தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் முன்னதாகவே தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர். தேர்வு மார்ச் 25ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக தமிழகம் புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு தொடங்கும், 5ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
அதற்கேற்ப இன்று பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மார்ச் 25ம் தேதி தேர்வுகள் முடிகிறது. முன்னதாக பிளஸ் 2 வகுப்புக்கு பிப்ரவரி 2ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் 7518 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மேற்கண்டவர்களில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பேர் மாணவியர். சிறைவாசிகள்145 பேர் எழுத உள்ளனர்.
இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறைக் கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் 20 ஆயிரத்து 476 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கு மொழிப்பாடத் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் தேர்வை எழுத ஒரு மணி நேரம் கூடுதல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத வரும் மாணவ மாணவியர் முன்னதாக 9 மணி அளவில் தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த சில ஆண்டுகள் தேர்வு எழுத முடியாத வகையில் தண்டனைகளும் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று தேர்வு தொடங்குவதை அடுத்து, தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கும், தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிவுரைகளை பள்ளிக் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் வழங்கி உள்ளன.
புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள்…
தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10மணிக்கு தேர்வு அறைக்குள் வந்ததும் விடைத்தாள் வழங்கப்படும். அதன் முகப்பு பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விவரங்களை எழுதும் வகையில் 5 நிமிட நேரம் வழங்கப்படும். பின்னர் கேள்வித்தாள் வழங்கப்படும்.
கேள்வித்தாள் படித்துப்பார்க்க 10 நிமிட நேரம் ஒதுக்கப்படும். மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளையும், சந்தேகங்களையும் தெரிவிக்க வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். புகார்கள் தெரிவிக்க விரும்புவோர், 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.