6 கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல்’ விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை (Bolero) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் /வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் மு. சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சிறப்புச் செயலாளர் சு.கணேஷ், கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) முனைவர் ச. நடராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நக்கீரன் கோபாலுக்கு கலைஞர் எழுதுகோல் விருது:-
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபாலுக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக சுகிதா சாரங்கராஜுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
6 கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல் விருது’:-
கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மரபுவழி ஓவியம், நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘கலைச்செம்மல்’ விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) கவிதா ராமு, ஆகியோர் உடனிருந்தனர்.
22 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம்:-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பதிவுத்துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 22 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நன்றி:-
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமத் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்கள் பாத்திமா அகமது, எம். தாவூத் பீ, திரு. மௌலானா குலாம் முகமது மெஹ்தி கான், ஏ. முகம்மது அஷ்ரப், ஏ. அப்சல், குணங்குடி ஆர்.எம். அனிபா, மற்றும் மாவட்ட காஜிகள் – ஜனாப். சலாவூதின் முகம்மது அயூப், ஜனாப். எம். சையது மசூது, ஜனாப். முகம்மது அப்துல் காதர், ஜனாப். பசூலுல் ஹக், ஜனாப். அப்துல் காதிர், ஜனாப் கே. அப்துல் கரீம், ஜனாப். கே.எம்.முகம்மது அஸ்ரப் அலி, ஜனாப். அக்பர் அலி ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.