந்து ஹிட் அடித்த தொடர்கள். ஸ்டார் விஜய்யில் மதன் திரைப்பார்வை என்ற நிகழ்ச்சியை வழங்கியுள்ளார் .. புத் யுகம் சேனலிலும் பங்களித்துள்ளார். சிறந்த திரைப்பட விமர்சகராக இருந்த காரணத்தால் கொலம்பியா டிரைஸ்டார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், பிலிப்பைன்சு நாட்டில் மணிலாவில் நடந்த காட்சில்லா திரைப்பட முன்னோட்டக் காட்சி மற்றும் இயக்குநர்களுடனான பேட்டிக்காக இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக மதன் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த தனிப்பெருமையும் இவருக்குண்டு. பிறப்பிடம் சென்னை , படித்தது BSC பிசிக்ஸ் மனைவியின் பெயர் ஜெயந்தி இரண்டு மகள்களும் உள்ளனர் , பெற்றோர் -கிருஷ்ண சாமி,ராதா பிடித்த கார்டூனிஸ்ட் -மாலி டேவிட் லோ ,கோபுலு R.K லட்சுமணன் ,கைல்ஸ்
சமயப் பணியையும் தமிழ்மொழி வளர்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு அருந்தொண்டாற்றிய குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள் இன்று மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் பிறந்தார் (1925). இவரது இயற்பெயர் அரங்கநாதன்.1945-ல் துறவறம் பூண்டு தருமபுரம் சைவ மடத்தில் துறவியாக இணைந்தார். ‘கந்தசாமித் தம்பிரான்’ என அழைக்கப்பட்டார். சைவ சித்தாந்தங்கள் தொடர்பான அனைத்தையும் பயின்றார். பல்வேறு சமயப் பணிகளுடன் சொற்பொழிவு ஆற்றியும் வந்தார். திருவண்ணாமலை சைவ மடத்தின் ஆதீனப் பொறுப்பு இவரை நாடி வந்தது. அப்போது ‘தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு குன்றக்குடி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் ‘குன்றக்குடி அடிகளார்’ என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார். சமயப் பணிகளை மட்டுமல்லாமல் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். ஆதி திராவிடர்களை கோவில்களுக்குள் அனுமதித்தார். சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூஜைகள் நடத்த வலியுறுத்தினார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1967-ல் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மணிமொழி, தமிழகம், அருளோசை, மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் முதலிய இதழ் களையும் நடத்தி வந்தார். திருக்குறள் தொடர்பான இவரது படைப்பு கள், திருக்குறளின் ஆழத்தையும், செறிவையும் பிரதிபலித்தன. ‘திருவள்ளுவர்’, ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’ உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
