இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 18)

ஆட்டிஸ்டிக் பெருமை தினம் (Autistic Pride Day – ஜூன் 18) இந்த நாள், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ASD) உள்ளவர்களின் தனித்துவமான திறமைகள், பார்வைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த நாள் முக்கியம்? ஆட்டிஸ்டிக் நபர்களின் குரல்: “எங்களை ‘குணப்படுத்த’ வேண்டாம் – ஏற்றுக்கொள்ளுங்கள்!” நியூரோடைவர்சிட்டி: மூளை வேறுபாடுகள் இயற்கையான மனித பன்மை என்பதை வலியுறுத்துகிறது. திறமைகள்: ஆட்டிஸ்டிக் மக்களில் பலர் கணிதம், கலை, இசை, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அசாதாரண திறமைகளை கொண்டுள்ளனர். எப்படி ஆதரிக்கலாம்? சின்னங்கள்: ரெயின்போ இன்ஃபினிட்டி சின்னம் (∞) அணியவும்/பகிரவும். கற்றுக்கொள்ளுங்கள்: ஆட்டிஸம் பற்றிய தவறான கருத்துகளை சரி செய்யவும். ஆதரவு: ASD உள்ளவர்களின் தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் சமூக உரிமைகளை ஊக்குவிக்கவும். #AutisticPrideDay #Neurodiversity ஹேஷ்டேக்குகளுடன் சமூக ஊடகங்களில் பங்கேற்கவும். “ஆட்டிஸம் ஒரு ‘பிரச்சனை’ அல்ல – அது ஒரு வேறுபட்ட வாழ்க்கை முறை!” வேறுபாடுகளை கொண்டாடுவோம் – ஒரு சமத்துவ உலகை உருவாக்குவோம்.

சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை துவக்கி வைக்கப்பட்டது . அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. புண்ணியகோடி முதலியார் என்பவர் தானமாக அளித்த நிலத்தில், இந்தியப் பெண்கள் சங்கத்திடமிருந்து பெற்ற ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியைக் கொண்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினார் அவர். 1952 -ம் ஆண்டு, அக்டோபர் 10- ம் தேதி அப்போதைய பிரதமர் நேரு இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 12 படுக்கைகளுடன், அடையாறு கெனால் பேங்க் சாலையில் 1954- ம் ஆண்டு ஜூன் 18 – ம் தேதி முதல் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தற்போது 535 படுக்கைகளுடனும், பல்வேறு நவீன வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. வருடத்துக்குச் சராசரியாக 1.41 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுதோறும் 15 ஆயிரம் புதிய நோயாளிகள் இந்த மையத்துக்குச் சிகிச்சை பெற வருகிறார்கள். 1974 – ம் ஆண்டு, இந்த மருத்துவமனையைப் புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக மத்திய அரசு அறிவித்தது. தெற்காசியாவின் முதல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் இதுதான். கதிரியக்கப் புற்றுநோய் மருத்துவத் துறையும் (Radiation oncology department) , குழந்தைகளுக்கான புற்றுநோய்த்துறையும் (Pediatri oncology department) இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் ஏற்படுத்தப்பட்டது. அதிநவீன எக்ஸ்ரே மெஷின்கள், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள், 3D, 4D வசதி கொண்ட அல்ட்ராசோனிக் மெஷின்கள், எனப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான நவீன வசதிகள் அனைத்தும் இங்குள்ளன. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய, `டிஜிட்டல் மெமேகிராபி’ ( Digital Mammography ) வசதியும் இருக்கின்றன. புற்றுநோய் பற்றிய உயர் மருத்துவப் படிப்புகளான Doctorate of Medicine in Medical Oncology, M.Ch. (Surgical Oncology), Master of Chirurgiae in Surgical Oncolog ஆகிய படிப்புகள் தெற்காசியாவிலேயே இங்குதான் முதன்முதலில் கொண்டுவரப்பட்டன. ஆண்டுதோறும் 80 மாணவர்கள் இங்கு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் முதல் வாழ்நாள்(ஆயுள்) காப்பீட்டுப் பாலிசியை வில்லியம் கிப்பன்ஸ் என்பவருக்காக, ரிச்சர்ட் மார்ட்டின் என்பர் வாங்கியதாக, காப்பீடுகளைப் பதிவுசெய்யும் லண்டனின் ராயல் எக்ஸ்ச்சேஞ்சில் பதிவு செய்யப்பட்ட நாள் கிப்பன்சுக்காக மார்ட்டின் ஏன் காப்பீடு வாங்கினார் என்பது பதிவு செய்யப்படவில்லையென்றாலும், ஒரு தொழிலின் முக்கியமானவருக்காக நிறுவனத்தால் செய்யப்படும் காப்பீடான, கீமேன் இன்சூரன்சுக்கும் இதுவே முதலாவதாக இருந்திருக்கும் என்றே நம்ப வேண்டியுள்ளது. 4,800 பவுண்டு காப்புத்தொகைக்கு, 12 மாதங்களுக்குக் காப்பீடு வழங்குவதற்காக, 8 சதவீதம் பிரிமியம் என்று முடிவு செய்யப்பட்டு, 383 பவுண்டு, 6 ஷில்லிங், 8 பென்னிகள் வசூலிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில், 13 பேர்(அண்டர்ரைட்டர்) சேர்ந்து, இந்தக் காப்பீட்டை வழங்கியுள்ளனர். 12 பென்னி ஒரு ஷில்லிங், 20 ஷில்லிங் ஒரு பவுண்ட் என்றிருந்த அக்காலத்தில், தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியமே சுமார் 10 பென்னிகள்தான் (ஒரு பவுண்டில் 24இல் ஒரு பங்கு)! அதாவது, ஒரு தொழிலாளியின் 316 ஆண்டு ஊதியத்தின் அளவுக்குக் காப்பீடு செய்யப்பட்டது! இவ்வளவு பெரிய தொகைக்கு ஏன் காப்பீடு செய்யப்பட்டது என்பதற்கான விளக்கங்கள் பதிவு செய்யப்படவில்லை . இச்சூழலில் 1584 மே 29இல் கிப்பன்ஸ் இறந்து போனார். நமக்குத் தெரிந்த கணக்கீட்டின்படி, 1584 ஜூன் 17வரை கிப்பன்சுக்குக் காப்பீடு இருந்திருக்கும் என்பதால், இழப்பீடும் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், காப்பீட்டை அளித்தவர்கள், ஒப்பந்தத்தில் 12 மாதத்துக்குத்தான் காப்பீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஒரு மாதத்துக்கு 28 நாட்கள்(நான்கு வாரங்கள்) வீதம் 336 நாட்களுக்குத்தான் காப்பீடு, கிப்பன்ஸ் இறந்தது 345 நாட்கள் கழித்து என்பதால், காப்பீடு முடிந்துவிட்டது என்று கூறி இழப்பீடு தர மறுத்துவிட்டனர். காப்பீட்டுப் பதிவாளரான ரிச்சர்ட் சாண்ட்லர், லண்டனின் மேயர் ஆகியோர் மார்ட்டின் தரப்பை ஏற்க, மார்ட்டின் வழக்குத் தொடர்ந்தார். இதன்மூலம், ஆயுள் காப்பீடு தொடர்பான உலகின் முதல் வழக்காகவும் இதுவே ஆனது! அக்காலம் வரையுமே கடல் வணிகம் தொடர்பானதாகவே காப்பீடு இருந்ததால், இந்த வழக்கு கடற்படை நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்ட அது, மார்ட்டினின் கோரிக்கையை சரியென்று ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, 1587இல் தீர்ப்பளித்தது.

சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவருமான சின்ன அண்ணாமலை (Chinna Annamalai) பிறந்த/ காலமான தினம் இன்று. காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில் (1920) பிறந்தார். இயற்பெயர் நாகப்பன். தேவகோட்டை உறவினர் குடும்பத்துக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்ட இவருக்கு அண்ணாமலை என்று பெயரிடப்பட்டது. தன் வீட்டில் காந்திஜியை நேரில் பார்த்ததால், 9 வயதிலேயே இவரது மனதில் காந்தியமும், தேசப்பற்றும் வேரோடின. 13ஆவது வயதில் சுதந்திரப் போராட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனந்த விகடனில் கல்கி எழுதிய தலையங்கங்களை மனப்பாடம் செய்து மேடைகளில் பேசி, பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டார். ராஜாஜியின் கள்ளுக்கடை மூடல் போராட்டத்துக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், உயர்நிலைப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, போலீஸ் தடையை மீறி தேவகோட்டை பொதுக்கூட்டத்தில். பேசியதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடு விடுதலையடைந்த பிறகு, சென்னை வந்தார். ஏ.கே.செட்டியார், சக்தி வை.கோவிந்தன், வெ.சாமிநாத சர்மா ஆகியோர் ‘தமிழ்ப் பண்ணை’ புத்தக நிலையத்தை இவருக்காக ஆரம்பித்துக் கொடுத்தனர். ராஜாஜி, கல்கி, டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர உள்ளிட்டோரின் படைப்புகளை வெளியிட்டார். சிறந்த எழுத்தாளரான இவர் பல நூல்களைப் படைத்துள்ளார். ம.பொ.சி எழுதி வெளியிட்ட ‘வ.உ.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை, அவரையே விரிவாக எழுத வைத்து ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் மறுபிரசுரம் செய்தார். பல புதிய பதிப்பாளர்களை உருவாக்கினார். காந்திஜியிடம் நேரடியாக அனுமதி பெற்று அவரது ‘ஹரிஜன்’ இதழை தமிழில் தனது பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ‘வெள்ளிமணி’ என்ற வார இதழையும் தொடங்கினார். தேசியச் செல்வர்’, ‘சிரிப்புக்கு ஒரு சின்ன அண்ணாமலை’ என் றெல்லாம் போற்றப்பட்ட சின்ன அண்ணாமலை 1980 ஜூன் 18ஆம் தேதி தனது 60ஆவது பிறந்தநாள் விழாவின்போது காலமானார்.

வாழ்ந்து வரலாறு ஆன எளிமை மற்றும் நேர்மையின் உருவமான .கக்கன் அவர்களின் பிறந்த நாள். கக்கன் எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை…காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.. அதுவும் பொதுப்பணித்துறை மந்திரி…மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்… தோழர் ஜீவாவின் தலைமையில்தான் கக்கனின் திருமணம் நடந்தது. ஒய்வு பெற்ற காலத்தில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். இவருக்கு யாரும் எழுந்து உட்காரவும் இடம் கொடுக்கவில்லை. தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் பொது வார்டில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர். முதலமைச்சர் எம்.ஜி.யார். வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்…எதையாவது தாங்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என எம்.ஜி.ஆர் தொடர்ந்து வற்புறுத்தவே அரசு பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் மட்டும் போதும் என்று பெற்றுக் கொண்டவர். பின்னர் எம்.ஜி.ஆர் சென்னை திரும்பியவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றிற்கு உத்தரவிட்டார். அத்தோடு கக்கனுக்கு முதியோர் ஓய்வூதியமும் கிடைக்க வழியேற்படுத்தினார். இவர்தான் தியாகி கக்கன் அவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!