டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி கூறியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெளியே செல்லும்போது, முக கவசங்களை அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். தவிரவும், குளிர்காலத்தில் புகை மூட்டம் மற்றும் அடர்பனி ஆகியவையும் மக்களை துயரில் தள்ளியது.
இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் எதிரொலித்தது. ஆம் ஆத்மியும், பா.ஜ.க.வும் பிரசாரத்தின்போது இதுபற்றி காரசார விவாதத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் இனி எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி மன்ஜீந்தர் சிங் சிர்சா பேட்டி ஒன்றில் இன்று கூறியுள்ளார்.
டெல்லியில் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் மார்ச் 31-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த முடிவு பற்றி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அடையாளம் காணும் வகையில், பெட்ரோல் பம்புகளில் நாங்கள் கருவிகளை இணைத்து வருகிறோம். அவற்றின் உதவியுடன் பழமையான வாகனங்கள் இனம் காணப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் தரப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் மாசுபாட்டை ஒழிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பற்றியும் அவர் குறிப்பிட்டார். அவர் கூறும்போது, புதிதாக உருவாகியுள்ள பா.ஜ.க. அரசு, வாகன புகை வெளியீடு மற்றும் மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, பழைய வாகனங்கள் மீது கட்டுப்பாடுகள், பனிப்புகைக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகள், மின்சார பொது போக்குவரத்துக்கு மாறுவது உள்ளிட்ட விசயங்கள் நாங்கள் மேற்கொண்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என அவர் கூறினார்.
டெல்லியில், எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகளுடன், உயர்ந்த கட்டிடங்கள், ஓட்டல்கள், டெல்லி விமான நிலையங்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் அனைத்தும் புகை மூட்டம் ஏற்படாத வகையில் அதனை கட்டுப்படுத்தும் துப்பாக்கிகளை நிறுவ வேண்டும்.
நடப்பு ஆண்டு டிசம்பருக்குள் பொது போக்குவரத்திற்கு பயன்பட கூடிய, 90 சதவீத சி.என்.ஜி. பஸ்களை நீக்கி விட்டு அவற்றுக்கு மாற்றாக, மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.