இந்தியாவின் புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண் நினைவு நாள் -ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல்வாதிகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வரைந்து சமூகத்தின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் ஆர்.கே லக்ஷ்மண். இவரின் சகோதரர் தான் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன். முதலில் ‘தி ஹிந்து’வில் வரைந்த இவர் பின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் அறுபதாண்டு காலமாக ‘யூ செட் இட்’ (You Said it ) என்கிற தலைப்பில் காமன்மேன் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் அடித்த எள்ளல்கள் அபாரம். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஒரு அஞ்சல் தலையே அந்த ‘காமன்மேன்’ நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின் ‘மால்குடி நாட்கள்’தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப்பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின் கார்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர் வரைந்ததே! இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே ஹிந்தியில் வந்தது . இவரின் கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆயின. அவரின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுதும் மின்னுகிறார்கள். தற்போதும் அவர் உருவாக்கிய ’காமன்மேன்‘ சிலை நிற்கிறது மும்பையில். அவரின் தைரியம் பலரால் சுவீகரிக்க பட்டு இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த ஒரு கார்ட்டூனிஸ்டின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆங்கிலப் பத்திரிக்கை வாசிப்பவர்கள் யாரைக் கேட்டாலும் எல்லோரும் சொல்லக் கூடிய ஒரே பதில் ஆர்.கே. லக்ஷ்மன் ஆகத்தான் இருக்கும்!!
பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் காலமான தினமின்று ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதி தனி பெருமை படைத்தவர். மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். இளமைக் கல்வியை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1889 இல் கலைமாணி (B.A.) பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதனால் விரக்தியில் ஆழ்ந்திருந்த சமயத்தில், தனது மனத்தை ஞான மார்க்கத்தில் செலுத்தினார். பிரம்மவாதின் என்ற ஆங்கிலத் திங்களிதழில் Man his littleness and greatness என்ற தனது முதல் கட்டுரையை எழுதினார். இவருடைய எழுத்துக்கள், இவர் வாழ்க்கையின் ஆன்மிகத் தேடலின் பிரதிபலிப்பாக அமைந்தன. பின்னர் சுவாமி விவேகானந்தரால் பணிக்கப்பட்டு பிரபுத்த பாரதா என்ற ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் எழுதிய தத்துவ விசாரணை கட்டுரைகள், பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. தமிழில் முதல் நாவல் என சொல்லப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1870ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜமய்யர், தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத பத்திரிக்கையில் தொடராக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அப்போது வயது 21. ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். பின்னர் இதே மே 13 ஆம் நாள் 1898 ஆம் ஆண்டு ,தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக இயற்கை எய்தினார். பிரபுத்த பாரதாவின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் முதலாவது எஃப்எம் (FM) வானொலி நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு வானொலி தொழில்நுட்பத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது, ஏனெனில் எஃப்எம் அலைவரிசைகள் அதிக தெளிவான ஒலி தரத்தையும் குறைந்த குறுக்கீடுகளையும் வழங்கின 1. இந்த அறிமுகம், பின்னர் உலகளவில் எஃப்எம் வானொலியின் பரவலான பயன்பாட்டிற்கு வழிவகுத்தது. குறிப்பாக, இசை மற்றும் தரமான ஒலிபரப்புகளுக்கு எஃப்எம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
விடுதலைப் போராட்டத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான ஹஸ்ரத் மொகானியின் நினைவு நாள் இன்று. இவர் தான் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற ஆவேசமிக்க முழக்கத்தை நமக்கு அளித்தவர். இந்தியாவில் முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஸ்வாமி குமரானந்தாவுடன் இணைந்து 1921 ஆம் ஆண்டில் பூரண சுயராஜ்யம் என்ற முழக்கத்தை எழுப்பியவர்.இருவரும் இணைந்து பூரண சுயராஜ்யம் என்ற முழக்கத்தை முன்வைத்து, 1921 அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். அதன் பின்னரே, இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேற வேண்டும், முழுமையான அரசியல் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை ஆவேசத்துடன் எழுந்தது.
