இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு..!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.

இதற்கிடையே தான் நீண்ட நாட்களாக சிம்பொனி எழுதி வருவதாகவும், விரைவில் லண்டனில் அதை அரங்கேற்றுவேன் என்றும் இளையராஜா அறிவித்திருந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.

சொன்னது போலவே லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றினார். பீத்தோவான் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற இசை மேதைகள் இசையமைத்த இந்த அரங்கில் தமிழரான இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் செய்ததை உலகமே ஆர்வத்துடன் உற்று நோக்கியது.

இந்த சிம்பொனியை நாமும் பார்க்க வேண்டும் என இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அவரது அதி தீவிரமான ரசிகர்கள் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். லண்டனில் உள்ள தமிழர்களும் குவிந்ததால், அரங்கமே கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. ரசிகர்களின் உற்சாக கைத்தட்டலுக்கு இடையே இளையராஜா ‘வேலியண்ட்’ என்று பெயரிடப்பட்ட சிம்பொனியை அரங்கேற்ற தொடங்கினார்.

சினிமாக்களில்தான் இசையமைத்த பாடல்கள் சிலவற்றின் மெட்டையும் சிம்பொனி இசைக்கு தகுந்தவாறு வடிவமைத்து அவர் அரங்கேற்றினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் கொண்டனர். குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ‘ராஜா கைய வச்சா… அது ராங்கா போனதில்லை…’ என்ற பாடலின் இசை சிம்பொனியில் இடம் பெற்ற போது ரசிகர்கள் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்து போனது. உலகின் மிகச்சிறந்த இசை குழுக்களில் ஒன்றான ராயல் பிலார்மாலிக் ஆர்கெஸ்ட்ரா இசை கலைஞர்களை வைத்துக் கொண்டு இளையராஜா இந்த சிம்பொனியை அமைத்தார்.

கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் இந்த சிம்பொனி அரங்கேறியது. இறுதியாக தனது சிம்பொனியை முடிக்கும்போது, இளையராஜா தனது இசையில் இடம் பெற்ற பாடலான ‘இதயம் போகுதே…’ பாடலைப் பாடி அரங்கில் இருந்தவர்களை உருக வைத்தார். அவர் சிம்பொனியை முடித்த பின்னர் அரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டியது. இளையராஜாவின் இசை மழையில் லண்டன் அரங்கமே நனைந்து போனது.

அப்போது சிம்பொனி குழுவை வழிநடத்தியவர், இளையராஜாவை நோக்கி ‘இந்த பாராட்டுகள் அனைத்தும் உங்களுக்கானது. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ எனக் கூறுவதை போல சைகை காட்டினார். அப்போது ரசிகர்களை நோக்கி நடந்து வந்த இளையராஜா, அவர்களின் உற்சாகத்தை கண்டு உருகி போனார். ரசிகர்களுக்கு கைகூப்பி நன்றி கூறினார். கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ‘லவ் யூ ராஜா’ என்று கோஷமிட, உடனே இளையராஜாவும், ‘லவ் யூ டூ’ என பதில் அளித்தார்.

மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து நீண்ட நேர இசைத்தொகுப்பை 1986-ம் ஆண்டில் இளையராஜா வெளியிட்டிருந்தார். 2005-ம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார். ஆனாலும் சிம்பொனி இசைப்பது அவரது கனவாகவே இருந்து வந்தது.

அந்தவகையில் 35 நாட்களில் சிம்பொனி எழுதி, அதனை லண்டனில் அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இளையராஜாவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சிம்பொனி இசைத்து சாதனை படைத்த இளையராஜா இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையம் வந்த அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று இளையராஜாவுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். மேலும் திமுக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும், ரசிகர்களும் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!