இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19ம் தேதி பூமிக்கு வருவார் என்று நாசா தெரிவித்திருக்கிறது. அவரை அழைத்து வர மார்ச் 12ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை அனுப்புகிறது.
பூமிக்கு திரும்பியவுடன் நான் விண்வெளியை மிஸ் செய்வேன் என்று சுனிதா கூறியிருக்கிறார். அவர் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோருடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். பிரபல விமானம் தயாரிப்பு நிறுவனமான போயிங்தான் அவர்களை அங்கு கொண்டு சென்றது. ஆனால் அவர்கள் சென்ற விண்கலம் பழுதானதால் அதில் திரும்ப முடியவில்லை.
இவர்களின் பயண திட்டம் வெறும் 10 நாட்கள்தான். விண்கலம் பழுதானதால் பயணம் எதர்பாராமல் நீடித்தது. சுமார் 9 மாதங்கள் வரை இவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர். எதிர்பாராத பயண நீடிப்பு காரணமாக பல்வேறு சிக்கல்களை இருவரும் எதிர்கொண்டனர். இருப்பினும் விண்வெளியில் தங்கியிருப்பது சிறப்பான அனுபவமாக இருப்பதாக சுனிதா வில்லியம்ஸ் கூறியிருந்தார். இவரை மீட்டு பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இப்படி இருக்கையில்தான் இது குறித்து எலான் மஸ்க்குக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், முடிந்தவரை சீக்கிரமாக சுனிதாவை பூமிக்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் -10 எனும் விண்கலம் மார்ச் 12ம் தேதி விண்வெளிக்கு செல்கிறது. பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிலிருந்து சுனிதாவும், வில்மோரும் மீட்கப்பட்டு மார்ச் 19ம் தேதி பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள். இந்த பயணத்தில் எதுவும் சிக்கல் இருக்காது என்று சொல்லப்படுகிறது.
விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பும் போது மிகவும் ஆபத்தான நேரம் மீள்நுழைவு (Re-entry) கட்டம்தான் என்று சொல்லப்படுகிறது. பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக விண்கலன் சுமார் 27,000 கி.மீ வேகத்தில் பூமிக்குள் நுழையும். இந்த நேரத்தில் உராய்வு அதிகமாக ஏற்பட்டு 1,650 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். சாதாரண 37.5 டிகிரி செல்சியஸையே நம்மால் தாங்க முடியாது. ஆனால் விண்வெளி வீரர்களை பாதுகாக்க வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட தடுப்பான்கள் இருக்கும்.
இருப்பினும் வேகம் அதிகரிப்பால் விண்கல் கட்டுப்பாடு இல்லாமல் எங்காவது மோதி வெடித்துவிடாமல் இருக்க அதன் பாதை துல்லியமாக கட்டுப்படுத்துவது அவசியம். இது எல்லாம் சரியாக நடந்தால்தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்து சேர்வார்.
விண்வெளி பயணம் குறித்து சமீபத்தில் செய்தியார்கள் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். விண்வெளியில் இருந்தவாரே பேட்டியளிக்க முடியும் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்திருந்தார். அதில், “நான் பூமிக்கு திரும்பினால் எல்லாவற்றையும் மிஸ் பண்ணுவேன்” என்று கூறியிருந்தார். மேலும், “நானும் வில்மோரும் விண்வெளிக்கு வருவது இது 3வது முறை. இங்கு வாழ்வது எங்களுக்கு ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தைத் தருகிறது. பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.