இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 26)

அறிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2001ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 26ம் தேதி இத்தினத்தின் நிகழ்வுகள் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தினத்தன்று கருத்தரங்குகள், கூட்டங்கள், விசேட நிகழ்ச்சித் திட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் போன்றவற்றினூடாக மக்கள் மத்தியில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கின்றது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் எனும்போது மனிதனின் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கத்தை வழங்கி அக்கண்டுபிடிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் விளக்கத்தை வழங்கும் அதேநேரத்தில் கண்டுபிடிப்பாளர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளும் இத்தினத்தன்று முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது

அமெரிக்கப் புரட்சிப்போரின்போது, சிபில் லூடிங்ட்டன் என்ற 16 வயதுப் பெண், இரவு முழுவதும் குதிரையில் பயணித்து, எதிரிகளின் (இங்கிலாந்துப் படைகள்தான்!) வருகையை அறிவித்து, குடிப்படைகளை எச்சரிக்கை செய்த நாள். இதனால், அமெரிக்க விடுதலைப்போரின் நாயகியாக இவர் கொண்டாடப்படுகிறார். அமெரிக்காவிலிருந்த ஃப்ரெஞ்ச்சுக் குடியேற்றங்களுடனான போரில் ஏற்கெனவே பங்கேற்று அனுபவம்பெற்றிருந்த சிபிலின் தந்தை, அமெரிக்க விடுதலைப்போரில் தானே இணைந்துகொண்டார்.அவரது தலைமையின்கீழ் 400 குடிப்படையினர் இருந்தனர். குடிப்படை என்பது முறைப்படியான ராணுவம் அல்ல.தேவையின்போது போரில் ஈடுபடும் இவர்கள், அடிப்படையில் பிற பணிகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள் என்பதால், குடிப்படை எல்லா நேரங்களிலும் போருக்குத் தயாராக இருக்காது. எதிரிகள் வரும் தகவல் கிடைத்ததும், தொலைவில் அமைந்திருந்த கிராமங்களிலிருந்த குடிப்படையினரை எச்சரிக்க, இரவு 9 மணிக்குக் கிளம்பி, மலைப்பாதையில் இருளில் அதிகாலைவரை பயணித்தார் சிபில்.குதிரையை ஓட்டவும், குடிப்படையினரின் வீடுகளின் கதவைத் தட்டவும் ஒரு குச்சியைப் பயன்படுத்தினாராம்.அதற்கு முன்பே ஒருமுறை, அவர் தந்தையைப் பிடிக்க இங்கிலாந்துப் படைகள் வந்தபோது, வீட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி, குழந்தைகளை ராணுவம்போல நடக்கச் செய்து, நிறைய வீரர்கள் இருப்பதான நிழல் தோற்றத்தை ஏற்படுத்தி, தந்தையைக் காத்தாராம். அமெரிக்க விடுதலைப்போரின்போது, இதுபோல தகவல் சொல்லப் பயணித்த பால் ரிவியர், வில்லியம் டேவ்ஸ் உள்ளிட்ட பலரைப் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சிபில் பற்றி பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் 1880வரை இல்லை என்பதால், இதைச் சிலர் மறுக்கிறார்கள்.ஆனாலும், 1900இலிருந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார். சிபில் பயணித்த வழிகளில் பல நினைவுச் சின்னங்கள் 1935இல் அமைக்கப்பட்டன.1961இல் கார்மெல்-லில் அவருக்குச் சிலையும் அமைக்கப்பட்டது. சிறிய சிலைகள் பல இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன், 1975இல் அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது. சிபிலை கவுரவிக்கும்விதமாக, கார்மெல்-லில் 1979இலிருந்து ஒவ்வோராண்டும் ஏப்ரலில், அவரது சிலையில் முடிவுறும்படி 50 கி.மீ. தொலைவுக்கு அல்ட்ரா-மாரத்தான் ஓட்டப்பந்தயம் மலைப்பாதையில் நடத்தப்படுகிறது.

உலக விமானிகள் தினம் இது விமானிகளின் திறமை, தைரியம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் நாளாகும். இந்த நாள் 2014இல் தொடங்கப்பட்டு, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற சர்வதேச விமானிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (IFALPA) மாநாட்டில் உருவாக்கப்பட்டது. விமானிகளின் பாதுகாப்பு, பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு இந்த நாள் முக்கியத்துவம் அளிக்கிறது. விமானிகளின் சிறப்புகள்: தைரியம் & தன்னம்பிக்கை – விமானிகள் அபாயகரமான சூழ்நிலைகளில் அமைதியாக செயல்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிர்களைப் பாதுகாக்கிறார்கள். தொழில்நுட்ப திறன் – சிக்கலான விமானக் கட்டுப்பாடுகள், வானிலை மாற்றங்கள் மற்றும் நெருக்கடி நேரங்களில் விரைவான முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். உலகை இணைப்பவர்கள் – விமானிகள் வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் பொருளாதாரங்களை இணைக்கும் பாலமாக உள்ளனர். போர் & மீட்புப் பணிகள் – இராணுவ விமானிகள் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறார்கள். மீட்பு விமானிகள் பேரிடர் நேரங்களில் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள். வரலாற்று சாதனைகள் – ரைட் சகோதரர்கள் (Wright Brothers) – முதல் விமானத்தை கண்டுபிடித்தவர்கள். அமேலியா ஈயர்ஹார்ட் (Amelia Earhart) – முதல் பெண் விமானி. நீலகண்ட சாமி (India’s first pilot) – இந்திய விமானத்துறையின் முன்னோடி. விமானிகள் வானத்தை வெல்வதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் கனவுகளையும் நனவாக்குகிறார்கள்!

ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்ற ஜான் வில்க்ஸ் பூத், சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று. ஏப்ரல் 14, 1865 இல் வாசிங்டன், டி. சி. ஃபோர்டு திரை அரங்கில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் ஜான் வில்க்ஸ் பூத். ஜான் வில்க்ஸ் பூத் மேரிலாந்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான பூத் திரையரங்கு குடும்பத்தில் பிறந்தார். அவர் மாரிலாந்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார்.ஜான் வில்க்ஸ் பூத் ஒரு கூட்டமைப்பின் ஆதரவாளராக இருந்தார். அமெரிக்காவின் அடிமை முறையை ஒழிப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். இக்கூட்டமைப்பினர், துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் மாநில செயலாளர் வில்லியம் எச். ஸீவார்ட் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டிருந்தனர். ஸீவார்ட் காயங்களுடன் தப்பித்தார். துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சனைக் கொலைச் செய்ய இருந்த ஜார்ஜ் அட்ஜேரார்ட் அவரைக் கொல்வதற்கு பதிலாக மது அருந்திவிட்டு சென்றதால் ஆண்ட்ரூ ஜான்சன் தப்பித்தார். சதித் திட்டத்தை நிறைவேற்றுவதில் பூத் மட்டுமே வெற்றிபெற்றார். ஜான் வில்க்ஸ் பூத் லிங்கனின் தலையில் துப்பாக்கியில் சுட்டார். இதில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அடுத்த நாள் காலை மரணம் அடைந்தார். ஜான் வில்க்ஸ் பூத் ஜனாதிபதியின் பெட்டியிலிருந்து மேடையில் குதித்தார். அங்கு அவர் தனது கத்தியால் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி தப்பிச்சென்றார். காரெட்டின் பண்ணையில் பூத் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஏப்ரல் 26 ம் தேதி அதிகாலையில், படையினர் காரெட்டின் புகையிலை களஞ்சியத்தில் மறைந்திருந்தவர்களை பிடித்தனர். டேவிட் ஹரோல்ட் சரணடைந்தார். ஆனால் பூத் சரணடைவதற்கு மறுத்தார். “நான் வெளியே வந்து சண்டை போட விரும்புகிறேன்” என்றார். வீரர்கள் பின்னர் பண்ணைக்குத் தீ வைத்தனர். பூத் எரியும் களஞ்சியத்தில் உள்ளே நுழைந்தபோது, இராணுவ வீரர் பாஸ்டன் கார்பெட், அவரை சுட்டார். கழுத்தில் காயம் அடைந்த பூத், மூன்று மணி நேரத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு அப்பொழுது வயது 26

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை காலமான தினம்: மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல்தான் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. **** நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே

கணிதமேதை இராமானுஜர் காலமான தினமின்று! ஈரோட்டில் பிறந்தவரென்றாலும் இங்கிலாந்து போய் கணிதத் துறையில் உச்சம் தொட்டவர் இந்த ராமானுஜன். கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள் தந்தை துணிக்கடையில் கணக்காளராக இருந்தார். ஏழு வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார். : பள்ளி பருவத்திலேயே பல கணித இணைப்பாடுகளை (பார்முலா) மனப்பாடம் செய்து ஒப்புவித்தலில் திறன் பெற்று, கலைமகளின் பூரண அருள் பெற்றவராக ஆனார். ‘பை’ யின் மதிப்பை பல தசமத்தில் நண்பர்களிடம் தெளிவாக சொல்லி புரியவைத்துள்ளார். 1917 ம் ஆண்டு இங்கிலாந்து பல்கலை எப்.ஆர்.எஸ்., (FRS) பட்டம் ராமானுஜத்திற்கு வழங்கியது. டிரினிடி கல்லுாரி ‘பெல்லோஷிப்’ பெற்றும் பெருமையும் சேர்த்தார். தனது வாழ்நாளில் ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி, அறிஞர்களை வியக்க செய்தவர் இவர். ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் இதே ஏப்ரல் 26ல் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும். ஆக ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.

இப்போது ஹாட் டாப்பிக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரி சிங் நினைவு நாளின்று செப்டம்பர் 1895ல் ஜம்முவின் அமர் மஹால் மாளிகையில் பிறந்தார் மகாராஜா ஹரி சிங். இவரது தந்தை ராஜா அமர் சிங்-கிற்கு பிறந்த மகன்களில் உயிர் பிழைத்த ஒரே மகன் ஹரி சிங் மட்டும் தான். ராஜா அமர் சிங்கின் சகோதரர் பிரதாப் சிங் அவர்கள் தான் இதற்கு முன் ஜம்மு காஷ்மீரின் மன்னராக விளங்கி வந்தார். பிரதாப் சிங்கின் மரணத்திற்கு (செப்டம்பர் 1925) பிறகு, அவரது தத்துப்பிள்ளை ஜகத் தேவ் சிங்கிற்கும், ஹரி சிங்கிற்கும் இடையே யார் அரியணை ஏறுவது என்ற சலசலப்பு நிலவிய போது, பிரிட்டிஷ் தலையிட்டு, மகாராஜா ஹரி சிங்கிற்கு அரியணையை வழங்கியது.1926 பிப்ரவரி 22 – 26 நாட்களில் மகாராஜா ஹரி சிங்கிற்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. மன்னராக பொறுப்பேற்ற பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைமுறையை கொண்டு வந்து பிரஜா சபா அமைய ஏற்பாடுகள் செய்தார் ஹரி சிங். இந்த பிரஜா சபாவில் 75 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர் (12 அரசு அதிகாரிகள், 16 ஸ்டேட் கவுன்சிலர்கள், 14 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 33 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்). தேர்ந்தெடுக்கப்பட்ட 33 உறுப்பினர்களில் 21 பேர் இஸ்லாமியர்கள், 10 பேர் இந்து, 2 சீக்கியர்கள் இடம் பெற்றிருந்தனர். மகாராஜா ஹரி சிங் 4 திருமணம் செய்தவர். தனது முதல் மூன்று மனைவிகள் மூலம் இவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. அவர்கள் மூவரும் குழந்தையின்மையின் சில வருடங்களில் மரணித்தனர். மனைவி இறந்த உடனே அடுத்த திருமணத்திற்கு தயாராவார் மகாராஜா ஹரி சிங். இவரது நான்காவது மற்றும் கடைசி மனைவி தாரா தேவி மூலம் இவருக்கு மகன் கரண் சிங் பிறந்தார்.

  1. முதல் மனைவி ராணி ஸ்ரீ லால் குன்வெர்பா சாஹிபா (1915ம் ஆண்டு பிரசவத்தின் போது மரணித்தார்.)
  2. இரண்டாம் மனைவி ராணி சாஹிபா சம்பா (1920ல் மரணித்தார்.)
  3. மூன்றாம் மனைவி மகாராணி தன்வந்த் குன்வெரி பைஜி சாஹிபா (மிக இளம் வயதில் இறந்ததாக அறியப்படுகிறார்.)
  4. மகாராணி தாரா தேவி சாஹிபா (1950ல் ஹரி சிங் உடனிருந்து பிரிந்த இவர், 1967ல் மரணம் அடைந்தார்)

ஹரி சிங் ஆடம்பரமாக செலவு செய்து வந்தவராக அறியப்படுகிறார். இவருக்கு முன் ஜம்மு காஷ்மீர் மன்னராக விளங்கிய பிரதாப் சிங்கின் இறுதி சடங்கின் போது, ஏராளமான தங்கம் மற்றும் வைரங்களை செலவு செய்தார் என கூறப்படுகிறது. 1921ம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் ஏறத்தாழ 300,00 யூரோக்களை தன்னை பிளாக்மெயில் செய்துவந்த விலைமாது பெண்ணுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. இதன் இன்றைய மதிப்பு 13 மில்லியன் யூரோக்கள் ஆகும். (இன்றைய இந்திய ரூபாயில் கணக்கிட்டால் இது ரூ.116 கோடியை தாண்டும்.) இது 1924ல் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகும் நிலைக்கு சென்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்திய அலுவலகம் இவரது பெயர் வெளியாகாமல் பார்த்து கொண்டது. ஆகவே, வழக்கின் போது ஹரி சிங்கின் பெயர் மிஸ்டர் ஏ என்றே குறிப்பிடப்பட்டது. உளவு பார்த்தல் வழக்காக அறியப்படும் இந்த வழக்கு கோப்புகளை 100 ஆண்டுகளுக்கு மூட பிரிட்டனில் இந்திய அலுவலகம் ஏற்பாடு செய்தது. பொதுவாக, இத்தகைய வழக்கு கோப்புகள் 30 ஆண்டுகள் தான் மூடி வைக்கப்படும் எனவும் சில தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சில பல குழப்பங்கள், ஏகப்பட்ட பலிகளுக்கு பின்னர் காஷ்மீரை ஒருவழியாக இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, மகாராஜா ஹரி சிங் ஜம்மு காஷ்மீரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். ஆகவே, இவர் தனது கடைசி நாட்களை மும்பையில் (அன்றைய பம்பாயில்) வாழ நேர்ந்தது.1961ம் ஆண்டு இதே ஏப்ரல் 26ம் தேதி ஹரி சிங் மரணம் அடைந்தார். ஏறத்தாழ நாடுகடத்தப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பின். மகாராஜா ஹரி சிங்கின் ஆசைக்கு இணங்க, இவரது அஸ்தி ஜம்மு காஷ்மீரில் தூவப்பட்டு, ஜம்முவின் ‘தாவி’ ஆற்றில் (River Tawi) கரைக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் தி.மு.க. அரசு, “ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி” போன்ற சமஸ்கிருத மரியாதைச் சொற்களை ஒழித்து, தமிழில் “திரு, திருமதி, செல்வி” எனப் பயன்படுத்த உத்தரவிட்டது.

இது தமிழ் மொழியின் தனித்தன்மையை வலியுறுத்திய முக்கிய முடிவாகும். இந்த ஆணை, தமிழ் மொழியின் தனித்தன்மையை உயர்த்தியதோடு, அரசு நிர்வாகத்தில் தமிழின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது மேலும் அரசு மற்றும் பொது மக்களிடையே தமிழ் மரியாதைச் சொற்களைப் பரவலாக்கியது. இன்று வரை “திரு, திருமதி, செல்வி” ஆகிய சொற்கள் தமிழ்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

‘‘உலகின் மிக மோசமான நாள்’ – Chernobyl அணு உலை பேரழிவை நினைவூட்டும் ‘கறுப்பு தினம்’. 1986 ஆம் ஆண்டு இதே நாளில், செர்னோபில் அணுசக்தி பேரழிவு ஏற்பட்ட நாள் இன்று. இது மாபெரும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விளைவுகளுக்கு வழிவகுத்ததோடு, அணுசக்தியின் தீவிர பாதிப்பை உலகிற்கு உணர்த்தியும் நாளும் இன்றே. ஏப்ரல் 26, 1986 அதிகாலையில், செர்னோபில் ஆலையின் அணுஉலை எண்.4ல் நடந்த பாதுகாப்புச் சோதனை மிகவும் தவறாகப் போனது. மின் தடை ஏற்பட்டால் அணு உலையின் குளிர்ச்சியை பராமரிக்கும் திறனை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சோதனை, எதிர்பாராத மின்னோட்டத்தை ஏற்படுத்தியது. இந்த அதிக மின்சாரப் பாய்ச்சல் தொடர்ச்சியான வெடிப்புகள் மற்றும் தீயை விளைவித்தது. இது இறுதியில் வளிமண்டலத்தில் அதிக அளவிலான கதிரியக்கப் பொருட்களை வெளியிட வழிவகுத்தது. உடனடி பின்விளைவு மற்றும் நடவடிக்கை பேரழிவை ஏற்பட்டவுடன் அதனைக் கட்டுப்படுத்தி, சமாளிக்கும் நடவடிக்கை குழப்பமானதாகவும் ஒழுங்கற்றதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வசிக்கும் அருகிலுள்ள நகரமான ’ப்ரிபியாட்’ உடனடியாக காலி செய்யப்படவில்லை. வெளியேற்றும் பணியை தொடங்க அதிகாரிகள் 36 மணிநேரத்துக்கு மேல் எடுத்துக்கொண்டதால், அங்கு குடியிருந்தவர்கள் ஆபத்தான அதிக அளவிலான கதிர்வீச்சை சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பேரழிவைத் தொடர்ந்து சில மாதங்களில் அங்கு ‘liquidation’ என்ற பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ’லிக்விடேட்டர்கள்’ (liquidators) என்று அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு, கட்டிடங்களை தூய்மைப்படுத்தவும், கதிரியக்க கழிவுகளை அகற்றவும், சேதமடைந்த ஆலையை சரிசெய்ய ‘sarcophagus’ எனப்படும் கட்டுப்பாட்டு கட்டமைப்பை உருவாக்கவும் அனுப்பப்பட்டனர். நீண்ட கால விளைவுகள்: செர்னோபில் பேரழிவு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விளைவுகளை பெரிய அளவில் ஏற்படுத்தியது. கதிரியக்க வீழ்ச்சி உக்ரைன், பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் பரந்த பகுதிகளை மாசுப்படுத்தியது, அவை அங்குள்ளவர்கள் பல தசாப்தங்கள் வாழ முடியாத இடமாக ஆக்கியது. இதனால் பலர் தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது செர்னோபில் விலக்கு மண்டலத்தை (Chernobyl Exclusion Zone) உருவாக்க வழிவகுத்தது. இந்த விபத்து மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றி சுமார் 2,600 சதுர கிலோ மீட்டர் உள்ளடக்கிய பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக மாற்றியது. இந்த பேரழிவில் உடல்நல பாதிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தைராய்டு, புற்றுநோய், லுக்கிமியா மற்றும் பிற கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன. பேரழிவில் ஏற்பட்ட இறப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் விவாதித்தில் உள்ளது. ஆனால், கதிர்வீச்சு வெளிப்பாட்டின் நீண்டகால விளைவுகளால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செர்னோபில் பேரழிவு அணுசக்தியின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை பற்றிய உலகளாவிய விவாதத்தைத் தூண்டியது. அடுத்தடுத்த களில், பல நாடுகள் தங்கள் அணுசக்தி திட்டங்களை மதிப்பாய்வு செய்தன. இது பாதுகாப்பு விதிமுறைகளை அதிகரித்தது மற்றும் சில பழைய ஆலைகளை செயலிழக்கச் செய்தது. அணுசக்தி விபத்துக்களைத் தீர்ப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் இந்த பேரழிவு எடுத்துக்காட்டியது. இதன் விளைவாக அணுசக்தி பாதுகாப்பு மற்றும் அவசரகால பதிலை மேம்படுத்துவதற்கான அமைப்புகள் மற்றும் நெறிமுறைகள் நிறுவப்பட்டன. 1986 ஆம் ஆண்டு இந்த நாளில் நிகழ்ந்த செர்னோபில் அணுசக்தி பேரழிவு, அணுசக்தியுடன் தொடர்புடைய அபாயங்களின் துயர நினைவூட்டலாக இன்றும் உள்ளது. அதன் நீண்டகால சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார விளைவுகள் எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கின்றன. அதே நேரத்தில், பேரழிவிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் உலகம் அணுசக்தி பாதுகாப்பை அணுகும் விதத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வை நாம் நினைவில் வைத்துக் கொள்ளும்போது, ​​அணுமின் நிலைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியம். அத்தகைய பேரழிவு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது அதைவிட முக்கியம் வாய்ந்ததாகும்.

தமிழ் நாடகக் கலையின் பொற்காலத்தை உருவாக்கிய மாமன்னர் அவ்வை டி.கே. சண்முகம் (T.K. Shanmugam) அவர்களின் பிறந்தநாள்! டி.கே. சண்முகம் – ஒரு சுருக்கமான வரலாறு: பிறப்பு: 26 ஏப்ரல் 1912 (தஞ்சாவூர், தமிழ்நாடு). குடும்பம்: பிரபல டி.கே. சகோதரர்கள் (டி.கே. சண்முகம், டி.கே. முத்துசாமி, டி.கே. பகவதி) – தமிழ் நாடக உலகின் முக்கால் பகுதியை ஆட்டிப் படைத்தவர்கள்! சிறப்பு: “நாடக சாம்ராஜ்யம்”, “நாடக சக்கரவர்த்தி” போன்ற பட்டங்களால் சிறப்பிக்கப்பட்டவர். நாடகத் துறையில் சாதனைகள்: முதன்முதலாக நவீன நாடக மேடைத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியவர். சாகச, சமூக, தொன்மக் கதைகளை உணர்ச்சிகரமான நடிப்புடன் வெளிப்படுத்தியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற திரைப்பட நடிகர்களும் இவரது நாடகங்களால் ஈர்க்கப்பட்டனர். “சங்கரதாஸ்”, “பிரஹலாதா”, “கீர்த்திமான்” போன்ற நாடகங்கள் இன்றும் பேசப்படுகின்றன. விருதுகள் & அங்கீகாரம்: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது. நாடகக் கலையை உலகளவில் பிரபலப்படுத்தியதற்கான பாராட்டு. “நாடகம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி” – என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்த கலைஞர்! இன்று அவரது பிறந்தநாளை நினைவுகூர்ந்து, தமிழ் நாடகத்துறைக்கு அவர் செய்த சேவைக்கு நன்றி!

உலகின் முதல் வெற்றிகரமான கண்ட்டெய்னர்சரக்குக் கப்பலான ஐடியல் எக்ஸ், அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள நெவார்க் துறைமுகத்திலிருந்து, டெக்சாசிலுள்ள ஹூஸ்ட்டன் துறைமுகத்திற்கு, 58 கண்ட்டெய்னர்களுடன் பயணித்த நாள் ஆம்! உலகின் தொடக்ககால வணிகத்திலிருந்தே கப்பல்கள்தான் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கண்ட்டெய்னர்கள் என்பவை வெறும் அரை நூற்றாண்டுக்கு முன்புதான் உருவாயின. அதிலும்கூட, இந்த ஐடியல் எக்ஸ் உட்பட, தொடக்ககால கண்ட்டெய்னர் கப்பல்கள் அனைத்தும், இரண்டாம் உலகப்போருக்குப்பின், தொடர்ச்சியான பயன்பாடின்றி எண்ணெய் டேங்க்கர் கப்பல்கள் உபரியாக மாறிவிட்ட நிலையில், அவற்றை மாற்றியமைத்தே உருவாக்கப்பட்டன. குறிப்பிட்ட அளவிலான 10 மரப் பெட்டிகளை அடுக்கும்படியான பிரிவுகளுடனான முதல் படகு, இங்கிலாந்தின் ப்ரிட்ஜ்வாட்டர் கால்வாயில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக, 1766இல் ஜேம்ஸ் ப்ரிண்ட்லி என்ற பொறியாளரால் உருவாக்கப்பட்டது. (கடற்பகுதியில் படகுப் பயணத்துடன்)லண்டன்-பாரிஸ் இடையிலான ரயில் பயணத்தில், உயர்வகுப்பு பயணிகளின் உடைமைகளை, 1931இல் பெரிய பெட்டிகளில் அடைத்து, கப்பல்களில் எடுத்துச் சென்றதே கண்ட்டெய்னர்களுக்குத் தொடக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. சியாட்டில்-அலாஸ்க்கா அடையே கண்ட்டெய்னர் கப்பல்களை 1951இல் டென்மார்க் இயக்கத் தொடங்கிவிட்டாலும், இந்த ஐடியல் எக்ஸ்தான் முதல் வெற்றிகரமான கப்பலாக அமைந்தது. கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் உலர் சரக்குகள் மொத்தச் சரக்குகள், பிரிக்கப்படும் சரக்குகள் என்று இரண்டு வகையாகக் கையாளப்படுகின்றன. நிலக்கரி, தானியங்கள் போன்றவை மொத்தச் சரக்குகளாக, அப்படியே கப்பலில் கொட்டப்பட்டு(ஏற்றப்பட்டு!) எடுத்துச் செல்லப்படுகின்றன. கண்ட்டெய்னர்களின் வருகைக்குமுன், பெட்டிகள், பீப்பாய்களில் அடைக்கப்பட்டவை, மூட்டைகள், தனிப் பொருட்கள் உள்ளிட்ட இந்த பிரிக்கப்படும்(ப்ரேக்பல்க்) சரக்குகள் என்பவை, கப்பல்களில் ஏற்றப்பட்டபின் ஒன்றாகக் கட்டப்பட்டு, இறக்குமிடத்தில் மீண்டும் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. கண்ட்டெய்னரின் வருகைக்குப்பின், கப்பலுக்கு வருவதற்குமுன்பே கண்ட்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, அப்படியே தூக்கி வைக்கப்படுவதால், சரக்குகளை அனுப்புவதற்கான நேரத்தில் 84ும், செலவில் 35%ம் குறைந்தது. உலகில் கையாளப்பட்ட பிரிக்கப்படும் சரக்குகளில் 90% கண்ட்டெய்னர்களில்தான் அனுப்பப்படுவதாக 2001இல் மாறியது. இருபதடிக்குச் சமமான அலகு(டிஇயு) என்றழைக்கப்படும் இருபதடி நீளமும், எட்டரை அடி அகலமும்கொண்ட கண்ட்டெய்னர்கள் சீர்தரமாகப் பின்பற்றப்படுகின்றன. இவற்றில் நீளம் மாறாவிட்டாலும், நாலேகால் அடியிலிருந்து ஒன்பதரை அடிக்கு தேவைக்கேற்ப உயரம்கொண்டவையாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் இரண்டேகால் மடங்கு அளவில், 45 அடி நீளமுடன் உருவாக்கப்படும் கண்ட்டெய்னர்கள் 2டிஇயு என்று குறிப்பிடப்படுகின்றன. 2019இல் மட்டும் 81.1 கோடி டிஇயு அளவுக்கான சரக்குகள் உலகம் முழுவதும் கண்ட்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, கப்பல்களில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

உலகில் முதன்முறையாக, கருவிலிருக்கும் மனிதக் குழந்தைக்கு, கருப்பையைத் திறந்து அறுவை சிகிச்சை(ஓப்பன் ஃபீட்டல் சர்ஜரி) மேற்கொள்ளப்பட்ட நாள் குழந்தையின் சிறுநீர்ப் பாதை அடைப்பால், சிறுநீர்ப்பை அபாயகரமான அளவிற்குப் பெரிதாகிவிடும் ஹைட்ரோநெஃப்ரோசிஸ் என்பதைச் சரிசெய்ய, சான்ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், மைக்கேல் ஹாரிசன் என்ற மருத்துவர் இச்சிகிச்சையைச் செய்தார். கருவிலிருந்த குழந்தைக்கு ஒரு வடிகுழாய்(கத்தீட்டர்) பொருத்திக் காப்பாற்றப்பட்டு, பிறந்தபின் அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டது. செடியைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ஃபைட்டோ என்பதிலிருந்து, தளிர், முன்னெடுத்துச் செல்லுதல், குஞ்சு பொரித்தல் என்பதான பொருள்களையுடைய ஃபீட்டஸ் என்ற லத்தீன் சொல் உருவாகி, அதுவே ஆங்கிலத்தில் கருவைக் குறிக்க 1950களில் பயன்பாட்டுக்கு வந்தது. ஃபீட்டஸ் என்பதன் எழுத்துக் கோவையிலுள்ள(ஸ்பெல்லிங்) ‘ஓ’, பிற்கால லத்தீனில் இடம்பெற்றிருந்து, ஆங்கிலத்திலும் தொடர்ந்துவிட்டது. மரபுசார்ந்த குறைபாடுகளை பிறப்புக்கு முன்பே கண்டறியப் பயன்படும் அம்னியோசெண்ட்டஸிஸ் என்ற, பனிக்குட நீர் சோதனையே, கருவுக்கு சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கியது. செக் நாட்டு மருத்துவரான வில்லெம் லேம்பில், பனிக்குட நீர் மிகஅதிகமாக உயருவதைத் தடுப்பதற்காக இதனை 1881இல் பயன்படுத்தியதாக ஜெர்மானியக் குறிப்புகளில் உள்ளதே இதைப்பற்றிய முதல் குறிப்பாகும். ஆனாலும் அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு இதன் வளர்ச்சியும், பயன்பாடும் பெரிய அளவிற்கு நிகழவில்லை. ஆங்கிலேய மருத்துவர் டக்ளஸ் பெவிஸ், கருவின் ரத்தசோகையைக் கண்டறிய இம்முறையை 1952இல் பயன்படுத்தினார். இச்சோதனையின்மூலம் கருவின் பாலினத்தையும், மரபுசார் குறைகளையும் கண்டறியலாம் என்று பாவ்ல் ரீஸ், ஃப்ரிட்ஸ் ஃபுக்ஸ் ஆகிய டென்மார்க் மருத்துவர்கள் 1956இல் கண்டறிந்தனர். ரத்தசோகையால் இறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட கருவுக்கு, நியூஸீலாந்து மருத்துவர் வில்லியம் லைலி 1963இல் சிவப்பணுக்களைச் செலுத்திக் காப்பாற்றினார். 1972இல் உருவான, வயிற்றில் துளையிட்டு எண்டோஸ்கோப்பி மூலம் ஆய்வுசெய்யும் ஃபீட்டோஸ்க்கோப்பி, கருப்பையின் உட்புறத்தைக் காண மட்டுமின்றி, திசு, ரத்தம் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்துச் சோதிக்கவும் வழி செய்தது. இவற்றைப் பயன்படுத்தி, 1981இல் மேற்கொள்ளப்பட்ட கருப்பைத் திறப்பு அறுவை மிகப்பெரிய முன்னேற்றமாகியது. மருத்துவத்தின் பிற துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், புதிய துறையான கருவுக்குச் சிகிச்சையளிக்கும்துறை, இப்போதுதான் வளர்ச்சியைநோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும், கருவிலிருந்தே காக்கத் தொடங்கிவிடுவது மனிதகுலத்தின் மகத்தான சாதனையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!