2026 தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. – தி.மு.க. இடையேதான் போட்டி என்று நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜய் சவால்விட்டார்.
தமிழக அரசியலில் சினிமா நடிகர் – நடிகைகள் கால் பதிப்பது என்பது, இன்று நேற்றல்ல, நீண்ட பல காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியல் களம் கண்டிருப்பது புதிது அல்ல என்றாலும் சற்று வித்தியாசம் இருக்கிறது.
மற்றவர்கள் வயது முதிர்வு, பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் அரசியல் அவதாரம் எடுத்தார்கள் என்றால், நடிகர் விஜய்யோ சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அந்த பாதையை விட்டுவிட்டு அரசியல் பாதையில் நடக்கத் தொடங்கியதுதான் எல்லோரையும் புருவம் உயர்த்தி பார்க்கவைத்தது.
கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், அக்டோபர் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்தி அதில் அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். “2026 சட்டசபை தேர்தலே இலக்கு” என்றும், “கூட்டணி ஆட்சிக்கு தயார்” என்றும் கூறிய அவர், ஆட்சி, அதிகாரத்தில் பங்குதருவதாகவும்
ஆசை வார்த்தை கூறினார். விஜய்யின் இந்த புதிய அரசியல் அணுகுமுறை ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் கிலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற 2,500 நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜய், மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக பரபரப்பு கருத்துகளை தெரிவித்தார். “மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே…” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தாக்கி பேசியதுடன், “2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. – தி.மு.க. இடையேதான் போட்டி என்றும் சவால்விட்டார். மேலும், “தமிழ்நாடு என்றால் ஏன் அலர்ஜி?” என்று பிரதமர் நரேந்திர மோடியையும் வம்புக்கு இழுத்தார்.
விஜய்யின் எண்ண ஓட்டத்தை வைத்துப்பார்த்தால், 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்தே போட்டியிடும் என்று தெரிகிறது. நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கியபோது எப்படி 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபித்து காட்டினாரோ, அதுபோல் தானும் அரசியல் செல்வாக்கை காட்டிவிட வேண்டும் என்று விஜய் கருதுகிறார். மற்றபடி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை அவர் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால், அதற்கு கிராமம் வரையிலான கட்சிகளின் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதுதான். அதுபோன்ற கட்டமைப்பை ஏற்படுத்தி கிராமங்கள் வரை வேரூன்றிவிட வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டம்.
மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளை கணக்கில் கொண்டு, 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் வீதம் 120 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு, இதுவரை 6 கட்டங்களாக 114 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரைவில் நிர்வாகிகளை நியமித்து, அரசியல் பயணத்தில் இன்னும் வேகம் காட்ட விஜய் திட்டமிட்டுள்ளார். தற்போது, ‘ஜனநாயகன்’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது புதுச்சேரி, காரைக்காலில் 2-வது கட்ட படப்பிடிப்பு இரவு, பகலாக நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி படம் வெளியாகும் என்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலும், ஜூன் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு கட்சிப் பணிகளில் வேகம் காட்ட விஜய் முடிவு செய்துள்ளார்.
முதற்கட்டமாக, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளின் கருத்தை தனித்தனியாக கேட்க முடிவு செய்துள்ளார். அடுத்ததாக, மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள விஜய், தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடந்தே சென்று மக்களை சந்திக்க திட்டம் வைத்துள்ளாராம்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது மக்கள் மத்தியில் செல்வாக்கு எதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், இறங்கிவந்து மக்களை அவர் சந்திக்காததால் பின்னாளில் கட்சி பின்னடைவை சந்தித்தது. அதுபோன்ற நிலை தமக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் விஜய் கண்ணும் கருத்துமாக உள்ளார். எனவே, மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் மனங்கவர்ந்த தலைவராக மாறிவிட முடிவு செய்துள்ளார்.
இப்படி பல்வேறு திட்டங்களுடன் அரசியல் பாதையில் ஒவ்வொரு அடியாக பார்த்து.. பார்த்து.. நடிகர் விஜய் எடுத்துவைத்து வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடிகர் விஜய்க்கு வெற்றி வாய்ப்பை வழங்கி ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறதோ இல்லையோ, மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தும் வகையில் கணிசமான வாக்குகளை பெற்றுத்தரும் என்பதே அரசியல் நோக்கர்களின் தற்போதைய கணிப்பாக உள்ளது.