இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 03)

அமெரிக்காவில் வெளியாகும் டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட தினம் டைம் உலகின் மிகவும் படிக்கப்படும் வாரமொருமுறை செய்தி இதழாக 25 மில்லியன் வாசகர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 20 மில்லியன் வாசகர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளனர்.

உலக செவித்திறன் (World hearing day) நாள் மார்ச் 3 உலக சுகாதார நிறுவனம் மார்ச் 3ஆம் தேதியை உலக செவித்திறன் நாளாக அறிவித்து உள்ளது. இந்த உலக செவித்திறன் நாளில் வாகன சத்தங்களை குறைப்பது, ஒலி பெருக்கிகளின் தரத்தை ஆராய்ந்து கட்டுப்பாட்டில் வைப்பது, காதில் வைக்கும் ஒலிப்பான்களை கட்டுப்பாட்டுடன் உபயோகப்படுத்துவது, தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு அதிக ஒலி பாதிப்பு இல்லாமல் தற்காத்துக் கொள்வது, தேசிய காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, இதற்கென ஏற்படுத்தியுள்ள அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற வருமுன் காக்கும் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். பல விசயங்களில் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் அவர்களுக்குச் சமூகத்தில் உரிய வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆண்டுதோறும் World hearing day கொண்டாடப்படுகிறது. இந்த நிமிடம் நீங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ இருப்பீர்கள். வீடாக இருந்தால் உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பீர்கள், உங்களுடன் யாராவது பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லது உங்களுக்குப் பக்கத்தில் யாராவது உரையாடிக் கொண்டிருப்பார்கள். அலுவலகமாக இருந்தால் கணிப்பொறியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் பேருந்து என்ஜின் சத்தம், ரயில் சத்தம் என நீங்கள் இருக்கும் இடம், செய்யும் வேலையைப் பொறுத்து உங்களைச் சுற்றி ஏதாவது ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். இந்தச் சத்தம் எல்லாம் ஒரு கணம் நின்று, ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்தினால், உங்களைச் சுற்றி, உங்களுக்கு வெளியே நடக்கும் எந்த நிகழ்வுகளின் ஒலியும் உங்களின் காதுகளுக்கு எட்டாமல் இருந்தால், அந்தக் கணம் உங்களுக்கு எப்படி இருக்கும்? வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு சூழல் ஏற்படும். ஆம்… இந்த உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப்போன்று உணர்வீர்கள். ஆனால், உலகில் 44.6 கோடி பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு குறைபாட்டால் தங்களின் கேட்கும் திறனை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறி இருக்கிறார்கள். அவர்களில் பலர் உபகரணங்கள் உதவியுடன் கேட்கலாம். ஆனால், ஒரு பாடலை நாம் கேட்டு ரசித்துக் கொண்டாடும் அளவுக்கு அவர்களால் கேட்க முடியாது. பல விஷயங்களில் ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் அவர்களுக்குச் சமூகத்தில் உரிய வசதிகள் செய்துதர வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறன்று ‘உலக காது கேளாதோர் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகக் காட்டுயிர் நாள் உலகில் மனிதர்கள் மட்டுமே தனித்து வாழ்ந்து விட முடியுமா? இயற்கை படைத்த பிற உயிரினங்களோடு சேர்ந்த வாழ்வதுதான் இறைவன் படைத்த நீதி. காடுகளும், வனவிலங்குகளும் இல்லாத பூமியில் மனிதர்களும் அருகித்தான் போவார்கள். காடுகளில் தாவரங்கள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்கள் செழிப்பாகவும் சமநிலையுடனும் இருந்தால்தான் இயற்கை வளமாக இருக்கும். அதன்மூலம்தான் நாம் வாழும் இந்தப் பூவுலகும் ஆரோக்கியமாக இருக்கும். ஆக காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு உலகெங்கும் காட்டுயிர் பாதுகாப்பு நாளாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், சூழலியலாளரான தியோடர் பாஸ்கரன் சுற்றுசூழல் மாசடைவதற்காக மட்டும் கவலைப்படாமல் சுற்றுசூழல் சார்ந்த தமிழும் வளராமல் தேங்கியே நிற்கிறது என்ற கோணத்தில் பல பிரச்சனைகளை அலசும் இவரைப்பற்றியோ இவரின் படைப்புகளையோ இப்போதும் எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை என்பதுக் கவலைக்குரிய விஷயம்தான் . ஆம்.. இன்னமும் தமிழ்ச்சூழலில் சூழலியல் சார்ந்த வாதங்கள் தமிழில் நடைபெறாமல் ஆங்கிலத்திலேயே நடைபெறுவதை காரணம் காட்டி அதனால் மட்டுமே சூழலியல் (Environmental) மக்களிடையே பரவலாக அறியபடாமல் அது மேட்டுகுடிக்கானது என்ற மாயை நிலவுகிறது. இந்தக் கூற்றை சில பத்தாண்டுகளுக்கு முன்பே தியோடர் முன் வைத்து இருந்தாலும் நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விசயமே. ஆங்கிலவழிப் பள்ளி ஒன்றில் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை உதாரணமாக முன்வைக்கிறார். காட்டுயிரிகள் சார்ந்த வினாடிவினா நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட தியோடர் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது என்றும் வேங்கைகளும் யானைகளும் என்னவென்றே தெரியாத நிலத்தில் இருந்து வந்த மொழியில் அவற்றைப்பற்றி நடத்தப்படும் வினாடிவினா கேள்விக்குறியானது என்றும் கூறுகிறார். இதனால் காட்டுயிரிகள் சார்ந்த தமிழ் வழக்கு மெல்ல அழியும். அதேசமயம் அத்தனை காட்டுயிர்களுக்குமான தமிழ்ப்பெயர் இன்னமும் கண்டறியப்படவில்லை அதற்கான முனைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். யானைக்கு பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் தமிழில் இருக்கிறது ஆனால் ஒற்றை வார்த்தையை மட்டுமே ஆங்கிலம் கற்றுத் தருகிறது. யானையின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு பெயரைச் சூட்டி அழகு பார்க்கிறது தமிழ். இவை வழக்கற்றுப் போகும் போது மொத்தமாக மறைந்து மறக்கபட்டுப் போகும் அபாயம் இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார். எப்படி அருவியானது water falls என்ற ஆங்கில தமிழாக்கத்தின் மூலம் நீர்வீழ்ச்சியானதோ அப்படி. யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு இவை அத்தனையும் யானைக்கான பிறபெயர்கள் இன்னமும் அதிகமான பெயர்களைக் கூட சங்கத் தமிழ் பதிவு செய்துள்ளது என்பதை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். நமது காடும் காட்டுயிரிகளும் எப்படி வேட்டையாடப்பட்டன பட்டுக்கொண்டுள்ளன என்பதை மிக வருத்ததுடனும் அதே சமயம் வீரியத்துடனும் கூறும் இவர் போன்ற எழுத்துக்களுக்கும் ஒரு நினைவூட்டல் தினம் கொண்டாட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம்.

கடம்பி மீனாட்சி காலமான தினமின்று இந்திய வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பல்லவ மன்னர்களை நன்கறிந்த மேதையாவார். 1935 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது 1929-ம் ஆண்டு, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து முடித்தவர், மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலை வரலாறு படிக்க விண்ணப்பித்தார். அன்றைய காலகட்டத்தில் முதுகலை வரலாற்றுப் படிப்பு இருந்த சில கல்லூரிகளில் ஒன்று அது. ஆனால், அதுவரை அந்தக் கல்லூரியில் பெண்கள் யாரும் பயிலாத காரணத்தைச் சுட்டிக்காட்டி அவருக்கு அனுமதி மறுத்தது கல்லூரி நிர்வாகம். அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மீனாட்சியின் சகோதரர் லட்சுமிநாராயணன், தன் தங்கையைத் தானே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகவும், அவரது பாதுகாப்புக்கு எந்தத் தீங்கு வந்தாலும் முழுப் பொறுப்பும் தன்னுடையது என்றும் கைப்பட எழுதித் தந்த பின்புதான் மீனாட்சி கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு, எட்வர்டு கோர்லி போன்ற அறிஞர்களிடம் கற்றார். அதன்பின், மதராஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்தார் மீனாட்சி. 1931-ம் ஆண்டு, அவரது வரலாற்று ஆய்வுக்கென கல்வி உதவித் தொகை அறிவித்தது பல்கலைக்கழகம். தமிழக வரலாற்று ஆய்வாளர்களில் தலை சிறந்தவர்களில் ஒருவர் என்று அறியப்படும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிதான், மீனாட்சியின் ஆய்வுப்படிப்புக்கு வழிகாட்டி. அதன்பின் தொடங்கியது மீனாட்சி என்ற பெண் ஆய்வாளரின் வரலாற்று வேட்டை! புதுக்கோட்டை, மன்னார்குடி, விழுப்புரம், காஞ்சிபுரம், மாமல்லபுரம் என்று தமிழகம் முழுக்கப் பயணப்பட்டார் மீனாட்சி. துணைக்கு அவரின் தாயும் சென்றார். மீனாட்சியைப் போல பல்லவர் வரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வாளர் யாரும் இல்லை என்று இன்றும் சொல்வோர் உண்டு. குடுமியான்மலை இசைக் கல்வெட்டை மீனாட்சி அளவுக்கு அதன்பின் படியெடுத்து ஆராய்ந்தவர் மிகச் சிலரே. தன் முனைவர் பட்ட ஆய்வுக்கென மீனாட்சி தேர்ந்தெடுத்த தலைப்புகள் மூன்று – வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்கள், கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மற்றும் பல்லவர்களது நிர்வாகம் மற்றும் அவர்கள் கீழ் சமூக வாழ்க்கை. முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளைப் பரிசீலித்த குழுவின் உறுப்பினரான ஏ.என்.தீட்சித், `அவரது ஆய்வுகள் அத்தனை நுணுக்கமானவை’ என்று எழுதியிருக்கிறார். 1934-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஆக மதராஸ் மாகாணத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் அவர்தான். 1938-ம் ஆண்டு `பல்லவர்கள் நிர்வாகம் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் சமூக வாழ்க்கை’யைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டது மதராஸ் பல்கலைக்கழகம். 1937-ம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகம் அளித்த ஊக்கத்தொகையில் தென்னிந்தியாவில் பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டார் மீனாட்சி. அதே ஆண்டு தொல்லியல் துறை, காஞ்சி வைகுண்டப் பெருமாள் மற்றும் கைலாசப் பெருமாள் கோயில் சிற்பங்கள்குறித்து ஆய்வுசெய்ய மீனாட்சியைப் பணித்தது. தன் துறை சார்ந்த அறிஞர்களிடம் விவாதிப்பதில் அதிக ஆர்வம்கொண்டிருந்தார் மீனாட்சி. திராவிட கட்டடக் கலைகுறித்து அதிகம் எழுதியும் பேசியும் வந்த பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர் ஜோவோ துப்ரேலுடன் காஞ்சி கைலாசநாதர் கோயில் தோற்றம்குறித்த விவாதங்களில் ஈடுபட்டார். பெண்கள் அதிகம் பணிபுரியாத அந்தக் காலத்தில், முனைவர் பட்டம் பெற்ற மீனாட்சியின் நிரந்தர வேலை தேடும் படலம் தொடங்கியது. அன்றைய மாகாண முதலமைச்சர் ராஜாஜி முதல், மைசூரு மன்னர் வரை அனைவருக்கும் தன் புத்தகத்தை அனுப்பினார். அவரது விடாமுயற்சி வெற்றிபெற்றது. 1939-ம் ஆண்டு மைசூரின் திவான் மிர்சா இஸ்மாயில் கையில் மீனாட்சி எழுதிய புத்தகம் கிடைக்க, புத்தகம் கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும், ஒற்றை வரி பாராட்டுடனும் கடிதம் அனுப்பினார். சில மாதங்கள் கழித்து, இஸ்மாயிலின் முயற்சியால், பெங்களூரு மகாராணி கல்லூரியில் துணை விரிவுரையாளர் பணிக்கு மீனாட்சியை நியமித்திருப்பதாகக் கடிதம் வந்தது. தன் தாயுடன் ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்குப் பயணமானார் மீனாட்சி. திடீரென மார்ச் 5, 1940 அன்று தன் 34-வது வயதில், பெங்களூரில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் மீனாட்சி. அவரது மரணத்துக்குப் பின் அவர் எழுதிய காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், காஞ்சி மற்றும் தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய `பாகவதஜுகம்’ என்ற நாடகத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகிய புத்தகங்கள் வெளிவந்தன. அவரது பழம் நாணயத் தொகுப்பு திருவனந்தபுரம் திருவிதாங்கூர் கல்லூரிக்குக் குடும்பத்தினரால் அளிக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நாள் மார்ச் 3. முதல் உலகப்போருக்கு முன்புவரை, விளக்கு எரிக்கப் பயன்படுத்தியதைத் தவிர்த்து, எண்ணெய்யின் பயன்பாடு பெரிய அளவுக்கு இருக்கவில்லை. உலகப்போரின் போதுதான், கப்பல்களில் நிலக்கரிக்கு பதிலாக பெட்ரோலிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது திறன்மிக்கதாகவும், எடுத்துச் செல்ல எளிதாகவும் உணரப்பட்டது. எனவே, உலகப்போர் முடிந்ததும் உருவான எண்ணெய்க்கான தேடுதலே, அடுத்த நூற்றாண்டை எண்ணெய்யைச் சார்ந்ததாக மாற்றியது. அப்படியான தேடலில்தான் அமெரிக்க நிறுவனமான ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் சவூதி அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பதை, பல ஆண்டுகள் தேடலுக்குப்பின் கண்டுபிடித்தது. அதற்குமுன், மெக்கா, மதினா ஆகிய இரு புனிதத் தலங்களுக்கும் வருபவர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பியிருந்த சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியது. இன்று சுமார் 26 ஆயிரம் கோடி பீப்பாய்களுக்கும் அதிகமான இருப்புடன், உலகிலேயே மிக அதிக எண்ணெய் வளம் கொண்ட இரண்டாவது நாடாக விளங்குகிறது. (முதலிடத்தில் உள்ள வெனிசூலாவில் சுமார் 30 ஆயிரம் கோடி பீப்பாய்கள் அளவுக்கு எண்ணெய் வளம் உள்ளது.) அன்றாட எண்ணெய் உற்பத்தியில் 2016 நிலவரப்படி, ரஷ்யாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் சவூதி அரேபியா உள்ளது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பை (ஒபெக்) உருவாக்கி அதன் தலைவராகவும் இது உள்ளது. ஒபெக்கில் உள்ள 14 நாடுகள் உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 73 சதவீதத்தை கொண்டிருப்பதுடன், உலகின் எண்ணெய் உற்பத்தியில் 44 சதவீதத்தை உற்பத்தியும் செயகின்றன. ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் 1944 ஜனவரி 31 அன்று அராம்கோ (அரேபியன் அமெரிக்கன் ஆயில் கம்பெனி) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யோம் கிப்பூர் போரில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்ததால் அதிருப்தியடைந்து, இந்நிறுவனத்தில் 25 சதவீதத்தைத் தன்வசம் கொண்டுவந்த சவூதி அரசு, 1980இல் முழுமையாகக் கையகப்படுத்தியது.

அமெரிக்காவின் தேசியகீதமாக, ‘தி ஸ்டார் ஸ்பேங்கிள்ட் பேனர்’ பாடல் ஏற்கப்பட்ட நாள் மார்ச் 3. ஆம்! 1783இல் விடுதலைப் பெற்ற அமெரிக்காவுக்கு, ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு, அதிகரப்பூர்வமான தேசியகீதமே இல்லை! உண்மையில் இந்தப் பாடல் 1814 செப்டம்பர் 14இலேயே எழுதப்பட்டுவிட்டது. இதை எழுதிய வழக்கறிஞர் ஃப்ரான்சிஸ் ஸ்காட் கீ, 1812இன் போர் என்றழைக்கப்படும் இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்குமான போரின்போது, கைதிகள் பரிமாற்றத்துக்கான பேச்சுவார்த்தைக்காக, ஜான் ஸ்டூவர்ட் ஸ்கின்னர் என்ற மற்றொரு வழக்கறிஞருடன் அனுப்பப்பட்டார். இங்கிலாந்தின் கொடிக்கப்பலில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, பால்ட்டிமோரைத் தாக்கும் இங்கிலாந்துப் படைகளின் திட்டம் இவர்களுக்குத் தெரிந்துவிட்டதால், தாக்குதல் முடியும்வரை இவர்களும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. தாக்குதலில் அமெரிக்கப் படைகளின் வெற்றியைத் தொடர்ந்து, எம்-ஹென்றி கோட்டையில் பறந்த அமெரிக்கக் கொடியைப் பார்த்து, இவர் இந்தப் பாடலை, தனக்கு வந்திருந்த ஒரு கடிதத்தின் பின்புறம் எழுதினார். அப்போதிருந்த 15 மாநிலங்களைக் குறிக்க 15 பட்டைகள், 15 நட்சத்திரங்களுடன் மேரி பிக்கர்ஸ்கில் என்ற பெண்மணி உருவாக்கியிருந்த இந்தக் கொடி, ‘ஸ்டார் ஸ்பேங்கிள்ட் பேனர்’ என்றழைக்கப்பட்டது. (தொடர்ந்து மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, பட்டைகளின் எண்ணிக்கை நிலையாக்கப்பட்டு, பின்னாளில் நட்சத்திரங்கள் மட்டும் அதிகரிக்கப்பட்டன.) கீ அமெரிக்கா திரும்பியபின், ‘டிஃபன்ஸ் ஆஃப் ஃபோர்ட் எம்’ஹென்றி’ என்ற தலைப்பில் இது வெளியானது. இங்கிலாந்திலிருந்த ‘அனாக்ரியாண்ட்டிக் சொசைட்டி’ என்ற அமைப்பின் பாடலான ‘தி அனாக்ரியாண்ட்டிக் சாங்’ என்பதன் இசையிலேயே இந்தப் பாடல் அமைக்கப்பட்டிருந்தது. (பண்டைய கிரேக்க அவைக் கவிஞரான அனாக்ரியான் பெயரில் இந்த இசை ஆர்வலர்களின் அமைப்பு பெயரிடப்பட்டிருந்தது.) 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற விடுதலைநாள் விழாக்கள் உள்ளிட்டவற்றில் இந்தப் பாடல் பாடப்பட்டு புகழ்பெற்றது. ‘ஹெய்ல் கொலம்பியா’, இங்கிலாந்தின் தேசியகீதமான ‘காட் சேவ் தி க்வீன்’ பாடலையொத்த ‘மை கண்ட்ரி…’ உள்ளிட்ட பாடல்களும் அரசு நிகழ்ச்சிகளின்போது பாடப்பட்டுக் கொண்டிருந்தன. 1899இலேயே அமெரிக்கக் கடற்படை, ‘தி ஸ்டார் ஸ்பேங்கிள்ட் பேனர்’ பாடலை கடற்படையின் கீதமாக அறிவித்தது. அதையே தேசியகீதமாக்க 1918இலேயே முயற்சிகள் தொடங்கப்பட்டாலும், 1812 போரின் வெற்றிக்குப்பின் உருவான ‘அமெரிக்கா தி ப்யூட்டிஃபுல்’ உள்ளிட்ட பாடல்களும் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியாக ஏற்கப்பட்ட இப்பாடல் 4 சரணங்களைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலும் ஒரு சரணம் மட்டுமே பாடப்படுவதால், மற்ற 3 சரணங்கள் பொதுவாக அறியப்பட்டிருக்கவும் இல்லை!

உலகின் முதலாவது உள்ளரங்க பனி ஹாக்கிப் போட்டி, கனடாவின் கியூபெக் நகரில் விளையாடப்பட்ட நாள் . ஹாக்கியின் வரலாறு என்பது மிகமிகப் பழைமையானதாக உள்ளது. அனேகமாக, உலகின் அனைத்து நாகரிகங்களுமே, நுனியில் வளைந்த குச்சியையும், பந்துபோன்ற பொருட்களையும் பயன்படுத்தி விளையாடியிருக்கின்றன. எகிப்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட ஓவியங்களில் இத்தகைய விளையாட்டு காணப்படுகிறது. தற்போது ஹர்லிங் என்ற பெயரில் விளையாடப்படும், ஹாக்கியை ஒத்த விளையாட்டு, அயர்லாந்தில் கி.மு.1272இலும், கிரேக்கத்தில் கி.மு.600களிலும் விளையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்காலத்திய ஹாக்கியை ஒத்த, பெய்க்கோவ் என்னும் விளையாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மங்கோலியாவின் தாவுர் மக்கள் விளையாடியுள்ளனர். ஹாக்கி என்ற சொல்லுக்கான வரலாறு தெரியவில்லை. இடையர்களின் குச்சியைக் குறிக்கும் நடுக்கால ஃப்ரெஞ்சுச் சொல்லான ஹாக்கெட் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்றும், வளைந்த என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில் ஹூக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுவதால், ஹூக்கி என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தியா முதலான நாடுகளில் விளையாடப்படும் ஃபீல்ட் ஹாக்கி என்று வகைப்படுத்தப்படுவதே பொதுவாக ஹாக்கி என்று அழைக்கப்படுகிறது. ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்ட்டைனா, நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் விளையாடப்படும் இதனை 126 நாடுகள் கொண்ட பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பு கட்டுப்படுத்துகிறது. இதைத் தவிர, பனி ஹாக்கி, பேண்டி, பனிச்சறுக்கு ஹாக்கி, ரோலர் ஹாக்கி, ஸ்ட்ரீட் ஹாக்கி ஆகிய பரவலாக விளையாடப்படும் வகைகளோடு, இன்னும் ஏராளமான ஹாக்கி வகைகள் உலகில் விளையாடப்படுகின்றன. போலோ விளையாட்டுக்கூட, குதிரை மீதமர்ந்து விளையாடும் ஹாக்கி என்று குறிப்பிடப்படுவதுண்டு. நாட்லெய்க்கர் என்னும் பனி ஹாக்கியைப் போன்ற ஒரு விளையாட்டை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்காண்டினேவிய மக்கள் விளையாடியுள்ளனர். 17ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் பனியால் உறைந்த பகுதிகளிலும் ஹாக்கி விளையாடிய ஆங்கிலேயர்கள், கனடாவுக்குச் சென்றபோது, அவற்றை உடன் எடுத்துச் சென்றதால், அங்கு பனி ஹாக்கி உருவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!