இன்று தேசிய சிவில் சேவை தினம்
தேசிய சிவில் சேவை தினம் (National Civil Services Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிவில் சேவை அதிகாரிகளின் தியாகங்களையும் பங்களிப்புகளையும் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை (IPS), இந்திய வெளியுறவு சேவை (IFS) மற்றும் பிற சிவில் சேவைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நாள், நாட்டின் இரும்பு சட்டகமாகக் கருதப்படும் சிவில் சேவைகளின் பங்களிப்பை நினைவுகூர்கிறது. தேசிய சிவில் சேவை தினத்தின் தோற்றம் தேசிய சிவில் சேவை தினம் முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த நாள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வலிமைக்கு அடித்தளமாக அமைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பங்களிப்பை நினைவுகூர்கிறது. “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்பட்ட சர்தார் பட்டேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். 1947-49 காலகட்டத்தில், 550-க்கும் மேற்பட்ட சுதேச மன்னர் மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை ஒரு வலுவான நாடாக உருவாக்கியவர் அவர். அவரது தலைமையில், சிவில் சேவைகள் நாட்டின் நிர்வாக அமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றின.ஏப்ரல் 21, 1947 அன்று, சர்தார் பட்டேல் டெல்லியில் நிர்வாக சேவை பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு உரையாற்றினார். இந்த உரையில், அவர் சிவில் சேவை அதிகாரிகளை “நாட்டின் எஃகு சட்டகம்” என்று வர்ணித்தார். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையைப் பாராட்டிய இந்த உரை, தேசிய சிவில் சேவை தினத்திற்கு அடிப்படையாக அமைந்தது. தேசிய சிவில் சேவை தினத்தின் முக்கியத்துவம் சிவில் சேவை அதிகாரிகள், இந்தியாவின் நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக செயல்படுகின்றனர். அரசு கொள்கைகளை செயல்படுத்துவது, மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது, பொது நல திட்டங்களை மேற்கொள்வது மற்றும் நெருக்கடி காலங்களில் மக்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த நாள், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை அங்கீகரிப்பதற்காகவும், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கு அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு “பிரதமரின் விருதுகள்” வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள், புதுமையான திட்டங்களை செயல்படுத்தியவர்களையும், மக்களின் நலனுக்காக அயராது உழைத்தவர்களையும் கௌரவிக்கின்றன.
உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகள் தினம் இன்று. உலகில் ஒவ்வொருவரும் தம்முடைய சொந்த படைப்பாற்றல் திறன் மற்றும் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு ஆபத்தில்லாத வகையில் வழங்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் கற்பனைத் திறன்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2002ஆம் ஆண்டு முதல் 46 நாடுகளின் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் இணைந்து புதிய சிந்தனைகள், யோசனைகள், எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பின் மூலமாக வளமான எதிர்காலம் மற்றும் உலக நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இத்தினம் ஏப்ரல் 21 நாளான இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தாஜ்மகாலை உருவாக்கிய ஷாஜகான், கல்லணையை கட்டிய கரிகால் சோழன், ராஜஸ்தானின் அபு மலையில் உள்ள ஜெயின் தில்வாரா கோவில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில், தஞ்சை பெரிய கோவில், கடல் மற்றும் வானத்தின் நீல நிறத்திற்கு காரணமான ஒளிச்சிதறலை விளக்கிய சர். சி. வி. ராமன், பெரிய நட்சத்திரங்களின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்த சந்திரசேகர், கணித பகுப்பாய்வு, எண்கோட்பாடு, தொடர் பின்னங்கள் மற்றும் முடிவிலி தொடர்கள் போன்ற கண்டுடிபிடிப்புகளை வழங்கிய ராமனுஜம், உயிரியலில் ரிபோசோம்கள் பற்றிய ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் சேனல் வழங்கும் டீம் போன்றவர்கள் நம் நாட்டில் சிறந்த படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளை வழங்கியவர்களாவர்.
நிழலில்லா தினம் இன்று நிழலில்லா தினம்(Zero Shadow Day) என்றால் என்ன? தினமும் காலையிலும் மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும்.ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது அந்த நாளையே ‘நிழலில்லா நாள்’ என்கிறோம். வருடத்தின் மற்ற நாட்களில் உச்சி வெயில் நேரத்திலும் கூட சிறிதளவு நிழல் பூமி மீது விழத்தான் செய்யும் இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் (ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21 2018) சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும், என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். மேலும் பகல் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே நடக்கும் இந்தநிகழ்வு, இதைக்காண எந்த வித அறிவியல் உபகரணம் தேவையில்லை.
பியேர் அபேலார்டு நினைவு நாள் பியேர் அபேலார்டு (Pierre Abélard) 12ம் நூற்றாண்டின் சிறந்த ஃபிரெஞ்சு தத்துவவியலாளர், இறையியலாளர் மற்றும் தர்க்கவாதியாக அறியப்படுகிறார். அபேலார்டு, அவரது பகுத்தறிவுசார் அணுகுமுறை மற்றும் நுண்ணறிவிற்காக பெரிதும் போற்றப்பட்டார். அவரது மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று “Sic et Non” (ஆம் மற்றும் இல்லை) என்ற பணியாகும், இதில் அவர் முரண்பாடான கருத்துக்களை அலசி ஆராய்வதன் மூலம் சமய பிரச்சினைகளை அணுகும் தர்க்கரீதியான முறையை முன்வைத்தார். அபேலார்டு அவரது காதல் கதை மற்றும் ஹெலோயிஸ் உடனான அவரது உறவின் காரணமாகவும் பிரபலமானவர். அவரது சுயசரிதையான “Historia Calamitatum” (என் துயரங்களின் கதை) மற்றும் அவர்களுடைய கடிதங்களின் தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்தை ரிப்போர்ட்டர் டைரியில் இடம் பிடித்துள்ள பியேர் அபேலார்டு (Pierre Abélard) அவர்களின் சிந்தனைக்கு உரிய சில முக்கிய தத்துவங்கள் மற்றும் பொன்மொழிகள் இங்கே: “ஐயுறவே அறிவின் திறவுகோல்” (“Doubt is the key to knowledge”) – அபேலார்டின் மிக பிரபலமான சிந்தனை இது. அனைத்தையும் கேள்வி கேட்பதன் மூலமே உண்மை அறிவைப் பெற முடியும் என்பதை வலியுறுத்தினார். “நம்புவதற்கு முன் புரிந்து கொள்ளுங்கள்” (“Understanding precedes belief”) – விசுவாசத்திற்கு முன் அறிவுபூர்வமான புரிதல் வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். “கற்றுக்கொள்வதற்கான முதல் திறவுகோல் அடிக்கடி கேள்விகளைக் கேட்பதாகும்” (“The first key to wisdom is assiduous and frequent questioning”) “பாவம் தீர்க்கப்படுவது அதை ஒத்துக்கொள்வதிலும், வருந்துவதிலும் உள்ளது” (“The sin is purged through confession and repentance”) “தர்க்கம் மனிதனுக்கு உண்மையைக் கண்டறியவும், பொய்யை புறக்கணிக்கவும் உதவுகிறது” (“Logic helps man to discover truth and reject falsehood”) “ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் புரிந்து கொள்வது முக்கியம்” (“It is important to understand both sides of an issue”) – இது அவரது Sic et Non (ஆம் மற்றும் இல்லை) பணியின் அடிப்படை கருத்தாகும். “காதல் என்பது அறிவால் நிறைந்த ஒரு கவலையாகும்” (“Love is an intelligent care”) “உண்மை எப்போதும் விவாதத்தில் வெளிப்படும்” (“Truth always emerges in debate”) “நாம் அறிவதை விட அறியாதது அதிகம்” (“We know less than what we do not know”) “சந்தேகிக்காமல் நம்புவது பலவீனம்; விசாரிக்காமல் சந்தேகிப்பது அறியாமை” (“To believe without doubting is weakness; to doubt without inquiring is ignorance”)
மார்க் ட்வைன் நினைவு தினம் இன்று. அமெரிக்காவின் சிறந்த நகைச்சுவையாளரான மார்க் ட்வைன், 1835-ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று மிசூரி மாநிலத்தில் உள்ள ஃப்ளோரிடா என்ற சிறிய நகரத்தில் பிறந்தார்.The Adventures of Tom Sawyer, Adventures of Huckleberry Finn ஆகியன மார்க் ட்வைன் எழுதிய மிகவும் புகழ் வாய்ந்த புத்தகங்கள் ஆகும். ஆரம்பத்தில் அச்சகத்திலும், டெரிடோரியல் என்டர்பிரைசஸ் எனும் பத்திரிகையிலும் வேலை செய்தார். தன் நகைச்சுவை திறனால், அந்நாட்டின் அதிபர், தொழிலதிபர்கள் மற்றும் நாட்டின் முக்கிய நபர்களை நண்பர்களாகப் பெற்றார். பல கிளப்புகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்திய இவர், அமெரிக்க மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் ஆவார் ஆந்தை ரிப்போர்ட்டர் டைரியில் இடம் பிடித்த மார்க் டுவெய்னின் சில சிறந்த நகைச்சுவைகள் மற்றும் பொன்மொழிகள் இதோ: “கல்லறையில் இடம் கிடைப்பதற்காக புகைபிடிப்பதை நிறுத்திவிட்டேன். கேக் சாப்பிடுவதை அல்ல.” “உண்மையை சொல்வது எளிது. அப்படியே நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.” “பொய்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் – சிறிய பொய்கள், பெரிய பொய்கள், மற்றும் புள்ளிவிவரங்கள்.” “நீங்கள் உண்மையை சொல்வதால் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.” “இரண்டு விஷயங்கள் மட்டுமே நிச்சயமானவை – வரிகள் மற்றும் இறப்பு.” “ஒரு மனிதன் தான் பெற வேண்டிய அனைத்தையும் பெறுவதற்கு இரண்டு முக்கியமான நாட்கள் உள்ளன – ஒன்று அவன் பிறந்த நாள், மற்றொன்று அவன் ஏன் பிறந்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் நாள்.” “நான் எப்போதும் மிகவும் வறுமையில் இருந்ததில்லை. ஆனால் அது எப்படி இருக்கும் என்பதை கல்வியாளர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன்.” “நான் அன்புடன் பேசுவதை விட கோபத்துடன் அதிகம் பேசியிருக்கிறேன் என்று வருந்துகிறேன். ஆனால் என் அருமை நண்பர்களே, என்னால் கோபப்படக்கூடிய மக்களும் எவ்வளவு அதிகம் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை.” “வாழ்க்கை என்பது பெரிய விஷயங்களின் தொடர்ச்சியல்ல; சிறிய விஷயங்களின் தொடர்ச்சியே. அவை ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.” “சாகஸத்தை விரும்பும் மனிதன் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.” “அரசியலமைப்பு ஒரு நல்ல விஷயம். மக்களின் பிரதிநிதிகள் அதைப் படிக்க வேண்டும்.”
உலகின் மிகச்சிறந்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமாகப் புகழப்படும் பிரேசிலியா, பிரேசில் நாட்டின் தலைநகராகச் செயல்படத் தொடங்கிய நாள் தென்அமெரிக்கக் கண்டத்தின் நிலப்பரப்பில் 47.3% அளவுக்குப் பரவி, ஈக்வேடர், சிலி ஆகிய இரு நாடுகளைத் தவிர, அனைத்துத் தென்அமெரிக்க நாடுகளின் எல்லைகளையும் தொட்டுக்கொண்டிருக்கும் பிரேசில், 1500இல் போர்ச்சுகீசியர்களால் கைப்பற்றப்பட்டு, 1822இலேயே விடுதலையும் பெற்று விட்டது. அப்போது இதன் தலைநகராக ரியோ-டி-ஜெனிரோ இருந்தது. 1763க்கு முன்பு சால்வடார் நகரம்தான் பிரேசிலின் முதல் தலைநகராக இருந்திருந்தது. இந்த இரு நகரங்களுமே அட்லாண்ட்டிக் கடற்கரையோரத்தில் அமைந்திருந்ததால், மக்கள்தொகையில் பெரும்பகுதியும் கடற்கரைப் பகுதிகளிலேயே செறிந்து காணப்பட்டது. போர்ச்சுகல், பிரேசில், ஆல்கார்வ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசிடமிருந்து, 1822இல் விடுதலைப் பெற்றதாக அறிவித்து, 1825இல் அது அங்கீகரிக்கப்பட்டும் விட்டாலும், முடியரசாகவே தொடர்ந்த பிரேசில் 1889இல்தான் குடியரசானது. 1891இல் இயற்றப்பட்ட முதல் அரசமைப்புச் சட்டத்திலேயே, தலைநகரம் நாட்டின் மையப்பகுதிக்கு மாற்றப்படவேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில், முதலாம் பெட்ரொ அரசருக்கு ஆலோசகராக இருந்த ஜோஸ் பேனிஃபேஷியோ, 1827இலேயே பிரேசிலியா என்ற தலைநகரை முன்மொழிந்திருந்தாலும், அப்போது அது நிறைவேறவில்லை. 1955இல் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூசெலினோ குபிட்ஸ்செக், தேர்தல் வாக்குறுதியாகச் உறுதியளித்திருந்தபடி புதிய தலைநகருக்கான பணிகளைத் தொடங்கினார். லூசியோ கோஸ்ட்டா என்பவரின் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1956இல் தொடங்கப்பட்ட கட்டுமானப்பணிகள் வெறும் 41 மாதங்களில் நிறைவுற்றன. எவ்வளவு பெரிதாக வளர்ச்சியடைந்தாலும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் கலந்துவிடாமல் தனித்தனிப் பகுதிகளிலேயே இருக்குமளவுக்குத் திட்டமிட்டு, விடுதிகள் பிரிவு, வங்கித்துறைப் பிரிவு, தூதரகங்கள் பிரிவு என்றெல்லாம் பிரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்நகரின் பரப்பளவு 5,802 ச.கி.மீ.! நகருக்குள் கிழக்கு-மேற்காக அமைக்கப்பட்டுள்ள ‘மான்யுமெண்ட்டல் ஆக்சிஸ்’ என்ற சாலை, 800 அடிக்கும் அதிக அகலத்துடன், உலகின் மிகஅகலமான சாலையாக கின்னசில் இடம்பெற்றுள்ளது. வடக்கு-தெற்காக ரெசிடெண்ஷியல் ஆக்சிஸ் என்ற சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,845 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்நகரின் நவீனத்துவமான கட்டிடக்கலை, தனித்துவமான அழகிய வடிவமைப்பு ஆகியவற்றுக்காக, உலகப் பாரம்பரியக் களமாக இதனை 1987இல் யுனெஸ்கோ அறிவித்தது. அத்தோடு நில்லாமல், இந்நகரின் மிகச்சிறப்பான வடிவமைப்பிற்காக, வடிவமைப்பின் நகரம் என்ற பட்டத்தையும் மீண்டும் யுனெஸ்கோ 2017இல் அளித்திருக்கிறது!
மருத்துவரின்(அதாவது மருத்துவரால் எடுக்கப்பட்ட) ‘நெஸ் கழிமுக அரக்கனின்‘ படம், இங்கிலாந்தின், டெய்லி மெய்ல் இதழில் வெளியான நாள் ஸ்காட்லாந்தின் நெஸ் என்ற கழிமுகத்தில் இருப்பதாக, பல நூற்றண்டுகளாக நம்பப்பட்டுவந்த, டைனோசர் இனத்தின் தோற்றத்தைக்கொண்ட, ஒரு மிகப்பெரிய நீர் விலங்கின் படம் அது. அதை டெய்லி மெய்லுக்கு அனுப்பிய மருத்துவர் ராபர்ட் வில்சன், தன் பெயரில் அந்தப் படம் குறிப்பிடப்படுவதை ஏற்காததால், ‘மருத்துவரின் படம்’ என்ற பெயர் ஏற்பட்டது. 565இல் கொலும்பா என்ற ஐரியத் துறவி, நெஸ் ஆற்றில் ஒரு மனிதரை நீர் விலங்கொன்று இழுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும், பின்னர் தன் சீடர் ஒருவரை நீந்தச்செய்து, அவரைப் பிடிக்க அது வந்தபோது சிலுவையைக் காட்டியதும் சென்றுவிட்டதாகவும் கூறியதே இதற்கான தொடக்கம். 1802இல், தட்டையான கால்களையுடைய ஒரு விலங்கை இந்தப் பகுதியில் பார்த்ததாக ஒருவர் கூறியதும், 1871இல் கவிழ்த்துப்போட்ட படகைப்போன்று ஒரு பெரிய விலங்கு, கால்களை அசைத்து நீந்தியதைப் பார்த்ததாக ஒருவர் கூறியதும், இந்த நம்பிக்கையை வளர்த்தன. 1933இல் இருவர் இவ்வாறு வித்தியாசமான விலங்கைப் பார்த்ததாகக் கூறியது, இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரித்தது. 1934 ஜனவரியில், ஒருவர் இப்பகுதியில் சாலையைக் கடந்ததாக டைனோசர் போன்ற ஓர் உருவத்தை வரைந்தாலும், விலங்கியலாளர்கள் அவர் பார்த்தது நீர்நாயாக இருக்கும் என்று கூறிவிட்டனர். இந்நிலையில்தான், நீருக்கு வெளியில் நீண்ட கழுத்தும், சிறிய தலையும் மட்டும் தெரிந்த, தெளிவற்ற ‘மருத்துவரின் படம்’, அந்த விலங்கு இருப்பதாக நிறுவியதைத் தொடர்ந்து, அதற்கு நெஸ்ஸி என்ற பெயரும் உருவானது. இதன்பின்னரும், இவ்வாறு பார்த்ததாகச் சிலரால் கூறப்பட்டாலும், 65 ஆண்டுகள் கழித்து அந்தப்படமே போலி என்பது நிரூபிக்கப்பட்டது. டெய்லி மெய்ல் இதழில் பணியாற்றிய ஒருவரை, அதன் உரிமையாளர் இந்த வதந்தி தொடர்பாகக் கிண்டல் செய்ததால், ஒரு பொம்மை நீர்மூழ்கியில், மரத்தால் இந்தத் தலையை உருவாக்கி, படமெடுத்து, அதை வில்சன்மூலம் அனுப்ப, டெய்லி மெய்ல் ஏமாந்துவிட்டது. நெஸ்ஸி உண்மையில்லையென்பது நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், இப்பகுதியில் நெஸ்ஸிலேண்ட் என்ற கேளிக்கைப் பூங்கா உருவாக்கப்பட்டு, நெஸ்ஸியின் உருவம்கூட(கற்பனைதான்!) அமைக்கப்பட்டு, நெஸ்ஸி வரும்(!) இடமெல்லாம் காட்டப்படுகிறது!
கணித மேதை’ சகுந்தலா தேவி காலமான நாள்: மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கம்ப்யூட்டர்’ என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் இதே ஏப்21இல் மரணமடைந்தார். அவருக்கு வயது 80. கம்ப்யூட்டர்களும் கால்குலேட்டர்களும் நம்மில் பலருக்கும் தெரியவே தெரியாத காலத்தில் அந்த இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கணக்கு கேள்விகளுக்கு விடைகளை அளித்தவர் சகுந்தலா தேவி. பெங்களூரில் 1939-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி பிறந்த அவர் மூன்று வயதிலேயே தன் கணிதத் திறமையை வெளிக்காட்டி உலகை அசர வைத்தார். 8 வயதாவதற்குள் மைசூர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் தன் கணிதவியல் சாகசங்களை நடத்திக் காட்டினார். ஒரு முறை லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையினர் இவருடைய மனக் கணக்குத் திறனை சோதிக்கத் தீர்மானித்தனர்.அதன்படி .1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா—–எழுத்தாளர்) பிறந்த தினம் இன்று வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 – ஜூன் 12, 2014) சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா , விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி , பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
