தென் ஆப்பிரிக்கா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது.
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா மட்டும் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இதனை தொடர்ந்து பி பிரிவில் இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
இந்த ஆட்டத்திற்கு முன்பாக பி பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்காவும், ஆப்கானிஸ்தானும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் இருந்தது.
அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அரைஇறுதிக்கு முன்னேற இந்த இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா போட்டி முக்கியமானதாக கருதப்பட்டது. அதன்படி இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தால் குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டும். 300 ரன்னுக்கு மேலான இலக்கு என்றால் அதை இங்கிலாந்து 11.1 ஓவருக்குள் எட்ட வேண்டும். இவ்வாறு நடந்தால் தென் ஆப்பிரிக்காவை விட ஆப்கானிஸ்தான் ரன்ரேட்டில் முந்தி அரைஇறுதிக்கு வர முடியும் என்ற சூழல் இருந்தது.
இருப்பினும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 179 ரன்கள் மட்டுமே அடித்ததால் தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. தோல்வியடைந்தாலும் அந்த அணிக்கு இனி பிரச்சினை இல்லை. எனவே ஆப்கானிஸ்தான் தனது பிரிவில் 3-வது இடம்பெற்ற நிலையில் தொடரை நிறைவு செய்துள்ளது.