பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் (World Day to Combat Desertification and Drought) நோக்கம்: விழிப்புணர்வு: பாலைவனமாதல் மற்றும் வறட்சியின் தாக்கங்கள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். நிலையான நில மேலாண்மை: நிலச் சிதைவைத் தடுக்கவும், நிலையான நிலப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும். வறுமை ஒழிப்பு: வறட்சி மற்றும் நிலச் சிதைவால் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு பொருளாதார உதவி மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைய முயற்சித்தல். சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பருவநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல். முக்கியத்துவம்: பாலைவனமாதல்: வளமான நிலங்கள் வறண்டு, பயனற்ற பாலைவனங்களாக மாறுவது, மக்கள்தொகை பெருக்கம், காடழிப்பு, முறையற்ற விவசாயம், மேய்ச்சல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றால் ஏற்படுகிறது. வறட்சி: நீண்டகால மழைப்பொழிவு குறைவு, நீர் ஆதாரங்களின் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவு ஆகியவை வறட்சிக்கு வழிவகுக்கின்றன. இந்த நாள், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கவும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், பல்லுயிர் இழப்பைத் தடுக்கவும் உந்துதல் அளிக்கிறது. நடவடிக்கைகள்: விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: மரம் நடுதல், மண்ணரிப்பு தடுப்பு, மற்றும் நீர் சேமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்: உலகளவில் அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துதல். நிலையான திட்டங்கள்: மழைநீர் சேகரிப்பு, சொட்டு நீர் பாசனம், மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல். தமிழ்நாடு சூழல்: தமிழ்நாட்டில், மழை மறைவு பிரதேசமாக இருப்பதால், பருவமழை பொய்ப்பது மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவது வறட்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் மழைநீர் சேமிப்பு இல்லாமை ஆகியவையும் பிரச்சினைகளை அதிகரிக்கின்றன. முக்கிய செய்தி: இந்த நாளில், உலக மக்கள் மண்ணைக் காப்பாற்றவும், வறட்சியை எதிர்த்து போராடவும் அழைப்பு விடுக்கப்படுகிறது. “மண்ணைக் கா ப்பது எதிர்கால தலைமுறைகளுக்கான முதலீடு” என்பது இதன் மையக் கருத்தாகும். இந்த நாளை முன்னிட்டு, மரம் நடுதல், நீர் சேமிப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் பங்கேற்பது அனைவரின் கடமையாகும்.
1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு காலமான நாளின்று. சுதந்திர போராட்ட காலத்தில் வ.உ.சி. கைது செய்யப்பட்ட போது நெல்லையில் கலவரம் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் 4 பேரை அப்போதைய ஆங்கிலேய துணை கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக் கொன்றார். அதன்பிறகு கலெக்டரான ஆஷ்துரை, 1911–ம் ஆண்டு ஜூன் 17–ந் தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு ரெயிலில் சென்றார். மணியாச்சி ரெயில் நிலையத்தில் ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் கழிவறைக்குள் சென்று அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். வீரவணக்கநாள் நிகழ்ச்சி ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக போராடிய வாஞ்சிநாதன் உயிர் நீத்த நாளான ஜூன் 17–ந் தேதி அவரது நினைவை போற்றும் வகையில் செங்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்கநாள் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் 17–ந் தேதியான இன்று செங்கோட்டையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடக்கிறது. வாஞ்சிநாதன் உயிர்நீத்த நேரமான காலை 10.35 மணிக்கு நகரசபை சங்கு ஒலிக்கப்படும். அப்போது அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துகிறார்கள்.அதன்பிறகு வாஞ்சிநாதன் சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள், பள்ளிக்கூட மாணவ– மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), மறைந்த தினம் ஜான்சி ராணி லட்சுமிபாய் 1835 ல் பிறந்தார். வீரம் என்றால் அது ஜான்சி ராணி என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். இவரின் இயற்பெயர் மணிகர்ணிகா. சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். குதிரைஏற்றமும், வாள் வீச்சும் நன்கு கற்றார். அந்நாட்களில் வெகுவிரைவில் திருமணம் செய்துவிடுவர். ஜான்சியை ஆண்ட கங்காதர் என்பவரை 1842 ல் (7 வயதில்))மணம்புரிந்தார். பின்னர் அவர் பட்ட துன்பங்கள் பல! தன் சொந்த வாழ்வில் குழந்தை, கணவனையும் இழந்தாலும் மனம் தளராது இரும்பு உள்ளம் கொண்டு தான் தத்து எடுத்த தாமோதர் என்ற தனது உறவினரின் குழந்தையை தனக்குப் பின்னால் குதிரையில் கட்டிக்கொண்டு நமது நாட்டிற்காக வெள்ளையர்களுடன் போராடினார். தனது படைவீரர்களை முன்னின்று வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடன் மிகத் துணிச்சலுடன் போர் புரிந்தார். 1858 –ம் வருடம் ஜூன் மாதம் 17ம் தேதி போர் முனையில் காயம் அடைந்து வீர மரணம் அடைந்தார். அப்பொழுது அவருக்கு வயது 22 மட்டுமே! வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவானபோது அதற்கு ஜான்சிராணி படை என்றுப் பெயரிட்டார். இதிலிருந்து அவர் பெருமை விளங்கும்.
