இன்று சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்..!

3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் இன்று (29.03.2025) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.

இந்த இடப்பெயர்ச்சியை கணித்து பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதேசமயம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டுள்ள சனிப்பெயர்ச்சி தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் சனிபகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சனிப்பெயர்ச்சியை ஒட்டி திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளி கவச அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதனிடையே திருநள்ளாறு கோவிலைப் பொருத்தவரை வாக்கிய பஞ்சாங்க முறைப்படிதான் சனி பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். எனினும் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாக தகவல் பரவியதால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றியே சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி அடுத்த ஆண்டு (2026) சனிப்பெயர்ச்சி நடைபெறும். அதனால் இன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது என்பதை தெளிவுபடுத்துகிறோம். இன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.

2026-ம் ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி, நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!